ஆங்கிலேயர்கள் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு சுதந்திரம் அளித்த வரலாறு நாம் அறிந்தது. நம் அருகில் உள்ள நாடான நேபாளம் சுதந்திர தினம் இல்லாத நாடு. ஏனெனில் ஆங்கிலேயர்கள் முந்நூறு வருடங்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்திய போதும் அருகில் இருந்த நேபாளத்தின் மீது ஆங்கிலேயர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. சில சமயங்களில் உதவி , படைகள் தங்குமிடம் என சில காரணங்களுக்கு மட்டுமே நேபாளத்தைப் பயன்படுத்தினர். ஆனால் இந்தியாவோடு இன்னோரு நாடும் பிரிட்டீஸ் ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆம் அந்த நாட்டின் பெயர் சிக்கிம்.
சிக்கிம் கொடி
சிக்கிம் இந்தியா மாநிலம். அது எப்படி நாடாகும் ? என்னும் கேள்வி பலருக்கு எழலாம். 1975 ஆம் ஆண்டுவரை சிக்கிம் இந்தியாவில் தனித்த நாடாகவே இருந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது சிக்கிம் நாட்டு மக்களின் தனித்த பண்பாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜவவஹர்லால் நேருவும் படேலும் தனி நாடாக செயல்பட ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். சிக்கிம் நாட்டின் வெளி விவகாரம், பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சிக்கிம் நாட்டில் மன்னராட்சி நடந்தும் வந்தது.
இந்தியாவின் நிலவியல் அமைப்பில் சிக்கிம் இருந்தாலும் அதன் கலாச்சாரத் தன்மைகள் கொண்டு அந்த நாட்டின் வரலாறு 1642 ல் இருந்து தொடங்குவதாக அறிய முடிகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் திபெத் நாட்டில் நிகழ்ந்த சிவப்புத் தொப்பி மஞ்சள் தொப்பி சண்டையால் பூட்டியா மக்கள் சிக்கிம் நிலப்பகுதிகளில் வாழத் தொடங்கினர். சிக்கிம் மக்களை பெளத்த சமயத்திற்கு மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றனர். திபெத் , நேபாள் , சிக்கிம் ஆகிய மூன்று பகுதிகளிலும் போர்களும் தஞ்சமும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்தன.
1814 ஆம் ஆண்டு நேபாளம் சிக்கிம் மீது கோபம் கொண்டு போர்தொடுக்க, இப்போரில் சிக்கிம் மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாட, சிக்கிம் நேபாள் போரானது, ஆங்கிலேயர் நேபாளப் போராக மாறிப்போனது. 1817 ஆம் ஆண்டு நேபாளம் கைப்பற்றிய பகுதிகள் உடன்படிக்கைகள் வாயிலாக சிக்கிமிடம் ஒப்படைக்கப்பட்டன.
பண்டைய பட்டுப்பாதை அருகில் நிலவியலில் மலைகளால் சூழப்பட்ட நாடாக சிக்கிம் இருந்து வந்தது. பிரித்தானிய அரசாங்கம் திபெத் நாட்டில் வணிகம் மற்றும் வழித்தடங்கள் பயன்பாடுகள் ஏற்படுத்திய போது சிக்கிம் ஆங்கிலேயரின் வசமானது. 1824 மற்றும் 1825 ஆம் ஆண்டுகளில் சிக்கிமில் உள்நாட்டுக் கலவரம் காரணமாக அந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு சிக்கிம் மன்னருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் தொடர்ச்சியாக பிரித்தானிய சிக்கிம் நாடு மன்னராட்சியின் கீழ் பிரித்தானிய ஆளுகையின் கீழ் இருந்து வந்தது.
1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் பிரிக்கப்பட்ட காலத்தில் சிக்கிம் இந்தியாவுடன் இணைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைய சிக்கிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் பிறகு சிக்கிம் நாடு , இந்தியாவைச் சார்ந்த சுதந்திர நாடாகத் தொடர நேரு ஒப்புக் கொண்டார்.
1962 ல் இந்தியா சீனப் போரின் போது சிக்கிம் நாட்டின் பகுதியில் அமைந்துள்ள நாதூலா கணவாயில் போர் நடைபெற அந்தக் கணவாயை சிக்கிம் நாடு மூடியது. சிக்கிம் அரசர் டாஷி நாம்கால் தலைமையில் சிக்கிம் மக்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் வாழ்ந்து வந்தனர். 1963 ஆம் ஆண்டு டாஷி நாம்கால் வயது மூப்பு மற்றும் நோய்கள் காரணமாக இறக்க நேரிடுகிறது. சிக்கிம் நாட்டு சாம்ராஜ்ஜியத்தின் இறுதி வாரிசான பால்தன் நம்க்யால் சிக்கிம் அரசராகப் பதவி ஏற்கிறார்.
1964 ஆம் இந்திய நாட்டின் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணமடைகிறார். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த வரை சிக்கிம் நாடு சிக்கல் இல்லாமல் மன்னராட்சியின் கீழ் இயங்கியது. அதன்பிறகு இந்தியாவில் போதுமான ஆதரவு கிடைக்கப்பெறாமல் இருந்தது. 1970 ஆம் ஆண்டு சீக்கிய தேசிய காங்கிரசு கட்சி மன்னராட்சிக்கு எதுராகவும், தேர்தலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கத் தொடங்கியது. நேபாளியர்களுக்கு அதிக முக்கியத்துவமும் இதன் கோரிக்கைகளில் ஒன்றாக மாறியது.
1973 ஆம் ஆண்டு சிக்கிம் அரண்மனை முன்பு உரிமைப் போர்களும் போராட்டகளும் தொடங்க, சிக்கிம் மன்னர் இந்தியாவின் பாதுகாப்பை வேண்டினார். திபெத் பகுதியின் ஒரு பகுதியாக சிக்கிம் இருப்பதால் , தலாய்லாமா பிரச்சினையில் சீனா சிக்கிம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வாய்ப்பு உள்ளது எனக் கருதிய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி பி.எஸ்.தாஸ் என்பவரை சிக்கிம் தலைமை ஆலோசகராக நியமித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டோரிஜி என்னும் பிரதமருக்கும் சிக்கிம் அரசர் பால்தன் நம்க்யால் அவர்களுக்கும் பனிப்போர் தீவிரமடைந்தது. பிரதமர் டோரிஜி தம் அமைச்சரவை மூலம் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து அரசாட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தியாவிடம் ஒரு மாநிலமாக சிக்கிமை சேர்த்துக்கொள்ள சிக்கிம் பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்திய இராணுவம் அரசரின் படைகளை வென்று சிக்கிமை இந்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சிக்கிம் மக்கள் அரசாட்சி தொடர்வதை எதிர்த்து வாக்களிக்க இந்தியாவின் 22 வது மாநிலமாக சிக்கிம் சேர்த்துக்கொள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு சிக்கிம் நாடு இந்திய மாநிலமானது.
இதனை சீனா கடுமையாக எதிர்த்தது. இந்தியா சிக்கிமைக் கைப்பற்றிக்கொண்டது எனக் குரல் கொடுத்து வந்தது. 2003 ஆம் ஆண்டு சிக்கிம் இந்தியாவின் மாநிலம் என்பதை ஏற்றுக்கொண்டதையடுத்து 2005 ஆம் பல உடன்படிக்கைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கையெழுத்தாகின. 1962 ல் மூடப்பட்ட நாதுலா கணவாய் இந்தியா சீனா ஒப்பந்தப்படி 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
மிகச்சிறிய சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாங். தொடர்வண்டி நிலையமோ, விமான நிலையமோ இல்லாத மாநிலமாக, வடகிழக்கு மாநில சர்ச்சைகள் , தீவிரவாத , இனவாத சண்டைகள் இல்லாத அமைதியான அழகான மாநிலமாக சிக்கிம் திகழ்ந்து வருகின்றது.