Tuesday, 25 May 2021

புதுக்கோட்டை நார்த்தாமலை பயணம்

 

                      நார்த்தாமலை பயணம்

 

       2021 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் காலை 6 மணிக்கு கோவை – திருச்சி முதன்மைச் சாலையில் குளித்தலை காவிரிக் கரையோரம் காற்று வாங்கி நின்று கொண்டிருக்க, கோவையிலிருந்து பேராசிரியர் திரு. திருநாவுக்கரசு அண்ணா , வரலாற்று அறிஞர் திரு. இளங்கோவன் மற்றும் அன்புத் தம்பி திரு. பிரபாகரன் ஆகியோர் அழகிய மகிழுந்தில் வர இயற்கைக் காற்றை விடுத்து , செயற்கைக் காற்றுடன் மகிழுந்தில் ஏறி திருச்சி நோக்கி சென்றோம்.

        திருச்சி மாநகரை அடைந்து அடையாறு ஆனந்தபவன் உணவகத்தில் மினி டிபன் அருந்தி மீண்டும் வாகனம் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியனவற்றைக் கடந்து புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பறந்தது. மகிழுந்தில் திரு. திருநாவுக்கரசு அண்ணா மற்றும் வரலாற்று அறிஞர் திரு. இளங்கோவன் அவர்கள் பல்வேறு தரவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். திருச்சியில் இருந்து 40 கல் தொலைவில் , முத்திரையர்களின் படைத்தளமாக விளங்கிய நார்த்தாமலை குன்றுக்குச் சென்று சேர்ந்தோம்.



       இந்தக் கிராமத்தின் பெயர் பண்டைய காலத்தில் நகரத்தார் மலை என இருந்திருக்கக்கூடும்.  இந்த மலை தான் நகரத்தார் மக்களின் முக்கிய வணிகத்தலமாக இருந்துள்ளது. ‘’ நானாதேசத்து ஐநூற்றுவர் ‘’ எனும்  வணிகக்  குழுவினர் இங்கு தங்கி வாணிபம் செய்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

       முதன்மைச் சாலையில் இருந்து பிரிந்து 20 நிமிட நேரத்தில் பார்க்க மிரமிக்கும் வகையில் ஓர் அழகிய பாறைக் குன்றுகளை அடைந்தோம். தம்பி பிரபாகரன் அவர்கள் அழகுடன், பொறுப்புடன் வாகனத்தை இயக்கினார். கண்கொள்ளாகாட்சி வடிவுடன் நார்த்தாமலையில் முக்கிய அடையாளமாக விளங்கும் விஜயாலய சோழீச்சுவரம் கோயிலை மலை முகட்டில் கண்டோம். பலரிடம் வழி கேட்டு , அதனால் வலி பெற்று தவறானப் பாதைகளில் சென்று , மீண்டும் நேர்வழியில் சென்று சேர்ந்து பாறைகளில் நீர்த் தடாகத்தை அடைந்து மிகப் பிரமாண்டமான பாறைக் குவியல்களை இயற்கை அதிசயத்தைக் கண்டு நின்றோம்.

          விஜயாலய சோழிச்சுவரம் கோயிலை அடைய உள்நுழைகையில் கருப்பசாமி சன்னதி வரவேற்க , கருப்பனிடம் உத்தரவு பெற்று பாறைகளின் மீது நடக்க ஆரம்பித்தோம். தொல்லியல் துறையினர் எந்தவிதமான குறிப்புகளையும் வைக்காமல் தேடி வருவோரைத் தேட வைத்தனர் .



கருப்பசாமி கோயில் முன்பு 


        1871 ஆம் ஆண்டு தொண்டைமான் ராணியால் சுனைநீர் இறைக்கப்பட்டு நீருக்குள் இருந்த சிவலிங்கத்தைத் தரிசித்த தகவல்களைக் கண்டோம். நீருக்குள் மூழ்கிய சிவலிங்கத்தைத் தரிசித்து மேலேறிச் சென்றோம் . ஓர் குகைக்கோயில் இடதுபக்கம் வரவேற்க உள்நுழைந்து பார்த்தோம். முகமதிய அன்பர் ஒருவரின் சமாதிக் கோயிலாக இருந்தது.

      சுனைநீரை கைகளால் தழுவி முகம் துடைத்துக் கொண்டே மேலேறிச் சென்றால் பிரமாண்டமான பிரதானக் கோயில் தென்பட்டது.



 அங்கே எங்களை வரவேற்க  நந்திபெருமான்  அழகுற வீற்றிருந்தார். அவருக்கு முன்னே விஜயாலய சோழிசுவரர் வீற்றிருக்கும் கோயில் , பூட்டப்பட்டிருக்க    அலைபேசி வெளிச்சத்தில் தரிசித்தோம். சிவலிங்கத்தைச் சுற்றி வர சாந்தார அறை காணப்பட்டது. விமான அமைப்பு வேசார முறையில் இருப்பதை திரு. இளங்கோவன் அவர்கள் விளக்கிக் கூறினார். வட்டவடிவ முறையில் கலைநயத்துடன் தென்தமிழகத்தில் கட்டப்பட்ட மிக அற்புதமான கோயில் என்பதையும் திரு. இளங்கோவன் கூறினார். தமிழகத்தில் வேசர பாணி அமைப்பிலான கோயிலின் தொடக்கம் இதுவென்பதையும் விளக்கினார்.



      


      கோயிலின் முன்புறம் முதலாவதாக பதிணென்பூமி விண்ணகரம் என்னும் திருமால் குடைவரைக் கோயிலை அடைந்து , திருமாலின் பத்து அவதாரச் சிலைகளையும் காண முடிந்தது. முதலில் சமணர் குடைவரையாக இக்கோயில் வெட்டப்பட்டு இருக்க வேண்டும் என  வரலாற்று அறிஞர் திரு. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டார். இந்தக் குடவரையில் மண்டபத்தை யானை , யாளி , சிங்கம் ஆகியவை வரிசையாகத் தாங்குவதைப் போன்று அழகுப் பாணியில் விண்ணகரம் அமைக்கப்பட்டுள்ளதை கண்டு மகிழ்ந்தோம்.

 கருவறையில் சிலைகள் எதுவும் இல்லை. அர்த்த மண்டபத்தில் ஒரே தோற்றத்தில் காணப்பட்ட திருமால் சிலைகள் ஒன்றுபோலக் காட்சியளிக்க , திருமால் தனது சுதர்சன  சக்கரத்தை ஏவும் காட்சி அழகுபட சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.



திரு.இளங்கோவன் அவர்களும், திரு.திருநாவுக்கரசு அவர்களும் விளக்கம் சொல்லும் காட்சி



   பதிணென்பூமி விண்ணகரம் கோயில் உட்புறம்

   பதிணென்பூமி விண்ணகரம் அரிகில் ‘’பழியிலி ஈசுவரம் ‘’  எனும் சிறிய குடைவரைக் கோயில் காணப்பட அருகே அவ்விடத்தின் குளுமைக்கு ஆதாரமாக மிகப்பெரிய மாமரம் விற்றிருக்க , அவ்விடத்தின் பிரமிப்பு ஆட்கொண்டது. இந்த குடைவரையின் உட்புறம் அழகிய துவாரபாலகர்கள் வீற்றிருக்க ‘’ பழியிலி சிவனார்’ என்னும் அழகிய பெயரில் சிவனார் வீற்றிருந்தார். நகரத்தார் மக்கள் ஒருசிலர் வருடத்திற்கு ஒருமுறை நார்த்தாமலை வந்து வணங்கிச் செல்கின்றனர் என்பதைக் கூற்றுகளின் வழி அறிந்து மகிழ்ந்தோம்.  விஜயாலய சோழிச்சுவரம் கோயிலின் மேலிருந்து கீழ் பார்ப்பின் கழுகுப் பார்வையில் அனைத்தும் தெரிய , கீழிருந்து மேல் நோக்கின் எதுவும் தெரியாத முறையில் கோயிலின் அமைப்புக் கட்டப்பட்டுள்ளது.

      தஞ்சாவூர் பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயி்ல்களுக்கு இங்கிருந்துதான் கற்கள் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன என்பதை வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 ‘’பழியிலி ஈசுவரம் ‘’  கோயில் முன்பு...மரங்கள் சூழ்ந்த பாறை வனத்தில்

 

                 பொ.ஆ 9 ஆம் நூற்றாண்டின் விஜாயலய சோழிச்சுவரம் கோவிலின் பிரமிப்பையும், நீர் சுனைகளின் குளுமையையும் உணர்ந்து , இராசராச சோழன் வெட்டி எடுத்துச் சென்ற பாறைகளின் குவியல்களைக் கண்ணுற்றும் , தொல்லியல் துறையின் அலட்சியத்தைக் கண்டு கவலையுற்று,  தை குளுமையும் உணர்ந்து, அடுத்த பயணத்திற்கு ஆயத்தாமானோம்....குளுமை  சூழ்ந்த வனாந்தரமான பாறையில் கருப்பசாமி வீற்றிருக்க கண்ணுற்று உத்தரவு பெற்று வாகனம் இடமாகத் திரும்பியது.

 

மீண்டும் அடுத்த  பயணத்தில் ........  

No comments: