Wednesday, 31 January 2018

தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தவத்திரு வேதாத்திரு மகரிசி ஆகியோரின் சமய சமுதாய வாழ்வியல் பணிகள்



தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தவத்திரு வேதாத்திரு மகரிசி        ஆகியோரின் சமய சமுதாய வாழ்வியல் பணிகள்
      அன்பின் வழியில் இறைவனை அடைவது பக்தி மார்க்கம்.  இறைவனின் அளத்தற்கரிய பெருமைகளையும், இன்னருள் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வது சமயத்தின் நோக்கம்.  அன்பையும் அருளையும் எல்லா உயிர்களிடத்தும் செலுத்துவதும் சமயமாகும். இயற்கையை இறைவனாகக் கண்ட உயிரினங்கட்குத் தொண்டு செய்தலையே சமயச் சான்றோர்கள் உலக வாழ்வாகக் கொண்டிருந்தனர். சமயச் சான்றோர்கள் காலந்தோறும் தோன்றி, இறைவனை அடையும் வழிகளைச் கூறிச் சென்றுள்ளனர். அச்சான்றோர் வரிசையில் சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆவர். இவர்கள் ஆற்றிய சமய, சமுதாயப் பணிகள் போற்றுதற்குரியன. இருவரும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனைத் தியானம், யோகம், வழிபாடு, சடங்குகள் என்ற நிலைகளில் மனதால் வழிபட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். இவர்கள் அனைத்துச் சமயங்களையும் போற்றியவர்கள். இவர்களது சமயப்பணி உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ளதை ஆராய்வதாக  ‘ தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோரின் சமய சமுதாய வாழ்வியல் பணிகள் ‘ என்ற இவ்வியல் அமைகிறது.
சமயம் – விளக்கம்
        சமயமும், வாழ்க்கையும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. வாழ்வில் அமைதி ஏற்படச் சமயமே உறுதுணையாக அமைகிறது. அணுவில் அணுவாக நிறைந்துள்ள இறைவனைக் காண சமயம் என்னும் அன்பு நெறி உதவுகிறது.
        மனிதன் சிந்திக்கத் தொடங்கிய பொழுதே சமயம் தோன்றியிருக்க வேண்டும்.  மனிதன் தன் ஆற்றலுக்கும் மேல் ஒன்றுண்டு என நம்பத் தொடங்கிய நாளிலேயே சமயம் தொடங்கிவிட்டது எனலாம்.
                           அ.ச.ஞானசம்பந்தன். உ.த.மா.வி.மலர் = ப.2. 1968
 பரம் என்ற மெய்ப்பொருள் இருப்புநிலையில் வெளி , சிவம் என்றும், தெய்வம் என்றும் வழங்கப்பெறும் ஆதிநிலை.  அதுவே இயங்கும் நிலையில் அணு.  இதனைச் சக்தி என்றும் வழங்குவர்.  பரம் சக்தியாகிப் பராசக்தியாயிற்று.  இதனால் ‘பரமாணு’ எனப்படுகின்றது.  விஞ்ஞானிகள் இதனை அணு என்று அழைப்பர்.
 சமயங்களின் தோற்றம்
        உலக உயிர்களுள் அறிவு நிலையில் உயர்ந்தவன் மனிதன். மனிதனின் வாழ்வில் புலன் மயக்கத்தாலும், பழக்கவழக்கத்தாலும் பல இன்னல்களைச் சந்திக்க, அவன் தடம் மாறினான். இத்தடுமாற்றத்தை நெறிப்படுத்த வேண்டி, மனிதர்களை உய்விக்கும் முறையாக சமயம் தோற்றியது.
      சமுதாயத்தில் காணப்பெறும் நிறுவனங்களில் ஒன்றாகச் சமயம் திகழ்கின்றது. மக்களின் வாழ்க்கையில் மிக இன்றியமையாத சக்தியாகச் சமயம் காணப்படுகின்றது. சமயம் என்பது அடையாளங்கள் அல்லது குறியீடுகள், நம்பிக்கைகள், மதிப்புகள், சடங்குகள், இயற்கையற்ற சக்திகள் போன்றவற்றால் நிறுவனமாக்கப்பெற்ற முறை என்பர்.
                              சேதுபதி.வாழ்வியல்.நோக்.சம.சமுதா.. ப.12.

       சமயம் என்பது வாழ்க்கை முறை. அதாவது மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் கருவியாகத் திகழ்கிறது. குறை நீக்கத்திற்கும், நிறைநலம் பெறுவதற்கும் சமயம் இன்றியமையாதாகிறது ஆகும்.
சமயமும் வாழ்வும்
            தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி இருவரும் உலக மக்கள் போற்றக் கூடிய யோக ஆசிரியர்கள். இருவரும் இக்கால உலகிற்கு ஏற்ற நடைமுறை ஞானமும், ஆன்மீக உணர்வும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர்கள்.  இருவரும் தங்களது வாழ்க்கையைச் சமயப்பணிக்காகவும், சமூகப்பணிக்காகவும் அமைத்துக் கொண்டவர்கள்.
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகிய இருவரும் மக்களின் நலன் வேண்டி அனைத்து இடங்களிலும் சமயப்பணி ஆற்றினர். இந்தியாவின் நிலைபெற்றிருக்கூடிய சமயங்களின் உட்பகுப்பை நன்கு அறிந்தவர்கள். இவர்கள் ஆற்றிய சமய,சமுதாயப் பணிகள் பின்வருமாறு பகுப்படுகிறது..
 அவை,
1 . வழிபாடுகள் வாயிலாகச் சமய, சமுதாயப்பணி
2 . யோகத்தின் மூலமாகச் சமய, சமுதாயப்பணி
3 . தியானத்தின் வாயிலாகச் சமய, சமுதாயப் பணி
4 . யாத்திரை வாயிலாகச் சமய, சமுதாயப் பணி
5.  மையத்தின்  வாயிலாகச் சமய, சமுதாயப் பணி
என்பனவாகும்.
வழிபாடுகள் வாயிலாகச் சமய, சமுதாயப்பணி
 வழிபாடுகள் , சடங்குகள்
      மனித இனம் தோன்றியது முதலே சமயங்களும் தோற்றம் பெறலாயின. அக்காலத்தில் இயற்கை மட்டுமே வழிபடு பொருளாகக் கருதப்பட்டது. நாகரிகமும், பண்பாடும் வளர வளர மக்களினம் ஒன்றுகூடித் தெய்வங்களை வழிபடலாயின. அத்தெய்வங்கள் அவ்வற்றின் நிலங்கள், தட்பவெட்பச் சூழல்களுக்கேற்பப் பல்வேறு பெயர்களில் வழங்கப்படலாயின. தமிழகத்தில் தொன்றுதொட்டு திணைக் கடவுள் வழிபாடு போற்றப் பெற்றமையைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான நூல்கள் சுட்டுகின்றன.                              
                             தொல்காப்பியம்  முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்கிற நான்கு நிலங்களுக்குரிய கடவுளர்களை,
   ‘’ மாயோன் மேய காடுறை உலகமும்
   சேயோன் மேய மைவரை உலகமும்
   வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
   வருணன் மேய பெரும்புணல் உலகமும்
   முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
   சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே ‘’
                   தொல்.பொருள். அகத்திணையியல்.நூ.5
எனவரும் நூற்பா குறிக்கின்றது.
      சங்ககால மக்கள் தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்துக் கொண்டதையும், தங்கள் வழிபடு கடவுளை அமைத்துக் கொண்டதையும் மேற்குறித்த நூற்பாவால் அறிய முடிகிறது.
     கடவுள் எனும் சொல் சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் பயின்று வருகின்றது. இதனை,
     ‘’மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது’’
                                        (கபிலர்.குறிஞ்சிப்பாட்டு 209)
   
 ‘’ காரி உண்டிக் கடவுளது இயற்கையும்‘’
                                        மலைப்படுகடாம் 83
     
   ‘’தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை ‘’
                                      நற்றிணை 303.3
   ‘’ தொன்முது கடவுள்  ‘’
                               மதுரைக்காஞ்சி 21
    ‘’ அருந்திறல் கடவுள் ‘’
                                 பெரும்பாணாற்றுப்படை 391
  எனவரும் சங்க இலக்கியத் தொடர்களால் அறியலாம்.
வழிபாடு
       வழிபாடு என்னும் சொல் ‘’வழிபடு’’ என்ற ஏவற் பகுதியினின்றும் பிறந்தது. வழிபடு என்பதில் அமைந்த ‘படு’ என்னும் துணைவினை ‘பாடு‘ என முதனிலை நீண்டமைந்து வழிபாடு என ஆயிற்று.
     வழி -  இறைப்பேற்றுக்கரிய வழி
     பாடு -  இறைநெறியிற் படுதல்.
எனவே இறைப்பேற்றுக்குரிய வழியை அடைவதற்கு மனிதன் மேற்கொள்ளும் செயல்முறைகள் வழிபாடு எனப்பெறும். வழிபாடு என்ற சொல்லிற்கு ‘வழியிற் , செல்லுகை  பின்பற்றுகை , வணக்கம் என்னும் பொருள்களைச் சென்னைப் பல்கலைக் கழக அகராதி கூறுகிறது.
      வழிபாடு என்னும் சொல் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை,
     ‘’ வழிபடு தெய்வம்  ‘’ (தொல்.பொருள்.1057.3)
     ‘’ வழிபடு கிழமை ‘’ (தொல்.பொருள்1361.1)
என்ற சொற்தொடர்கள் வழிபாடு என்னும் சொல்லை விளக்குகின்றன.         சச்சிதானந்தசுவாமிகள், இவ்வுலக மக்கள் பின்பற்ற வேண்டிய வழிபாடுகளைப் பின்வருமாறு கூறுகிறார். அவை,
1 . திருக்கோயில் வழிபாடு
2 . ஒளி வழிபாடு
3 . சர்வசமய வழிபாடு
4 . இறைவழிபாடு
                  என்பன. தவத்திரு சச்சிதானந்தசுவாமிகள் குறிப்பிட்ட மேற்காணும் நால்வகை நெறிகளையும், தவத்திரு வேதாத்திரி மகரிசியின் கொள்கைகளோடு ஒப்பிட்டு இவ்வியல் அமையப் பெறுகிறது.




திருக்கோயில் வழிபாடு
           சச்சிதானந்த சுவாமிகள், திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால்  பலனைப் பெற முடியும் என்கிறார். உலகில் உள்ள சமயங்கள் அனைத்தும் அவ்வச்சமயக் கோயில்களின் நடைமுறைகளை அறிந்து அதற்கேற்பச் செயல்பட்டால் இறைவழிபாடு எளிதாக அமையும் என்றும் கூறுகிறார்.
          கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாக்கிற்கேற்ப அனைத்து இடங்களிலும் கோயில்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு அனைத்து மக்களும் சமய பேதமின்றி வாழ வேண்டும் என்றும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் விரும்பினார் என்பதை,
     ‘’ ஒவ்வொருவரும் தொடக்கத்தில் தத்தம் சமய நடைமுறைகளையும், போதனைகளையும் தெளிவாகக் கற்று அவற்றை முறையாகப் பின்பற்றி வரவேண்டும். அவ்வாறு செய்து வந்தால்  ஆன்மீக முன்னேற்றத்தை அடைய முடியும்’’ என்று திருக்கோயில் வழிபாட்டின் மேன்மையினைக் குறிக்கின்றார்.
                            த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.97
   தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், திருக்கோயில் வழிபாட்டினை பின்வருமாறு கூறுகிறார்.
        உன்னிலே நானடங்க என்னுள்ளே நீ விளங்க
        உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்
        இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
                               த.வே. ம. பிரம்மஞானம், ப.68.
என்று  குறிப்பிடுகிறார்.
  திருக்குட நன்னீராட்டும் – வழிபாடும்
       இந்து சமயத்தில் திருக்குட நன்னீராட்டு என்பது இறைவனின் உயிர்ப்பு நிலையைக் குறிக்கும். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், திருக்குட நன்னீராட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்கிறார். திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவின் தத்துவத்தை பின்வருமாறு கூறுகிறார்.
          ’ விண்வெளியெங்கும் பரவியிருக்கும் மின்சக்தியை இயந்திரங்களால் கிரகித்து மின்பெட்டிகளில் சேகரித்துக் கம்பிகள் மூலம் வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று வெளிச்சம் உண்டாக்குகிறோம். அதேபோல இறைச் சக்தியை யாகங்கள், திருக்குட நீராட்டு விழாக்கள் மூலம் கோயில்களில் உள்ள திருவுருவத்தில் பாய்ச்சி நிரப்பி வைத்துள்ளோம். அது குறையாமலிருக்க அடிக்கடி பூசைகளும், அபிடேகங்களும், பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை திருக்குட நீராட்டும் நடைபெறுகின்றன. இதயத்தைச் சுத்தம் செய்து அடிக்கடி திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள திருவுருவத்தின் அருட்சக்தியிலே வழிபட வழிபட நாமும் தெய்வ நிலைக்கு உயர்கிறோம்’.
                                        (த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.95)

     தவத்திரு வேதாத்திரி மகரிசி அவரகள், தெய்வவழிபாட்டை வலியிறுத்தி பின்வருமாறு கூறுகின்றார்.
   ‘’ அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம் தெய்வம் என்போம்
        அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழி வாழ்வோரெல்லாம்
    முனைப்பொழிந்த முனிவரென்றும் பிரம்ம ஞானியென்றும்
        முன்னோர்கள் சொல்லியுள்ளார் முற்றுணர்ந்த தெளிவால்
     வினைப்பதிவில் தீமைகளை வேரறுத்து வாழ்வில்
         விலங்கினத்தின் செயலொழித்து விஞ்ஞானம் தேர்ந்து
    அனைத்துலகும் மக்கள் மெய்யறிவுடனே வாழும்
        அந்தப் பெரும் நன்னாளை வாழ்த்தி வரவேற்போம்.
                                      (த.வே.ம.செயல்.வி.த. ப.7 ) 
என்று உலக மக்கள் இறை உணர்வுடன் ஒன்றி வாழ உணர்த்துகின்றார். பிறவித் துன்பமும், அதற்குக் காரணமான வினைப்பதிவுகளும் கடலைப் போன்றவை.  அதை எப்படிக் கடக்க வேண்டும் என்பதைத் திருமூலர்,
    திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
    இளைப்பினை நீக்க இருவழியிண்டு
    கிளைக்கும் தனக்கும் அக்கேடில் முதல்வன்
    விளைக்கும் தவம் அறம் மேற்றுணையாமே  
                           (திருமூலர், திருமந்திரம் பா.எ.265)
என அகத்தவத்தையும், இறையுணர்வையும், அறநெறியையும் உணர்த்துகின்றார்.  
                தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், மந்திரங்களின் வலிமையினை,
    ‘’ நீருக்குச் செபத்தினுடைய சக்தியை ஈர்க்கும் தன்மை உண்டு. மின்சக்தி வறண்ட மரக்கட்டையைவிட ஈரக்கட்டையில் விரைவாகப் பாயும்.அதுபோல நீரில் இயல்பாய் அமைந்துள்ள சக்தி மந்திர ஒலியிலுள்ள சக்தியை விரைவில் ஈர்க்கின்றது. வெள்ளி, தங்க , தாமிரக் கலசங்களில் நீர்விட்டுப் பல்வேறு விதைகளிட்டுப் பசுமையாகக் கூட்டி மந்திரங்களை ஓதி அம்மந்திர சக்தியைக் கலசம் மூலம் வெறும் கல்லாயிருந்த மூர்த்திக்குக் குடமுழுக்கின் போது செலுத்துகிறார்கள். வெறும் கல்லாயிருந்த உருவம் வேதமந்திரத்தின் சக்தியைப் பூரணமாகப் பெற்று அருள் கொடுக்கும் மூர்த்தியாகின்றது’’. என்று கூறுவதன் மூலம் திருக்குட நீராட்டு மற்றும் திருக்கோயில் விழாக்களில் ஓதப்படும் மந்திரங்களின் வலிமையினை எடுத்துரைக்கின்றார்.  
                                             த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.98
மடங்கள்
       மனித குலத்தில் இறையுணர்வையும், அறநெறியையும் போதனை மூலமாகவும், சாதனை மூலமாகவும் உணர்த்தி மக்களை வழிநடத்தும் அறிஞர் ஒருவரைத் தலைமையாகக் கொண்டு நடத்தப்படும் தெய்வீக ஒழுக்க நிலையங்களே, மதங்களைப் போதிக்கும் மடங்கள் எனப்படுகின்றன. மடாதிபதியாக விளங்கும் ஒவ்வொருவரும் இறைநிலை உணர்ந்தவராகவும், அறநெறி வாழ்க்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
                       ( த.வே. ம. உலகச் சமுதாய வா.நெறி. ப. 77)
அவ்வகையில் இக்காலத்திலும் திருமடங்கள் மக்களை நன்னெறிப்படுத்தும் நிலையங்களாகச் செயலாற்றிவருகின்றன.
அக, புற வழிபாடுகள்
       அகவழிபாடு, புறவழிபாடு என்பன வழிபாட்டின் இரு நிலைகள். இவை இரண்டும் இறைவனது திருவருளைப் பெறுதலையே விரும்புவன.  இவ்விரண்டு வழிபாடுகளும் தமிழகத்தில் சமயக்குரவர்கள் காலம் முதல் இருந்து வந்தன.
         
    அகவழிபாடு
              ஆன்மிக உணர்வு அவரவர் உள்ளத்தில் இருந்து தோன்றுவது. அத்தகைய ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்குவதற்கு அகவழிபாடு பெரிதும் உதவுகின்றது. அருளாளர்கள் தம் அகத்தில் இறைவன் உறைந்துள்ளான் என்பதனை வெளிப்படுத்தும் முகமாக நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன் இறைவன் என்று கூறுவர். இதனை,
     
     ‘’ நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
       புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
       பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு
       நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியை ‘’
                      (திருநாவுக்கரசர். தனிக் திருக்குறுந்தொகை பா.எ.9)
என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார்.
       தவத்திரு  சச்சிதானந்த சுவாமிகள், உள்ளத்தினுள்ளே உள்ள இறையை நினைந்து வழிபட வேண்டும் என்று போதிக்கின்றார். ‘ஓம் நமச்சிவாய ‘ எனும் மூலமந்திரத்தை பலமுறை ஓதினால் அதன் மூலம் சிவனுருவைக் காணலாம். மூல மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு என்கிறார்.
                                       த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.99
        தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், அகவழிபாடு, புறவழிபாடுகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
        ‘’ பூசை பரார்த்த பூசை, ஆன்மார்த்த பூசை என இருவகைப்படும். பரார்த்த பூசை பிறர் சார்பில் செய்யப்படுவதாகும். கோயிலில் அருச்சகர் செய்யும் பூசை பரார்த்த பூசை. ஆத்மார்த்த பூசை ஒருவர் தம் இல்லத்தில் செய்யும் வழிபாடாகும்.

      ஆன்மார்த்த பூசை புறவழிபாடு, அகவழிபாடு என்று இருவகைப்படும். அகவழிபாட்டில் நீங்கள் எதையும் கண்ணால் நேரில் பார்ப்பதில்லை. பீடம் இல்லை, வேறெதுவும் இல்லை. நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து கண்களை முடிக்கொண்டு வழிபடுவீர். பீடம் அமைத்து விளக்கை ஏற்றி வைத்து வழிபடுவதாக மனத்தில் கற்பனை செய்து கொள்வீர். புறப்பூசையைச் செய்யத் தெரிந்திருந்தால்தான் அகப்பூசையினைச் செய்ய முடியும். அகப்பூசை செறிவுடையது, ஒரு முகப்பட்டது.  புறப்பூசையில் பல பொருள்களும் ஒரே சமயத்தில் கண்ணுக்குத் தென்படும். தூபத்தைக் காட்டும் போது அருகிலிருக்கும் பூக்கிண்ணமும் தெரியும். ஒளியைப் பார்க்கும் போது பீடத்திலிருந்து பிற பொருள்களையும் காண்பீர். ஆனால் அகப்பூசையில் மனம் அக நோக்கில் ஒருப்பட்டிருக்கும், கவனம் சிதறாது.  ஆனால் புறப்பூசையைச் செய்யாமல் அகப்பூசையைச் செய்ய முடியாது ‘’ . என்று கூறுகிறார் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்.
                                             த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.104
தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், இறைநிலை, மதம் குறித்து,
    இத்தகைய உயர்சமய நெறி வகுத்து உள்ளேன்
        இது உலகப்பொதுவாம் அருள்நெறிசமயம் ஆகும்
    ஒத்ததிது உலகெங்கும் வாழ்மக்கட்கெல்லாம்
        ஒரே தெய்வம் சுத்தவெளி ; உயர் அருட் பேராற்றல்
     சுத்தசன் மார்க்கநெறி ஒத்துதவி  வாழும்
        தூய காந்த தத்துவமே இதற்கு வேதமாகும்
     எத்தகைய உயிர்கட்கும் இன்பநிலை காத்து
        இறைநிலையோடு இணைந்து அறம் ஆற்றி வாழும்பேறு
                      த.வே.ம. மதமும் மனிதனும் பக். 45-46.

           எனவும், இத்தகைய புனிதமான வாழ்க்கைநெறி சீர்திருத்த ஐந்தொழுக்கப் பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வழிகாட்டுகின்றார்.
தாய்மொழியில் வழிபாடு
     இறைவனை வழிபட அவரவர் தாய்மொழியே சிறந்தது என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்களும் குறிப்பிடுகின்றனர்.
      தாய்மொழியில் இறைவனது திருநாமத்தை உச்சரிக்கும் போது மனம் ஒன்றுபட்டு இன்பத்தில் திளைக்கும்.
        வேதம் பசு அதன்பால் மெய்யரகமாம் நால்வர்
        ஓதும் தமிழ் அதன் உள்ளூறு நெய் – போதமிகு
        நெய்யின் உறு சுவையாம் நீள் வெண்ணை மெய்கண்டான்
        செய்த தமிழ் நூலின் திறம்
                                             (பழம்பாடல்)
என்று தமிழ் மொழியின் பெருமை மற்றும் தாய்மொழியின் பெருமை குறிக்கப்படுகிறது.
      தொல்காப்பியர் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வத்தைக் குறிப்பிடும் போது,
      தெய்வம் உணாவே மாமரம் புள் பறை
      செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
      அவ்வகை பிறவும் கரு என மொழிப
                            (தொல்காப்பியர். தொல்,நூ.964 )
என்பது தொல்காப்பியம். இதில் தெய்வம் நிலத்தைச் சார்ந்து அமையும் கருப்பொருள் என்று சுட்டியுள்ளமை நோக்கத்தக்கது.
தொல்காப்பியர்,
       காலம் உலகம் உயிரே உடம்மே
       பால்வரைத் தெய்வம் வினையே பூதம்
       ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
       ஆயிரைந்தொடு பிறவும் அன்ன
       ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
       பால்பிரிந்து இசையா உயர்திணை மேன
                               (தொல்காப்பியர். தொல்,நூ.969 )
என்று குறிப்பிடுகிறார். இந்நூற்பாவில் உயிர் , உடம்பு , தெய்வம் , வினை என்பவை சுட்டப் பெறுகின்றன.
      தவத்திரு வேதாத்திரி மகரிசி,
  தெய்வத்தைப் போற்றி வழிபட்டு வாழ்வோர்
  சிந்தனையும் மேற் கொண்டால் சிறந்துயர்வார்
  ஐயுணர்வும் சீர்திருந்தும் ஆற்றல் ஓங்கி
  அவர் தகைமை நன்குணர்வார் அறம் தழைக்கும்
                                             (த.வே.ம.ஞா.க.பா.171)
என்று தொல்காப்பியர் சுட்டியதை இவரும் ஐயுணர்வு என்று இறை, உயர், உலகு , வினை , உயர் என்று சுட்டுகிறார்.
      அகத்தியவர்களின் பன்னிரு சீடர்களில் ஒருவர் தொல்காப்பியர். அகத்தியப் பெருமானிடம் ஆகமம் கேட்டவர் திருமூலர்.  இருவருமே ஒருவரிடம் கற்றவரிடம் என்பது பொதுமை.  அதுபோல தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி இறைக் கொள்கையில் ஒரு நிலைப்பாடு உடையவர்கள். இருவரும் சமய , சமுதாய , வழிபாட்டு இறையியல் , யோக நிலை ஆகிய அடிப்படையில் தம் கொள்கைகளை வகுத்து சமுதாயத்திற்கு அருளியவர்கள்.
   

 திருமூல நாயனாரும் அன்பே சிவம் என்பதை,
 ஒன்றது பேரூர் வழியா றதற்குள
 என்றது போல இருமுச் சமயமும்
 நன்றீது தீதிது என்னுரை யாளர்கள்
 குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே
               திருமூலர், திருமந்திரம் பா . எ.  
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்,
       ‘ இறைவனின் புகழைத் திரும்பத் திரும்பப் பாடுவதும், இறைவன் பெயரைத் தொடர்ந்து ஓதுவதும் மிக எளிய ஆன்மீகச் சாதனையாகும். இவ்வாறு உரைப்பதன் மூலம் இறைவனின் கருணைத் திறத்தையும், அவனது திருப்பெயரை உச்சரிப்பதால் விளையும் பயனையும் தெளிவாக அறிய முடிகிறது.
                                   இராம.கிருசுணசாமி. ச.வா.ப. பக்.186.
சமயக் குரவர்களும் இதனை வலியுறுத்தியுள்ளனர். சுந்தரமூர்த்தி நாயனார்,
   ‘’ பத்தராய்ப் பணிவார்கள் எல்லோருக்கும் அடியேன்
     பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’’
                            சுந்தரர். தேவாரம்.திருத்தொண்டத்தொகை பா.1
என்று பாடியுள்ளதை அறியலாம்.

அனைத்துசமய வழிபாடு
       அனைத்து சமய வழிபாடு என்பது அனைத்துச் சமயத்தினரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி வழிபாடு நடத்துதல். இவ்வழிபாடு சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமங்களிலும், யோக நிலையங்களிலும் , தவத்திரு வேதாத்திரி மகரிசியின் மன்றங்களில் உலக நல வாழ்த்து என்ற பெயரிலும்  நடத்துப்பெறுகிறது.
       தவத்திரு வேதாத்திரி மகரிசி இயற்றிய உலக நல வாழ்த்துப் பாடல்  வேதாத்திரிய மன்றங்கள் , இல்லங்கள் , நிறுவனங்கள் ஆகியவற்றில் பாடப்படுகிறது.
 அவை,
       உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
       உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
       பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
       பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
       கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
       கல்லாமை கடன்வறுமை கலகங்கள் மறையட்டும்
       நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானம்ஒளி வீசட்டும்
       நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
                                          (த.வே.ம உலக நல வாழ்த்து)
என்று பாடப்படுவது நோக்கத்தக்கது. மக்கள் சர்வசமய சமரசத்தை உணர இவ்வழிபாடு உறுதுணை புரியும்.
 திருமூலரும் ,
 ஒன்றே குலம் ஒருவனே தேவனும்
  நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
  சென்றே புகும்கதியில்லை சித்தத்து
  நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே
                                   ( திருமூலர் , திருமந்திரம் பா.எ.2104)
என்ற பாடல் பொது நிறுவனங்களில் பாடப்படுகிறது.
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரமங்களிலும், யோக நிலையங்களிலும் இவ்வழிபாடு நடத்திப்படுகிறது.
       ‘ மக்கள் சர்வசமய சமரசத்தை உணருவதற்கு உதவி புரிய குருதேவர் சர்வசமய வழிபாடுகளை நடத்தி வந்தார். அவ்வழிபாடுகள் சச்சிதானந்த யோக நிலையங்கள் , ஆசிரமங்களில் ஆண்டுதோறும் குருபூர்ணிமா நாளிலும் சிறப்பு விழாக்களிலும் நடத்தப்படுகின்றன.  வட்டமான பீடத்தின் நடுவில் பெரிய விளக்கு ஏற்றி வைக்கப்படும்.  அது தெய்வத்தின் பிரபஞ்ச அடையாளம்.  பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களும் பீடத்தைச் சுற்றிலும் நின்று அவரவர் சமயத்தைக் குறிக்கும் தம் கை விளக்குகளை மையத் திரியிலிருந்து ஒரே சமயத்தில் ஏற்றுவார்கள்.  பின் ஒவ்வொருவரும் தம் சமயமரபுப் படி வழிபாடு செய்வர்.
     தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொள்ளும் சர்வசமய மாநாடுகளிலும், கருத்தரங்கிலும் இத்தகைய சர்வசமய வழிபாட்டை நடத்தி வந்தார். மாநாட்டில், கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் சமய சமரசத்தை நேரடியாக உணருவதற்கு இவ்வழிபாடு வாய்ப்பளித்துள்ளது, என்பர்.
                               
சமரச சன்மார்க்கம் – ஒளி வழிபாடு
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகிய இருவரும் இராமலிங்க வள்ளலாரின் போதனைகளில் ஈடுபாடு உடையவர்கள். தவத்திரு இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு ஒளி வழிபாட்டைப் பரப்பியவர்.  அவர் பரபிரம்மத்தை அருட்பெரும் சோதியாகக் கொண்டவர்.  1869 ஆம் ஆண்டு வடலூரில் ஒளிக்கோயிலைத் திறந்தார். அதுவே முதல் ஒளிக் கோயிலாகத் திகழ்கிறது.
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகிய இருவரும் பல இடங்களில் ஒளி வழிபாட்டை நடத்தி தங்களது சமயப் பணியை புரிந்துள்ளனர்.

அனைத்து சமயக் கட்டமைப்புப் பணி
        குருதேவரின் அனைத்து சமயக் கட்டமைப்புப் பணி உலக நாடுகள் அனைத்திலும் தொடர்ந்து வளர்ந்து வந்தது. 1977 ஆம் ஆண்டு ஜூன் 31 இல் குருபூர்ணிமாவிற்கு அடுத்த நாளில், உள்ளத்தை உருக்கும் ‘ சர்வசமய சமரச வழிபாடு’ என்று பெயரிட்டார்..  இவ்விழா ‘சர்வசமய நாள்’ என்று வழங்கப் பெறுகிறது. மக்கள் தம் உண்மையான ஒருமையை உணருவதற்கு வாய்ப்பை வழங்கிய அவ்விழா தவத்திரு சச்சிதானந்தரின் சர்வசமய முயற்சியாகும்.
சமயச் சடங்குகள் வாயிலாகச் சமயப்பணி
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் , இவ்வுலக மக்கள் இன்பத்தை அடையவே உயிர்கள் முயல்கின்றன. மனிதர்களும், அவ்வாறே நடந்து கொள்கின்றனர். முன்னோர்கள் வகுத்த வழிபாடுகள், மந்திரங்கள், சடங்குகள் இவற்றில் இன்றுள்ளோர் பெரிதும் விருப்புடையவர்களாத் திகழ்கின்றனர்.
     மக்கள் தம் வாழ்வில் , முன்னோர் பின்பற்றிய சமயச் சடங்குகளைப்
பின்பற்றி வழிபாடுகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
சமயச் சடங்குகள் ஒவ்வொரு மதத்தினருக்கும் வேறுபடும்.  இந்து சமயச் சடங்குகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், அச்சடங்குகளின் தத்துவங்களையும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
       ‘’ இறைவன் எங்கோ வெளியில் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறார் என்ற உண்மையைக் குறிப்பால் நமக்கு உணர்த்துவனவே சமயச் சடங்குகளும் நடைமுறைகளும். இறைவனை வழிபட கோயிலுக்குச் செல்கிறோம். செல்லும் போதெல்லாம் மலர், தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி போன்றவற்றை எடுத்துச் சொல்கிறோம். இவை நமக்கு இறைவனிடம் இருக்கும் பக்திச் சிரத்தையைக் காட்டுகின்றன.
      இரண்டு பழங்களைக் கொண்டு செல்வது நம் செயல்களின் பயன்களை எடுத்துச் செல்வதாகும். அவற்றில் ஒன்று நம் நற்செயல்களின் பலனைக் குறிக்கிறது.  மற்றொன்று நம்முடைய தீய செயல்களின் பலனைக் குறிக்கிறது. ‘இறைவா ! எல்லாவற்றையும் உம் திருவடிகளில் அர்ப்பணித்து விடுகிறேன்’ என்பதே இதனுடைய உண்மையான பொருள் ‘’ .
                                     த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.90
என்கிறார்.
                                      
        ஒழுக்கத்தை உயர்வாக கருதும் தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தம்முடைய ஞானக்களஞ்சியம் நூலில் சடங்குகளில், வழிபாடுகளில் மக்கள் தம் முன்னோரைப் பின்பற்ற வேண்டும் என்பதை,
       ‘’பெற்றவர்கள் குருஅரசன் தெய்வமென்ற ஐவர்
       பெருமதிப்பை உணர்ந்தறிவால் வணங்கி நலம் காண்போம்
       சுற்றத்தார் தான் குடும்பம் சமுதாயம் உலகம்
       சொல்லும் ஐந்து பிரிவினர்க்கும் கடமை செய்தே வாழ்வோம்
                        த. வே . ம. ஞானக்களஞ்சியம் . பா 85
என்று முன்னோர் போற்றுதலை புலப்படுத்துகிறார்.          

இறைவழிபாடு    
    வழிபாடு என்பது தொன்றுதொட்டு வருவது.  இறைவனின் திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இறைவனை ஓரிடத்தில் ஓர் உருவத்தில் வழிபடுகிறோம்.  திருச்சபையில் இயேசுவாக, பள்ளிவாசலில் அல்லாவாக,  சிதம்பரத்தில் சிவபெருமானாக, திருவரங்கத்தில் திருமாலாக வழிபடுகிறோம்.
          ‘’ ஒவ்வொரு மதத்திலும் ஆண்டவனுக்குத் தனி உருவங்களும், சின்னங்களும் உள்ளன. இந்து மதத்தில் பிற மதங்களிலிருப்பதைவிட பன்மடங்கு அதிகமான உருவங்களும், சின்னங்களும் இருக்கின்றன. அதை இந்து சமய நூல்கள் அனுமதிக்கின்றன. ஆண்டவனை எவ்வுருவத்திலும் , எவ்வகையிலும் வழிபடலாம் என்று கூறுகின்றனர். அதனால் கல், புல் , நீர் , மரம், பாம்பு, பசு , பறவை முதலிய பல்வேறு பொருள்களில் இறைவனை வழிபடுகின்றனர். அருவ நிலையிலும் வழிபடுகின்றனர்’’ என்கிறார். இதன் மூலம் வழிபாடு பலத்திறப்பட்டதாகவும், இயற்கை வழிபாடும், முன்னோர் வழிபாடும், உருவ வழிபாடும் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக விளங்கியமையும் புலனாகிறது.
         தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள் பல மதங்களின் வழிபாட்டை, பிற உயிர் படும் துன்பத்தை , தான் படும் துன்பமாகவே கருத வேண்டும் என்று வலியுறுத்துவதே ஆறாவது அறிவு. ஆறாம் அறிவின்  ஒரு நிலையே மதம். சிந்தனையும் செயலும் இணைந்ததே மதம் எனப்படும். சிந்தைக்கு வேண்டியது ஒருமைப்படுத்துகிற இறைநெறி. செயலுக்கு வேண்டியது அன்பில் விளைந்த அறநெறி. பல மதங்கள் பல நிலைகளில் செயல்பட்டாலும், அனைத்து மதங்களும் பிற உயிர்கள் படும் துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தவத்திரு வேதாத்திரி மகரிசி அவரகள் பின்வரும் பாடலில் உணர்த்துகிறார்.

             பிறஉயிர் உணர்தலாகப் பெற்றிடும்
             சுகதுக்க இயல்பினை
             உறவுகொண்டுள்ளத்தால் யூகித்து
             உணர்ந்திரங்கி உதவும்
             சிறந்ததிருப்பம் அறிவில் சிந்தனையில்
             முதல் உலகில் பெற்ற நாள்
             அறம் தோன்றிற்று மதமாம்; அவை
             வளர்த்தோர் பெயர்களினால் பல ஆயிற்று. 
                                த.வே.ம. வே.ம.ம.நல்லி. ப.39.
என்று பல சமயங்களின் நிலையினை உணர்த்துகிறார்.
     பண்டைத் தமிழர்கள் இயற்கையை வழிபட்டனர். கடலின் வழிபாடே வருண வழிபாடாயிற்று. சில மரங்களும் தெய்வத் தன்மையனவாகக் கருதப்பட்டன. அவற்றில் தெய்வங்கள் தங்குவதாகக் கருதி அவற்றின் கீழ் வழிபாடு செய்தனர்.  தெய்வம் உறையும் மரங்களையும் அவற்றின் கீழ் வழிபாடு செய்தமையையும் பற்றிய பல குறிப்புகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.
     ’’கடவுள் மராத்த முன் மிடை குடம்மை’’ (அகம். 270-12)
   
    ’சூர் முதலிருந்த ஓமையும் புறவின்’ (அகம். 297-11)
   
    ’ஆலும் கடம்பும் அணிமார் விலங்குபட
    மாலை போல் தூங்கும் சினை’ (கலித்_106- 27-29)
என்னும் பாடலடிகள் சங்ககால மக்கள் இயற்கையை வழிபட்டமையைக் காட்டுகின்றன.
        மனிதன், வழிபடும் இறைநிலையை உணரவேண்டும் என்பதை,
      ‘’அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
       ஆனந்த பூர்த்தியாகி
       அருளாடு நிறைந்தது எது? தன்னருள்வெளிக்
       குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம்
       தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்குயிராய்த் தழைத்தது எது?
                       (தாயு. தாயு.பா.தி. பா.எண் = 1)
என்று தாயுமானவர் தம் முதற்பாடலில் வலியுறுத்துகின்றார்.
     மாணிக்கவாசகர், தம் பாடலில்,
        வேண்டத் தக்க தறியோய் நீ
        வேண்ட முழுதுந் தருவோய் நீ
        வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
        வேண்டி என்னைப் பணிகொண்டாய்  
        வேண்டி நீயா தருள் செய்தாய்
        யானும் அதுவே வேண்டின் அல்லால்
       வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
       அதுவும் உன்றன் விருப்பன்றே (மாணி.திரு.8.33.6 )
என்ற திருவாசகப் பாடல் இறைவனை எவ்வாறு வழிபடல் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.
யோகத்தின் மூலமாகச் சமய, சமுதாயப்பணி
           ஆன்மா இறைவனை எவ்வகையிலும் சார்ந்து இன்புறுதலை முக்தி எனலாம். இறைவனை அடையும் முக்தி மார்க்கங்களை முன்னோர் வகுத்துள்ளனர்.  அவை சரியை, கிரியை, யோகம், ஞானம்  என்பன.  ஞானத்தால் அடையும் முத்தி பரமுத்தி இதனை,
         ‘’சன்மார்க்க சகமார்க்கஞ் சற்புத்திர
             மார்க்கந் தாதமார்க்கம் என்றும்
          சங்கரனை அடையும் நன்மார்க்கம்
             நால் அவைதாம் ஞான யோக
          நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
             சன்மார்க்க முத்திகள் சாலோக்கிய சாமீப
          சாரூப்பிய சாயுச்சியம் என்று சதுர்விதமாம்
             முன்மார்க்க ஞானத்தால் எய்தி முத்தி
          முடிவென்பர் மூன்றினுக்கு முத்தி பதமென்பர்
                                               (சிவ.சித்தி.சுப.270)
எனவரும் சிவஞான சித்தியாரின் பாடலால் அறியலாம். இந்நால்வகை மார்க்கங்களையும் அரும்பு, மலர், காய், கனி என்று ஒப்பிட்டுள்ளார்.
       ‘’விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
           அரும்பு மலர் காய் கனிபோல அன்றோ பராபரமே’’
                               (தாயு.தாயு.பா.தி. தேசோயோனந்தம் பா.எ.8)
என்பது தாயுமானவர் வாக்கு.

யோக வழிகள்
          இறைவனை அடைவதற்கு நான்கு வழிகள் உள்ளன. அவை,
1 . செயல் வழி அல்லது கருமயோகம்
2.  அறிவுப்பாதை அல்லது ஞானயோகம்
3. சிந்தனைவழி அல்லது இராஜயோகம்
4 . அன்புவழி அல்லது பக்தியோகம்
       யோகம் என்ற சொல் இணைதல் ஒன்று சேருதல் என்று பொருள்படும். அது சீவாத்மா பரமாத்மாவில் கலப்பதற்கு உதவும் சாதனம் என்றும் முன்னோர் கூறுவர்.
செயல்வழி அல்லது கருமயோகம்
     கருமயோகம் பற்றி  ‘’மனம் கனவிலும், நனவிலும் எப்போதும் சிந்துத்துக் கொண்டே இருக்கிறது. மூச்சு கணநேரம் கூட நிற்பதில்லை. சிந்தனையும் மூச்சும் செயல்களே , உண்பதும் செயலே. எனவே செயலற்று இருப்பது என்பது இயலாத ஒன்று.  வினைத் தளையிலிருந்து விடுபட ஒரே வழி , செய்யும் செயல்களையும் அவற்றின் பயன்களையும் ஆண்டவனுக்கும் உயிரினங்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்பதாகும். இதுவே செயல் வழி யோகம் எனப்படும்’’ என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
          தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், ‘’ செயல் வழி யோகத்தை இறைநிலை என்று கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாற்றல்தான் எந்த இடத்திலும் எந்த உருவத்துலும் இயக்கச் சீர்மையோடு செயலாற்றி வருகின்றது.  கண், காது மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும், கை, கால், வாய், குதம், பால்குறி என்ற ஐந்து தொழில் கருவிகளும் அமைந்துள்ள மனிதனிடத்தில் இறைநிலை முதலாக மனிதமனம் வரையில் நடைபெற்ற பரிணாமச் சீர்மையை உணர்ந்து இறையாற்றல் இயங்கும்’’
                                            (த.வே.ம.செ.வி.தத். ப.எ.1)  
           மனிதப் பிறவியின் நோக்கமே இறைநிலையை உணர்வதுதான்.  இறைநிலையை உணர்வது என்பது தன்னுள் உள்ளணர்வாகத்தான் உணர முடியம். தியானத்தின் பெருமையை தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
       மோன நிலையின் பெருமை யார் எவர்க்கு
            முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்
       மோனமே அறிவினது அடித்தளம் ஆம்
            மிக விரிவு எல்லையில்லை காலம் இல்லை
       மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
             முன்வினையும் பின்விளைவும் நீக்கக் கற்கும்
       மோன நிலை மறவாது கடமை ஆற்ற
             மேன்னை இன்பம் நிறைவு வெற்றி அமைதியுண்டாம்
                                   (த.வே.ம.ஞா.க.பா.1640)

                    என்று தம் பாடலில் குறிப்பிடும் அவர், தியானம் செய்தால் முன் வினையும்  பின் விளைவும் நீக்கக் கற்கும் என்றும், இன்பம் நிறைவு வெற்றி அமைதியுண்டாம் என்றும் குறிப்பிடுகின்றார்.
          தியானத்தின் போது அகத்தாய்வு செய்து நன்மை தரும் எண்ணங்களை வைத்துக்கொண்டு தீமை தரும் எண்ணங்களை விட்டுவிட வேண்டும் என்றும், தவம் செய்வதால் மனம் நுண்ணிய நிலைக்குச் சென்று இயற்கை இரகசியங்களை அடைந்து, இறைநிலையை அடைய முடியும் என்றும், செயல்வழி யோகத்தின் மூலம் மனிதனின் நன்னெறிகளின் மேன்மை மேம்படும் என்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகின்றார்.  
அறிவுப்பாதை அல்லது ஞானயோகம்
        அறிவின் மூலமாக யோகத்தின் நிலையை அடைவது ஞானயோகம் எனப்படும். அறிவைச் செலுத்தி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்ய முற்படுபவருக்கு ஞானயோகம் ஏற்றது. மன உறுதியுடன் இடைவிடாத பயிற்சி இன்றியமையாதது.  யோகத்தை நம்பிக்கையுடன் முறையாக நீண்ட காலம் பயிற்சி செய்ய வேண்டும்.  பயிற்சி செய்தால் பயனை அடையலாம் என்றும், எவ்வகைப் பொருளையும் தம் வசப்படுத்தலாம் என்பதை,
        கந்துஉக மதக்கரியை வசமா நடத்தலாம்
        கரடி வெம் புலி வாயையும்
        கட்டலாம், ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
        கண் செவி எடுத்து ஆட்டலாம்
        வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
        வேதித்து விற்றுண்ணலாம்
        -------------------------------------------------
        சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
       திறம் அரிது, சத்து ஆகி என்
       சித்தமிசை குடிகொண்ட அறிவு ஆன தெய்வமே 
                       (தாயு. தாயு.பா.தி. தேசோமயோனந்தம்.பா.எ.8)
எனவரும் பாடலால் அறியலாம்.
             தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், ‘’தனி மனிதன் திருந்தினால் உலகம் திருந்தும் என்றும், ஞானயோக மார்க்கத்தைப் பின்பற்றினால் அகத்திலிருக்கும் அமைதியை உணரலாம். ஞான யோகம் என்பது எரியும் விளக்கு போல, மற்றவர்களுக்கு வெளிச்சம் தரக்கூடியவையாக இருக்க வேண்டும் என்றும், இதனைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றும் குறிப்பிடுகிறார்.
                                         (த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.35)
        அறிவுப்பாதை அல்லது ஞானயோகம் பற்றி, தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
        மவுனத்தில் எனை அமர்த்தி மனத்தை உள்ளுள் ஈர்த்து
            மாபெரிய பேரண்ட ரகசியங்கள் தம்மை
        மவுனமாக உணர்த்தி விட்டாய் மா அறிவாய் நின்று
            மற்றும்நான் எனது வாழ்வில் கடமை தேர்ந்து ஆற்ற
        மவுனத்தில் எனக்களித்த அறிவுரைபோல சிறிதும்
            மலைக்காது, பிறழாது,உலகத்தொண்டு செய்வேன்
        மவுனமதாய் அறிவினது பூரணமாய் மாந்தர்
            மனதுக்கு உட்பொருளாய் விளங்கிடும் பேரறிவே
                         (த.வே.ம.ஞா.கள.பா.1642)
என்று குறிப்பிடும் தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தியானம் என்பது ஞானம் என்றும், அதன் மூலம் உலகத் தொண்டு செய்வேன் என்றும் குறிப்பிடுகின்றார்.
           பித்தாகரசு தம் சமய நெறியில் வழங்கப்படும் தீட்சைகளில் ஒன்றாக மெளனத்தை அமைத்தார். அந்தத் தீட்சையைப் பெற்றவர் ஒரு ஆண்டு மெளனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதுவே ஞான நிலையின் முதல் நிலை என்றும் குறிப்பிடுகிறார். அபுயாசித் அல்பிசுதாமி என்ற மெய்யுணர்வாளர் அமைதியை விட ஞானத்தில் வெளிச்சமான விளக்கு ஒன்று இல்லை என்று குறிப்பிடுகிறார்.
                            
                             

சிந்தனைவழி அல்லது இராஜயோகம் 
        நம்முள்ளே மையம் கொண்டிருக்கின்ற நம்மை இயக்குகிற அந்த இறைவனை உணர்ந்தால் மட்டுமே நமக்கு ஆழ்ந்த அமைதி கிடைக்கும். அந்த இறைவனை அடைவதற்கு, உள்நோக்கிய பயணத்தை நாம் தொடர வேண்டும். அதுவே இராஜயோகம்.
     
       மோன நிலையில் முக்தி உண்டாம் என்றே
       கானமாய் ஊதுகுழல் கோனே
       கானமாய் ஊதுகுழல்
                           (இடைக்காடர். மோன நெறி.மெளனம்)
மெளன நோன்பு பயின்றால் தான் முக்தி அடைய முடியும் என்ற விளக்கத்தைப் பாட்டாகப் பாடி அனைவருக்கும் அறிவிப்பாய் கோனே – பாட்டாகப் பாடு ஊதுகுழலே என்பது இடைக்காடர் உணர்த்திய இராஜயோகம்.
        தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
    மவுனத்தில் எனை அமர்த்தி மனத்தை உள்ளுள் ஈர்த்து
         மாபெரிய பேரண்ட ரகசியங்கள் தம்மை
    மவுனமாக உணர்த்தி விட்டாய் மா அறிவாய் நின்று
         மற்றும்நான் எனது வாழ்வில் கடமை தேர்ந்து ஆற்ற
    மவுனத்தில் எனக்களித்த அறிவுரைபோல சிறிதும்
         மலைக்காது, பிறழாது, உலகத்தொண்டு செய்வேன்
    மவுனமதாய் அறிவினது பூரணமாய் மாந்தர்
          மனதுக்கு உட்பொருளாய் விளங்கிடும் பேரறிவே
                              (த.வே.ம.ஞா.க.பா. 1642)
       என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், இராஜயோகத்தின் பயனை உணர்த்துகின்றார்.
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், ‘’ வருக வருக என்று மனதைத் திரும்ப அழைத்து , தியானத்தில் அமர்ந்து தன்நிலை மேம்பாடு அடைய மனிதர்கள் முயல வேண்டும். இந்த வகை இராஜயோகத்தினால் மனிதன் தன் நிலை உயர்ந்து மாமனிதன் ஆவான்’’ என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
                               (இராம.கிருசுணசாமி. ச.வாழ்.ச.ப.ப.184)
   கந்தரலங்காரத்தில் அருணகிரிநாதர்,
          ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரம ஆனந்தத்தே
          தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார் தினைப்போது அளவும்
          ஓங்காரத்துள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு
          தூங்கார் தொழும்பு செய்யார் எனச் செய்வார் யமதூதருக்கே
                            (அருணகிரிநாதர், கந்தரலங்காரம்.பா 55)
அகங்காரம் அடங்கிப் பற்றற்று ஒடுங்கிப் பேரானந்த நிலையில் நினைப்பும், மறப்பும் அற்று, முருகனது உருவத்தை ஒளிவடிவாக அறிவாகக் கண்டு ஓங்காரத்தில் தூங்காமல் தூங்கித் திருத்தொண்டு செய்து யமனை வெல்ல வேண்டும் என்கிறார்.
         
யோகி சுத்தானந்த பாரதியாரும்,
   ஒவ்வொருயிரும் உலவுங்கோயில் எவ்வெவருள்ளும்
   இருக்கும் ஆன்மா, மோனமே உள்ளத் தாழ்ந்து
   தியானஞ் செய்க தினஞ்சில நாழிகை
என்று கூறி, மோனமே பூரணம் என்கிறார்.
அன்புவழி அல்லது பக்தியோகம்
           பக்தி என்பது ஆண்டவன் மேலுள்ள அளவு கடந்த ஈடுபாடு. சுயநலமற்ற அன்பு, இறைவன் மேலிருக்கும் ஆழ்ந்த பற்றுதல், வீடு பேற்றுக்கு வழியாகும். இதனை வள்ளுவர்,
          பற்றுக பற்றற்றான் பற்றினை ; அப்பற்றினை
          பற்றுக பற்று விடற்கு
                      (திருவள்ளுவர்.திருக்குறள்.கு.எ.350 )
என்ற குறள் வழி எடுத்துக் காட்டியுள்ளார்.
     பக்தியோகம் அகந்தையை அழிக்கும் வழிகளில் ஒன்றாகும்.  அது மனத்தின் திரிபுகளை நீக்கி மனத்தில் பரம உணர்வை நிரப்புகிறது.
    தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பக்தியோகம் பற்றி,
          ‘’ ஆண்டவனே! நானும் பிறவும் உம்முடையவை. எல்லாம் உமதே. ஒவ்வொன்றையும் நீயே செய்கிறாய்.   நீ எங்கும் நிறைந்துள்ளாய்.  எல்லா இடங்களிலும் நீ இருக்கின்றாய். நீயே என் மூலம் செயல்படுகிறாய். எல்லாம் உன் சித்தம்’’ என்று துதிக்க வேண்டும் என்று சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
                                                                               (த.ச.சு. ஆ.வழி.அவசிமா? ப.36)
       17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவர்களின் ஒரு பிரிவினரான குவேக்கரக்களின் வழிபாட்டில் சிறப்பான அம்சம் மெளனம்.  தியானத்தில் கடவுள் பிரசன்னமாகிச் சுற்றி இருப்பதை உணர்ந்து அந்த அனுபவங்களை, அகத்தேடல் மற்றும் அகவெளிப்பாடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.
      தியானத்தில் இருப்பவர்களிடம் இறைவன் குடிகொண்டிருப்பான். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் மெளனம். அறிவாக இறைவனை உயிராக உணர்கிற மனிதன் பேரின்ப நிலையாகிய தியானத்தில் ஆழ்கிறான்.
தவத்திரு வேதாத்திரி மகரிசியும், மெளனமே ஓங்காரமான பிரணவம் என்பதை,
       ஓங்கார நிலையினிலே மெளனம் என்போம்
       உச்சரிப்பில் அதனையே சப்தம் என்போம்
       ஓம் என்று செபிப்பவனைப் பக்தன் என்போம்
       உட்பொருள் உணர்ந்தவனை ஞானி என்போம்
                           (த.வே.ம. ஞா.க.பா. 1635)
என்கிறார். மேலும்,
     மகர மெய் உணர்த்துவது மோனம் ஆகும்
     மற்றுமொரு உயிர் எழுத்தாம் ஓ முன்வைத்து
     மகரமெய் ஒலித்திடுதல் மொழி ஒழுக்கம்
     மவுனத்தை அதனால் ஓங்காரம் என்போம்
                           (த.வே.ம. ஞா.க.பா. 1632)
என்று தனது கவிதையில் தெரிவிக்கிறார்.
திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் தென்முகக் கடவுள் துதியாக,
    கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி
    வல்லார்க ணலால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்
   எல்லாமாய் அல்லாதுமாயிருந்த தனை யிருந்தபடி யிருந்து காட்டிச்
   சொல்லாமற் சொன் னவரை நினையாமனினைத் தொடக்கை வெல்வோம்.
                              (பரஞ்சோதிமுனிவர்.திரு..விளை.பு.தட்சிணாமூர்த்தி.கடவுள் வாழ்த்து)
என்று மூன்று செய்திகள் உணர்த்தப்படுகின்றன.
1 . முனிவர்கள் நால்வரும் நான்மறை ஆறங்க முதலான கல்வி கேள்வி வல்லார்.
2 . இறைவன் உணர்த்திய பொருள் வாக்கிறந்தது. பூரணமானது. மறைக்காப்பாலானது.
3 . அந்தப் பொருளை இறைவன் இருந்தபடியே இருந்து வாயுரையாற் கூறாது செய்கையால் உணர்த்தியது.
     மெளனமாக இருந்து மெய்ப்பொருள் உணர்த்திய சிவன் மவுனகுரு என்றும் ‘மவுன உபதேச சம்பு’ என்றும் போற்றப் படுகிறார்.
           .
     அருணகிரிநாதர் தம் பாடலில்,
 தூசா மணியும் துகிலும் புனைவாள்
 நேசா முருகா நினது அன்பு அருளால்
 ஆசா நிகளம் துகள் ஆயினபின்
 பேசா அனுபூதி பிறந்ததுவே
                                           ( அ.நா. க.அ.பா43)
என்று தியானத்தின் மேன்மையினை அருணகிரிநாதர், தம் பாடல் வாயிலாகக்  கூறுகிறார்.

           இவ்வாறு யோகத்தின் வழி , தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகிய இருவரும் சமயப் பணி புரிந்து, உலக மக்கள் இன்புற பல்வேறு வழிகளைக் கூறிச் சென்றனர்


  
  பயணம் வாயிலாகச் சமய, சமுதாயப் பணி
            சமயச் சான்றோர்கள் பல இடங்களுக்கு யாத்திரை சென்று இறைவழிபாடு நடத்தி வந்துள்ளனர். இவ்வழிபாட்டின் மூலம் பல்வேறு மக்களின் இறை உணர்வைப் பெறலாம்.
      நால்வர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். மாணிக்கவாசகர் ஆகியோர் யாத்திரை மூலமாகவே சமயப்பணி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் யாத்திரை வழியே சமயப்பணி
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் 1946 ஆம் ஆண்டு தென்னிந்தியாவெங்கும் பயணம் மேற்கொண்டார். சில இடங்களுக்குக் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டார்.
      அடியார்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் பெரிதும் விரும்பி மேற்கொள்ளும் கைலாய யாத்திரையினை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும் மேற்கொண்டார்.
       இலங்கை வானொலியிலும் ஆங்காங்கு ஆற்றிய சொற்பொழிவுகளிலும் பயணம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘சுசிந்திரன்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகளிலும் யாத்திரை அனுபவங்களை உலகுக்கு எடுத்துரைத்தார்.  யாத்திரை அனுபவங்கள் பலருக்கும் பல காலம் பயன்படும்படி ‘கைலாசம் கண்டேன்’ என்ற நூலையும் உருவாக்கினார். இந்நூல் கண்டி தெய்வ வாழ்க்கைச் சங்கத்தால் 1960 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.
         கயிலை வழிபாட்டுக்குப் பின் அமர்நாத் யாத்திரை புறப்பட்டார். பின்னர், புதுடெல்லி, கல்கத்தா, சென்னை , கேரளா, மற்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் கல்லூரிகள் மற்றும் அன்பர்களின் இல்லங்களில் உரையாற்றினார்.
         தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் , இங்கிலாந்து, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்சு, ஆசுதிரேலியா, நியூசிலாந்து ஹவாய் தீவு ஆகிய பல நாடுகளுக்கும் சென்று , யோக நெறியை , பரம அமைதியையும், ஆனந்தத்தையும் அடையும் வழியை உலக மக்களுக்கு போதித்தார்.
         1988 ஆம் ஆண்டு வாசிங்டனில், சோவியத் – அமெரிக்க குடிமக்கள் உச்சி மாநாட்டில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டு , உடல்நலம், கல்வி, மனித உரிமை என்ற பொருண்மைகளில் உரையாற்றினார்.
          1989 ஆம் ஆண்டு மூன்றாம் உலக யோக மன்ற மாநாடு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் தவத்திரு சச்சிதானந்தர் ஆற்றிய உரை மிகப் புகழ்பெற்ற உரையாக இங்கிலாந்து பத்திக்கைகளால் போற்றப்பட்டது.
       உலகெங்கும் பல நாடுகளில் அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று யோகாவின் இன்றைய தேவை, ஆன்மீகத்தின் உண்மைகள் எனப் பலவற்றை போதித்தார்.
          தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், தனது சொற்பொழிவுகளில், ‘’ஒவ்வொருவரும் சுயநலத்தை மட்டும் கருதாமல், நாட்டின் நலம், உலக நலம், ஆகியவைகளையும் கருத வேண்டும் என்றும் , உலக மக்களை தம் சொந்தக் குடும்பமாகக் கருத வேண்டும்’’ என்று வலியுறித்தினார்.  

          தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பல வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் கலையரங்குகளில் சொற்பொழிவாற்றி உள்ளார். உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் பயணம் செய்துள்ளார். யாத்திரை மூலம் மக்கள் தெய்வ உணர்வும், யோக வாழ்வின் தத்துவத்தையும் அறிய , யாத்திரைகள் மூலமாக பல்வேறு சமயப்பணிகள் புரிந்தார்.

தவத்திரு வேதாத்திரி  மகரிசியின், பயணம் வழியே சமயப்பணி
      தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தமிழகத்தின் பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தமது சமயப்பணியை மேற்கொண்டார். தமிழகத்தின் சிற்றூர்கள் தோறும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மன்றங்கள் வாயிலாக வேதாத்திரியத்தின் உண்மைகளையும், யோகத்தின் பயன்களையும் எடுத்துரைத்தார்.
      வேதாத்திரி மகரிசி பல வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டவர். தமது 61 வது வயதில் தான் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். 1972 ஆம் அமெரிக்காவில் இவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பான உரை என்று அமெரிக்க பத்திக்கைகள் குறிப்பிட்டன. அச்சொற்பொழிவில், ‘’ தெய்வ நிலையை முழுமுதல் பொருளாகவும், உயிர்களை அதன் பொறிகளாகவும் ,பேரியக்க மண்டலத்தை ஆன்மாவின் வளர்ச்சிக்காவும் கருத வேண்டும் என்று சொற்பொழிவாற்றினார்’’
                                           (த.வே.ம. எ.வா.வி.ப.138)
      1986 ஆம் ஆண்டு தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், அமெரிக்காவில் தாமரைக் கோயில் ஒன்றைக் கட்டி சமயப்பணியின் உச்சமாக அனைத்து மதத்தவரும் வழிபடும் வகையில் கட்டி முடித்தார். அந்த தாமரைக் கோயிலின் திறப்பு விழா 1986 ஆம் ஆண்டு ஜூலை 19 , 20 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதன் திறப்பு விழாவில் தவத்திரு வேதாத்திரி மகரிசி, திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், தவத்திரு சுந்தரம் அடிகள், திரு.மகாலிங்கம் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தவத்திரு வேதாத்திரி மகரிசி கலந்து கொண்டு சமயங்களின் இன்றைய பணி குறித்து சிறப்பானதொரு உரையாற்றினார். 
       உலகின் பல நாடுகளிலும், மனவளக்கலை பயிற்சிகளை  அன்பர்கள் பயனுறும் வகையில் அளித்தார். கோலாலம்பூர், ஜெர்மனி, இங்கிலாந்து,ஜப்பான், கொரியா ,ஹவாய் தீவு, மற்றும் ஐரோப்பிய , ஆப்பிரிக்க நாடுகளிலுக்கும் சென்று சமயப்பணி ஆற்றினார்.
        தவத்திரி வேதாத்திரி மகரிசி, 9.1.1979 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் ‘உலக வளர்ச்சிக்கு ஆன்மீக வளர்ச்சி முக்கியத்தேவை’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
     உலகின் பல இடங்களுக்கும் சென்று அங்குள்ள கலையரங்குகளில் பத்து நாள் மனவளக்கலை பயிற்சிகளை அளித்தும், குண்டலினி யோகக் கலையைப் பயிற்றுவித்தும் வந்தார்.
          மனிதன் மாண்புடன் வாழவும் , மனிதகுலம் உய்யவும் மனித சமுதாயத்திலிருந்து எவையெவை மாறவேண்டும் என்றும் தமது சொற்பொழிகளில் வலியுறுத்தி வந்துள்ளார்.
            தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தம் கொள்கையாக,
    ஓர் உலக ஆட்சி,உயர் ஒழுக்கத்தோடு
       குழந்தைகளை வளர்க்கும் திட்டம்
   பார் முழுவதும் பொருள் துறையில் சமநிதி
      பலநாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
   சீர்திருத்த சிக்கனமாம் சிறந்த வாழ்வு
      தெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம்
   நேர்வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும்
      நெறிமுறைகள் இணைந்த வாழ்வு காண்போம்
என்று எல்லாக் கூட்டங்களிலும் வலியிறுத்தி வந்தார்.
                                       (வே.க.ஞா.க.பா.702)

         
         தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகியோர் யாத்திரை வாயிலாக உலகின் பல இடங்களுக்கும் சென்று தமது ஆன்மீக, யோகக் கருத்துக்களைப் பரப்பி சமய பணி புரிந்தனர்.  உலக நாடுகளின் பல கூட்டங்களிலும், மாநாடுகளிலும் இருவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு தங்களது உரையின் வாயிலாக மக்கள் பயனுற பல பணிகள் புரிந்தனர்.    
மையத்தின் வாயிலாகச் சமய, சமுதாயப் பணி
         தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோர் தங்களது சமய, சமுதாயப் பணிகளை பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அவ்வகையில் இருவரும் மையங்களை அமைத்து  முறையே பல அருட்பணிகளை மேற்கொண்டனர்.
தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் ஒருங்கிணைந்த யோக மையம்
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் , ஒருங்கிணைந்த யோக மையம் (இண்டக்ரல் யோகா சென்டர்) என்ற பெயரில் உலகம் முழுவதும் மையங்கள் அமைத்து , அதன் மூலம் மக்களுக்கு எளிய முறை யோகா பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை நலக் கல்வி, மன அழுத்தம் போக்கும் பயிற்சிகள் ஆகியவற்றை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
      இலங்கையில் சமயப் பணிகளைத் தொடங்கிய தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் , அங்குள்ள மக்களுக்கு எளிய முறையில் சமயப் பயிற்சிகளை அளித்தார். 1953 ஆம் பிப்ரவரி முதல் இலங்கை சென்ற அவர் ‘தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ’ என்ற பெயரில் பல சமயப் பணிகள் புரிந்தார். இலங்கையில் திரிகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி போன்ற இடங்களில் சிறிய திருக்கோயில்களில் திருவிளக்கு வழிபாடு, சமயப் பாடல்கள், சர்வமத பிரார்த்தனை போன்ற சமயப் பணிகளைச் செய்து வந்தார். இலங்கை மக்கள் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளை , ‘குருதேவர்’ என்றே அழைக்கத் தொடங்கினர். இலங்கையில், மக்களை ஒன்றுதிரட்டி சமய சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்தினார். மக்களிடம் ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரையும் ஒன்றாகவே கருதினார்.

           தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், தமது மையத்தின் மூலம் 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வ சமயக் குரு வழிபாட்டைத் தொடங்கினார். குருபூர்ணிமா நாள் என்பது குருவை வழிபடுவதற்குச் சிறந்த நாள். பல சமயக் கடவுளர்களின் படங்களை வைத்து , அனைத்து மக்களும் வழிபடும் வகையில் மிகச் சிறப்பான முறையில் சர்வ சமயக் குரு வழிபாட்டை நடத்தி மாபெரும் சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.
           தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், இலங்கையில் கண்டி ஆசிரமத்திற்கு அருகில் இருந்த சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மனமாற்றம் பெறவும், குற்ற எண்ணங்கள் குறையவும் அவர்களுக்கு யோகப் பயிற்சிகளைத் தமது மையத்தின் வாயிலாக அளித்தார். ‘’தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் இச்சேவையைக் கண்ணுற்ற இலங்கை அரசு, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இம்மையத்தின் வாயிலாகப் பயிற்சிகள் அளிக்க அனுமதி அளித்தனர்.’’ கொழும்பு, திரிகோணமலை, போகம்புரம் சிறை ஆகியவற்றில் யோகப் பயிற்சிகள் , வாழ்க்கை நலப் பண்புப் பயிற்சிகள் அளிக்கத் தொடங்கினர். 
                                             (இராம.கி.ச.வா.ப.ப.159)
அமெரிக்காவில் இப்பி இயக்கம்
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் அமெரிக்கா சென்ற சமயத்தில் , அமெரிக்கா வியட்நாம் போரில் ஈட்பட்டு பல அமெரிக்க வீரர்கள் மடிந்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அமெரிக்க இளைஞர்கள் பல தவறான வழிகாட்டுதல் பேரில் பல தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வந்தனர். இளைஞர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை இருளில் தள்ளி வந்தனர். இளம் வயது ஆண்கள், பெண்கள் வழகத்திற்கு மாறான உடைகளை அணிந்து வந்தனர். ஆண்களும் பெண்களும் நீண்ட கூந்தலுடன் வழக்கத்திற்கு மாறான, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டனர்.
    தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், ‘’தம் ஒருங்கிணைந்த யோக மையத்தின் சீடர்களை வைத்து, மாறுபட்ட திரிந்த இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு, முடிதிருந்தி முகத்தில் பொலிவு பெறச் செய்து இலட்சகணக்கான இளைஞர்களை நல்வழிக்குத் திருப்பினர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் இந்த அரிய சமூகப் பணியின் மூலம் அமெரிக்காவில் இப்பிகள் என்ற கலாச்சாரமே அழிந்தது என்று அமெரிக்கப் பத்திரிக்கைகள் சுவாமிகளை புகழ்ந்தன. பொறுப்பற்று இருந்த பல அமெரிக்க இளைஞர்கள், தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் தொடர் முயற்சியின் காரணமாக அவரின் சீடர்களாக மாறி சமுதாயப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது கண்டு அமெரிக்கப் பெற்றோர்கள் மகிழ்ந்தனர்’’.
                                                  (இராம.கி.ச.வா.ப.ப.163)
ஒருங்கிணைந்த யோக இதழ்
                  உலக மக்களிடையே    தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் போதனைகள் மிகப்பெரிய மாற்றத்தை வளர்த்து வந்தது. இலங்கை, இந்தியா, ஐரோப்பா, ஹாங்காங் , அமெரிக்கா , ஆசுதிரேலியா, ஜெர்மனி, பாரிசு போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த யோக மையம் மிகச் சிறப்புடன் செயல்பட்டு சமூதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தது.    ‘’தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் போதனைகளைக் கற்று அறிந்து பின்பற்றுவதற்காக, 1969 ஜூலையில் ‘ஒருங்கிணைந்த யோக இதழ்’ தொடங்கப்பட்டது. இவ்விதழில் குருதேவரின் போதனைகளும், பிற ஞானிகளின் போதனைகளும் இடம்பெற்று உலகெங்கும் தொடர்ந்து சமுதாயப் பணி ஆற்றி வருகின்றது’’.
                                                  (இராம.கி.ச.வா.ப.ப.322)
உட்சுடாக் சொற்பொழிவு
             தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், தமது ஒருங்கிணைந்த யோக மையத்தின் சார்பில், ‘உட்சுடாக்’ எனுமிடத்தில் இசை விழா ஒன்றை நடத்தினார். இவ்விழாவில் சுமார் ஏழரை லட்சம் மக்கள் கலந்து கொண்டு             தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் பேச்சு பல இளைஞர்களை மாற்றியது.ஒருங்கிணைந்த யோக மையம் ஆற்றிய சமூதாயப் பணிகளின் தாக்கம் இன்றளவும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நல் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கச் சிறைச் சாலைகள்
                          வர்ஜீனியா, நியூசெர்சி, கலிபோர்னியா, ஆகிய மாகாணங்களில் இருக்கும் சிறைச்சாலைகளில் நன்நெறி வகுப்புகளை நடத்த, தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் ஒருங்கிணைந்த யோக மையத்திற்கு அரசு சிறப்பு அனுமதி வழங்கியது. அங்கிருந்த பலர் திருந்தி நல வாழ்வு வாழ ஒருங்கிணைந்த யோக மையம் உதவியது.
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் சமூதாயப் பணிகளைப் பாராட்டி உலக நாடுகள் பல அவரை தம் விருந்தினராக வரவேற்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒருங்கிணைந்த யோக மையம் இன்றளவும் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.
      அறியாமை அகற்றிய நல்ல குருவாக உலக மக்களுக்கு தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் விளங்கினார். இதனை,
       ‘’ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
        தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
        தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
        தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானேய’’
                                                (திரு.திரு. பா,159)
என்னும் திருமூலரின் வாக்கிற்கு ஏற்ப நல்ல குருவாக தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் திகழ்ந்தார்.
          குருவை இறைவனாகப் பார்க்க வேண்டும். குரு நமக்குப் புரியாத பல நுட்பங்களை நமக்கு புரிய வைக்கும் ஞான ஆசான். அவ்வழியில் தம் மையத்தின் வாயிலாக பல்வேறு சமய, சமுதாயப் பணிகள் ஆற்றிய தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் உலகுக்கு நல்ல குருவாக அருட்தொண்டாற்றினார்.

தவத்திரு வேதாத்திரி மகரிசியின் உலகச் சமுதாய சேவா சங்கம்  
            தவத்திரு வேதாத்தரி மகரிசி அவர்களால், 1958 ஆம் ஆண்டு சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், தனிமனித அமைதிக்காகவும், உலகச் சமாதானத்துக்காகவும் தொண்டாற்ற உலகச் சமுதாய சேவா சங்கம் தொடங்கப்பட்டது.  
           உலகச் சமுதாய சேவா சங்கத்தின் கிளை மையங்கள் இன்று உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பரவி வளர்ந்து பல சமுதாயப் பணிகளை ஆற்றி வருகின்றது.
        தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்களால் உருவாக்கப்பெற்ற ,
 ‘வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்’ என்ற மந்திரம் இன்று உலகில் பல இன மக்களாலும் உணர்ந்து கூறப்பட்டு வருகின்றது.
      உலகச் சமுதாய சேவா சங்கத்தின் முக்கிய மூன்று கொள்கைகள்,
1 . தனி மனிதன் வாழ்வில் அமைதி
2 . சமுதாயத்தில் அமைதி
3 . உலக நாடுகளிடையே அமைதி
என்பனவாகும். மேற்கண்ட மூன்றும் தனித்தனியாகவும், ஆனால் ஒரே காலத்தில் இணைந்தும் செயல்பட வேண்டும் என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி வலியுறுத்துகிறார்.
      உலகச் சமுதாய சேவா சங்கம் மூலமாக,
     1 .  தனிமனிதன் அமைதி பெறக் குண்டலினி யோகம் என்ற அகத்தவப் பயிற்சியும், காயகல்ப யோகம் என்னும் கருவளப் பயிற்சியும், எளிய முறையிலான உடற்பயிற்சியும் விரும்புவோர்க்கு மன்றங்கள் வாயிலாக அளிக்கப்பட்டு வருகின்றது.
     2 . சமுதாய அமைதிக்கு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறிச் சாதனைகளுக்குச் சங்கம் பயிற்சி அளிக்கின்றது.
     3 . உலக நாடுகளிடையே போர் ஒழிந்து நிலையான அமைதி நிலவ ஓருலகப் பேரரசு அமைக்கும் திட்டத்தை உருவாக்கி மக்களுக்கும் , உலக நாடுகளுக்கும் விளக்கி இச்சங்கம் சமூகத் தொண்டாற்றி வருகின்றது.
உலகச் சமுதாய சேவா சங்கம்
         உலகச் சமுதாய சேவா சங்கம் இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் கிளைகளுடன் சமூகத் தொண்டாற்றி வருகின்றது. இச்சங்கத்தின் வாயிலாக பல இடங்களில் கண் பரிசோதனை முகாம்கள், இரத்த தான முகாம்கள் , கூட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
         சமூகத் தொண்டு பற்றி தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
     ‘’அருவுருவாம் அகத்தனை விளக்கி வாழ்வில்
           அல்லல் களைந்து அமைதிபெற்று மக்கள் உய்யக்
     கருவிளக்கி மனவளத்தைப் பெருக்கி காக்கும்
            கலையதனைக் கவி மூலம் விரித்துரைத்த
     திருமூலர் , வள்ளுவனார், இராம லிங்கர்
            திருவருளார், மணிமொழியார், தாயு மானவர்
     பெருநோக்கப் பயன்விளக்கி உலகம் உய்யப்
            பேரறமாம் அருட்தொண்டில் பங்கு கொள்வோம்
                              (த.வே.ம.ஞா.க.பா.13)
என்று முன்னோர்கள் பின்பற்றிய நெறியில் நாமும் பங்கெடுத்து சமூகத் தொண்டு புரிவோம் என்கிறார்.
        உலகச் சமுதாய சேவா சங்கத்தின் தொண்டர்கள் வேதாத்திரியத்தை உலகெங்கும் பரப்பச் செய்து உலக அமைதிக்கு உழைப்பர் என்பதை , தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
        
         ‘’சாதி மத தேச இனபேதங்கள்
               தனிஉடைமைப் பற்று மக்கள் பாசம் விட்டு
          நீதி வழுவா கற்பொழுக்கம் காத்து
               நில உலகப் பொதுவான பிரஜை என்ற
          சாதனையில் சமுதாயத் தொண்டு செய்ததே
              தாங்களும் வாழ்ந்து உலகத்தைத் திருத்தும் சாந்தி
          தூதர்களாய் உலகச் சமுதாய சேவா
              சங்கத் தொண்டர்படை செயலாற்றும் உலகமெங்கும்
                                        (த.வே.ம.ஞா.க.பா.656)
என்று பாடிச் சென்றார். அவ்வழியே  இன்று உலகச் சமுதாய சேவா சங்கம் சிறப்புடன் செயலாற்றி சமூகத் தொண்டுகள் புரிந்து வருகின்றன.
        உலகச் சமுதாய சேவா சங்கம் ,மக்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகின்றது. ஆழியாறு அறிவுத் திருக்கோயில் வளாகத்திலும், மனவளக்கலை மன்றங்கள் வாயிலாகவும் முகாம்கள் ஏற்படுத்தி பல யோகப் பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை வள உயர்வு , எண்ணம் ஆராய்தல், ஆசைச் சிரமைத்தல், சினம் தவிர்த்தல் கவலை ஒழித்தல் , நாம் யார் என்ற உணர்வு ஆகியன இம்முகாம்கள் வாயிலாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது.
          
       இலட்சக்கணக்கான தொண்டர்கள் மூலம் இறைச் சிந்தனையை உலகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் உலகச் சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவிய தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்  ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற மந்திரத்தை உலகமெல்லாம் ஒலிக்கச் செய்தார்.   பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அகத்தவப் பயிற்சிகளை வடிவமைத்து இம்மன்றம் பயிற்றுவித்து வருகின்றது.

உலக நல வாழ்த்து   
        தவத்திரு வேதாத்திரி மகரிசி இயற்றிய உலக நல வாழ்த்துப் பாடல் இன்று உலகின் பல இடங்களிலும் பாடப்பட்டு வருகின்றது.
       ‘’உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
           உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
        பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
            பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
         கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடத்தட்டும்
            கல்லாமை கடன் வறுமை களகங்கள் மறையட்டும்
         நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்
           நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்’’
                               (த.வே.ம.உலகநல வாழ்த்து)
என்னும் பாடல் உலக மக்கள் நல் வாழ்வு பெற உலகச் சமுதாய சேவா சங்கம் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றது.
இதழ்கள்
          தவத்திரு வேதாத்திரி மகரிசியின் போதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு, உலகச் சமுதாய சேவா சங்கம் பல்வேறு இதழ்களை வெளியிடுகின்றது.
1 . அன்பொளி
2 . மனவளக்கலைஞன்
3.  வேதாத்திரியம்
   போன்ற இதழ்கள் வாயிலாகவும் சமூகப் பணி ஆற்றி வருகின்றது.   
சமூகப் பங்களிப்பு
             மனிதன் பலருடன் கூடி வாழுங்கால் கூட்டு வாழ்க்கை ஏற்படுகிறது. கூட்டு வாழ்க்கை குழு அமைப்பாகிறது. பல குழுக்கள் கூடி சமுதாயமாகிறது. சமுதாய வாழ்க்கை சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. சமூக வாழ்க்கையில் அருளாளர்கள் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர்கள் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசியும் ஆவர். இவர்கள் மக்களுக்காக ஆற்றிய பல பணிகள் குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்றன.


தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் சமூகப் பங்களிப்பு
           தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பல்வேறு சொற்பொழிவுகள் வாயிலாகவும் , நூல்கள் வாயிலாகவும் சமூகம் பயனுறும் கருத்துக்களை அவ்வப்போது எடுத்தியம்பி வருகின்றார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சேவை
        தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் இலங்கையில் உள்ள கண்டி நகருக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அங்கு தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் துன்பப்படுவதைக் கண்டு அவர்களுக்குச் சேவை புரிந்தார்.
        ‘ குருதேவர் தேயிலைத் தோட்டங்களுக்கு அடிக்கடி சென்று தொழிலாளர்களிடையே பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தார். அக்கூட்டங்களில், தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும், குடிப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும், ஆன்மீக உணர்வுக்கு மக்கள் பழகுதல் வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார்’ அவ்வாறே மக்களை நல்வழிப்படுத்த பல மாற்றங்களைச் செய்தார்.
                                               (இராம.கி.ச.வா.ப.ப.156)
ஐரோப்பாவில் சேவை
         தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், 1967 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெல்ஜியத்தில் சர்வதேச யோகப் பேரவையில் உரையாற்றி, ஐரோப்பிய மக்களுக்கு பல நன்னெறிகளை எடுத்துக் கூறினார்.  மக்களை மேற்கத்திய நாகரீகத்தின் மோகத்தினை விடுபடச் செய்து பல சிறுவர்கள், இளைஞர்களை நல்வழிப்படுத்தினார்.
தாமரைக் கோயில்
            1972 ஆம் ஆண்டு அமெரிக்காவில் யோகவில் சச்சிதானந்த ஆசிரமம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட போது , தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் சர்வ சமய ஒளிக் கோயிலாகக் கட்ட விரும்பினார். அதற்குச் சர்வசமய ஒளிக்கோயில் (LIGHT OF TRUTH UNIVERSAL SHRINE) என்ற பெயரை வைத்தார். இந்த ஐந்து ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் LOTUS என்ற சொல் உருவாகிறது. LOTUS என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தாமரை.
           ‘தாமரைக் கோயில் இயந்திரம் போன்ற அமைப்புடையது. முப்பரிமாண வடிவம் மேரு எனப்படும். அது நேர்முக அலைகளை ஈர்க்கும் அமைப்பாகும். தாமரைக் கோயில் சக்தி வாய்ந்தது. உள்ளே நுழைந்தால் தெய்வீக நிலையை உணரலாம்‘. என்கிறார்.
                                           (இராம.கி.ச.வா.ப.ப.378)
      
           ‘தாமரைக் கோயில் பல்வேறு சமயங்களின் பொது இலட்சியத்தின் சின்னம், ஆன்மிக ஒருமைப்பாடு, உலக சகோதரத்துவம் ஆகியவற்றினை உணர்த்தும் வகையில் வடிவமைபக்கப்பட்ட கலை நுணுக்கமானக் கோயிலாக விளங்குகிறது.  தாமரைக் கோயிலுக்கு வருபவர்களுக்கு ஒருமை உணர்வும், நலமும் , அருளும் வழங்கும் உலக மையமாகத் திகழ்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்.
                                           (இராம.கி.ச.வா.ப.ப.417)

கொங்குநாட்டில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் பணி
       கோவை ர.ச. புரம் மேற்கு சம்பந்தம் சாலையில் ‘யோகமையம்’ தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இங்கு யோகா, தியானம், வாழ்வியல் பயிற்சிகள் அனுபவமிக்க ஆசிரியர்களால் நாள்தோறும் கற்பிக்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ் பெற்ற இதய மருத்துவர் டீன்ஆர்னிஷ் அவர்களும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும் இணைந்து வரையறுத்த இதயத்தைக் காக்கும் பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பிறந்த கிராமம் , கோவைக்கு அருகே போத்தனூர் செட்டிபாளையம் என்ற இடத்தில், அவர் பிறந்து வளர்ந்த இல்லம், அவருடைய நினைவாக, ‘சச்சிதானந்த ஆலயம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு தியான மண்டபம் , பொது நூலகம் மற்றும் சிறார்களுக்கான இலவச கணிப்பொறி கல்வி இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
      தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் (1914-2014) நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போத்தனூர் செட்டிபாளையத்தில், அமெரிக்காவில் இருப்பது போன்ற தாமரைக் கோயிலின் மூன்றில் ஒரு பாகம் இங்கு நிறுவப்பட்டது. இவ்விழாவில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் ஆன்மீகத் தோழராகக் கருதப்படும் பேரூராதீனம் குருமகாசன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் கலந்து தலைமை வகிக்க, தமிழக ஆளுநர் திரு.ரோசய்யா அவர்கள் இவ்வாலயத்தைத் திறந்து வைத்தார்.
     கோயமுத்தூர் தாமரை ஆலயத்தின் அமைப்பும், வடிவமும் அமெரிக்கத் தாமரைக் கோயிலை ஒட்டியே வடிவமைக்கபட்டன என்பது, இங்கு பன்னிரு சமயங்களின் சின்னங்கள், புனித நூல்கள், ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சச்சிதானந்த சோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி
       மேட்டுப்பாளையம் அருகே கல்லாற்றில் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளால்,1997 ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற ‘சச்சிதானந்த சோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி‘  மலை சூழ்ந்த இயற்கை அழகு கொண்ட பரந்த நிலப்பரப்பில் குருகுலக் கல்வியை மாணவ , மாணவிகளுக்கு வழங்கி, உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளியில், ஆளுமைவளர்ச்சி, பண்பாட்டுக் கல்வி, ஆன்மீக வாழ்வியல் கோட்பாடுகள், உலகச் சகோதரத்துவம், மன ஆற்றல் மேம்பாடு, மனிதநேயப் பண்புகள் முதலான நன்னெறிகளை கற்பிக்கப்பட்டு வருகின்றது.இப்பள்ளியில் தான் முதன் முதலாக ‘’பெற்றோர் திருவடி வழிபாடு’’  தொடங்கப்பட்டு, இன்று பல பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.   
        ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் திரு.கி.ராமசாமி அவர்கள் பள்ளியின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். இவருடைய வழிகாட்டுதல் வண்ணம் இப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.
          சிந்தனைக் கவிஞர் டாக்டர் .கவிதாசன் இப்பள்ளியின் செயலராக உள்ளார். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, தன்னம்பிக்கை நிறைந்த கருத்துக்களை கூறி இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.
        இப்பள்ளி ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவத் தேவைகளுக்கும் உதவி வருகின்றது. இப்பள்ளி மாணவர்கள் ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் வருடந்தோறும் பல சாதனைகள் புரிந்து முதலாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
        இப்பள்ளியின் தேசிய மாணவர் படையினர், வருடந்தோறும் புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தின, குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழகம் சார்பில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்க்கின்றனர்.இப்பள்ளி சமுதாயப் பங்களிப்பிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறது.

தவத்திரு வேதாத்திரி மகரிசியின் சமூகப் பங்களிப்பு
           தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தம் நூல்கள் , கவிதைகள் வாயிலாக உலக மக்களுக்கு பல்வேறு சமயப் பணிகளை ஆற்றினார். இவரது பிறந்தநாள் ‘உலக அமைதி நாளாகக்’ கொண்டாடப்படுகிறது.
         தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், தமது மன்றத்தின் வாயிலாக, மக்களிடம் உள்ள தீய பழக்கங்கள் விடுபட பல பயிற்சிகளை அளித்தார்.
அறிவுத் திருக்கோயில்
      பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில், 1990 ஆம் ஆண்டு அறிவுத்திருக்கோயில் தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்களால் தொடங்கப்பட்டது. இத்திருக்கோயிலின் வாயிலாக இலட்சக்கணக்கான மக்கள் எளிய முறை யோகப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். குண்டலினி யோகம், காயகல்ப முறை ஆகியன இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
      உலகின் பல நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உலகச் சமுதாய சேவா சங்கத்தின் கிளைகள் மூலம் நன்னெறி வகுப்புகள், தியானம், எளிய முறை உடற்பயிற்சி ஆகியனக் கற்றுத் தரப்பட்டு சமூகப் பங்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
      கிராமங்களின் வளர்ச்சிக்கும், மருத்துவம், கல்வி  ஆகியவற்றிலும் இம்மையம் ஈடுபட்டு சமூதாயப் பங்களிப்பில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
முடிவுகள்    
       எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை வழிபாடு, சடங்குகள்,  வாயிலாக, எவ்வாறு வழிபட வேண்டும் என்ற முறையில்   தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசியும் கருத்துக்களும்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
       தொல்காப்பியம், சங்க இலக்கியம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றில் கூறியுள்ள கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
       மக்களின் மன அமைதிக்கு இருவரும் போதித்த நெறிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
        யோகத்தின் வாயிலாக மனிதர்கள் அடையும் நன்மைகள், பண்டைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ள யோகம் பற்றிய குறிப்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மற்றும்  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசியும் கருத்துக்களும்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

       தியானத்தின் வழியாக பெறும் ;நன்மைகள் பற்றிய குறிப்புகள்,அருணகிரிநாதர், தாயுமானவர் பாடல் குறிப்புகள் மற்றும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசியும் கருத்துக்களும்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது. .
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் தாமரைக் கோயிலின் நோக்கமும், தவத்திரு வேதாத்திரி மகரிசியின் அறிவுத் திருக்கோயிலின் நோக்கமும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
       பயணங்கள் மற்றும் மையங்கள் வழியாக தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசியும் ஆற்றிய சமய சமுதாயப் பணிகள்   எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
       தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், தவத்திரு வேதாத்திரி மகரிசி இருவரும் உலகுக்கு உணர்த்திய நல்வழிகள் இவ்வியலில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.   

No comments: