வரலாற்றில் மகாத்மா காந்தியின் உண்ணாவிரதம் பல நோக்கங்களைக் கொண்டது. தனது ஆசிரமத்தில் பலமுறை தனது சீடர்களிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி உண்ணாவிரதம் இருந்துள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் சூரியன் மறையாத நாடு என்று வர்ணிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தை சில நேரங்களில் பயப்பட வைத்ததும் உண்டு. ஆம் மகாத்மா காந்தியடிகள் தமது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதம் இருந்து ஆட்சியாளர்களை மிரள வைத்த வரலாறு நாம் அறிய வேண்டியது. நான்கு முறை 21 நாட்களைக் கடந்து அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் இந்தியாவிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தித் தந்தது.
தமது சபர்மதி ஆசிரமத்தில் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காந்தியடிகள் முதன்முறையாக மக்கள் போராட்டத்திற்காக உண்ணாவிரதம் இருந்தமை எதுவெனில் அது அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டம். 1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொழிலாளர்களின் நலன் கருதி சபர்மதி ஆசிரமத்தில் மரத்தடியில் அமைதியாகப் போராடத் தொடங்கினார். போராட்டம் நாளுக்கு நாள் வலுவிழந்து தொழிலாளர்கள் பலர் போராட்ட களத்திற்கு வராமல் பின்வாங்கினர். யாருக்காக போராடுகிறோமோ அவர்களே முன்வராத போது ஏன் இந்தப் போராட்டம் என்று காந்தியுடன் இருந்தவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். ஆனால் வறுமையில் வாடிக்கொண்டிருந்த தொழிலாளர்களின் நலன் கருதி தமது போராட்டத்தை உண்ணாவிரதமாக மாற்றும் முடிவிற்கு மகாத்மா காந்தியடிகள் வந்தார்.
மகாத்மா காந்தியின் போராட்டக் களத்தில் முதலில் அணி திரண்ட தொழிலாளர்கள் ஆலைத் முதலாளிகளின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி குறைந்த ஊதியத்திற்கு பணிக்கு செல்ல நேர்ந்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் தமது போராட்டத்தை உண்ணாவிரதமாக மாற்றிய போது பணிக்குச் சென்ற தொழிலாளர்களும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகை புரிந்தனர். உண்ணாவிரதம் தீவிரமடைய தொடங்கியது. 21 நாட்கள் தொடர் போராட்டத்தில் காந்தியடிகள் மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் போராடினார். இந்த நிகழ்வு ஆலை முதலாளிகளைச் சிந்திக்க வைத்தது. மகாத்மாவை நேரடியாக சந்தித்து உங்களது கோரிக்கைகளுக்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆகையால் உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று வேண்டினர். ஆலை முதலாளி அம்பாலால் பல நேரங்களில் சபர்மதி ஆசிரமத்திற்கு உதவி புரிந்துள்ளார். இருந்தும் தொழிலாளர்களின் நலனுக்காக தனது ஆசிரமத்திற்கு உதவிய அம்பாலாலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து போராட்டக் களத்தில் வெற்றியும் பெற்றார் மகாத்மா காந்தியடிகள். மக்கள் பிரச்சினைக்காக போராடிய மகாத்மா காந்தியின் முதல் போராட்டம் 1918இல் வெற்றி பெற்றது.
மகாத்மா காந்தியின் முதல் உண்ணாவிரதம் எவ்வாறு கவனம் பெற்றதோ அதுபோலவே அவரது கடைசி உண்ணாவிரதமும் வரலாற்றுப் பக்கங்களில் அழுத்தமான தடங்களைப் பதிவு செய்துள்ளது.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் கடைசி உண்ணாவிரதம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் நாள் காலை 11: 55 க்குத் துவங்கியது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் தொடங்கியதில் முக்கியமான கோரிக்கை பாகிஸ்தான் நாட்டிற்கு 55 கோடி அவசியம் கொடுக்க வேண்டும் என்பதுதான். மவுண்ட் பேட்டன் அவர்கள் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் என்ற நாடு கட்டமைக்கப்பட நிச்சயம் சில கோடிகள் வேண்டும் என்பது ஜின்னா அவர்களின் கோரிக்கை. ஆனால் இந்திய நாடு பல காரணங்களால் அதனைத் தவிர்த்து வந்தது. நேரு அவர்களும் படேலும் எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்தனர். இடையில் மவுண்ட் பேட்டன் சமரச பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இந்த நிலையில் தான் மகாத்மா காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. மவுண்ட் பேட்டன் காந்திஜியிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். பேச்சுவார்த்தை மூலம் நல்லது நடக்கும் என்று கூறினார். ஆனால் காந்திஜியோ, இப்போது நான் சொல்வதை அவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் எனது உண்ணாவிரதம் துவங்கி விட்டால் என்னை அவர்கள் புறக்கணிக்கவும் மாட்டார்கள் என்று உறுதிப்பட உறுதியளித்தார்.
1948 ஜனவரி 13ஆம் நாள் காலை இரண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு தனது உண்ணாவிரதத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். திடீரென்று காந்திஜியின் உண்ணாவிரதம் நாட்டு மக்களிடையே பல்வேறு குழப்பங்களைத் தோற்றுவித்தது. ஏனெனில் அவர் முன்வைத்த கோரிக்கைகள் அப்படிப்பட்டது.
1948 ஜனவரி 13 மாலைப் பொழுதில் ஆடம்பரமான அரசு மாளிகையில் நடைபெற இருந்த தற்காலிக அமைச்சரவைக் கூட்டம் காந்திஜியின் கயிற்றுக் கட்டிலைச் சுற்றி நடைபெறத் தொடங்கியது. பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. காந்திஜி தனது பிடிவாதத்தில் பிடிவாதமாக இருந்தார். காந்தி உடன் எப்போதும் உடன் இருக்கும் அவரது மருத்துவர் சுசிலா நய்யார் ஜனவரி 15 ல் காந்திஜியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தார். மருத்துவர் சுசிலா நய்யார் காந்திஜியின் உடல் நிலையை நேரு அவர்களிடம் தெரிவித்தார். இந்திய தலைநகரமும் இந்தியாவின் முக்கிய நகரங்களும் பதட்டத்தில் இருந்தன. எங்கே காந்திஜியை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் நேரு அவர்களுக்கு இருந்தது. உண்ணாவிரதம் மூன்று நாட்களைக் கடந்து கொண்டிருந்தது. டெல்லி செங்கோட்டையில் ஜவஹர்லால் நேரு உரையாற்ற ஏற்பாடுகள் நிகழ்ந்து வந்தன. மவுண்ட் பேட்டன் அவர்கள் அரசின் அத்தனை சிறப்பு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து அவசர தந்தி ஒன்று காந்திஜியின் கட்டிலுக்கு வந்தது. எங்களுக்காக நீங்கள் உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடுமாறு வேண்டினர்.
காந்திஜி மவுன புன்னகை புரிந்தார். இந்த நிலையில் இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் மகாத்மா காந்தியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக பாகிஸ்தான் நாட்டிற்கு 55 கோடிகள் வழங்க ஒப்புதல் அளித்தது. மூன்று நாட்கள் கடுமையான உண்ணாவிரதம் மேற்கொண்ட 78 வயதான மகாத்மா காந்தியடிகளின் போராட்டம் வெற்றி பெற்றது.
அகில இந்திய வானொலி நிலையம் ஒவ்வொரு மணிக்கு ஒரு முறையும் மகாத்மா காந்தியின் உடல்நிலை குறித்து நாட்டு மக்களுக்கு அறிவித்து வந்தது. ஜனவரி 16 இல் இந்திய அரசு, காந்தியின் பொருட்டும் பாகிஸ்தானுடனான விரிசலை முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு சமிக்ஞை அளிக்கும் பொருட்டும் 55 கோடியைத் தருவதாக அறிவித்தது. காந்தியின் உண்ணாவிரதம் அத்தோடு முடிவு பெறவில்லை. அவர் அதை வரவேற்றார் எனினும் பிரச்சனை அதனால் மட்டும் முடிவுக்கு வராது என நம்பவே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். ஜனவரி 18 இல் பலரின் வேண்டுகோளுக்கும் உறுதிமொழிக்கும் பிறகு தான் காந்தி உண்ணாநோன்பை கைவிடுகிறார்.
வரலாற்றில் காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் பல மாற்றங்களையும் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளையும் இந்தியாவுக்கு அளித்தது. காந்தியம் என்பது தனி ஒரு மனிதரைப் பற்றியது அல்ல. அது ஒரு தத்துவம். அதை எல்லோராலும் பின்பற்ற முடியாது. ஆமாம் சில நேரம் காந்திஜியே கூட அந்தத் தத்துவத்தை பின்பற்ற முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இடைவிடாத வலியுறுத்தல், தொடர் போராட்டம் ஆகியவற்றை வென்று காட்டிய காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு சாதிக்க வைத்தது. மரணத்தின் இறுதி வரை சென்ற காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் ஜனவரி 18 ஆம் நாள் அன்று மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் இந்த உண்ணாவிரதம் காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் மட்டுமல்ல அவரது வாழ்வின் கடைசி போராட்டமாகவும் மாறிப்போனது. அடுத்த 12 நாட்களில் வரலாற்றில் துயர சம்பவம் ஒன்று நடந்தேறியது. அடுத்த பதிவில் அதனைக் காண்போம்.
No comments:
Post a Comment