Wednesday, 31 January 2018

தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசியின் யோக முறையில் வாழ்வியல் நெறிகள்



தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசியின்                       யோக  முறையில் வாழ்வியல் நெறிகள்

              மக்கள் அனைவரும் இன்பமாக வாழ விரும்புகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. விஞ்ஞானம் மனிதர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. இருப்பினும் மனிதகுலம் பெரும்பாலும் தொடர்ந்து உடலாலும், மனதாலும் துன்பங்களை அனுபவித்து வருகிறது. இத்துன்பங்களைப் போக்கி, உலக மக்கள் அனைவரும் நல்ல உடல் நலமும், மனவளமும் பெற்று அமைதி, அன்பு, நிறைவு, ஆகியன பெற்று, இன்பமுடன் வாழ யோகமுறைக் கல்வி அவசியமாகிறது. அதன்பொருட்டு     தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகிய இருவரும் யோக முறைகளை உருவாக்கி மக்களுக்குக் கற்றுத் தந்தனர். இருவரின் யோக முறைகளை  ஒப்புமைப் படுத்தி,  ‘’தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசியின் யோக  முறையில் வாழ்வியல் நெறிகள்’’ என்னும் தலைப்பில் இவ்வியல் அமைகிறது.
யோகம்
                                                                
 சீவன் சிவனோடு கலத்தல் அல்லது ஆன்மா இறையோடு கலத்தலுக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி யோகம் எனப்படும்.உண்மைப் பொருள் உள்ளும் புறமும் பொருந்தி அன்பும்,அமைதியும்,அருளும்,அழகும் கூடிய இன்ப வாழ்வு யோகமாகும்.மனிதனுக்கு நடு நிற்பது மனம்.அம்மனம் புறத்துத் திரிந்து பிரிந்து நின்றால் தகாத குணங்களில் கட்டுண்டு துன்பம் உண்டாகும்.மனம் தெய்வப்பொருளுடன் ஒன்றத் தமிழக மக்கள் யோக முறையைக் கையாண்டனர்.
ஐவகைத் தரிசனங்களில் ஒன்று யோகமாகும்.மூச்சை அடக்குவது,மூக்கு நுனியை நோக்கி மெளினியாய் இருப்பது யோகமன்று.சித்தி சுத்தி ஏற்பட்டு நான் எனது என்ற நினைவு அறவே ஒழிதலே யோகமாகும்.இதன்படி யோக முறைகள் செய்வோர் பின்பற்ற வேண்டிய எட்டு யோக விதிகள் எட்டாகும்.அவை இயமம்,நியமம்,ஆசனம்,பிராணாயாமம்,பிரத்தியாகாரம்,தாரணம், தியானம், சமாதி என்பனவாகும்.
இயமம்; இயமமானது பிற உயிர்களைத் துன்புறுத்தல் கூடாது.பொய் பேசுதல் கூடாது,களவாடல்,உடைமைகளைப் பெருக்குதல் ஆகியவற்றைத் தவிர்த்து மனதை நல்வழியில் செலுத்துதல் வேண்டும்.

      நியமம்;
          நியமமாவது தூய்மை,நல்விழைவுடன் இருத்தலாகும்.

ஆசனம்;
         ஆசனமாவது யோகத்தின் பொருட்டு அமர வேண்டிய முறையினைக் கூறுவதாகும்.
பிராணயாமம்;
           மூச்சை அடக்கும் முறையைக் கூறுவது பிராணயாமம்.

பிரத்தியாகாரம்
          பிராணயாமம் கைகூடிய பிறகு பயில வேண்டியது பிரத்தியாகாரம்.மனத்தைச் புறத்துச் செல்லாமல் தடுக்கும் முறையைக் குறிப்பதாகும்.                                               
தாரணை;
        புலன்களை அவற்றுக்குரிய பொருள்களின் மேல் செல்லவிடாது தடுத்தால்,மனதை ஒரு நிலைப்படுத்துவது எளிதாகும்.மனம் ஒரு நிலைப்படுவதே தாரணை எனப்படும்.
தியானம்;
         மனம் ஒருநிலைப்பட்டு உண்மைகளை ஊன்றிக் கவனித்தல் தியானமாகும்.
சமாதி;
        தியானத்தின் பயனாக இறுதி நிலை சமாதியாகும்.
யோகத்தின் பயன்;
உலகப் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் குறைபாடு உடையது.எனவே குறை இல்லாத நிறைவு மயமான ஒரு பொருள் உண்டு என்றும்,அதுதான் இறைவன் என்றும்,அதனை யோகத்தின் மூலம் அடையலாம் என்றும் நிலை நாட்டுவது ஆகும்.
தொல்காப்பித்தில் யோகம்;
       பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் யோகம் பற்றிய செய்தினைத் தொல்காப்பியர் குறிக்கின்றார்.
        புறத்திணையில் வாகைத்திணைக்குரிய துறைகளைக் குறிப்பிடும் போது,
       ‘நாலிரு வழக்கின் தாபத பக்கமும்
                                   (தொல்,பொருள் நூ.எண்=75)
என்கின்றார்.
       வழக்கு என்றதனால் தவம்புரிவார்க்கும் யோகம் செய்வார்க்கும் உரியனவாகும்.தவஞ்செய்வார்க்கு உரியன ஊணசையின்மை,நீர்நசையின்மை,வெப்பம் பொறுத்தல்,தட்பம் பொறுத்தல்,இடம் வரையறுத்தல்,ஆசனம் வரையறுத்தல்,இடையிட்டு மொழிதல்,வாய்வாளாமை என எட்டும்,இவற்றிற்கு உணவினும்,நீரினும்,செல்லும் மனத்தை தடுத்தலும்,நீர் நிலையில் நிற்றலும்,கடலும் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலும்,தாமரையும் யாமையும்,முதலிய ஆசனத்திருந்தலும்,உண்டற்காலை உரையாடாமையும்,துறந்த காற்று எட்டும்,யோகத்தின் நிலை என்றும், யோகம் செய்வார்க்குரிய இயமம்,நியமம்,ஆசனம்,வளிநிலை, தொகைநிலை,பொறைநிலை,நினைதல்,சமாதி என எட்டாக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.

சங்க இலக்கியத்தில் யோகம்;
     சங்க இலக்கியங்கள் யோகம் செய்பவர்களின் இயல்பினை விளக்குகின்றது.புறநானூறு பாடல் ஒன்றில்,ஓவியம் போல அழகிய வடிவினையுடைய மகளிருடைய அணிகலன்கள் அவை நிற்கும் நிலையினின்று கழலும் வகையில் ஒருவன் ஆதரம் செய்தான். நெடிய  மலையிடத்து அருவி நீராடிக் காட்டுயானை கொண்டுவரப்பட்ட விறகால் செந்தியை வேட்டு முதுகின் கண்ணே புரிந்த சடையைப் புலர்த்துவோன் என்கின்றது.
‘’ஓவத்தன்ன வியனுடை வரைப்பிற்
பாவையன்ன குறுந்தொடி மகளீர்
இழைநிலை நெகிழ்த்த மன்னற் கண்டிடும்
கழைக்கணெடு தந்த விறகில்
கருந்தென் செந்தீ வேட்டுப்
புறத்தாழ் புரிசடை புலர்த்துவோனே (புறம் பா எ.251)
    என்று குறிப்பிடுகின்றது. இங்கு ஆதரம் செய்தவனும், அவனுக்கு யானை விறகு தந்த நிகழ்ச்சியையும் நோக்கும் போது சங்க இலக்கியங்களில் தவம் செய்வார் இருந்தமை அறிய முடிகின்றது.மேலும்,பெரும்பாணாற்றுப்படையில் தவம் செய்தவர்க்கு யானை விறகு தந்த நிகழ்வை,
   செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்னுக்
  களிறுதரு விறகின் வேட்கும்,ஒளிறலங்கருவிய
  மலைகிழாவோனே             (உரு.பெரும்.பா.வ.497.500)
என்று சுட்டிச் சொல்வதன் மூலம் அறியலாம்.
புறப் பொருள் வெண்பா மாலையில் யோகம்;
   புறப்பொருளை இயற்றிய ஐயனாரிதனார் தவம் செய்வார் சுவர்க்கத்தை அடைவர் என்று குறிக்கின்றார்.
  நீரில் பலகால் மூழ்கியும்,வெறுநிலத்தில் சாய்ந்தும்,மான் தோலை ஆடையாக உடுத்தியும்,தெய்வத்தையும் விருந்தினையும் போற்றும் இந்நிலைகள் தம்மைச் சுவர்கத்துக்குக் கொண்டு செல்லும் என்கிறார்.
   நீர் பலகாண் மூழ்கி நிலத்தசைஇச்
   சோர்சடை தாழச் சுடரோம்பி- ஊரடையள்
   கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
   வானத்து உய்க்கும் வழி (ஐய. பு.பொ.வெ.மா=164)
இவ்வாறு தவம் செய்வார் வானகத்து உயர்வான நிலையை அடைவர் என்பதைக் குறிப்பிடுகின்றார்.
வள்ளுவத்தில் யோகம்;
    மனம் பொறிவழி போகாது தடுக்க,உண்டி சுருக்கலும்,வெயிலில் நிற்றலும்,மாரியிலும்,பனியிலும்,நீர்நிலைகளில் நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து,பிற உயிர்களை ஓம்புதல் தவமாகும்.
இதனை,
      ‘’ உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
       அற்றே தவத்திற்கு உரு’’       (திரு.குறள்.261)
என்று வள்ளுவர் குறிக்கின்றார்.

திருமுறைகளில் யோகம்
   யோக சாதனங்களை முறையாகச் செய்தால் இறைவனின் அருளையும் பெறலாம் என்பதை,
  பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு
  அட்டமா சித்தி அருளிய அதுவும்’ (திருவாசகம் )
என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.
யோகத்தினால் தான் என்ற நிலை அழியும் என்பதனை,
 ‘எனை நானென்பது அறியேன் பகல்
 இரவாவதும் அறியேன் (மா.தி.வா.கீ..62. )
என்று மாணிக்கவாசகர் விளக்குகின்றார்.
பிரமனும் மாலும் கண்ணால் காணாத இறைவனை பாடுகின்ற பணிகின்ற பல்லாண்டு இசை கூறும் பக்தர்கள் உடலில் உட்புக கண்டேன் என்பதை,
  ‘நாடினார் கமலம் மலரயனோடிரணியன் ஆகங்கீண்டவன்
 நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
 பாடுவார் பணிவார் பல்லாண்டு இசைகூறு பத்தர்கள் உள்புக்குத்
 தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானை
                                                                  (  திரு.தே.4.21.10)
அப்பர் இப்பதிகப் பாடல் வழி உணர்த்துகின்றார்.

பெரியபுராணத்தில் யோகம்;
பெரியபுராணம் ஆக்கிய சேக்கிழார் பெருமிழலைக் குறும்பநாயனார் புராணம் கூறும் போது யோக நெறி பற்றிக் கூறுகிறார்.
         மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன்தொண்டர்
   நண்ணற்கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
   கண்ணிற்குரிய மணிகழிய வாழ்வார்போல வாழேன்  என்று   எண்ணிச் சிவன்தாள் இன்றே சென்றடைவன் யோகத்தால் என்பார்.
               (பெ.புராணம்=பெ.மி.கு.நா புராணம்=பா.எண்=9)
என்று குறிப்பிடுகின்றார்.
  மண்ணில் சிறந்து விளங்கும் திருநாவலூரில் எழுந்தருளிய சுந்தரர் பிறரால் எளிதில் அடைதற்கரிய திருக்கயிலையை நாளைச் சென்றடையவும், கண்ணின் கருமணி கழிந்து பின்னும்வாழ்வார் போல வாழமாட்டேன் என்று நினைந்து யோகநெறியின் மூலம் இன்றே சிவனுடைய தாளை அடைவேன் என பெருமிழலைக் குறும்பநாயனார் கூறுகிறார்.

கந்தபுராணத்தில் யோகம்
    கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பசிவாச்சாரியார் யோகம் பற்றி விளக்குகின்றார்.
    ஈசன் நல்லருள் அன்னதோர் மானதம் என்னும்
   வாச நீர்த்தடம் போகி ஓர் சாரிடைவைகி
  வீசகால் மழை ஆதபம் பணிபட மெலியாப்
  பாசம் நீக்குநராமைன அருந்தவம் பயின்றான்
                           (க.சி.க.புராணம் பா எண்=19)
        தக்கன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து மேன்மையடைய விரும்பினான்.தன் தந்தையாகிய நான்முகனை வணங்கி அவர் அறிவுரைப்படி சிவபிரானை  எண்ணி தவம் புரியத் துணிந்தான்.காற்று,மழை,வெயில்,பனி ஆகியவைகளுக்கு அஞ்சாமல் உயிர்க்காற்றைச் சுழுமுனை வழியாய் எழுப்பி,மன ஒருமையோடு ஐந்தெழுத்து மறையை முறைப்படி எண்ணி அரும்தவம் செய்தான்,என்று கச்சியப்ப சிவாச்சாரியார் தக்கன் அருந்தவம் குறித்துப் பாடியுள்ளார்.
       தாயுமானவர் பாடல்களில் யோகம்;
  யோகப் பயிற்சிகள் மூலம் மனதை அடக்கும் திறமை பெற்று விட்டால்,தீயவற்றிலிருந்து மனதை விலக்கிக் கொள்ளவும் நல்லவற்றில் ஆற்றல் கிட்டும் என்பதை தாயுமானவர் உணர்ந்திருக்கிறார்.
 தாகம் அறிந்த இன்ப நிட்டை தாராயேல் ஆகெடுவேன்
 தேகம் வீழ்ந்திடின் என் செய்வேன் பராபரமே
நேசநிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்கு
 ஆசை உண்டோ நீ அறியாதது அன்றே பராபரமே
                                (தா.பா=67)
என்றும்,
   யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம்பேரன்பு ஆன
   தாகியரும்யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே
                                    (தா.பா=67)
  என்று குறிப்பிடுவதன் மூலம் தாயுமானவர் யோகநெறியை மேற்கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
சாந்தலிங்கர் பாடல்களில் யோகம்;
      தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்துக் கொங்கு நாட்டில் கோவையை அடுத்த திருப்பேரூரில் திருக்கயிலாய மரபில் திருப்பேரூராதீனத்தை தோற்றுவித்தவர். தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம், கொலை மறுத்தல், அவிரோத உந்தியார் எனும் நான்கு அருள் நூல்களைப் படைத்தவர்.அவிரோத உந்தியார் நூலில்,
 இப்பாவனா நிட்டை  மாயோக மீசற்க்
 தொப்பின் மாபூசையும் உந்தி பற
 உண்மையைச் சுட்டுமென்று உந்திபற
                         அவிரோத உந்தீயார் பா.எண்=79
     என்று விளக்குகிறார்.
பாவனா நிட்டையை மகாயோகம் என்று தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
    
    அஞ்சு மூன்றஞ்சக்க நாதியே தேனுநின்
    வஞ்ச மறுத்தோதென்று உந்தீபற
     மனமிட்டமான என்று உந்தீபற
                     (த.சா.அஅவிரோத உந்தீயார் பா.எண்=81)

என்று விளக்குகிறார்.இதன் மூலம் தியானத்தை தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் வலியுறுத்துகின்றார்.
     மந்திர நிட்டைகளில் மனது நில்லாவிடத்து அம்மனது நிருமலமாய் நிலை கொள்வதன் பொருட்டு வாயு தாரணை முதலியவற்றில் யோகமாகிய தவங்களைச் செய்விக்குமாறு தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
இதனை,
      மந்திர நிட்டையின்றேல் வாயு வாதியாற்
      சிந்தை தூய்தாவற்கு உந்தீபற
      செய்யோகம் அதிய உந்தீபற
என்று குறிப்பிடுகின்றார்.
                      (த.சா.அஅவிரோத உந்தீயார் பா.எண்=82)

                      

தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும்                                   வேதாத்திரி மகரிசியின்
யோக முறைகள்
      இந்திய நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாக சைவ சமயம் விளங்குகிறது.அத்தொன்மை வாய்ந்த சமயத்தை பின்பற்றும் குடும்பத்தில் தோன்றிய தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தமிழ்நாட்டின் பழமையான இலக்கியங்களைக் கற்று சுவாமி சிவானந்தரிடம் முறையே யோகம் பயின்று இம்மானிட சமூகம் பயன்பெற யோக முறைகளைப் பயிற்று வித்தார்.
  தமிழக பக்தி வரலாற்றில் தாயுமானவரின் பாடல்கள் அருளனுபவப் பாடல்களாகத் திகழ்கின்றன.தாயுமானவரின் பாடல்களைத் தம் சீடர்களுக்கு கூறிப் பக்திச் செல்வத்தை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் வழங்கியுள்ளார்.
     ‘மனம் கனவிலும்,நனவிலும் எப்போதும் சிந்தித்திக் கொண்டே இருக்கிறது.மூச்சு கணநேரம் கூட நிற்பதில்லை.சிந்தனையும் மூச்சும் செயல்களே,உண்பதும் செயலே.எனவே செயலற்று இருப்பது என்பது இயலாத ஒன்று.                 (தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்)
  என கூறுமிடத்துத் தாயுமானவரின் பாடல்களை மேற்கோளாகக் காட்டுகின்றார்.இதனை,
    கந்துஉக மதக்கரியை வசமா நடத்தலாம்
    கரடி வெம்புலி வாயையும்
    கட்டலாம்,ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
    கண்செவி எடுத்து ஆட்டலாம்
         ----------------------------
                    தாயுமானவர்.பாடல்கள்(தேசோமயானந்தம்,பா.எ=8
என்ற பாடலடிகளை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் எடுத்துக் காட்டுகிறார்.

மனம் என்பது ஐம்புலன்களின் செயல்பாடுகளை எண்ணத்தின் மூலம் செயல்படுத்தும் களம் என்பார்கள்.இதனை வேதாத்திரி மகரிசி அவர்கள்,
    மனம் உறுதியான நிலையிலும் தெளிவான நிலையிலும் உள்ளம் ஆகிறது.உள்ளம் அறிவோடு இணைந்து இறைநிலை அடைகிறது என்கிறார்.
    உடல் இயக்கச் சிறப்புநிலை உள்ளம் ஆகும்
    உள்ளம் என்பது உடலுக்கு ஊக்க சக்தி 
                            (த.வே,ம ஞானக்களஞ்சியம்.191)                                         
இவ்வாறாக,உடல் இயக்கத்திற்கு மனம் தான் காரணம் என்கிறார் வேதாத்திரி மகரிசி .
    இவ்வாறு மனம்,உள்ளம் பற்றிய கருத்தாய்வுகளில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகியோரின் கருத்துகள் பொருந்துகின்றன.


அடயோகம் (ஹதயோகம்)
    யோகம் ,ஞான யோகம்,பக்தி யோகம்,கர்ம யோகம்,ஜபயோகம்,ஹத யோகம் என ஐவகைப்படும்.

ஞான யோகம்;
              தன்மை முழுமையாக அறதலே ஞான யோகம்.தான் யார் என்றும்,தனது நிலையின் இருப்பை உணர்வது ஞான யோகமாகும்.
பக்தி யோகம்;
             இறைவனை பக்தி செய்வதைக் காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்றடக் கலப்பது பக்தி யோகமாகும்.திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகியோர் பக்தி யோக நெறி வந்தவர்கள்.
கர்ம யோகம்;
            கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது கர்ம யோகம்.சிவனடியார்கள் இவ்வழி வந்தவர்கள்.
ஜபயோகம்;
         கடவுளைக் காட்டிலும் கடவுளின் நாமமே உயர்ந்தது என்று கூறுவது ஜபயோகம்.


ஹதயோகம்.
    ஹத என்றால் இருபுலம் என்று பொருள். உடலும் மனமும் தராசு போல ஊசலாடிய படி இருத்தல்.அதை ஒரு நிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு மத்தியில் இருக்க வைப்பது ஹத யோகம் ஆகும்.ஹதயோகம் உடல் சார்ந்தது.உடலை இறைவனின் இருப்பிடமாக எண்ணி,உடலை தூய்மையாகவும்,சக்தியுடனும் பராமரிப்பது ஹதயோகமாகும்.இம்முறை குறித்து தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகியோர் இவ்வுலகிற்கு வழங்கிய முறைகளை பின்வருமாறு காணலாம்.
  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்
                       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் யோகக்கலையில் வல்லவர். உலகம் முழுவதும் யோக நிலையங்களை நிறுவி ஹதயோகத்தை பரப்பினார்.
          தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் ஹதயோகத்தை கீழ்வரும் எட்டு நிலைகளில் குறிப்பிடுகின்றார்.அவை,
 1.கண்களுக்கான பயிற்சி
 2.சூரிய வழிபாடு
 3.தியானம் செய்ய அமரும் ஆசனங்கள்
 4.கலைச்சிறப்பு மிக்க ஆசனங்கள்
 5.பிராணாயாமம்
 6.பந்தங்கள்- பூட்டுகள்
 7.முத்திரைகள்
 8.ஆறு வினைகள்
        என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் யோக முறையை வகுத்து தன் சீடர்களுக்கும்,ஒருங்கிணைந்த யோக நிலையம் சார்பில் பொது மக்களுக்கும் பயன் தரும் வகையில் கற்றுத் தந்தார்.
       தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்  யோகத்தை, இக்கால மக்கள் எளிமையாக கற்கும் வகையில்,
1.கைப் பயிற்சி
2.கால் பயிற்சி
3.தசைநார், நுரையீரல் பயிற்சி
4.கண் பயிற்சி
5.கபாலபதி
6.மகராசனம்
7.அக்கு பிரசர்,மசாஜ் பயிற்சி
8.உடல் தளர்த்தல்
  ஆகிய எட்டு முறைகளை வேதாத்திரி மகரிசி அவர்கள் வகுத்துள்ளார். , இவ்வகை யோக முறைகள் மனவளக்கலை மன்றங்கள் வாயிலாக பொதுமக்களுக்கும், அவரின் சீடர்களுக்கும் கற்றுத் தரப்படுகிறது. 
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் யோக முறை;
  கண்களுக்கான பயிற்சி;
   யோக முறைகளில் நேத்ர வியாயாமம் என்னும் சொல்லுக்கு கண்களுக்கான பயிற்சி என்று பொருள்.கண்களுக்கான பயிற்சியினை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் எட்டு முறைகளில் குறிப்பிடுகிறார்.
பயிற்சி 1 ; கண்களை முடிந்த அளவு மேலும் கீழுமாக ஏற்றி இறக்குதல்.
பயிற்சி 2; கிடை மட்டமாக வலமிருந்து இடமாக விழிகளை நகர்த்துதல்.
பயிற்சி 3; குறுக்காக வலது மேல் முனையிலிருந்து இடது கீழ் முனைக்கு விழிகளை நகர்த்துதல்.
பயிற்சி 4; குறுக்காக இடது மேல் முனையிலிருந்து இடது கீழ் முனைக்கு விழிகளை நகர்த்துதல்.
பயிற்சி 5; அரைவட்டமாக வலது கீழ்ப்புறத்திலிருந்து மேல்பக்கமாக இடது கீழ்ப்பக்கத்திற்கு திரும்பவும் அதே வழியாக இடது கீழ்ப்புறத்திலிருந்து மேல் பக்கமாக வலது கீழ்ப்பக்கத்திற்கு விழிகளைச் சுழற்றுதல்.
பயிற்சி 6.அரை வட்டமாக வலது மேல் புறத்திலிருந்து கீழ்ப்பக்கமாக இடது மேல்புறத்திற்கு திரும்பவும் அதே வழியாக இடது மேல் புறத்திலிருந்து வலது மேல் புறத்திற்கு விழிகளைச் சுழற்றுதல்.
பயிற்சி 7;வலது கைவசமாக ஓரமாக அனைத்து இடங்களுக்கும் செல்லுமாறு ஒரு முழுவட்டம் விழிகளைச் செல்ல விடுதல்.
பயிற்சி 8; இடது கைவசமாக அதேபோல் ஒரு முழுவட்டம் விழிகள் செல்லுதல் வேண்டும்.
     இவ்வாறாக மேற்காணும் கண் பயிற்சிகளை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் வரையறுத்துக் கூறியுள்ளார்.
சூர்ய நமசுகாரம்;சூரிய வழிபாடு;
    சூர்ய பகவானை நோக்கி நின்று அவரை வழிபடு முகமாக பன்னிரு முறைகளில் இந்த ஆசனத்தை தினமும் ஐந்து முறை செய்தல் வேண்டும் என தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.   
       இந்த ஆசனம் மூலம்  தோற்றப் பொழிவும்,உடல் உறுப்புகள் பலமும் பெறுவதுடன் அலைபாயும் மனமும் ஒருங்கிணையும் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.

தியானம் செய்ய அமரும் ஆசனங்கள்

       மனித வாழ்வில் தியானம் என்பது மிகவும் இன்றியமையாதது என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.தியானம் செய்ய அமரும் வகை ஆசனங்களை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் வரையறுத்த இம்முறை ஒருங்கிணைந்த யோக மையத்தின் சார்பில் பொதுமக்கள்க்கு கற்றுத் தரப்படுகிறது.
  அமர்ந்து செய்யும் ஆசனங்களாக தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்,அவை,
1.சுகாசனம்
2.பத்மாசனம்
3.வச்சிராசனம்
4.சுவஸ்திகாசனம்
5.சித்தாசனம்
6.வீராசனம்
7.யோகபட்டாசனம்
என்பன.
   இவ்வகையான ஆசனங்களை உலகோர் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பயன்களையும்  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் விளக்கியுள்ளார்.சாப்பிட்ட பின் ஜீரணம் மேம்படுகிறது.கால்களுக்கும்,தொடைகளுக்கும் உறுதியும்,வலிவும் கிடைக்கிறது.வாயுக் கோளாறு நீங்குகிறது என இதன் பலன்களையும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
கலைச் சிறப்பு மிக்க ஆசனங்கள்;
வாழ்வில் முழுமையான ஆரோக்கியம் பெறுவதற்கு  சில கலைச்சிறப்பு மிக்க ஆசனங்களையும் சச்சிதானந்த சுவாமிகள் விளக்கியுள்ளார்.
பிராணாயாமம்- மூச்சுப் பயிற்சி
   யோக வாழ்வில் மூச்சுப் பயிற்சி என்பது இன்றியமையாதது.மூச்சுப் பயிற்சி செய்வதன் வாயிலாக இறைவனின் திருவுள்ளத்தை ஆன்ம உள்ளம் உணரும்.
       சச்சிதானந்த சுவாமிகள் மூச்சுப் பயிற்சி செய்வதன் நோக்கத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
      பிராணாயாமத்தின் மூலம் மனதில் உள்ள எண்ணங்கள் நீங்கி விடுகின்றன.மனம் ஒருமுகப்படுவதற்கு ஏற்புடையதாகின்றது.எனவே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பிராணாயாமப் பயிற்சி உதவுகிறது என்று குறிப்பிடுகிறார்.
தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தம் யோக முறையில் பிராணாயாமப் பயிற்சிகள் குறித்து, மனவளக்கலை என்னும் முறையில் இதனை தற்காப்புப் பயிற்சி என்கிறார். அகத்தவப் பயிற்சி என்றும் குறிப்பிடுகிறார். இது பற்றி,
 அறிவதனைக் கருவினிலே இணைத்துத் தவம் ஆற்ற
 ஐம்புலன்கள் அமைதி பெறும்,அறுகுணமும் சீராம்
 அறிவு தன் விழிப்புநிலை பிறழாத தெளிவில்
 ஐந்து பெரும் பழிச்செயல்கள் விளைய வழியேது
 அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும்
 ஆழ்ந்து ஒடுங்கித் துரியம் நிற்க முன் வினைகள்போமே
 அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க
 ஆதியாம் மெய்ப்பொருளாம்,அறும் பிறவித் தொடரே
                                       (த.வே.ம.ஞா. வா=பா187)
என்ற பாடலின் வழி விளக்குகிறார்.

       அகத்தவப் பயிற்சி மேற்கொண்டால் மனம் அமைதியடையும் என்றும்,உடலில் உற்சாகம் மேலோங்கும் என்றும்,பொறுமை,அன்பு, தூய்மை ஆகியன இயல்பாக மனித மனம் மற்றும் உடலுக்கு அமையப்பெறுகிறது என்று குறிப்பிடுகிறார்.
    இவ்வாறாக தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகியோர் பிராணாயாமம் பற்றி உலக மக்கள் பயனுறவே தங்கள் கருத்துக்களை பரப்புரை செய்தனர்.
பந்தங்கள்-பூட்டுகள்
   பந்தங்கள் என்றால் கட்டுவது அல்லது பூட்டுவது என்று பொருள்.மன ஒருமைப்பாட்டின் அளவிற்கேற்ப இந்த கட்டப்பட்ட ஜீவசக்தியை நரம்பு மண்டல மத்திக்கும்,நாளங்களுக்கும் அனுப்புவதன் வாயிலாக பந்தங்களை அறிய முடியும்.
1.ஜாலாந்ர பந்தம்
2.மூலபந்தம்
3.உத்தியாணபந்தா
4.பந்தாத்ரயா
 என நான்கு வகை பந்தங்களின் நிலையினை சச்சிதானந்த சுவாமிகள் விளக்குகிறார்.
 மேற்கூறிய பந்தங்களை யோகத்தில் கடைபிடிப்பதன் வாயிலாக பின்வரும் பயன்களை ஆன்மா அடைய முடியும்.பிராணாயமத்தின் போது சுவாசத்தில் அழுத்தம் ஏற்படுத்தவும் மூலபந்தத்தில் பிரம்மச்சரியம் காக்கவும்,உத்தியானபந்தத்தில் மலச்சிக்கல்,ஈரல் கோளாறு,ஊளைச்சதைகள் முதலியன நீங்கும் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
முத்திரைகள்;
முத்திரைகளைச் சின்னங்கள் அல்லது இலச்சினைகள் என்ற கூறலாம்.இந்த முத்திரைகள் மனதைப் பொறுத்தவை.முத்திரைகள் பயிலும் போது மனம் முத்திரைகள் பதிக்கப்பட்ட இடத்திற்குச் செல்கிறது.
    முத்திரைகளின் நிலைகளைச் சச்சிதானந்த சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
  1.சின் முத்திரை
  2.விஷ்ணு முத்திரை
  3.சண்முகி முத்திரை
  4.விப்ரீதகரணி முத்திரை
  5.சாம்பவி முத்திரை
  6.மகா முத்திரை
  7.நமசுகார முத்திரை
  8.சுவினி முத்திரை
  9.யோக முத்திரை
என்பன ஆகும்.
   இம்முத்திரைகளை யோக நிலையில் செய்யும் பொழுது மனம் தூய்மையடைகிறது.தனிமனிதன் உலகாய்த வாழ்வை நீக்கி இறைவனிடம் செல்ல இம்முத்திரைகள் உதவுகின்றன.மேலும் மனிதனையும்,இறைவனையும் இணைக்கும் பாலமாக இம்முத்திரைகள்  திகழ்கின்றன.
ஆறு வினைகள்;
    கிரியைகள் என்றால் வினைகள்,செயல்கள் என்று பொருள்.ஹதயோகத்தில் சுத்தி செய்வதை கிரியைகள் என்று கூறப்படுகிறது.
   1.தாவுதி
     ஜல தாவுதி
     வசுதிரதாவுதி
  2.பஸ்தி
    ஸ்தலபஸ்தி
    ஜலபஸ்தி
  3.நேதி
    ஜலநேதி
    சூத்திரநேதி
மேற்கூறிய கிரியைகள் யோகத்தைப் பயில்பவர் கடைபிடித்தால் வயிறு,வாயுத் தொல்களையும், குடல் சுத்தமும்,நாசித்தூய்மையும் உண்டாகும் என்று  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
தவத்திரு வேதாத்திரி மகரிசி யோக முறைகள்;
    ‘உலகெலாம்’ என்ற இறையருள் திருவாய் மலர்ந்தருளிப் பெரிய புராணத்திற்கு முதலடி எடுத்துத் தந்தது போலவே இந்த உலகம் முழுவதும் அமைதி தவழ வேண்டும் என்ற எண்ணத்தில் ‘’உலகச் சமுதாய சேவா சங்கம்’’ என்ற பெயரில் தமது அருட்பணியினைத் தொடங்கினார். சென்னைக்கு அருகில் கூடுவாஞ்சேரியில் 1958 இல் இத்தொண்டு நிறுவனத்தைத் தொடங்கிய அவர் தாம் பிறந்த மண்ணில் மட்டும் அல்லாமல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற முதுமொழிக்கேற்ப உலகம் முழுவதிலும் பரவ வேண்டும் என்று விரும்பியதால், அதனை ‘உலகச் சமுதாய சேவா சங்கம்’ என்ற பெயரில் தொடங்கினார். உலகச் சமுதாய சேவா சங்கம் வாயிலாக உலகம் முழுவதும் சித்தர்கள் தத்துவத்தை எடுத்துரைக்கிறார். 
        வேதாத்திரி மகரிசி, சித்தர்கள் தத்துவத்தை மூன்று வகையாக எடுத்துரைக்கிறார்.அவை முறையே,
1.   மகிழ்போகம்
2.   ஈதல்
3.   இறவாமை
ஆகும்.
      மகிழ்போகம் என்பது புலன்களை அளவோடு இயக்குவதன் மூலம் துன்பமில்லாத வகையில் விழிப்பு நிலையோடு இன்பத்தை நுகர்தல். நீடித்த அகத்தவம், யோகப்பயிற்சிகளின் மூலமும் சித்தர்கள் இறைநிலைக் காட்சியினை எளிதில் உணர்ந்தனர். உடல், உயிர், சீவகாந்தம் , மனம் நான்கினையும் அளவோடும் முறையோடும் துய்க்கும் நிலையில் சித்தர்கள் தங்கள் வாழ்வினை மகிழ்போகமாக அனுபவித்துள்ளனர்.
     ஈதல் என்பது பிறரது துன்பத்தினைப் தன்துன்பமாக உணர்ந்து அத்துனைபத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்வது. உடலாலும் மனத்தாலும் மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்காத தன்மையும் பிற உயிர்கள் துன்பப்படும் போது அத்துன்பத்திலிருந்து அவர்களை விடுவிக்க உதவும் வகையிலான செயல்களைச் செய்வதன் மூலமும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் சித்தர்கள்.
     இறவாமை என்பது நீண்ட நாள்கள் நோயின்றி வாழும் முறை. தங்களது செயல்பாட்டின் மூலம் உடல் நலத்தைப் பேணுதல், மற்ற உயிர்களுக்கு உதவுவதன் மூலம் மனத்தை வளமாக வைத்திருப்பதாலும், தங்களின் உயிர் நிலையினைத் தங்களின் விருப்பம்போல நிலைநிறுத்திக் கொண்டு இந்த உடல் தேவையில்லாதபோது உயிரை உடலிலேயே சுழலவிட்டு என்றும் சீவசமாதி முறையில் மரணமில்லாப் பெருவாழ்வினை வாழ்ந்துள்ளனர்.
  பிராணயாமம்
    பிராணா என்றால் ஒழுங்கு. யாமம் என்பது ஒழுங்கு. வேதாத்திரி மகரிசி கருத்துப்படி இயக்க ஒழுங்கு என்பது இறைநிலை தன்மையே. இதனையே திருமூலர்,
     ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
     காற்றைப் பிடிக்கும் கணக்கறிவா ரில்லை
     காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
     கூற்றை உதைக்கும் குறியது வாமே
                                    (திருமூலர், திருமந்திரம் 571)
 நயனமாகிய இரு கண்களின் மத்தியில் நாட்டத்தை வைத்து உயிர்த்தெழுந்த வாயுவை உள்ளே அடக்கித் தியானத்தில் நிறுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்பது திருமூலர் வாக்கு.
உள்ளே வந்தும், வெளியே சென்றும், நம்மைக் காக்கும் சுவாசத்தைச் சிவம் என்கிறார் மாணிக்கவாசகர்.
    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
      உவப்பிலா ஆனந்தமாய்
    தைனினைச்சொரிந்து புறம் புறம் திரிந்த
      செல்வமே சிவபெருமானே
                         ( மா.தி..பிடித்த பத்து.பா.8).
என்று கூறுகிறார்.
எளியமுறை உடற்பயிற்சிகள்
     தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் போலவே வேதாத்திரி மகரிசியும் எளியமுறை உடற்பயிற்சிகளை வகுத்துக் கொடுத்துள்ளார்.


1.கைப்பயிற்சி
      கைப்யிற்சி செய்வதனால் கைகளும் தோள்களும் பலம் பெறுகின்றன. கை நடுக்கம், குடைச்சல், போன்ற நோய்கள் மறைகின்றன என்று  வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகிறார்.
2. கால்பயிற்சி
       கால்பயிற்சி செய்வதன் மூலம் கால்கள் பலம் பெறுகின்றன. சிறுநீரகம் ஊக்குவிக்கப்படுகிறது. பாதங்கள் மற்றும் கால் விரல்கள் அமுக்கப்படுவதால் இதயம் நுரையீரல் குடல் மூளை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தப்படுகின்றன.
3.மூச்சுப்பயிற்சி
         மூச்சுப்பயிற்சியின் மூலம் நுரையீரல் காற்று உட்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. ஆசுத்மா , மூக்கடைப்பு , தலைவலி நீங்குகின்றன. நரம்பு மண்டலம் – தசை மண்டலம் தொடர்பான நோய்கள் நீங்குகின்றன.
4.   கண்பயிற்சி
           கண்மணி என்னும் பாப்பாவைச் சுற்றியுள்ள தசைப்பகுதிகள் இயக்கம் கொள்வதால் கண்பார்வை அதிகரிக்கும். இந்தப் பயிற்சியின் மூலம் கண்நோய்வலி ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
5.   கபாலபதி பயிற்சி
            இப்பயிற்சியின் மூலம் மூக்கடைப்பு தொந்தரவு நீங்கும் என வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகின்றார்.
  6.மகராசனம்
       இப்பயிற்சியின் மூலம் முதுகெலும்பு மற்றும் தண்டுவடப் பகுதிகள் வலுவடைகின்றன. கணையம் சுறுசுறுப்புடன் இயங்குவதால் நீரழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
 7. உடல் தேய்வுப்  பயிற்சி
     உடலைத் தேய்த்தல் பயிற்சியின் மூலம் இரத்த ஓட்டம் சீராகிறது. காது கேட்பதில் உள்ள குறை நீக்கம் – வயிறு நெஞ்சு பகுதியில் சீவகாந்த ஓட்டம் சீராகுதல் மற்றும் உடல் உறுப்புகள் வலிமை அடைகின்றது.
8. அக்குபிரசர் உடல் அழுத்தப் பயிற்சி
     அக்குபிரசர் என்னும் உடலை அழுத்துவதன் நன்மைகளாக உடலில் இரத்த அழுத்தம் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி குறைகிறது. வயிற்றின் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. நரம்பு மண்டலம் முழுவதும் சீராக இயங்குகின்றன.
9. உடல் தளர்த்துதல்
     உடல் தளர்த்துதல் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. நாள் முழுவதும் புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. உடல் மனம் அமைதி உண்டாகின்றது என்று வேதாத்திரி மகரிசி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
       ஒத்திஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
       ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
       ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
       ஒத்த உடலும் உயிரும் இருந்ததுவே
                                     (திருமூலர், திருமந்திரம் 653)
என்று திருமூலர் , மனிதனின் உடம்பினுள் மிகுதிப்படாமலும், குறையாமலும் ஒத்த ஒன்பது வாயுக்களும் இயங்க வேண்டும். இவையல்லாமல் பத்தாவதான தனஞ்செயன் எனும் காற்று ஒன்பது காற்றுகளிலும் கூடியிருக்கும் போது உடலும் உயிரும் பிரியாது இருக்கும் என்று குறிப்பிடுகிறார். அவ்வழியே மேற்சொன்ன ஒன்பது எளியமுறைப் பயிற்சிகளும் உடலையும் மனதையும் நல்வழிப்படுத்தும் என்று வேதாத்திரி மகரிசி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
உடற்பயிற்சியின் பலன்கள்.
           கைப்பயிற்சி, கால்பயிற்சி,மூச்சுப்பயிற்சி, நரம்பியக்கப் பயிற்சி ,சதைகள் முறையாக இயங்கக் கூடிய பயிற்சி என அனைத்துப் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளாகும்.இப்பயிற்சிகள் அனைத்தும் மனவளக்கலையில் போதனை, சாதனை என்ற இரண்டு முறைகளாலும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.


காயகல்பப் பயிற்சி
    காய கல்பம் உயிர் வளத்திற்கான ஒரு பயிற்சி முறையாகும். காயம் என்பது உடல்; கற்பம் என்பது கெட்டிப் பொருள். உடல் நலத்தை உறுதியுடன் இருக்கும்படி செய்து நீண்ட நாள்கள் வாழ வழி செய்யும் ஒரு பயிற்சி முறைதான் இந்தக் காய கற்பப் பயிற்சியாகும். இது உயிருக்கான பயிற்சியாகும். சித்தர்கள் மறைபொருளாக உரைத்த இந்தப் பயிற்சியினை வேதாத்திரி மகரிசி தம்மைத் தாமே முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொண்டு எளிய முறையில் நமக்கு அளித்துள்ளார்.
 காய கல்பப் பயிற்சியின் நோக்கம்
1.   ஆயுள் நிடிப்பு
2.   என்றும் இளமையுடன் வாழ்வதற்கு வழி செய்கிறது.
3.   நோயிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வழி செய்வது.
முதுமையைத் தவிர்த்து என்றும் இளமையுடன் உடல் திடகாத்திரத்துடன் நீண்ட நாட்கள் வாழும் முறையினைச் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
சிவவாக்கியர் தமது பாடலில்,
  
  உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
  கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
   விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
  அருள்தரித்த நாதர் பாதம் அம்மையாக உண்மையே
                                (சிவவாக்கியர், பாடல் எண் =5)
 மூலாதாரத்தில் ஒடுங்குகின்ற வித்து சக்தியினைக் கருத்தினால் தலை உச்சியில் ஏற்றும் போது இளமையோடு இருக்கும் நிலை ஏற்படும். வேதாத்திரி மகரிசி சித்த மருத்துவத்திலான தமது அனுபவங்களைக் கொண்டு நாற்பது ஆண்டுகாலம் தொடர்ந்து ஆராய்ந்து தம்மையே அதில் ஈடுபடுத்திக் கொண்டு உருவாக்கிய பயிற்சிதான் இந்தக் காயகற்பம்.
காய கல்ப விளக்கம்
    வேதாத்திரி மகரிசி, மனிதன் என்ற உருவைப் பருவுடல், விந்து நாதம், உயிர்ச்சக்தி, சீவகாந்தம்,  மனம் என்ற ஐந்தும் ஒருசேரப் பெற்ற இயக்க அமைப்பாக விளக்குகிறார்.
     மாணிக்கவாசகர் தமது பாடலான ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’ என்பதில், உள்ளொளி எனப்படுவது ஒளி உடல். இது தோன்றக் காரணமாக இருப்பது ஊன் எனப்படும் உணவிலிருந்தே என்பதை வேதாத்திரி மகரிசி நாம் உண்ணும் உணவு ஏழு தாதுக்களாகப் பிரிக்கப்பட்டு இறுதியில் ஏழாவது தாதுவான விந்து நாதமே உயிர்த்துகள்(விண்) மற்றும் இறைத்துகள்(காந்தம்) தோன்றக் காரணமாக அமைகிறது. இந்த இறைத்துகள் என்னும் காந்த ஆற்றலே ஒளி உடல் தோன்றக் காரணமாகிறது என்கிறார்.
திருஞானசம்பந்தர் பஞ்சாக்கர திருப்பதிகத்தில்,
   ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
   ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
   ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
   ஆன கெடுப்பன,அஞ்செ ழுத்துமே
                 (திருஞா., தே. பா.3.22.33)
உணவிலிருந்து பெறப்படும் உயிர்ச்சக்தியினைப் பதங்கப்படுத்திக் குண்டலினி யோக சாதனை மூலம் நெற்றிக்கு நேரே ஆக்கினைச் சக்கரத்தில் நிறுத்தும் போது நிறைந்த ஒளி ஏற்படும். இதுவே ஒளி இறைநிலைக்கான வழியினைத் திறந்து இடர்களைத் தவிர்த்து வினைகளைத் தீர்க்கக் காரணமாக இருப்பது, நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே என்கிறார்.
காய கற்பப் பயிற்சி பற்றி வேதாத்திரி மகரிசி
சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்துத்
     துரியநிலை நின்று தவம் ஆற்றும் யோகம்
சுக்கிலத்து தவம் குத்தத்துப்பயிற்சிக் கூட்டி
     தூக்கம்,போகம்,உணவு முன்னம் செய்யச்
சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்
     தொல்லை தரும் நோய் வகைப்போம் இளமை காக்கும்
சுக்கிலத்தோடு உயிர் சீவகாந்தம் மிக்கும்
     சூட்சுமம் இக்கலையே காயகற்பம்
         (வே.ம. ஞா.க. பாகம் 2 பா. 1506)
என்கிறார். இருப்பினும் இக்காய கற்பப் பயிற்சியினை நேரடியாகத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாகவே கற்றுப் பயில வேண்டும்.
காயகற்பத்தின் பயனை வேதாத்திரி மகரிசி தமது கவிதையில்,
    காய கற்பப் பயிற்சியினால் கண்கள் நன்றாம்
         காம மிகை குறை சமனாம் குடும்ப வாழ்வில்
    காய கற்பம் இனிமை,அன்பு விருப்பம் ஊக்கும்
         கடமையுணர்வும் தெய்வ நினைவும் ஓங்கும்
    காயகற்பம் மூலநோய் குடல்புண் போக்கும்
         கனத்த உடல் இளைப்பு இவற்றைச் சமன்படுத்தும்
    காய கற்பம் இருதய நோய், இரத்த பித்தம்
         கடும்மலக்கட்டு இவைபோக்கி உடலைக் காக்கும்.
         (வே.ம. ஞா.க பாகம் 2 பாடல் 1507)
என்று நீங்கும் நோய்களை வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகிறார்.
காயகற்பப் பயிற்சியினைப் பற்றி மேலும் ஒரு பாடலில்,
   ஆயகலைகள் மொத்தம் கணக்கெடுத்தோர்
      அறுபத்தி நாலு என்றார் அனைத்தும் கற்றும்
   காயகற்ப மெனும் கலையைக் கற்கா விட்டால்
      கற்றதெல்லாம் மண்பகுமே உடல் விழுந்தால்
   மாயமெனும் காந்தம் உயிர் வித்து மூன்றில்
      மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
   தீயவினைகள் கழிஉலகுக் கென்றும்
      தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா.
        (வே.ம. ஞா.க பாகம் 2 பாடல் 1501)
குறிப்பிடுகிறார்.
  காயகல்பம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம் என்று வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகிறார்.

 
குண்டலினி யோகம்
      குண்டலினி யோகம் யோக நெறியில் தலையாய நெறியாகும். மூலாதாரத்தில் எழுகின்ற மூலக்கனலைத் தலை உச்சிக்குச் கொண்டு சென்று அங்கே தோன்றும் இன்பநிலையைக் காண வேண்டும்.
வேதாத்திரி மகரிசியின் எளியமுறை குண்டலினி யோகம்
      எளியமுறை குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச்சக்தியை மேல்நோக்கி எழச்செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை மறைபொருளை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். நமது உடலில் உயிர்ச்சக்தி தேங்கிக்கிடக்கும் முக்கிய ஆற்றல் மையமான மூலாதாரத்தை முறையாக உசிப்பிவிடும் பயிற்சியே எளியமுறை குண்டலினி யோகமாகும். உயிர்ச்சக்தி உடலின் எல்லா இடங்களிலும் பரவி இருப்பினும், உயிருக்கு இயக்க மையமாக  உடம்பில் ஆறு இடங்கள் சக்தி மையங்கள் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ப பலன் ஏற்படும். மேலும், கீழே இருந்து மேலே போகப் போகப் பலன் மிகுதியாகும். ஒவ்வொரு மையத்திலும் உள்ள உயிர்ச்சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையாதபோது உடல்நோய்கள் மற்றும் மனநோய்கள் ஏற்படும். எனவே ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும் பாதுகாக்கவும் தெரிந்து கொள்ளும் தெளிவையும் பயிற்சியாக நல்குவதே எளியமுறை குண்டலினியோகம் ஆகும். இதை வேதாத்திரி மகரிசி தம் கவிதையில்,
  


   

    வித்து இடமாய்ச் தொடங்கி இரத்தத்தில் பரவி
    சத்துச் சுழலாய், நரம்பில் தன்விரைவு மேலோங்கி
    வித்தைபோல் மூளைதனில் விவேக உணர்வுகளாகும்
    சித்துதான் மனிதகாந்தம் சிறப்புப் பெயர் குண்டலினி.
       (வே. ம, ஞா.க பாடல் எண் 1458)
என்று குண்டலினியோகத்தின் சிறப்பினைக் கூறுகிறார்.
வேதாத்திரி மகரிசியின் எளியமுறை குண்டலினி யோகத்தின் சிறப்பு அம்சங்கள்;
1.   குண்டலினித் தவத்தில் மனம் ஓர்மை நிலையில் சக்கரங்களோடு தொடர்பு கொண்டுள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
அதனால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறுகின்றது.
2.    உளப்பயிற்சியாகக் குண்டலினித் தவம் கருதப்படுவதால் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்ததாகவும் அறிவியல்பூர்வமாகவும் அமைகின்றது.
3.   எப்படி உடற்பயிற்சி உலகனைத்திற்கும் பொதுவானதாக உள்ளதோ அதுபோலவே மகரிசியின் குண்டலினி யோகப் பயிற்சியும் மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவானதாக அமைகிறது.
  மூலாதாரத்திலிருந்து தொட்டு எழுப்பப்பட்ட குண்டலினிச் சக்தியின் உயர்நிலை தலை உச்சியாகிய துரியம் என்பதாகும்.
இத்துரியநிலைத் தவத்தோடு அகத்தாய்வும் சேரும்போது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய பண்பு நலன்களும் உண்டாகின்றன. நான் யார்? என்று அறிந்து, அறிவின் முழுமைப் பேறு அடையும் நோக்கத்தினை அறிந்து உணரும் நிலைகளும் ஏற்படுகின்றன.
   குண்டலினித் தவமுறையோடு தமது யுக்தியையும் கலந்து மகரிசி உருவாக்கியதுதான் துரியாதீதத் தவம். துரியாதீதத்தில் பிரபஞ்ச விளிம்பிற்கும் அப்பால் சென்று சுத்த வெளியோடு மனம் இணைந்து நிற்பதே சீவ பிரம்ம ஐக்கிய முக்தி என்ற நிலையாகும்.
குண்டலினித் தவத்தின் சிறப்பையும் மேன்மையும் உணர்த்துகிற மகரிசியின் பாடல்,
    குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
        குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
    மறைபொருளாம் அறிவு அதன் முழுமை பெற்று
        மாஅமைதி அனுபவிக்கும் நிலைக் களம் ஆம்
    இறைவனது திருநிலையில் இணையும் அப்போது
        இன்ப துன்ப விருப்பு வெறுப்பு இவை கடந்து
    நிறைவு பெறும் தீயவினை அகலும் வாழ்வில்
        நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்
                            (வே. ம, ஞா.க. பா எண் 1499)
என்ற பாடலில் உணர்த்துகிறார்.
திருமந்திரம் உணர்த்தும் குண்டலினியோகம்
பழம்பெரும் மெய்யியல் நூலான திருமந்திரத்தில் குண்டலினி யோகம் பற்றி,
  மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
  மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
  வேலோத்த கண்ணை வெளியில் விழித்திரு
  காலத்தை வெல்லுந் கருத்திது தானே
                               (திருமூலர், திருமந்திரம் 583)
மூலாதாரத்திலிருந்து குண்டலினியை மேலே எழுப்பக் குதத்தை நெருக்கித் தூக்கி நிறுத்த வேண்டும். இதனை மூலபந்தம் அல்லது ஆகுஞ்சனம் என்பர். சிரசின் உச்சியில் பிரம்மரந்திரத் தானத்தில் மனத்தைப் பதித்து வைக்க வேண்டும். கண் வெளியே விழித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யின் இவையே காலத்தை வெல்லும் கருத்தாகும்.
   சூக்கும எண்ணாயிரம் செபித்தால் உம்மேல்
   சூக்கும மான வழியிடை காணலாம்
   சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
   சூக்கும மான சிவனது ஆனந்தமே
                              (திருமூலர், திருமந்திரம் 909)
சிவாயநம என்ற சூக்கும மந்திரத்தை எண்ணாயிரம் தடவை செபித்தால் சூக்குமமான உச்சித்துளை வழியாகிய பிரம்மாந்திரம் என்ற துரிய நிலையைக் காணலாம். அப்போது கர்மவினைகளான சஞ்சித, பிராப்த வினைகளை அழிக்க இயலும் என்கிறார் திருமூலர்.
ஒளவையாரும் இதனை,
    நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணின்
    முற்றும் அழியாது உடம்பு
                              (ஒளவை.குறள் 44)
என்கிறார். அத்தகைய ஒளியை உணரும்போது உடல் பொன்னொளி பெற்றுத் திகழும் என்கிறார்.
இராஜ யோகத்தின் நிறைவையும் சித்திகளையும் பஞ்சாட்சர மந்திரம் அருளும் என்று கூறும் திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில்,
    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
    ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
    ஏனைவழி திறந்து,ஏத்துவார்க்கு இடர்
    ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே
            (திருஞா. தேவாரம் 3-22-3)
என்று குறிப்பிடுகிறார்.
    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி என்பது மூலாதாரத்தில் இருக்கும் உயிர்ச் சக்தியினைக் கடைசல் செய்து மூச்சினைக் கொண்டு ஆக்கினையில் நிறுத்தும்போது ஒளி உண்டாகும். அதுவே ஒண்சுடர் ‘ஞானவிளக்கினை ஏற்றி’ என்பதாகும். ‘நன்புலத்து ஏனை வழிதிறந்து’ என்பது துரிய நிலையை அடையும் நிலையாகும். கர்ம வினைகள் நீங்குவதால் ‘ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன’ என்கிறார் திருஞானசம்பந்தர். ஐந்தெழுத்தை ஓதும் போது குண்டலினித் தவம் ஏற்படுத்தும் பயனை அடையலாம் என்பதை ஞானசம்பந்தர் அருளுகிறார்.
   குண்டலினிச் சக்தி குண்டலம் போல் சுருண்டு கிடக்கும் சக்தியாகும். அதனைச் சுவாசம் மூலம் மூலக்கனலால் எழுப்பி மேலே ஆறு ஆதாரங்கள் வழியே கொண்டு செல்லும்போது பிரம்ம கபாலத்தில் இருக்கும் அமுதம் சுரக்கின்றது. அதை உண்ணும் நிலையில் பேச்சற்ற பேரின்ப நிலை அனுபவமாகிறது. வேதியியல் வல்லுனர் ரிக் ஸ்ட்ராஸ்மான், DIMETHYLTRYPTAMINE என்ற வேதியியல் அமிர்தம் சுரப்பதாக கூறிகிறார். இத்தன்மைகளைக் கொண்ட மூலிகைகளைத் தென் அமெரிக்கப் பழங்குடியினர் தங்கள் மதச் சடங்குகளில் உபயோகித்து வந்தனர் என்பது மேற்கத்திய ஆய்வாளர்கள் கூற்றாகும்.
    நடராஜர் நடனத்தில் நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி முதலில் ஆடுவதன் நோக்கம் முதலில் வலது நாசியில் மூச்சை நிறுத்தலேயாகும். பின்பு வலது நாசியை மூடி இடது நாசியால் சுவாசம் இழுத்து நிறுத்தவே பின் வலது காலை ஊன்றி இடது கால்தூக்கி ஆடுகிறார்.
   
 ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
  இருபதம் ஆடுகின்ற இயல்பை நீ அறிந்தாயானால்
 குருபதம் என்று கூறும் குறிப்புனக்குள்ளே ஆச்சு
  வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே
      (கணபதிதாசர்  நெஞ்சறி விளக்கம்பா.8)
என்று சித்தர்கள் கூறிவதும் இதுவேயாகும்.
சித்தர்கள் உணர்ந்த குண்டலினி யோகத்தினை வேதாத்திரி எளிமைப்படுத்தி வழிகாட்டுகிறார். எளிய முறை குண்டலினி யோகம் அனைவரும் செய்யக் கூடியதாகவும் விளங்குகிறது. இந்த குண்டலினி யோகம் உடல் நலத்தைச் சீரமைத்து நீண்ட நாள் வாழவும் வழி செய்யும் என்கிறார் வேதாத்திரி மகரிசி.
தொகுப்புரை
        மனித வாழ்வில் எந்தச் செயலையும் என்ன பயனுடைத்து என்று ஆராய்வதும் கணக்கிடுவதும் உலக வழக்கு
        யோகத்தில் மனித வாழ்வு மேம்பாடு அடைகிறது. சித்தர்கள் கூறிய யோகங்கள் அன்றுதொட்டு இன்றுவரை ஞானிகளால் உலகோருக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
         அவ்வகையில் இவ்வியலில், யோக உறுப்புகளாகிய எண்வகை உறுப்புகள் விரிவாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன.
     தமிழகத்தில் தொல்காப்பியர் காலம் ,சங்க காலம், பக்தி இயக்கம் வரை யோகம் பயின்று வந்தமை இவ்வாய்வின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோரின் யோக முறைகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
        
   




    




No comments: