Saturday, 28 December 2024
Saturday, 19 October 2024
இந்திய இரயில்வே உருவான வரலாறு - அறிய வேண்டிய வரலாறு
இந்தியாவில் முதல் இரயில் வட இந்தியாவில் மும்பை - தானே இடையே 1853 ல் இயக்கப்பட்டதாக நமது வரலாற்றுப் பக்கங்களில் , வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டு நாமும் படித்திருப்போம். ஆனால் இந்தியாவில் முதல் இரயில் சென்னையில் தான் இயக்கப்பட்டது என்பதும் அந்த இரயில் 1837 ல் இயக்கப்பட்டதும் நாம் அறியாத வரலாறு.
இந்தியாவில் இரயில் 1853ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக கற்பிக்கபட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் வடக்கு-தெற்காக பிற்காலத்திய வரலாற்றாய்வாளர்கள் இந்தியாவை பிரித்தமையே காரணம். ஆனால் உண்மையில் இந்தியாவின் தெற்குப் பகுதியில்தான் முதன்முதலில் இந்திய தொடர்வண்டிக் கழகம் இயக்கப்பட்டது. இந்தியாவில் இரயில்வண்டிகளின் அவசியம் மற்றும் சாலைகள் குறித்து 1832 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. அதனையடுத்து 1837 ஆம் ஆண்டு சென்னை நகர சாலை கட்டுமானப் பணிக்காக சர் ஆர்தர் என்பவரால் கிரானைட் கற்களைக் கொண்டு செல்ல தொடங்கப்பட்டது.
சர் வில்லியம் ஏவரி என்பவரின் உதவியால் நீராவி இயந்திரம் மூலம் செங்குன்றம் முதல் சிந்தாதரிப்பேட்டை வரை இயக்கப்பட்ட இரயில் சேவையே இந்தியாவின் முதல் இரயில் சேவை என்பதை பதிய வேண்டியதும் படிக்க வேண்டியதும் மிக அவசியம்.
ஆர்தர் காட்டன் என்பவர் இன்றைய செங்குன்றம் பகுதியை ரெட் ஹில் என்ற பெயரில் அழைக்க , ரெட் ஹில் இரயில்வேயை முதன்முதலாக உருவாக்கினார். இதுவே இந்தியாவின் முதல் இரயில் பாதை மற்றும் முதல் இரயிலும் ஆகும். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் இரயில்வே 1845 ல் உருவாக்கப்பட்டது.
1933 காலகட்டத்தில் கடும் வறட்சியும் பஞ்சமும் கோதாவரி மாவட்டங்களில் நிலவியது. அப்போதைய மாவட்ட அதிகாரி சர் ஹென்றி மவுண்ட் பிரித்தானிய அரசுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து பொறியாளர் ஆர்தர் காட்டன் கோதாவரி ஆற்றின் பகுதிகளைக் கள ஆய்வு செய்து மெட்ராஸ் ஆளுநருக்கு அனுப்பினார். பின்னர் 1846 டிசம்பர் 23 அன்று அணை கட்ட ஒப்புதல் கிடைத்தது. தாமதமின்றி, காட்டன் 1847 இல் அணை கட்டத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். பத்தாயிரம் தொழிலாளர்களும், ஐநூறு தச்சர்களும், ஐநூறு கொல்லர்களும் இவ்வணை கட்டுமானத்தில் ஈடுபட்டனர். இந்த அணை கட்டுமானத்திற்காக தற்காலிக இரயில் பாதைகள் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களைப் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட இரயில்வே பாதை இந்தியாவின் இரண்டாவது பாதையாகும்.
பிரிட்டீஸ் அரசாங்கம் கிழக்கிந்திய நிறுவனத்தை இரயில்வே அமைப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டது. அதன்படி பல தனியார் இரயில்வே அமைப்புகள் உருவாகின. 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர். ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேறு யாராவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு சென்றிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனச்சோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக்காட்டியவர் ஸ்டீவன்சன். இவர் இல்லாமல் இந்திய ரயில்வே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது . இது இந்தியாவின் மூன்றாவது இரயில் பாதை அமைப்பாகும். பிரித்தானிய அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது நீர்வழங்கல் கட்டுமானத்திற்கானக் கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
கிரேட் இந்தியன் இரயில்வே நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ல் பாம்பேயின் போரிபண்டர் நிலையத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானேவுக்குப் புறப்பட்டது. மூன்று நீராவி என்ஜின்கள் மூலம் இழுக்கப்பட்ட 14 வாகனங்களில் 400 பேர் பயணம் செய்தனர்.
சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் ஆகிய மூன்று நீராவி என்ஜின்கள் 14 பெட்டிகள் கொண்ட ரயிலை இழுத்தன. கிரேட் இந்தியன் தீபகற்ப இரயில்வே பயணிகள் பாதையை அமைத்து இயக்கியது. இந்த ரயிலை உருவாக்க 1,676 மிமீ (5 அடி 6 அங்குலம்) அகலப் பாதை பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1853 ஏப்ரல் 16 அன்று தொடங்கிய முதல் பயணிகள் இரயில் வரலாற்றிலும் மிக முக்கியமானதாக பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் இரயில்வே குறித்த பல பதிவுகள் இன்னும் பிரிட்டீஸ் அருங்காட்சியகத்தில் பேப்பர்களாக உள்ளது. இந்திய அரசு இரயில்வே அமைச்சகம் அதனை வெளிக்கொணர வேண்டும். வரலாற்றை அறிய வைக்க வேண்டும்.
Thursday, 3 October 2024
The March on Washington - Martin Luther King, Jr. - I Have a Dream
இருட்டில் மட்டுமே உங்களால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்,. போராட்டத்தின் மூலமே உங்களால் விடுதலையையும் பெற இயலும். அந்தப் போராட்டம் அற வழியில் , அகிம்சை வழியில் அவர்களுக்கு வலி கொடுக்கும் வரை போராடுவோம் வாருங்கள் - மார்ட்டின் லூதர் கிங்
1963 ஆம் வருடம் . உடலையும் உறைய வைக்கும் கடும் குளிர். அமெரிக்காவின் லிங்கன் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில் மக்கள் கூடியிருக்கின்றனர். அந்தச் சதுக்கத்தில் கூடியிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வினாக்கள் பல இருந்தன. அந்த வினாக்களுக்கு விடைகள் இல்லாத நிலையில் ஒரு நட்சத்திரம் அமெரிக்க ஒளி வானில் மின்னியது. அந்த நட்சத்திரத்தின் பெயர் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். அமெரிக்காவின் காந்தி என்று அழைக்கப்பட்டார். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அமெரிக்க ஆப்பிரிக்கர்களின் நம்பிக்கையாக லிங்கன் சதுக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய உரை , அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உணர்வாய் மாறிப்போனது.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள் மீது நடத்தப்பட்ட இன, மொழி, நிற தாக்குதல்களை அமைதியின் வழியிலேயே அம்மக்கள் எதிர்கொண்டனர். அதற்குக் காரணம் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். அவரின் உரை மக்களின் வேதமாகிப்போனது.
ஆண்டுகள் பல ஆனாலும் நாம் அடிமையாகவே இருக்கும் நிலை மாறிட வேண்டும் என்றும் , இந்த நிலத்தில் நியாயம் என்னும் கஜானா அறை எவ்வளவு நாள்தான் காலியாக இருக்கும். நாம் நியாயத்தின் பக்கம் நிற்போம். நமக்கான ஒரே செல்வம் நியாயம் , அமைதி மட்டுமே என்று மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் பேசப்பேச கைதட்டல் அமெரிக்காவின் செவிகளைத் தைத்தது.
நமது போராட்டம் நிச்சயமாக தீவிரவாதமாக மாறாது. அதே சமயம் அமைதியும் அடையாது. அதை நீங்கள் தீவிரவாதம் என்று அழைத்தால் நாங்கள் புன்னகையை மட்டுமே பரிசக வழங்குவோம். ஏனெனில் நாங்கள் உங்கள் உரிமையைப் பறிக்க போராடவில்லை. எமது கடமைகளுக்காகப் போராடுகிறோம் என்று முழங்கினார். நான் ஒரு கனவு காண்கிறேன் , ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும். நிறத்தால் , பிரிவினையால் மலை போல இருக்கும் மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும். குறுகிய பாதைகள் , குறுகிய மனிதர்கள் நேராக்கப்படுவார்கள். இது என் கனவு. ஒரு நாள் நனவாகும் நம்புங்கள் என்று விண் அதிரப் பேசினார் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். இந்த அமெரிக்காவில் இன்று நிறத்தால் மதிப்பிடப்படும் மக்கள் ஒருநாள் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். என் கனவை நான் காதலிக்கிறேன். என் கனவு எனக்கான கனவு அல்ல. இந்த தேசத்தின் கனவு.
இந்தக் கனவு நனவாகும் நாளில் அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் இருப்பார்கள். வெள்ளையினத்தவர் இருப்பார்கள் . ஆனால் பாகுபாடு இருக்காது. அது வன்முறையால் , தீவிரவாதப் போராட்டத்தால் விளையாது. அகிம்சை என்னும் ஆயுதம் மூலம் நிச்சயம் நிகழும் என்று தன் கனவைக் கொட்டிக் கொண்டிருந்தார் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். கடுமையான குளிர் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துமோ அதுபோல இவரின் சொற்கள் ஒவ்வொன்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அலபாமா மாகாணத்தின் கருப்பினச் சிறுவர் சிறுமியர் அந்த நகரத்தின் வெள்ளை இனச் சிறுவர்களோடு கைகோர்த்து விளையாடுவார்கள் . அந்தக் கனவு நிறைவேறும் என்று முழங்கிய மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் , இந்த உலகில் படைக்கப்பட்ட மானுட உலகம் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டது. ஆம் சகோதரத்துவம், சமாதானம் , சமத்துவம் என்னும் நோக்கத்தோடு படைக்கப்பட்ட இந்த உலகின் கனவு, இந்த தேசத்தின் கனவு ஒரு நாள் மாறும் என்றார். கலவரமும் கோழைத்தனமும் ஒரே நோக்கம் கொண்டவை என்று முழங்கிய இவரின் உரை ஆப்பிக்க அமெரிக்கர்களின் இதயத்தில் பெரும் மாற்றத்தை , தாக்கத்தை , போராடும் குணத்தை , வன்முறையற்ற வழியை உருவாக்கியது.
மிஸ்ஸிப்பி மாகாணத்தில் எமக்கான உரிமைகள் , உடைமைகள் , வாக்குரிமைகள் வழங்கப்படும் என்று உரைத்த மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் , பேதமற்ற மண்ணாக இந்த மண் ஒருநாள் மாறும். அன்று சகோதரத்துவம் என்னும் சிம்பொனி நம் காதுகளில் ஒலிக்கும். நாமெல்லாம் ஒன்றாக ஒருநாள் சுதந்திரமானவர்களாக மாறுவோம். அதற்கு ஒன்றாக , உணர்வோடு போராடுவோம். நம் கைகளில் அகிம்சை மற்றும் சகோதரத்துவம் என்னும் ஆயுதம் மட்டும் வைத்துப் போராடுவோம் என்று இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்த சதுக்கத்தில் குரல் கொடுத்தார். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு நமக்கான ஒரு மின்னல் கீற்று கருவாகி, உருவாகியதை அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் கொண்டாடினர்.
தமது உரைகளில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான அன்பில் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் பேசினார். அமெரிக்கர்களிடம் பேசும் போது, கருப்பின மக்களிடம் வெறுப்புடன் நடந்து கொள்ளும் அமெரிக்கர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்ற போது எதிர்ப்பாளர்கள் பணிந்தனர்.
கருப்பின இளைஞர்களிடம் பேசும் போது , அமெரிக்கர்கள் உங்களை அடிக்கிறார்களா என்று கேள்விபடுகிறேன் என்ற போது கூட்டம் ஆம் என்று விண்ணதிரச் சொன்னது. அமெரிக்கர்கள் உங்களை இழிவாக நடத்துகின்றனர் என்று அறிந்தேன் என்ற போது , கூட்டம் ஆமாம் ,ஆமாம் என்றது. அமெரிக்கர்கள் உங்களை ஆயுதம் வைத்துத் தாக்குகின்றனர். நீங்கள் வலியால் துடித்த போது அவர்கள் சிரித்தார்கள் என்று அறிந்தேன் என்ற போது அமெரிக்க கருப்பின இளைஞர்கள் வெறி கொண்டு கூட்டத்தில் இருந்த போது மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் இவ்வாறு பேசினார். உங்களிடமும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்ற போது ஆம் என்று சொன்ன இளைஞர்களைப் பார்த்து , அந்த ஆயுதங்களை அப்படியே வைத்து விடுங்கள். அகிம்சை என்னும் ஆயுதம் எடுத்துக்கொள்ளுங்கள். நியாயம், சகோதரத்துவம் , உண்மை என்னும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எதிர் நில்லுங்கள். அவர்கள் தாக்குதலை நிறுத்துவார்கள் என்ற போது கூட்டம் அமைதியானது. “ நம்மை வெறுக்கச் சொல்லி அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. நம்மை நேசிக்கச் சொல்லி நாமும் அவர்களுக்குக் கற்பிப்போம்” என்று முழங்கினார். உலகின் சிறந்த உரையாக, அகிம்சை உரையாக உலக மக்களால் ஏன் அமெரிக்கர்களாலேயே கொண்டாடப்படும் உரையாகத் திகழும் ”எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உரை பலரின் கனவாக , அமெரிக்க தேசத்தின் கனவாகவே மாறிப்போனது. மகாத்மா காந்திக்குப் பிறகு உலக அரசியலில் அகிம்சை மூலம் மாற்றத்தை ஏற்படுத்திய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் , அமெரிக்காவின் கருப்பின இளைஞர்களின் பலி வாங்கும் உணர்வினை அன்பு உணர்வாக , சகோதரத்துவ உறவாக மாற்றினார்.
அமெரிக்காவில் பேருந்துகளில் கருப்பினத்தவர் பாரபட்சமாக நடத்தப்படுவதைக் கண்டித்து மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் நடத்திய 381 நாட்கள் போராட்டம் நடத்தி கைது செய்த போது “அன்பெனும் ஆயுதம் மட்டுமே நான் ஏந்தியது” என்று கூறி கைது செய்தவர்களையும் கலங்க வைத்தார். போராட்டத்தின் நிறைவில் பேருந்துகளில் சமஉரிமை கிடைக்கப்பெற்றது.
1964 ஆம் வன்முறையற்ற போராடத்திற்காக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு பெறும் போது அவர் இவ்வாறாக குறிப்பிடுகிறார், ‘ இனவெறி ,போர் ஆகிய நட்சத்திரங்கள் இல்லாத நள்ளிரவுதான் மனிதனுக்குப் படைக்கப்பட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஒருநாள் சமாதானம், சகோதரத்துவம் வரும் என்று நிச்சயம் நம்புகிறேன் என்றும், நியாயம் தற்காலிகமாக தோல்வி பெறலாம். ஆனால் அநியாயத்திற்கு நிரந்தர வெற்றி கிடையாது. ஒருநாள் நியாயம் வெற்றி பெறும் என்றார். இதனையடுத்து அமெரிக்க 1965 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான சம உரிமைகளை வழங்கியது.
எனக்கு ஒரு கனவு உள்ளது ( I Have a Dream) என்று முழங்கிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் , அமெரிக்கர்களிடம் பேசும்போது அமெரிக்கச் சகோதர சகோதரிகளே , எனது மரணம் உங்களுக்கு ஆத்மரீதியிலான பலத்தைத் தருமானால் நான் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன். எனது மரணத்தைப் பரிசாக வைத்துக்கொண்டு உங்கள் கருப்பின சகோதரர்களுக்கு உரிமை தாருங்கள் என்று பேசினார். அதன்படியே 1968 ஆம் ஆண்டு டென்னசியில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்திக்குப் பிறகு அகிம்சைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுடப்பட்ட போது உலகம் கண்ணீர் விட்டது. ஆப்பிரிக்க மக்கள் மட்டுமல்ல அமெரிக்க மக்களும் அழுதனர். அவரது கனவு நனவானது. நம்பிக்கை நனவானது. சகோதரத்துவம் நனவானது. அகிம்சை நனவானது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் உரையாற்றிய லிங்கன் சதுக்கத்தில் அவரின் நினைவைப் போற்றும் வகையில் "நம்பிக்கையின் கல் " நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
"எனக்கு ஒரு கனவு உள்ளது" எனும் நம்பிக்கை நிறைவேறி விட்டது. நமக்கும் நம்பிக்கை எனும் கனவு உள்ளது. அதை வெல்வோம்.
Sunday, 29 September 2024
காந்திஜியின் இறுதி நாட்களும் இறுதி நிமிடங்களும்- அறிய வேண்டிய வரலாறு
சுசிலா நய்யார், காந்திஜியின் உடனிருந்து கவனித்துக் கொண்ட மருத்துவர். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா 55 கோடி கொடுக்கப்பட்ட பிறகும் காந்திஜி தமது உண்ணாவிரதத்தைக் கைவிடாமல் தொடர்ந்த போது சுசிலா நய்யார் மிகுந்த அச்சம் கொள்ள ஆரம்பித்தார். காந்திஜிக்குத் தெரியாமல் அவர் பருகும் நீரில் ஆரஞ்சு பழச் சாறுகளைக் கலந்து கொடுத்தார். இதனைக் கண்டுபிடித்த காந்திஜி இப்படிச் செய்தால் அடுத்த 21 நாட்களுக்கு மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூற சுசிலா நய்யார் உடைந்து போனார். காந்தியின் உயிரைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைதிக்குழுவிடம் அவரின் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரைந்து சென்றார். ஜவஹர்லால் நேரு , படேல் ஆகியோரிடம் கூறி , அவரின் உடல் நிலை மிக மோசமடைகிறது என்று கூறினார். மவுண்ட் பேட்டன் தனது மனைவி எட்வினா உடன் இரண்டு முறை காந்திஜியை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கூறினார். காந்திஜியைப் பார்த்து எட்வினா உடைந்து அழுதார்.
1948 ஜனவரி 18 அன்று நேரு , படேல் , மவுண்ட் பேட்டன், மெளலானா ஆசாத் ஆகியோர் உடனிருந்து வலியுறுத்த உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவெடுத்தார். அனைத்துச் சமூகத்தினரிடமும் உறுதிமொழி பெற்ற பிறகு , மெளலானா ஆசாத் அவர்களிடம் தனியே சில நிமிடங்கள் பேசினார். இந்நிலையில் சுசிலா நய்யார் ஆரஞ்சு பழச் சாறுகளைத் தயார் செய்து வைத்திருந்தார். மெளலானா ஆசாத், நேரு இருவரின் கைகளில் வாங்கிப் பருகி உண்ணாவிரதத்தை ஜனவரி 18 அன்று நிறைவு செய்தார். இந்தியா பெருமூச்சு விட்டது. குறிப்பாக நேருவும் , படேலும் நிம்மதி அடைந்தனர்.
காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தை உலகத்தின் புகழ் பெற்ற செய்தி நிறுவனங்கள் கொண்டாடின. ‘78 வயது மனிதரின் ஆற்றலும் அதிசயமும் உலகத்தை அசைத்திருக்கிறது’ என்று நியூஸ் க்ரோனிக்கல் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.
காந்திஜியை எப்போதும் வியக்காத தி டைம்ஸ் இதழ் , ‘ காந்தியின் தைரியமிக்க கோட்பாடுகள் இவ்வளவு உறுதியுடன் இதற்கு முன்பு வெளிப்பட்டதில்லை’ என்று எழுதின.
புகழ்பெற்ற மான்செஸ்டர் கார்டியன் நாளிதழ் , ‘ காந்தி துறவிகளுக்கிடையே ஒரு அரசியல்வாதியாக இருக்கிறாரோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கிடையில் அவர் ஒரு துறவி’ என்று வருணித்து எழுதியது. இந்தச் செய்திகள் பிர்லா மாளிகைக்குத் தந்தியாக வந்து கொண்டிருந்தன. சுசிலா நய்யார் மற்றும் உதவியாளர்கள் அதனைப் படித்துக் காட்டினர். இதனைக் கேட்டுக்கொண்ட காந்திஜி எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் அமைதியாக மற்ற பணிகளில் ஈடுபட்டார்.
உண்ணாவிரதம் நிறைவுக்குப் பிறகு காந்திஜி கவலை அடைந்த மற்றொரு விசயம். நேரு , படேல் இடையிலான அதிகார ரீதியான போட்டி. அனைத்து அதிகாரங்களையும் படேல் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் உண்ணாவிரத நிறைவுக்குப் பிறகு காந்திஜியைச் சந்திக்க படேல் தவிர்த்து வந்தார்.
அரசியல் மத சித்தாந்தம் காரணமாக காந்திஜியைக் கொல்ல ஒரு சிறு கூட்டம் தயாராகி வந்தது. 1948 ஜனவரி ல் நேரு உரையாற்றிய பொதுக் கூட்டத்தில் அதற்கான சமிக்கைகள் வெளிப்பட்ட போதும் அன்றைய காவல்துறை அதனைக் கவனிக்கத் தவறியது. நேரு உரையில் , காந்திஜியை நாம் இழந்து விடக்கூடாது என்று உணர்ச்சி பொங்க உரையாற்றிய போது , காந்தி இறக்கட்டுமே என்று சத்தமாக மதன்லால் கத்தினார். உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறை , சில மணிநேரங்களில் விசாரணை எதுவுமின்றி விடுதலை செய்தது. மதன்லால், கார்க்காரே என்னும் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காந்திஜியின் பிர்லா மாளிகைக்குள் பல்வேறு நேரங்களில் வாய்ப்புகளை உருவாக்கி இடங்களைத் தேர்வு செய்தனர்.
1948 ஜனவரி 20 ல் நாற்காலியில் அமர வைத்து தூக்கி வரப்பட்ட காந்தி தனது பிரார்த்தனை உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது வார்த்தைகள் முழுமை இல்லாமல் இருந்தமையால் சுசிலா நய்யார் அதனை விளக்கி மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மதன்லால் தோட்டத்தில் ஒரு பக்கத்தில் சிறு அளவிலான குண்டுகளை வெடிக்கச் செய்தான். மக்களிடையே பீதி ஏற்பட்டது.
அந்த நேரத்திலும், ‘பிரார்த்தனையின் போது வரும் மரணமே சிறந்தது’ என்று மகாத்மா காந்திஜி கூறிய போது சுசிலா நய்யார் , உடனிருந்த பலரும் அழுது புலம்பினர். அந்த நேரத்தில் பின்புறக் கட்டிடத்தில் இருந்து காந்தியை நோக்கி சுடும் முன்திட்டத்தில் கோட்சே ஈடுபடத்தொடங்கினான். ஆனால் கோட்சேவால் முடியவில்லை. இதற்குள் மதன்லாலை அடையாளம் கண்ட ஒரு பெண் இவன்தான் வெடிகுண்டு வைத்தவன் என்று கத்த , போலிசார் மதன்லாலைப் பிடித்துச் சென்றனர். இந்த நிகழ்வுகளுக்கு இடையில் கூட்டத்தை காந்திஜி அமைதிபடுத்தினார். அந்த நேரத்தில் காந்தி, நான் இப்போது பாகிஸ்தான் செல்ல ஆயத்தமாக உள்ளேன். அரசும் எமது மருத்துவரும் அனுமதி அளித்துவிட்டால் உடனடியாக கிளம்ப உள்ளேன் என்று கூற அதனை , மதன்லால் கூட்டாளிகளான கார்கரே, ஆப்தே கோபமுடன் மனதால் குறிப்பெடுத்தனர். காந்திஜியை உடனடியாக நாற்காலியில் அமர வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
காந்தியின் உடல்நிலை, குண்டுவெடிப்பு குறித்து இந்தியா முழுவதிலிருந்தும் தந்தியும், தொலைபேசியும் குவிந்தன. செய்தி அறிந்து எட்வினா மவுண்ட் பேட்டன் உடனடியாக கிளம்பி வந்தார். நேருவும் , படேலும் அடுத்தடுத்து கிளம்பி வந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஜின்னா தொலைபேசியில் விசாரித்தார்.
டெல்லி காவல்துறைத் தலைவர் டபில்யூ மெஹ்ரா இதனை விசாரிக்கும் பொறுப்பை ஏற்று தீவிரமாக விசாரிக்கிறார். மதன்லால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்க , காவல்துறையில் வழக்கமான விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணையில் காந்தியைக் கொல்லும் குழுவில் நான் ஒருவன் என்பதை ஒப்புக் கொள்ள, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதை எதிர்க்கவே இவ்வாறு செய்தோம் என்று ஒப்புக் கொள்கிறான்.
டபில்யூ மெஹ்ரா காந்தியை நேரில் சந்தித்து , நிலைமையின் தீவிரத்தைக் கூற வந்த போது வாழ்த்துகள் மிஸ்டர் காந்திஜி என்று கூற , எதற்கு வாழ்த்து என்று கேட்டார் காந்தி. டில்லியின் நிலைமையை உங்களின் உண்ணாவிரதம் எளிதாக்கியது. அதற்கும், நீங்கள் தப்பித்தமைக்கும் காவல்துறை சார்பில் வாழ்த்துகள் என்று டபில்யூ மெஹ்ரா கூற காந்தி எளிய புன்னகையைத் தந்தார். பிர்லா மாளிகையில் பாதுகாப்பை அதிகரிக்கிறோம் என்று கூற, எல்லோரையும் சோதனை செய்வோம் என்று கூற காந்தி கோபமுடன் மறுக்கிறார்.
டபில்யூ மெஹ்ரா சாதாரண மனிதராக , காந்திஜியை மாற்ற முடியாது என்று தெரிந்தவராக இரகசியமாக காவலர்களின் எண்ணிக்கையை 5 லிருந்து 36 ஆக அதிகரிக்கிறார். அனைவரும் மாறுவேடத்தில் பிர்லா மாளிகையைக் காத்தனர்.
1948 ல் ஜனவரி 26 ல் காங்கிரசு இயக்கத்தின் கூட்டத்தில் உரையாற்றுகிறார். காங்கிரசு இயக்கம் மக்கள் பணிகளில் கூடுதல் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 1948 ல் ஜனவரி 27 ல் டெல்லியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குவ்வத் உல் இஸ்லாம் மசூதி விழாவில் கலந்து கொள்கிறார். காந்தியின் உண்ணாவிரத ஏழு கோரிக்கைகளில் இந்த மசூதி திருவிழா தடையற நடக்க வேண்டும் என்பது ஒன்றாகும். இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றான இந்த மசூதியில் இந்திய சுல்தான் “குத் உத் தின்” நினைவு நாளில் மாபெரும் திருவிழா நடைபெறும். மசூதியில் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீக்கியர்கள் முஸ்லீம்களை ஆரத்தழுவி வரவேற்றனர். இது போல எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று காந்தி அந்த நிகழ்வில் வாழ்த்தினார்.
காந்தியின் அடுத்தடுத்த நாட்கள் மெதுவாக, இயல்பாக , சில நேரங்களில் பரபரப்பாக , சில நேரங்களில் வருத்தமாக நகர்ந்தது.ஜனவரி 29 ல் டெல்லியின் எல்லைப்புறத்தில் இருந்து சீக்கிய மற்றும் முஸ்லீம் குழுவினர் காந்தியைச் சந்தித்தனர். அப்போது குழுவில் இருந்த ஒருவர் கூறிய ஒரு வார்த்தை காந்தியை நிலைகுலையச் செய்தது. காந்தியாரே, போதும் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களால் நாங்கள் அதிகம் இழந்து விட்டோம். நீங்கள் இமயமலை சென்று விடுங்கள் என்று கூற , காந்தி அமைதி இழந்தார். காந்தியின் கடைசி உரை அந்த நேரத்தில் வெளிப்பட்டது.
மெளனமாக இருந்த அந்த நாளில் நேருவும் , படேலும் காந்தியைச் சந்தித்தார்கள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காவல்துறையை அனுமதிக்க வேண்டும் என்று கேட்க, கூட்டத்தில் ஒரு காவல் உடையைப் பார்த்தாலும் நான் 21 நாட்கள் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று உறுதிபட தெரிவித்தார் காந்தி. இருவரும் திரும்பிச் செல்லும் போது டபில்யூ மெஹ்ரா விடம் கவனமாக மாறுவேடத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள் என்று கூறிச் சென்றனர். நேரு , படேல் இருவருக்கும் இடையே எந்தவிதமான மனஸ்தாபமும் இருக்கக் கூடாது என்று இருவரிடமும் காந்தி வலியுறுத்தினார்.
1948 ஜனவரி 30 எப்போதும் போல விடிந்தது. காந்தி தன்னுடைய நாளை பிரார்த்தனையுடன் தொடங்கினார். காலை 6 மணிக்கு ஆர்.கே . நேரு ( இந்திய வெளிவிவகாரத் துறை செயலர் - ) என்பவர் தனது அமெரிக்கப் பயணம் குறித்து தெரிவிக்க காந்தியைச் சந்தித்து ஆசி பெற்றார். ஏழை தேசத்தின் பிரதிநிதியாக நீங்கள் எப்போதும் எளிமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
மதியம் 2 மணிக்கு லைஃப் இதழுக்கு நேர்காணல் வழங்கினார். பிர்லா மாளிகையில் அதன் காவலாளிகளை விட மேலும் பலரைக் காவலில் இருக்க படேல் உத்தரவிட்டார். அன்று மாலை படேலை நேரில் வரச் சொல்லி இருந்தார் காந்திஜி.மாலை 4 மணி அளவில் காந்தியை படேல் சந்திந்தார். படேல் , நேரு கருத்து வேறுபாடுகளால் படேலை ராஜினாமா செய்யவும் காந்தி வலியுறுத்தினார். ஆனால் அது இயலாத காரியம் என்று படேல் மறுத்து விட்டார். மாலை 5 மணி பிரார்த்தனை நேரம். பல செய்திகள் குறித்து படேலும் காந்தியும் விவாதித்தனர். பிரார்த்தனை நேரத்தைக் கடந்தும் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சின் தீவிரம் கருதி இருவரையும் யாரும் தொந்தரவு செய்யவில்லை. இருவரும் பேசி முடித்த பின்னர் காந்தி வேகவேகமாக பிரார்த்தனைக்குத் தயாரானார். படேல் இறுகிய முகத்துடன் இருந்தார். சிறிய தூர இடைவெளியில் இருந்த மைதானத்திற்கு நடந்து செல்ல ஆயத்தமானார். எப்போதும் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் போது முன் நடந்து செல்லும் சுசிலா நய்யார் காந்தியால் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டார். டபில்யூ மெஹ்ரா உடல் நலக் குறைவால் வரவில்லை. அடுத்த நாள் பொது வேலை நிறுத்தம் காரணமாக அவருக்குப் பாதுகாவலுக்கு நியமிக்கபட்ட அதிகாரியும் முக்கிய ஆலோசனைக்காக சென்றிருந்தார்.
பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டதை அறிந்து தன்னுடன் இருந்தவர்களைக் கடிந்து கொண்டு வேகமாகச் செல்கிறார். பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கும் போது நாதுராம் கோட்சே கூட்டத்தில் வெளிப்பட்டு காந்தியை நேருக்கு நேராக எதிர் நின்று “நமஸ்தே காந்திஜி “ என்று கூறி காந்தியைச் சுடத் தொடங்கினார். அந்த இடம் பரபரப்படைந்தது. காந்தியை மாளிகை உள்ளே தூக்கிச் சென்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் காந்தியின் மரணம் அறிவிக்கப்பட இந்தியா மட்டுமின்றி உலகமும் கண்ணீரால் நனைந்தது. இந்த நிலைமையின் தீவிரத்தை மவுண்ட் பேட்டன் கூறிய சொற்களின் படி அகில இந்திய வானொலி நிலையம் இந்தியா முழுமைக்கும் அறிவித்தது. காந்தியின் இறுதி நாட்களும், இறுதி நிமிடங்களும் நாம் அறிய வேண்டிய வரலாறு.