முசிறி என்னும்
அழகிய கிராமம் காவிரிக் கரையில் திருச்சி நாமக்கல் சாலையில் அமைந்துள்ளது.
இவ்வூர் சங்க காலம் தொட்டே புகழுடன் விளங்கி வரும் ஊராகும். இந்த ஊரின் அருகே புகழ்
பெற்ற திருஈங்கோய்மலை கோவில் உள்ளது. முசிறி நகரத்தின் மையப்பகுதியை ஒட்டி ஒரு
கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் புகழ்பெற்ற
ஒரு மதகு உள்ளது. காவிரியில் இருந்து நீரைப் பிரித்து அருகில் உள்ள வேளாண்
நிலங்கட்கு நீர் பிரித்து அனுப்ப 800 ஆண்டுகளுக்கு முன்பு இம் மதகு அமைக்கப்பட்டன
என்பதை அறிய முடிகின்றது.
800
ஆண்டுகள் பழமையான மதகு
திருச்சி
நாமக்கல் புறவழிச்சாலை திட்டம்
செயல்படுத்தத்தப்பட்டால் இம்மதகு அழிக்கப்படும்
என வரலாற்று அறிஞர்கள் வேதனைப்படுகின்றனர். அப்படி என்னதான் உள்ளது இந்த
மதகுக் கல்வெட்டில் என விசாரித்தில் பல
அற்புதத் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு
என்றும் பெயர் இருந்தது என்பதை மதகு அருகில் உள்ள கல்வெட்டு உணர்த்துகின்றது. இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை
தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல் வெட்டாக அரசு பதிவு
செய்துள்ளது என்பதும் இங்கு உற்றுநோக்கத்தக்கது. வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்
தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை சமீபத்தில் ஆய்வு செய்து பல அரிய தரவுகளைப்
பகிர்ந்துள்ளனர்.
குலோத்துங்க சோழன் காலத்தில்
கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’
என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இது,
காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை
உறுதிப்படுத்துகிறது என்னும் சிறப்புமிகு
தரவினையும் பதிவு செய்கின்றனர் .
மூன்றாம் ராஜராஜ சோழன்
அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன்
பேட்டையில் அகண்ட காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் மதகு பாலம் ஒன்று
கட்டப்பட்டது என்பதை அக்கல்வெட்டு உணர்த்துகின்றது. குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி
ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர் தான் இந்த மதகு பாலத்தை கட்டி
இருக்கிறார் என்றும் இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில்
வைக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான்
காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத்
துறை உறுதி செய்தது. இந்திய கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை குறிப்பு மற்றும்
கல்வெட்டுச் சாசன நகலை வைத்து இதை உறுதி செய்துள்ளோம் என குடவாயில்
பாலசுப்பிரமணியம் ஐயா கூறுகின்றார். ஆனால்,
அதன் முக்கியத்துவம் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் அதை ராணி
மங்கம்மாள் மதகு என்று இந்தப் பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ராணி
மங்கம்மாள் காலத்தில் இம் மதகு சீரமைக்கப்பட்டு இம் மதகை அடைத்தாலோ அல்லது சேதப்படுத்தினாலோ
ஆயிரம் வராகன் அபராதம் என்றக் குறிப்புக் கல்லை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர் . அரசுத்
துறை அதிகாரிகள் சேதப்படுத்தியுள்ளதும், மக்கள் அம் மதகின் மேற்புரம் அடைத்து
குப்பைகளையும் கொட்டுகின்றனர்.
வழக்கம்போல தொல்லியல் துறையினரின்
வழக்கமான வாசங்கங்கள் அடங்கிய இரும்புப்
பதாகை குப்பைமேட்டின் அருகே
வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதகு பல ஆண்டுகளாக சிறப்புடன் அரசர்கள் காலத்தில்
பராமரிக்கப்பட்டு தற்போது சாலை விரிவாக்கத்திற்காக விரைவில் அழிக்கப்படும்
பட்டியலில் இம்மதகும் உள்ளது
வேதனைக்குரியது
சோழர் காலத்தில் இந்த மதகுத் திறப்பான்கள் மரப் பலகைகளில் இருந்திருக்கிறது. பொதுப் பணித்
துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றிய போது, மதகுப்
பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை அதன் முக்கியத்துவத்தை உணராமல் சுவர்
வைத்து மறைத்து விட்டார்கள் . தொல்லியல் துறை அந்த அளவு கவனமாக இதைப் பாதுகாத்து
வந்துள்ளனர் என்பதற்கு இந்த சுவர் ஒரு
சான்று
இந்த
ஊரில் தமிழ்ச்சங்கம் மற்றும் ரோட்டரி அமைப்பினர், அரசினர் கலைக்
கல்லூரி என பல அமைப்புகள் உள்ளதை இங்குக் காணமுடிகின்றது. ஆனால் ஒரு அமைப்புக் கூட இதன்
முக்கியத்துவம் உணர்ந்து இங்கு அதன் விபரங்கள் அடங்கிய பதாகை அடங்கிய குறிப்பு
வைக்காதது வேதனை அளிக்கின்றது. வெளிநாடுகளில் 100 ஆண்டுகள் ஆனாலே அதன் பெருமை உணர்ந்து கொண்டாடுகின்றனர்.
800 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்வெட்டை முசிறியில் கண்டுகொள்ளாமல் இருப்பது நம் மக்களின் ஆர்வமின்மையை உணர்த்துகின்றது.
நடந்தாய்
வாழி காவேரி! நாடெங்குமே செழிக்க!
நன்மையெல்லாம்
சிறக்க!
“உழவ ரோதை
மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை
சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”
“மருங்கு
வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண்
விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி”
என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
பாடிச் சிறப்பித்த காவிரியின் சிறப்பினை வரலாறு அறியாத மன்னர்கள்
சிறப்பாகத்தான் கையாண்டனர். எல்லாம் அறிந்த நாம் வரலாறை இழப்போம் என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் இப்படி பல
சான்றுகள். யாரேனும் இதை மீட்டெடுப்பார்கள் என்று
நம்புவோமாக ........
No comments:
Post a Comment