Sunday, 21 April 2024

இந்திய சுதந்திர வரலாற்றில் மிண்டோ மார்லி சீர்திருத்தம் மாற்றமா? ஏமாற்றமா? - அறிய வேண்டிய வரலாறு

   

          இந்திய சுதந்திரப் போர் பன்நெடுங்கால வாரலாற்றையும் பலரின் தியாகங்களையும் உள்ளடக்கியது. இந்தப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவாக நாம் அறிய வேண்டியது மிண்டோ மார்லி சீர்திருத்தம். பிரிட்டன் ஆட்சி அதிகார இந்தியாவின் 17 வது வைசிராயாக பதவி வகித்து இந்தியர்களுக்கு சில அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியமான சூழல் காரணமாக மிண்டோ சில வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கினார்.  

        இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பிரிவாக அதிகமான தலைவர்களைக் கொண்ட இயக்கமாக காங்கிரசு இயங்கியது. இந்த இயக்கத்தில் இரண்டு பிரிவினராக அதாவது மிதவாதிகள் , தீவிரவாதிகள் என்னும் இருபிரிவினர் தத்தம் கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர். தீவிரவாதப் பிரிவினரால் சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தேறின. பிரிட்டீஷ் இந்தியாவின் வைசிராய் பதவி வகித்த மிண்டோ இந்தச் செயல்பாடுகளை அடக்க சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மிதவாதப் பிரிவினருடன் பேச்சு நடத்தவும் ஒப்புக் கொண்டார். அப்படி எனில் மிதவாதப் பிரிவினர் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு இருப்பதை இங்கிலாந்துக்குத் தெரிவித்தார். 

       சட்டப்பிரிவுகளில் இந்தியர்களுக்கும் பங்கு வகிக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தர வைசிராய் மிண்டோ மற்றும் வெளியுறவுச் செயலர் மார்லி ஆகியோர் அடங்கிய நிர்வாக சபைக்கு பிரிட்டீஷ் ஆட்சி மன்றக் குழு அதிகாரம் வழங்கியது.  

      பம்பாய், மேற்கு வங்காளம், மெட்ராஸ், பஞ்சாப் போன்ற மாகாணங்களில் இந்தியர்கள் பங்கு பெறும் அதிகாரத்தை வழங்கியது. பல்கலைக்கழகங்கள் மற்றும் நிர்வாகச் சபைகளில் பங்கு பெறும் அதிகாரத்தை வழங்க மிண்டோ மார்லி குழுவினர் சில வரையறைகளைச் செய்தனர். 

        நிதி நிர்வாகச் செயல்பாடுகளில் இந்தியர்கள் பங்கு பெறவும் வாக்குரிமை அளிக்கவும் பட்ஜெட் விவாதங்களில் கேள்விகள் கேட்கவும் மோர்லி சில வரையறைகளைக் கொண்டு வந்தார். இதனடிப்படையில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் வழங்கவும் மிண்டோ மார்லி குழுவினர் குழு ஒப்புதல் வழங்கியது. பிற்காலத்தில் சீக்கிய பிரதிநிதித்துவம் , ஆங்கிலோ இந்திய பிரதிநிதித்துவம் வழங்கவும் இந்தச் சீர்திருத்தம் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அனைத்துச் சட்டமன்றங்களிலும் ஆங்கிலோ இந்திய பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் நியமிக்கப்படுவது மரபாக , அல்லது இந்த மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாகவோ இருக்கின்றது. 

       மிண்டோ மார்லி சட்டம் மிதவாதிகளைச் சமாதானப்படுத்த  நிறுவப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, மத்திய மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் குறைவாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக ஜமீன்கள் அல்லது வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக  வேண்டும்.  இந்தச்  சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்கள் வகுப்புவாத வாக்காளர்களையும் அறிமுகப்படுத்தினர். சபைகளில் சில இடங்கள் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்டன. 

    மிண்டோ மார்லி சீர்திருத்தம் இந்தியர்களுக்கு உரிமைகளை வழங்கியது வரவேற்கலாம். ஆனால் வகுப்பு வாரியாக பிரிவினைகளை ஏற்படுத்தி இன்று வரை தனித்தொகுதிகள் இருப்பதற்கு இந்த மிண்டோ மார்லி சீர்திருத்தமே முக்கிய காரணம் என்பதையும் நாம் அறிய வேண்டும். 

     மிண்டோ மார்லி சீர்திருத்த வடிவத்தை மனதில் வைத்து அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வரையறை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு வரையறை வழங்கினால் இந்து மதத்தில் இருந்து அம்மக்கள் நீக்கப்பட்டு தனித்த மக்களாகக் கருதப்படுவார்கள் என  காந்தி அச்சமுற்றார். ஆனால் பிரதிநிதித்துவ அடிப்படையில்  தனித்தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியுடன் இருந்தார். அந்த வகையில் இந்திய அளவில் 131 தனித்தொகுதிகள் இந்த மிண்டோ மார்லி சட்டப்பிரிவின் வாயிலாகவே வழங்கப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

      1858 ஆம் ஆண்டு சுதந்திரப் போர் காரணமாக இங்கிலாந்து மகாராணி அறிவித்த இந்திய நிர்ணய சபையின் ஒரு பகுதியே இவை என்றும் , 1909 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தால் இந்திய ஜமின்தார்கள் , இளவரசர்கள் மட்டுமே அதிகார பரவல்களில் அமர முடிந்தது என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதினர். மிதவாதிகள் திருப்திபடுத்தப்பட்டு தீவிரவாதிகளின் செயல்கள் குறைக்கப்பட்டு சில காலம் மாற்றுப் பேசு பொருளாக மட்டுமே மிண்டோ மார்லி சீர்திருத்தம் இருந்திருக்கின்றது என்பது பாலகங்காதர திலகர் போன்றோரின் கருத்தாக முன்வைக்கப்பட்டது. 

          


No comments: