இருட்டில் மட்டுமே உங்களால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும்,. போராட்டத்தின் மூலமே உங்களால் விடுதலையையும் பெற இயலும். அந்தப் போராட்டம் அற வழியில் , அகிம்சை வழியில் அவர்களுக்கு வலி கொடுக்கும் வரை போராடுவோம் வாருங்கள் - மார்ட்டின் லூதர் கிங்
1963 ஆம் வருடம் . உடலையும் உறைய வைக்கும் கடும் குளிர். அமெரிக்காவின் லிங்கன் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில் மக்கள் கூடியிருக்கின்றனர். அந்தச் சதுக்கத்தில் கூடியிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வினாக்கள் பல இருந்தன. அந்த வினாக்களுக்கு விடைகள் இல்லாத நிலையில் ஒரு நட்சத்திரம் அமெரிக்க ஒளி வானில் மின்னியது. அந்த நட்சத்திரத்தின் பெயர் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். அமெரிக்காவின் காந்தி என்று அழைக்கப்பட்டார். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அமெரிக்க ஆப்பிரிக்கர்களின் நம்பிக்கையாக லிங்கன் சதுக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய உரை , அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உணர்வாய் மாறிப்போனது.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க மக்கள் மீது நடத்தப்பட்ட இன, மொழி, நிற தாக்குதல்களை அமைதியின் வழியிலேயே அம்மக்கள் எதிர்கொண்டனர். அதற்குக் காரணம் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். அவரின் உரை மக்களின் வேதமாகிப்போனது.
ஆண்டுகள் பல ஆனாலும் நாம் அடிமையாகவே இருக்கும் நிலை மாறிட வேண்டும் என்றும் , இந்த நிலத்தில் நியாயம் என்னும் கஜானா அறை எவ்வளவு நாள்தான் காலியாக இருக்கும். நாம் நியாயத்தின் பக்கம் நிற்போம். நமக்கான ஒரே செல்வம் நியாயம் , அமைதி மட்டுமே என்று மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் பேசப்பேச கைதட்டல் அமெரிக்காவின் செவிகளைத் தைத்தது.
நமது போராட்டம் நிச்சயமாக தீவிரவாதமாக மாறாது. அதே சமயம் அமைதியும் அடையாது. அதை நீங்கள் தீவிரவாதம் என்று அழைத்தால் நாங்கள் புன்னகையை மட்டுமே பரிசக வழங்குவோம். ஏனெனில் நாங்கள் உங்கள் உரிமையைப் பறிக்க போராடவில்லை. எமது கடமைகளுக்காகப் போராடுகிறோம் என்று முழங்கினார். நான் ஒரு கனவு காண்கிறேன் , ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும். நிறத்தால் , பிரிவினையால் மலை போல இருக்கும் மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும். குறுகிய பாதைகள் , குறுகிய மனிதர்கள் நேராக்கப்படுவார்கள். இது என் கனவு. ஒரு நாள் நனவாகும் நம்புங்கள் என்று விண் அதிரப் பேசினார் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். இந்த அமெரிக்காவில் இன்று நிறத்தால் மதிப்பிடப்படும் மக்கள் ஒருநாள் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். என் கனவை நான் காதலிக்கிறேன். என் கனவு எனக்கான கனவு அல்ல. இந்த தேசத்தின் கனவு.
இந்தக் கனவு நனவாகும் நாளில் அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் இருப்பார்கள். வெள்ளையினத்தவர் இருப்பார்கள் . ஆனால் பாகுபாடு இருக்காது. அது வன்முறையால் , தீவிரவாதப் போராட்டத்தால் விளையாது. அகிம்சை என்னும் ஆயுதம் மூலம் நிச்சயம் நிகழும் என்று தன் கனவைக் கொட்டிக் கொண்டிருந்தார் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர். கடுமையான குளிர் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துமோ அதுபோல இவரின் சொற்கள் ஒவ்வொன்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அலபாமா மாகாணத்தின் கருப்பினச் சிறுவர் சிறுமியர் அந்த நகரத்தின் வெள்ளை இனச் சிறுவர்களோடு கைகோர்த்து விளையாடுவார்கள் . அந்தக் கனவு நிறைவேறும் என்று முழங்கிய மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் , இந்த உலகில் படைக்கப்பட்ட மானுட உலகம் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டது. ஆம் சகோதரத்துவம், சமாதானம் , சமத்துவம் என்னும் நோக்கத்தோடு படைக்கப்பட்ட இந்த உலகின் கனவு, இந்த தேசத்தின் கனவு ஒரு நாள் மாறும் என்றார். கலவரமும் கோழைத்தனமும் ஒரே நோக்கம் கொண்டவை என்று முழங்கிய இவரின் உரை ஆப்பிக்க அமெரிக்கர்களின் இதயத்தில் பெரும் மாற்றத்தை , தாக்கத்தை , போராடும் குணத்தை , வன்முறையற்ற வழியை உருவாக்கியது.
மிஸ்ஸிப்பி மாகாணத்தில் எமக்கான உரிமைகள் , உடைமைகள் , வாக்குரிமைகள் வழங்கப்படும் என்று உரைத்த மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் , பேதமற்ற மண்ணாக இந்த மண் ஒருநாள் மாறும். அன்று சகோதரத்துவம் என்னும் சிம்பொனி நம் காதுகளில் ஒலிக்கும். நாமெல்லாம் ஒன்றாக ஒருநாள் சுதந்திரமானவர்களாக மாறுவோம். அதற்கு ஒன்றாக , உணர்வோடு போராடுவோம். நம் கைகளில் அகிம்சை மற்றும் சகோதரத்துவம் என்னும் ஆயுதம் மட்டும் வைத்துப் போராடுவோம் என்று இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்த சதுக்கத்தில் குரல் கொடுத்தார். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு நமக்கான ஒரு மின்னல் கீற்று கருவாகி, உருவாகியதை அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் கொண்டாடினர்.
தமது உரைகளில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான அன்பில் மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் பேசினார். அமெரிக்கர்களிடம் பேசும் போது, கருப்பின மக்களிடம் வெறுப்புடன் நடந்து கொள்ளும் அமெரிக்கர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்ற போது எதிர்ப்பாளர்கள் பணிந்தனர்.
கருப்பின இளைஞர்களிடம் பேசும் போது , அமெரிக்கர்கள் உங்களை அடிக்கிறார்களா என்று கேள்விபடுகிறேன் என்ற போது கூட்டம் ஆம் என்று விண்ணதிரச் சொன்னது. அமெரிக்கர்கள் உங்களை இழிவாக நடத்துகின்றனர் என்று அறிந்தேன் என்ற போது , கூட்டம் ஆமாம் ,ஆமாம் என்றது. அமெரிக்கர்கள் உங்களை ஆயுதம் வைத்துத் தாக்குகின்றனர். நீங்கள் வலியால் துடித்த போது அவர்கள் சிரித்தார்கள் என்று அறிந்தேன் என்ற போது அமெரிக்க கருப்பின இளைஞர்கள் வெறி கொண்டு கூட்டத்தில் இருந்த போது மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் இவ்வாறு பேசினார். உங்களிடமும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்ற போது ஆம் என்று சொன்ன இளைஞர்களைப் பார்த்து , அந்த ஆயுதங்களை அப்படியே வைத்து விடுங்கள். அகிம்சை என்னும் ஆயுதம் எடுத்துக்கொள்ளுங்கள். நியாயம், சகோதரத்துவம் , உண்மை என்னும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எதிர் நில்லுங்கள். அவர்கள் தாக்குதலை நிறுத்துவார்கள் என்ற போது கூட்டம் அமைதியானது. “ நம்மை வெறுக்கச் சொல்லி அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. நம்மை நேசிக்கச் சொல்லி நாமும் அவர்களுக்குக் கற்பிப்போம்” என்று முழங்கினார். உலகின் சிறந்த உரையாக, அகிம்சை உரையாக உலக மக்களால் ஏன் அமெரிக்கர்களாலேயே கொண்டாடப்படும் உரையாகத் திகழும் ”எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உரை பலரின் கனவாக , அமெரிக்க தேசத்தின் கனவாகவே மாறிப்போனது. மகாத்மா காந்திக்குப் பிறகு உலக அரசியலில் அகிம்சை மூலம் மாற்றத்தை ஏற்படுத்திய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் , அமெரிக்காவின் கருப்பின இளைஞர்களின் பலி வாங்கும் உணர்வினை அன்பு உணர்வாக , சகோதரத்துவ உறவாக மாற்றினார்.
அமெரிக்காவில் பேருந்துகளில் கருப்பினத்தவர் பாரபட்சமாக நடத்தப்படுவதைக் கண்டித்து மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் நடத்திய 381 நாட்கள் போராட்டம் நடத்தி கைது செய்த போது “அன்பெனும் ஆயுதம் மட்டுமே நான் ஏந்தியது” என்று கூறி கைது செய்தவர்களையும் கலங்க வைத்தார். போராட்டத்தின் நிறைவில் பேருந்துகளில் சமஉரிமை கிடைக்கப்பெற்றது.
1964 ஆம் வன்முறையற்ற போராடத்திற்காக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு பெறும் போது அவர் இவ்வாறாக குறிப்பிடுகிறார், ‘ இனவெறி ,போர் ஆகிய நட்சத்திரங்கள் இல்லாத நள்ளிரவுதான் மனிதனுக்குப் படைக்கப்பட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஒருநாள் சமாதானம், சகோதரத்துவம் வரும் என்று நிச்சயம் நம்புகிறேன் என்றும், நியாயம் தற்காலிகமாக தோல்வி பெறலாம். ஆனால் அநியாயத்திற்கு நிரந்தர வெற்றி கிடையாது. ஒருநாள் நியாயம் வெற்றி பெறும் என்றார். இதனையடுத்து அமெரிக்க 1965 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான சம உரிமைகளை வழங்கியது.
எனக்கு ஒரு கனவு உள்ளது ( I Have a Dream) என்று முழங்கிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் , அமெரிக்கர்களிடம் பேசும்போது அமெரிக்கச் சகோதர சகோதரிகளே , எனது மரணம் உங்களுக்கு ஆத்மரீதியிலான பலத்தைத் தருமானால் நான் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன். எனது மரணத்தைப் பரிசாக வைத்துக்கொண்டு உங்கள் கருப்பின சகோதரர்களுக்கு உரிமை தாருங்கள் என்று பேசினார். அதன்படியே 1968 ஆம் ஆண்டு டென்னசியில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்திக்குப் பிறகு அகிம்சைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுடப்பட்ட போது உலகம் கண்ணீர் விட்டது. ஆப்பிரிக்க மக்கள் மட்டுமல்ல அமெரிக்க மக்களும் அழுதனர். அவரது கனவு நனவானது. நம்பிக்கை நனவானது. சகோதரத்துவம் நனவானது. அகிம்சை நனவானது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் உரையாற்றிய லிங்கன் சதுக்கத்தில் அவரின் நினைவைப் போற்றும் வகையில் "நம்பிக்கையின் கல் " நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
"எனக்கு ஒரு கனவு உள்ளது" எனும் நம்பிக்கை நிறைவேறி விட்டது. நமக்கும் நம்பிக்கை எனும் கனவு உள்ளது. அதை வெல்வோம்.
No comments:
Post a Comment