Wednesday, 31 January 2018

தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோரின் உடலியக்க, உணர்வியக்க மேலாண்மை



தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோரின்  உடலியக்க, உணர்வியக்க மேலாண்மை
          இலக்கியம் வாழ்வின் இலக்கினை இயம்புவது. மக்களின் வாழ்க்கையை எடுத்துச்சொல்வது இலக்கியங்கள் , அம்மக்களின் மனவுணர்வினையும் வாழ்வியலையும் புலப்படுத்துவது. அதனடிப்படையில் மன உணர்வுகளுக்கும் , இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவ்வண்ணமே தவத்திரு சச்சிதானந்தசுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகியோர் உடலியக்க உணர்வியக்க மேலாண்மைக்கு முதன்மை கொடுத்து தத்தமது அமைப்புகளின் வாயிலாக பயிற்சிகளும் கொடுத்துள்ளனர்.   
           ஆன்மீக நெறியில் நலமான வாழ்க்கை வாழ்வதற்கு உணவுக் கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. வாழ்க்கைக்குப் பொருந்தும் உணவு, பொருந்தா உணவு என இருவகைப்படும். சத்துவ, ரசோ தமோ என்னும் மூன்று குணநிலைகளுக்கேற்ப உணவு அதன் குணமறிந்து உண்ணும்போது நோயிலிருந்து விடுதலை பெற ஏதுவாகிறது. அதுபோலவே உடலையும் உணர்வுகளையும் நன்முறையில்  பராமரிக்க உணவு முக்கிய காரணியாக அமைகின்றது. பண்பாட்டின் அடிப்படையிலான பழக்க வழக்கமறிந்து உண்ணும் உணவினையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளும் போது உடலியக்கம், உணர்வியக்கம் இரண்டும் பழுதில்லாமல் அமையும்.இந்திய தத்துவங்களில் சுபக்கம், பரபக்கம் என இரு விளக்க முறை உண்டு. சுபக்கம் என்றால் உடன்பாட்டு முறையில் தன் கருத்துக்கு உடன்பாடான விளக்கங்களைக் கூறுதல். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கொண்டோரின் சொற்களை முன்வைத்து அதற்கான மறுப்பு விளக்கங்களைக் கூறுதல் பரபக்கம். இங்கு சுபக்கம் முறை கையாளப்பட்டுள்ளது.
  உணவு நெறி
          உண்ணும் உணவே உடலாச்சு
          உள்வாங்கும் மூச்சே உயிராச்சு
என்பது சித்தர்களின் வாக்கு.
வேதாத்திரி மகரிசி தமது கவிதையில்,
    உணவே உடலாக வந்துள்ளது ஆகையினால்
    உணவை உண்டுதான் உயிர்வாழவேண்டும்
    உணவில் அளவுமுறை மாறிட மீறிட
    உணவாக உடல்மாறியும் போகுமன்றோ?
                                    (வேதாத்திரி மகரிசி, ஞானக்களஞ்சியம் பாடல் எண் 6323)
     உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் என்ற ஐந்தையும் அலட்சியம் செய்தாலும், மிகையாகச் செய்தாலும் முரண்பாடாக அனுபவித்தாலும் உடலுக்குத் துன்பம் உண்டாகும். நோய் உண்டாகும் இவையெல்லாம் மிதமாக இருக்க வேண்டுமானால் முன்பு உள்ள அனுபவம், அவ்வப்போது ஏற்படக்கூடிய சூழ்நிலை, எதிர்காலத்தில் விளையும் விளைவுகள் இம்மூன்றையும் கருத்தில்கொண்டு அவ்வப்போது சரியான முறையில் திட்டமிட்டு அளவுமுறை கண்டு அனுபவிக்க வேண்டும். இதுவே ஐந்தின் அளவுமுறை என்பதாகும்.
      உறக்கம் உழைப்பு உணவு உடலுறவு எண்ணம்
              இவைகளில் எவற்றையும்
    மறுப்பதும் மிகுப்பதும் உடலின் மகத்துவம்
            அறியாதோர் செய்கையாகும்.
                               (வேதாத்திரி மகரிசி, ஞானக்களஞ்சியம் பாடல் எண் 324)
என்று ஐந்தின் அளவுமுறை பற்றி வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகிறார்.
தொல்காப்பித்தில் உடலியக்க உணர்வியக்க மேலாண்மை
    தமிழில் முதலில் கிடைக்கப்பெற்ற இலக்கண நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுப்புகளில் , பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலை விளக்குகிறது. அகம், புறம் சார்ந்த செய்திகள் இந்நூலில் மிகுதியாக காணப்படுகின்றது. அகம் அன்பையும், புறம் வீரத்தையும் வெளிப்படுத்துவது. இரண்டுமே மனித உள்ளத்தின் வாயிலாக வெளிப்படும் எழுச்சி ஆகும்.  மேலும் உயிர்களின் அறிவு பற்றிப் பேசுகையில், ஆறாவது அறிவு மனிதர்களுக்கு உரியது, அது மனம் தொடர்பானது என்று எடுத்துக் காட்டியுள்ளார் தொல்காப்பியர்.
     ‘ஆறறிவதுவே அவற்றோடு மனனே
      நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’
                                  (தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருளதிகாரம் நூ.எ.571)
       ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
       பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
                                    (தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருளதிகாரம் நூ.எ.577)
       ‘மனத்தின் எண்ணி மாசு அறத்தெரிந்து கொண்டு’
                                                                                               (மேலது நூ.எ.655)
மனம் இருப்பதனால் மக்கள் என்றழைக்கப்படுகிறார்கள் என்பதை இந்நூற்பாக்கள் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் மனம் , மனவுணர்வு பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.  இதையே வேதாத்திரி மகரிசி அவர்கள் ‘”மனம் இல்லாத மனிதரில்லை மனதை முழுமையாக உணர்ந்த மனிதருமில்லை’ என்று கூறுகிறார்.
      கருமூலம் எண்ணிறந்த பிறப்பால் வந்த
           கருத்தாற்றல் அடிப்படையாய் அமையப் பெற்று
     உருவெடுத்த பின் உடலால் அறிவால் துய்த்த
            உணர்ச்சி, பழக்கம், ஒழுக்கம், விளக்கம் மற்றும்
     வரும் தேவை, இருப்பு,சூழ்நிலை,தொழில் செய்
          வாய்ப்பு, உடல் நலம், அறிவின் வளர்ச்சி கூடி
     ஒருவருக்கு அறிவியக்கம் அவ்வப்போது
         உருவாகும் தொகுப்புச் சொல் மனமாம் காணீர்,
                                        (வேதாத்திரி மகரிசி,மனம், பாடல் எண்,1)
என்று தொல்காப்பிய நெறியுணர்ந்து வேதாத்திரி மகரிசி அவர்களும் மனதின் நிலையை உணர்த்துகிறார்.
             இக்கருத்தினை,
  நாம் செய்கின்ற செயல் இன்னொருவர் மன அமைதியைக் பாதிக்குமானால் அது நம்முடைய மன அமைதியையும் பாதிக்காமல் இருக்க முடியாது என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார். நாம் முழு மன அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஆதிசங்கரர் குறிப்பிடுவதையும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியத்தில் உடலியக்க உணர்வியக்க வேலாண்மை
      தமிழரின் மன இயல்புகளை வரித்துக் காட்டுவன சங்க இலக்கியங்கள். காதல், சோகம், வீரம், வெற்றி, வெஞ்சினம், வேட்கை என மனித உள்ளத்தைத் துலாக்கோல் போட்டு நிறுத்திய நூல்கள் இவை. சங்க இலக்கியம் ‘உளவியல் இலக்கியம்’ எனக் குறிப்பிடப்பெறுகிறது.
    


  ‘ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
     ஆம் பி பூப்பத் தேம்புபசி உழவாப்
     பாஅல் இன்மையிற் தோலோடு திரங்கி
    இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
    சுவைத்தொ றழுஉந்தன மகத்துமுகனோக்கி
    நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென்
    மனையோள் எவ்வம்’
                                                             (பெருந்தலைச்சாத்தனார், புறநானூறு, பா.எ.164)
    சமையல் மறந்த அடுப்பும், பால் மறவாக் குழந்தையின் பசியும், கண்ணீர் அறாத மனைவியின் கண்களும் தலைவனின் உள்ளத்தைக் கிழிக்கும் வாளாயின எனச் சுட்டியுள்ளார் பெருந்தலைச் சாத்தனார்.
இதனையே தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் ,
             ஒரே பொருள்தான் பார்ப்பதற்கு இரண்டாகப் பிரிந்து தோன்றுகின்றன. பிறகு அதுவே ஒன்றுபடுகிறது. இதுதான் வாழ்க்கை விளையாட்டு. வாழ்வில் எந்த ஒரு நிலையிலும் கணவனும் மனைவியும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே நிலையில் வைத்துப் போற்ற வேண்டும். தங்களுடைய வாழ்வின் பரிசான குழந்தைகளுக்கு எவ்வித துன்பமும் வாராத வண்ணம் வாழ கணவனும் மனைவியும் மனதளவில் உணர்வுடையவர்களாக திகழ வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். 
              (தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்,இன்பமாக வாழ்வது எப்படி,ப.எண்.85)

இறைவன் எல்லாப் பொருள்களிலும் நிரம்பி இருக்கிறார். எனவே நாம் உண்ணும் உணவிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர வேண்டும் என்கிறார், தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்.
                                                       (த.ச.சு. உ. நீ.அ.கொ.எப்படி.பக்கம்,217)
உயிர்கள் உயிர்வாழ உணவுமிக அவசியம். அவ்வுணவு உடலுக்கு ஒத்து வருவதை உணர்ந்து  அளவோடு உண்டு உயிர்வாழ வேண்டும். இக்கருத்தினை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன.
     நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
     உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே
    உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
                                                                                                (புறம் 15; 18-20)
என்று புறநானூறு எடுத்துக்கூறுகின்றது.
சங்க இலக்கியக் கருத்தினை ஒட்டி தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
     குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
           குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
    கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
          கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்
   உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவைகொண்டு
         உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
  மற்றவரை எதிர்பார்த்தல் கையேந்தல் வேண்டாம்
       மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.
                                                       (வேதாத்திரி மகரிசி ,மனம், பக்க எண்,26)
என்ற பாடல் வழி, அவ்வக்காலத்தில் அமைந்த சூழ்நிலைகளும் அறிவின் விளக்கத்திற்கேற்ப அமையும் வாய்ப்புகளும் எல்லா தவறுகளுக்கும் காரணமாகும் என்று வேதாத்திரி மகரிசி உணர்த்துகிறார்.
திருக்குறளில்  உடலியக்க உணர்வியக்க மேலாண்மை
    சங்ககால இறுதியில் மன்னர்களும், வள்ளல்களும் தங்கள் சிறப்பினை இழக்க மாற்றார் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். அகம், புறம் என்ற சங்ககாலக் கொள்கையும், கோட்பாடும் அறம், பொருள், இன்பம் என்ற நிலையில் மாறலாயின. இக்காலகட்டத்தில் பல அற இலக்கியங்கள் தோன்றி மக்களின் வாழ்வியலை நெறிப்படுத்தின.
         கனவினால் உண்டாகும் காமம் நனவினில்
          நல்காரை நாடித் தரற்கு (திரு.திருக்குறள் .1214)
என்ற குறளின் வழி, நனவில் வந்து அருள் செய்யாதவரைக் கனவு தேடிக் கொண்டு வந்து தருதலால் இன்பம் உண்டாகின்றது என்ற கனவு பற்றிய சிந்தனை திருக்குறளில் அமைகின்றது.
           இக்கருத்தினை அடியொற்றி,
                ‘ தூக்கம், கனவு, வருங்காலம் உணர்தல் என்ற வகைகளிலெல்லாம் இயங்கி வருகின்ற மனதினைப் புலனுணர்வு நிலையான மயக்க நிலையிலேயே செலுத்தி, அதற்கு நல்ல முறையில் பயிற்சிகள் கொடுத்தால் அது துன்பத்தை தோற்றுவித்துக் கொள்ளாத, உணர்ச்சிவயப்படாத விழிப்பு நிலையிலேயே அது நின்று இறைநிலை உணர்வு பெற்று இன்பம் அடையும் என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகின்றார்.
                                                                         (வேதாத்திரி மகரிசி ,மனம், பக்க எண்,35)
                      மனிதர்கள் சில நேரங்களில் கனவுகளால் மனத்தளர்வு அடைகின்றோம். உணர்ச்சியினால் அவதிப் படுகின்றனர். உடல் நோயினால் வேதனைப் படுகின்றனர். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் தனியே சென்று அமைதியாக ஒரு இடத்தில் அமர வேண்டும். இறைவனை மனக்கண் முன் நிறுத்தி வணங்கினால் உடல் நோய், உணர்வுப் பிணிகள் நீங்கி நாம் இன்பம் பெறலாம் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
                                     (தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், இ.வா.எ. பக்க எண், 74)


 உணவின் சிறப்பு
       ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் ஆகும். இம் மூன்றில் உணவு முக்கிய இடத்தைப் பெறுகிறது. உலகில் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களுக்கும் உணவு மிக இன்றியமையாதது என்பதை தமிழின் இலக்கியங்கள் கூறுகின்றன.
          உணவை நன்றாக மென்று சுவைத்து உண்ண வேண்டும். அதே நேரத்தில் நல்ல மந்திரம் ஒன்றை ஓதிச் சுவைத்துக் கொண்டே உண்ண வேண்டும் என்கிறார் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்.
                                                                             (த.ச.சு. உ.நீ.அ.கொ.எப்படி. பக்கம் 219)
பசித்தீயின் அளவை அறிந்து அதற்கு ஏற்றப்படி  உண்ண வேண்டும். அதைப் பற்றிய உணர்வே சிறிதும் இல்லாமல் விரும்பிய உணவை எல்லாம் விரும்பிய நேரத்தில் சாப்பிட்டால் அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும். இதனை,
           தீயளவு இன்றித் தெரியான் பெரிதுண்ணில்
           நோய் அளவு குறைபடும்.
                                       (திருக்குறள், திருவள்ளுவர்.குறள் எண்- 947)
என்ற குறளின் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது.
       உடல் நலத்தை பேணுவதற்கு மிகச் சிறந்த உணவு சைவ உணவே. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்புவகைகள், பால் ஆகியவைகளால் உடலில் நஞ்சு சேர்வதில்லை.
     தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், நீங்கள் சைவ உணவினராக மாறினால் ஆயிரக்கணக்கான விலங்குகள் உங்களைத் தொழும் என்பது உறுதி.மனிதர்கள் பலர் இதனை அறிவதில்லை என்கிறார்.
                கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
                 எல்லா உயிரும் தொழும்.
                                                                      (திருக்குறள், திருவள்ளுவர்.குறள் எண்- 260)
என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. ஆக சைவ உணவு மனதுக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும் என்று கூறுகிறார்.
யோகப் பயிற்சியும் உணவுப் பழக்கமும்
       தாவர உணவினராக மாறுவதற்கு முழுநம்பிக்கையும், உறுதியான மனத்தின்மையும் இருப்பின் புலால் உணவுகளை விட்டுவிட்டு மரக்கறி உணவினராக மாறலாம் என்கிறார் சச்சிதானந்த சுவாமிகள்.
                                                                             (த.ச.சு. உ.நீ.அ.கொ.எ. 260)
   மரக்கறி உணவினராக மாற எண்ணாதவர்கள் கூட யோகப் பழக்கத்தை மேற்கொண்டபின் புலால் உண்ணும் பழக்கம் நீக்கிவிட்டதை கண்டுள்ளனர்.
 சைவ உணவைப் போலவே யோக உணவும் மனிதர்களுக்கு நன்மையைத் தரவல்லது. எதை உண்பது, எப்போது உண்பது, எவ்வாறு உண்பது என்பன யோகத்தின் முக்கிய கூறுகள் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
   அது போலவே வேதாத்திரி மகரிசி பலமுறை உணவு உண்ணும் பழக்கத்தினைப் பற்றி,
    பழக்கத்தில் மனிதஇனம் இக்காலத்தில்
       பலதடவை உணவு கொள்ளக் காண்கிறோம் இப்
    பழக்கமே ஆன்மீக நிலையில் வாழும்
       பண்புயர மாறிப்போம் உணவுகொள்ளும்
   பழக்கமது வயதிற்கு ஏற்றவாறு
       பலவாறு அமைந்திடினும் ஊன் சுருங்கும்
  பழக்கத்தில் அளவுமுறை மீறி டாமல்
      பலமூட்டும் எளிய ஊண்வகையே போதும்
                                                 (வேதாத்திரி மகரிசி.ஞா.க.பாடல் எண்=331)
என்று குறிப்பிடுகிறார்.
          யோகப் பயிற்சியில் உணவுக்கு ஒரு தனி இடம் உண்டு. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான உணவு சாத்வீக குணம் கொண்டதாக அமையும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியமானதாகும்.இதனை திருமூலரும் தமது பாடல் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
      அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
      பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
      உண்டி சுருங்கில் உபாயம் பலஉள
      கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.
                                    (திருமூலர்.தி.ம. பாடல் எண்=735)
     நீண்ட காலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் முறை என்பது நாம் உண்ணும் உணவு முறையில்தான் உள்ளது என்பது நமது முன்னோர்கள் தெரிவித்த கருத்தாகும்.
     யோகமுறைப்படி சைவ உணவான சத்துவ உணவே சிறந்தது. இதை உண்பவர்கள் முறையே பழங்கள், கொட்டைகள், முளையுண்ணிகள்,தானியங்கள், பருப்பு வகைகள், பச்சையுண்ணிகள்,கீரை, மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றையே உண்ணுதல் வேண்டும் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் வேதாத்திரி மகரிசி ஆகியோர் கூறுகின்றனர்.இதனையே வள்ளுவரும்,
       அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
       பிறவினை எல்லாந் தரும்.
                                (திருவள்ளுவர்.திருக்குறள். குறள் எண்=321)
அறச்செயலாவது யாதெனின் உயிர்க்கொல்லாமையாம் என்கிறார். மேலும் வள்ளலாரும் புலால் மறுப்பினைப் பற்றிக் கூறும் போது,
     உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம்
     உறவினத்தவர் அல்லர் அவர் புற இனத்தார்
                                (இரா.வள்ளலார். திருவருட்பா 3447)
என்கிறார். மேலும் மற்றோரு பாடலில்,
     புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
     வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
     மயங்கிஉள்நடுங்கி ஆற்றாமல்
     என்பெலாம் கருக இளைத்தனன்.
                           (இரா.வள்ளலார். திருவருட்பா 3450)
புலால் உண்ணும் மக்களைக்கண்டு மயங்கி உள்ளம் நடுங்கி ஆற்றாமல் எலும்பெல்லாம் கருக இளைத்தேன் என்று பாடுகிறார்.
திருமூலரும் திருமந்திரத்தில்,
       பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
       எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
       செல்லாகப் பற்றி தீவாய் நரகத்தில்
       மல்லாக்கப் தள்ளி மறிந்து வைப்பாரே.
                         (திருமூலர். தி.ம.= 199)
என்று தீய உணவான புலால் உண்பவர்க்கு நேரும் துயரத்தினை எடுத்துரைக்கிறார்.


உணவுப் பண்பாடு
      தனிமனித வாழ்விற்கு அடிப்படையான உடலையும், உயிரையும் வளர்ப்பதற்கான வழிமுறைகளை நமது முன்னோர்கள், ஆன்மீக அருளாளர்கள் தமது அனுபவத்தின் வாயிலாக வகுத்துத் தந்துள்ளனர். அதை நாம் நமது குடும்பப் பண்பாட்டின் வழியே பின்பற்றி வருகின்றனர்.. இருப்பினும் இக்காலத்தில் பணிமாற்றம், வெளியூர்ப் பயணம் காரணமாகப் பல்வேறு இடங்களுக்குச் செல்வதால் பண்பாட்டின் வழியே ஒவ்வாமை போன்ற பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். எத்தகைய உணவுமுறை எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் ஏற்றது என்று உலகமெங்கும் வாழும் மக்கள் தங்கள் தற்கால வாழ்வுமுறைக்கு பொதுவான உணவுமுறையை அறிந்து உண்பது அவசியமாகின்றது.
      உணவு கிடைக்காத குறைபாட்டால் கண்கள் சொருகி, காதுகள் அடைத்து, உடலைத் தளரச் செய்யும் கொடியதுன்பம் விளைவிக்கும் பட்டினியை, யாரும் அனுபவிக்கக்கூடாது என்பது வேதாத்திரி மகரிசியின் அவாவாகும்.
       எங்கும் பரவி நிறைந்து விளங்குபவர் இறைவன். எல்லா உயிர்களுக்கும் அருள் புரிபவர் இறைவன். அத்தகைய இறைவன் நம் மூலமாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார். ஆக உலக உயிரினங்களுக்கு எத்தகைய இன்னலும் வராமல் மனிதர்களும் செயல்பட வேண்டும். உணவும் உணர்வும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அத்தகைய உயிரினங்களுக்கு எத்தகைய துன்பமும் வராமல் இருக்க வேண்டும் என்று விருபம்பியவர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்.
       உடல் இயக்கத்தினால் தேவையற்ற அணுக்கள் செல்களில் இருந்து வெளியேறி அழிந்துவிடுகின்றன. அதனால் எல்லா இழுவைச் சக்தியும் வயிற்றில் வந்து சேர்கின்றன. இந்த உணர்வே பசி என்று உணரப்படுகிறது. பசி என்பது குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்யப்படவேண்டியதாகிறது. அதற்கு உணவு அவசியமாகின்றது. இதனை வேதாத்திரி மகரிசி அவர்கள்,
       ஈசனே தானாக உணர்ந்த போதும்
      எழும்பசியை உணவால்தான் போக்கவேண்டும்.
                                    (வே.மகரிசி.ஞா.க.பா.334)
என்கிறார்.
          இறைவன் எல்லா பொருள்களிலும் நிரப்பி இருப்பவர். இறைவன் மனிதரின் உடலிலும் நிறைந்து உள்ளார்.  உணவு உண்பதும் இறைவனுக்கு அர்ப்பணமாகவே இருக்கும்.  ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவே உணவை உண்கிறார். இவையும் மக்களுக்கு உதவத்தான் என்கிறார் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்.
                                                              (த.ச.சு.உ.நீ.அ.கொ.எப்படி.பக்கம்.279)
           உணவில் அளவுமுறை காப்பது மிகவும் அவசியம். ஒருமுறை உண்ட உணவு முற்றிலும் செரிமானம் ஆகிவிட்டபிறகு அடுத்த வேளை உணவு உண்பது நல்லது. மறுவேளை உணவு உண்பதற்கும் இடையில் இருக்கவேண்டிய காலஅளவை அறிந்து உண்பது நல்லது.இதனையே வள்ளவர் தமது குறளில்,
           அற்றது அறிந்து கடைப்பிடத்து மாறல்ல
           துய்க்க துவரப் பசித்து
                                                             (திருவள்ளுவர். திருக்குறள்.944)
வேதாத்திரி மகரிசி உலகில் எல்லாப் பிரிவினருக்குமான பொதுவான உணவுத் திட்டத்தினை அமைத்துள்ளார். இதைக் கடைப்பிடிப்பது உடல் உறுதிக்கும் அறிவின் நுட்பத்திற்கும் அவசியம் ஆகும். உணவு சாப்பிடும் நேரத்தை மட்டும் அங்கங்கே உள்ள தட்பவெப்ப நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்பது வேதாத்திரி மகரிசியின் கருத்தாகும்.
             காலையிலே பச்சைத் தானியத் தாலான
                  கஞ்சியொன்று தேங்காயோடெங்கும் ஒக்கும்
             வேலை முடிந்திட்ட பின்னர் பகல் சாப்பாடு
                     விதவிதமாய்க் கறிவகையோடரிசி சாதம்
             மாலையிலே காய்கறிகள், கோதுமையின்
                     மாக்கொண்டு தயாரிக்கும் உணவு போதும்
           பாலைத் தனியாய்க்காய்ச்சி இனிப்பும்கூட்டி
                      பருகிடலாம் டீ காப்பி தேவையில்லை.
                                                                                           (வே.மகரிசி.ஞா.க.பா.924)
என்கிறார்.
           சைவஉணவைப் போலவே யோக உணவும் மனிதர்களுக்கு நன்மையைத் தரவல்லது என்கிறார் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள். எதை உண்பது, எப்போது உண்பது, எவ்வாறு உண்பது என்பன யோகத்தின் முக்கியக் கூறுகளாகும்.
       மக்கள் எத்தன்மையுடைய உணவை உண்பது என்பது நீங்கள் எத்தகைய வேலையைச் செய்கின்றனர் என்பதைத் பொறுத்தது. இந்தக் கருத்தைப் பெரும்பாலான மேலைநாட்டு சமூகத்தினர் கண்டு கொள்வதில்லை. உணவில் திட, திரவ, ஆவிப் பொருள்களின் விகிதம் செய்யும் சேவையைப் பொறுத்தது.உடலுழைப்பு அதிகமாக இருப்பின் திட உணவை உண்ண வேண்டும். அதிக மூளை வேலையைச் செய்கிறவர் அதிக திரவ உணவை உண்ண வேண்டும். கடினமான உடலுழைப்பைச் செய்பவர் மூன்று வேளைகளிலும் திட உணவை உண்ண வேண்டும். அலுவலக வேலை செய்பவர்  ஒரு வேலைக்கு மேல் திட உணவை உண்ணக் கூடாது. உடலுக்குரிய சக்தியைத் திட உணவில் இருந்தும், மனோசக்தியைத் திரவ உணவிலிருந்தும், ஆன்மீக சக்தியை ஆவி உணவிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
                                 (த.ச.சு.உ.ந.தா.உணவுகள். பக்கம்.45.)
தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள் உடலியக்கம், உணர்வியக்கம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
   உடலியக்கம் உயிரியக்கம் ஒன்றோடொன்று
        ஒத்து இருந்தால் உணர்ச்சி மிக இனிமையாகும்
   உடலுயிர்கட்கிடைக் காற்று, வெப்பம், தண்ணீர்
        உறவைச் சீர் செய்து தொடர்ந்தியங்கச் செய்யும்
  உடலில் நீர் முதல் மூன்றில் ஒன்றேனும்தன்
        ஓட்டத்தில் தடைப்பட்டால்,அளவு கெட்டால்
  உடலில் அணு அடுக்குச்சீர் குலைந்து போகும்
        உணர்ச்சி பொருந்தா இதுவே துன்பமாகும்.
                                    (வே.ம.ஞா.க.பாடல் 317)
என்கிறார்.
        உண்ணும்போது உயிரெழுத்தை உயரவாங்கு என்ற அகத்திய முனிவரின் வாக்கிற்கேற்ப நாம் உண்ணும் உணவை உயரே எழுப்பிக் காயகல்பப் பயிற்சியினைச் செய்து உணவினை உண்ணும்போது, உணவு காந்தத்தன்மை பெற்று உடல்நலம் பெறுகிறது.இதனையே வேதாத்திரி மகரிசி தமது கவிதையில்,
      உண்ணத் தொடங்குவோம் உடல்நலத்துக்கே
      எண்ண விழிப்புடன் இவ்வுணவு அளவுடன்
      உச்சியில் நினைவை வைத்துக்கொள்வோம்
என்றும்,
      தூயமனத்தோடு பத்துத்தடவைகள்
      நரப்பூக்கம் எனும் நல்ல பயிற்சியும்
      சிரம் வித்தேறிச் சிந்தனை உயர
      ஓசசு மூச்சை ஓரிருதடவைகள்
      தேசசு உயர்ந்திடச் செய்தூண் உண்போம்.
                                (வே.ம.ஞா.க.பாடல்.329)
கூடாத உணவு, உடல் நலக்கேடு தரும். இதைத் தவிர்ப்பது ஆயுள் நீட்டிப்பைத் தரும் என்பது வேதாத்திரி மகரிசியின் கருத்தாகும்.
        மூலஞ்சேர் கறிநுகரோம் மூத்த தயிர் உண்போம்
        முதனாளிற் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்
        ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
                                  (தேரையர்.பதார்.கு.சி.பா.எ.478)
என்ற பதார்த்த குணசிந்தாமணிப் பாடலுக்கேற்ப வாயுவை உண்டாக்கக்கூடிய பழைய உணவை தவிர்த்து முதல்நாள் உறையிட்ட தயிரை உண்ணும்போது ஆயுள் நீடிக்கச்செய்யும்.
           தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், மசால் பொருள்களைச் சேர்த்து வெறும் புலன் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய உணவுகளை உண்டால் அது சீரண சக்தியை வெகுவாகப் பாதிக்கும்.மன அமைதியைக் குலைக்கும். தேவையற்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இரவு வேளைகளில் கெட்ட கனவுகள் தோன்றித் தூக்கத்தையும் கெடுக்கும் என்று குறிப்பிடுகிறார்.
       மேலும், பால், தண்ணீர், பழச்சாறுகள், மோர் உடம்பின் சீரணச் சக்தியைப் பாதிக்க முடியாது.
        பாலில்லாத குழம்பி காப்பி கலவையையோ, தேநீர் கலவையையோ அருந்தக்கூடாது என்று கூறுகிறார். காரணம் அதில் காபின் என்ற நச்சுப்பொருள் இருக்கிறது என்றும்,அது உடல்நலனைப் பாதித்து இரத்த ஓட்டத்தை அளவுக்கு மேல் தூண்டிவிடும் என்றும் இதனால் மனிதனின் உடலும், உணர்வும் பாதிப்படையும் என்று  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
       தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், காலம்தவறி உண்ணுவது ,உணவு செரிக்கும் முன் உடலுறவு , உண்டவுடன் உறங்குவது ஆகியவை வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தும் என்கிறார் தமது கவிதையில்,
        கண்டபடி ஊண்மாற்றி
             காலம் தவறியுண்ணல்
        அண்டையிலேபசித்தோர் முன்னும்
             அளவுமீறியும் உணவு கொள்ளல்
         உண்ட உடன் வாலிபர்கள்
              இரவில் உறக்கம் இவையே
         கொண்டுவரும் குன்மம் என்ற
              கொடிய வயிற்றுப்புண் நோய்.
                                          (வே.ம.ஞா.க.பாடல்.787)
குறிப்பிடுகிறார்.
                    தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், உணர்ச்சியைத் தூண்டும் ஆல்ககால் முதலிய மது வகைகள் மனித உடலுக்கும் , உணர்வுக்கும் பெருமளவில் தீங்கு தரக் கூடியது என்கிறார். புளிக்கும் சக்தியை உடைய எந்தப் பொருளும் ஆல்ககாலாக மாறிவிடக்கூடியது என்று குறிப்பிடுகிறார். மது மனித வாழ்வைச் சீரழிக்கும் என்றும், தவிர்க்க முடியாத பெரும் தீங்கையும் ஏற்படுத்தக்கூடியது மது என்றும்   தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார். மேலும் நம் உடம்புக்குள் அனுப்பும் பொருள்களைப்பற்றி நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
                                          (த.ச.சு.உ.நீ.அ.கொ.எ.பக்கம்.285)
            தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், மனிதனுக்குக் கேடு தரும் போதை, புகை பற்றி,
       புதியதொரு பண்பாடு
            உலகுக்கு வேண்டும்
       போதை, போர், பொய் புகை ஒழித்து பொறுப்பான உலகு செய்வோம்.
                                        (வே.ம.மனம். பக்கம் 44)
கூறுகிறார். மேலும்,
        ஆறறிவும் அதற்கொத்த உடல் உறுப்பு புலன்கள்
            அத்தனையும் சிறப்பாக அமைந்துள்ள மனிதன்
        ஆறறிவின் உச்சத்தில் அருள் ஒளியாய் வாழ
            ஆன்மீக வாழ்க்கையதே பொருத்தமானதாகும்.
         ஆறறிவு என்னவெனில் ஆதிபரம் பொருளை
             அறிந்ததுவே அறிவாயும் ஆளுகின்ற உண்மை
        ஆறறிவின் நுண்திறனால் அறிந்த அந்தப் பேற்றால்
             அனைத்துயிர்களோடன்பில் ஆழ்ந்து வாழும் வாழ்வாம்.
                                     (வே.ம. மனம்.பக்கம்.45)
என்று குறிப்பிடும் வேதாத்திரி மகரிசி அவர்கள், வாழ்வின் நிலை அனைத்தும் பரம் பொருளை அடையவே என்று உணர்த்துகிறார்.
       அதுபோலவே தொண்டர்களாகிய மனிதர்களின் குணமும் தலைவனான இறைவன் நினைவுடனே வாழ்வதும் ஆகும்.
     நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
     மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
     மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
     குன்றாத உணர்வுடையோர் தொண்டராம் குணமிக்கார்.
                                         (சேக்கிழார்.ப.ப.புராணம்-7)
இறைவனது திருவடியினை என்றும் மறவாத உணர்வுடையோர் மக்களாகிய அவர்தம் தொண்டரே என்பதனைச் சேக்கிழார் மேற்கண்ட பாடல் மூலம் உணர்த்துகிறார்.
            தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், அன்பு நெறியினால் மட்டுமே இறைவன் திருவடியை அடைய முடியும் என்கிறார்.
       உங்களுடைய அன்பு உலக அன்பாகத் திகழ்வதாகும். எப்போதும் பிறர்க்கு ஏதாவது நன்மையைச் செய்வது அன்பாகும்.பிறர் நலனை நாடுவது அன்பு. பிறர் துன்பத்தைத் துடைக்க முற்படுவது அன்பு. உங்கள் அன்பை ஆண்டவனின் படைப்புகளின் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள் என்று சுட்டுவதன் மூலம் எல்லா உயிர்களையும் மனிதர்களாகிய நாம் நேசிக்க வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துகின்றார்.
                              (இராமகிருசுணசாமி. சா.வாழ்.பணியும்.ப.340)
            தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், மனம் செம்மையுறவும், உடலும், உணர்வும், உயிரும் சீர்நிலைப்பெற தமது கவிதையில் குறிப்பிடுகிறார்.
          
               அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
               அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
           அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
               அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
            அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்
                அறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
             அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
                 அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்.
                                   (த.வே.ம.மன.கலை,பக்கம் 55)       
நித்தம் நித்தம் உடலில் உயிர் இயங்க அறிவும், அன்பும் அவசியமாகின்றது. அறிவும் அன்புமே மனிதனாக மாறுகின்றது.
            மனிதர்கள் வாழவந்த நோக்கத்தைத் தெரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்கு உரிய முறையில் வாழும் முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஊடே அவ்வப்போது ஏற்படும் அனுபோக அனுபவங்களை அசட்டை செய்யாமல் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் புரிந்து கொள்ளவும் மதிக்கவும் வேண்டும். பயன் கொள்ளவும் வேண்டும். இடை இடையே உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு மிரளாத தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் என்ற நான்கைப்பற்றிய தெளிவு இருப்பின் மனித வாழ்வு பயனுள்ள வாழ்வாக அமையும் என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி குறிப்பிடுகிறார்.
                                 (த.வே.ம. மன.கலை.பக்கம்.71)                 
   ஒளவையார் தனது நல்வழி நூலில்,
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்தனையும் சஞ்சலமே தான்
                                 (ஒளவையார்,நல்வழி, பா,எ= 28)
என்ற பாடல் மூலம், உண்ணப் பயன்படுவது ஒருநாளைக்கு ஒருபடி உணவு தானியம் மட்டுமே, உடுத்தப் பயன்படுத்துவது நான்கு முழம் அளவு உள்ள துணியால் ஆன உடை மட்டுமே,ஆக, உண்மை நிலை இவ்வாறு இருக்க மனிதர்களின் மனதில் தோன்றும் ஆசைகளுக்கோ அளவே இல்லை என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.
  உடலியக்கத்தாலும், உழைப்பாலும் விரயமாகும் சக்தியை மீட்டுக் கொள்ள உள்ள வழிகளில் மிக முக்கியமானது உணவு.இதனை தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
    கரு அமைப்பு, உணவுவகை,எண்ணம், செய்கை
       ககனத்தில் கோள்கள் நிலை சந்தர்ப்பத்தால்
   வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
       வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
   தரும் மாற்றம் தரமொக்க இன்ப துன்பம்
       தகுந்த அளவாம் இதிலோர் சக்திமீறி
   பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
       பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்.
                                (த.வே.ம.உலக சமாதானம்,பா.21)
என்ற பாடலின் வழி, உணவு, எண்ணம், செய்கை ஆகியவற்றால் ஏற்படுகின்ற மாற்றங்களைத் தக்கவாறு கணித்து என்னென்ன உணவு அல்லது எண்ணம் அல்லது செய்கை,  என்ன விதமான மாற்றத்தைத் தருகின்றது. எனவே எந்த உணவை அல்லது எண்ணத்தை அல்லது செயலைத் தொடர்வது அல்லது விடுவது என்பது போன்ற ஆராய்ந்து தக்க நடவடிக்கை மூலம் உடல் மற்றும் உள நலத்தை பேணிக்கொள்ள வேண்டும் என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
            யோகிகள், உடல், மூச்சு, மனம், மனத்தில் எழும் எண்ணங்களை அடக்கிய பின் ஆத்மா என்பதை உணர்கிறார்கள். அந்ந ஆன்மா அழிவில்லாதது. திருமூலரின் திருமந்திரத்தில்,
    தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகிறான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னை அருச்சிக்கத் தான் இருந்தானே
                                    (திருமூலர், திருமந்திரம்.பா=1706)
என்ற பாடல் குறிப்புடுவது தன்னை அறிதலாகிய நிகழ்வையே ஆகும்.
     உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகழியாக
          மடம்படும் உணவுநெய் யட்டி உயிரெனும் திரிமயக்கி
     இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்த நோக்கில்
          கடம்பமா காளைதாதை கழலடி காணலாமே
                           (திரு.தே. தனித் திருக்.கு.தொ.பா.4)
என்றும்,
     
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே
                       (மேற்படி, தனித் திருநேரிசை,தொண்டனேன்.பா.9)
என வரும் பாடல்களால்  திருநாவுக்கரசர் வாக்கினை  அறியலாம்.
          தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், உள்ளத்தினுள்ளே உள்ள இறையை நினைந்து வழிபட வேண்டும் என்று போதிக்கின்றார். ‘ஓம் நமச்சிவாய’ எனும் மூலமந்திரத்தைப் பலமுறை ஓதினால் அதன் மூலம் சிவனுருவைக் காணலாம். மூல மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு என்கிறார்.
    தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், அகவழிபாடு, புறவழிபாடுகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
     பூசை பரார்த்த பூசை, ஆன்மார்த்த பூசை என இருவகைப்படும். பரார்த்த பூசை பிறர்க்காக செய்யப்படுவதாகும். கோயிலில் பூசை செய்வோர் செய்வது பரார்த்த பூசை. ஆன்மார்த்த பூசை தனக்கென செய்யும் வழிபாடாகும்.
     ‘’ஆன்மார்த்த பூசை புற வழிபாடு, அக வழிபாடு என்று இருவகைப்படும். அகவழிபாட்டில் நீங்கள் எதையும் கண்ணால் நேரில் பார்ப்பதில்லை. பீடம் இல்லை, வேறெதுவும் இல்லை. நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு வழிபடுவீர். பீடம் அமைத்து விளக்கை ஏற்றி வைத்து வழிபடுவதாக மனத்தில் கற்பனை செய்து கொள்வீர். புறப்பூசையைச் செய்யத் தெரிந்து இருந்தால் தான் அகப்பூசையைச் செய்ய முடியும். அகப்பூசை செறிவுடையது, ஒரு முகப்பட்டது. புறப்பூசையில் பல பொருள்களும் ஒரே சமயத்தில் கண்ணுக்குத் தென்படும். தூபத்தைக் காட்டும் போது அருகிலிருக்கும் பூக்கிண்ணமும் தெரியும். ஒளியைப் பார்க்கும் போது பீடத்திலிருந்து பிற பொருள்களையும் காண்பீர். ஆனால் அகப்பூசையில் மனம் அக நோக்கில் ஒருப்பட்டிருக்கும்., கவனம் சிதறாது. ஆனால் புறப்பூசையைச் செய்து பழகாமல் அகப்பூசையைச் செய்ய முடியாது’’ என்று கூறுவதன் மூலம் அடியார்கள், மக்கள் அனைவரும் அகப்பூசை,புறப்பூசை ஆகிய இரண்டிலும் மேன்மையுற இறைவனின் மூலமந்திரம் காரணமாக அமைகிறது என்பது புலனாகிறது.
                                              (த.ச.சு. ஆலய,வ.அ.ப=104)  
               தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், மனிதனின் அகமும், புறமும் நல் நிலையில் இயங்க அக மற்றும் புற வழிபாடு அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்.
              தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
     எச்செயலும் மூலமெனும் எண்ணத்தாலாகும்
        இன்பதுன்பக் காரணம் அதுவேயாகும்
     இச்சையெனும் தீயெழுந்து எரியும்போது
        இயங்குமுடல் கருவிகளால் அறிவைக்கொண்டு
     அச்சமற அனுபவித்தே அணைக்கலாகும்
        அதைத்தணிக்க வேறுவழி இல்லை.அதனால்,
     நச்சுவிளை இச்சைகளை விளைவிக்காத
        நல்லொழுக்க வாழ்க்கைக்கு முறை வகுத்தேன்.
                                  (த.வே.ம.உலக சமாதானம்.பா=123)
என்கிறார். முறையான தேவையான ஆசையேயானாலும், அதை நிறைவு செய்யும் போது, நிறைவு செய்து விளைவை அனுபவிக்கும் போதும் அதன்மீது தீவிரமான பற்றினை வைக்காமல்,அதனை ஒரு கடமையாகவே கொள்ள வேண்டும் என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி வலியுறுத்துகிறார்.
    “வஞ்சகம் அற்றுஅடி வாழ்ந்த வந்த கூற்று
    அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே”
    “கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
     அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே “
     இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
     நயம்வந்து ஓதவல்லார்தமை நண்ணினால்
     நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
     நயனன் நாமம் நமச்சிவாயவே”
                                         (திருஞானசம்பந்தர்.தேவாரம்.3.4.7)
ஐந்தெழுத்து மந்திரத்தினை ஒருவன் மனதால் சொல்லிய  வண்ணம் இருப்பானேயானால் அவனை நல்லவனாக அம்மந்திரம் வாழச் செய்யும்.உடலாலும், மனதாலும் எந்தவித தீங்கும் மனிதனை அணுகாது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
    திருஞானசம்பந்தரின் கருத்தை அடியொற்றி தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் அவர்களும், மனிதனின் உடலும் உணர்வும் ஒருநிலையில் அமைய இறைவழிபாடு அவசியம் என்று குறிப்பிடுகிறார்.
    இறைவழிபாட்டில் விரிவான பூசையைச் செய்ய இயலவில்லை என்றால் எளிய முறையில் பூசையைச் செய்யலாம் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
       விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் அமர்ந்து ஒளிமயமான இறைவனே எழுந்தருள்க, எனக்கு ஒளியைத் தருக, என் அறியாமையை நீக்கி அருள்க என்று வேண்டிக் கொள்ளலாம். எவ்வாறு வழிபடுகிறீர் என்பது முக்கியமன்று., எவ்வளவு ஈடுபாட்டுடன் வழிபடுகிறீர் என்பதே முக்கியம். அதாவது ஆழ்ந்த பக்திதான் முக்கியம் என்றும், பக்திக்கு அறிகுறியாக, எளிதில் கிடைக்கும் கனி, மலர், இலை, நீர் எதைப் படைத்தாலும் இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான் என்கிறார். இதனால் வழிபாடு என்பது இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்ற நோக்கிலே விரிவாகவும், எளிமையாகவும் அமைய வேண்டும் என்ற கருத்துப் பெறப்படுகிறது.
                                             (த.ச.சு. ஆலய,வ.அ.ப=107)
  
    ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
    நானென்றிருந்து நலனழிந்தேன் பூரணமே
                                              (பட்டி.பா.எண்451)
என்று பட்டிணத்தடிகள் கூறியபடி, உடலுக்குள் இறைவன் உறைவதை அறியாமல் உடலால் பெறும் புலன் இன்பங்களில் மனத்தைச் சிக்க வைத்துக் கொண்டு, உடல் இருப்பது தவறு, இழுக்கு என்று கருதுவது மடமையாகும்.
   உயிர் உய்ய வேண்டும். அறிவிற்கு முழுமைப்பேறு கிட்ட வேண்டும். வீடுபேறு வேண்டும். இதை ஒரு பயணமாகக் கருதினால் அப்பயணத்திற்கு உடல் தானே வாகனம். இந்த வாகனத்தை பேணிக் பாதுகாத்தல் தான் இந்த ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும். எனவேதான் திருமூலர்,
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
   கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
                                 (திரு.திரு,பா.431)
என்றும்,
   உடம்பார் அழியின் உயிரார் அழிவர்….
   உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
                                     (திரு.திரு.மூன்றாம் தந்திரம்பா.1)
என்று கூறியுள்ளார். 

தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள்,
   மனிதனின் உடலமைப்பும்,மதியமைப்பும்
   மண்ணுலக அமைப்பும்,மற்றனைத்தும் ஆய்ந்து
   இனி வகுப்போம் ஒரு திட்டம்,என்றும் எங்கும்
   எவருக்கும், வாழ்க்கையிலே துன்பம் நீங்க
   புனிதமுடன் உடல் அறிவு சக்தியெலாம்
   பொதுவாக மனித இனம் ஒன்று சேர்ந்து
   கனிவுடனே அவரவர்கள் தேவை தீர்க்கும்
   கருத்துடனே அத்திட்டம் அமைய வேண்டும்.
                                       (த.வே.ம.மனவளக்கலை. பா=43)
என்பதை, மனித வாழ்வில் எப்பயன் அடைய வேண்டி இருப்பினும் உடலில் இருந்துதான் அடைய வேண்டும் என்கிறார். உடலின்றி அறிவிற்கு இயக்கமில்லை. ஆக அறிவு சரிவர இயங்கவும், உடலை நோய் நொடியின்றி வேறு எக்குறையும் இன்றிப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டியது தலையாய கடமை என்று வலியுறுத்துகிறார். தேரையர் என்னும் சித்தர்,
   பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
      பாழ்த்தபிணங் கிடக்குதென்பார் உயிர்போச் சென்பார்
  ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
      ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்
  காரப்பா தீயுடன் தீச்சேரு மென்பார்
      கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா
  சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய் சேர்ந்து
தீயவழி தனைப் தேடிப் போவார் மாடே..
                                        (தேரையர் பாடல்கள் பா.எ.13)
மனித உடலில் உள்ள உயிர் அதாவது சிவம் இந்த உடலை விட்டு பிரிந்த பின்னர் அதனைச் சவம் என்பர். அதாவது மனித உடலில் இருந்து உயிர் வெளியேறிய பின்னர் உடலுக்கு மரியாதை இல்லை.ஆன்மா அழிவில்லாதது. அந்த ஆன்மா உடலில் உள்ளவரை தான் இந்த உடலுக்கும் உயிருக்கும் மரியாதை இருக்கின்றது. இந்த உடலில் ஒரு பிரம்ம சக்தி, தனஞ்செயன் என்ற உயிர் நாடி இருந்து கொண்டே இருக்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். இதைத்தான் சித்தர் மேற்காணும் வரிகளில் விளக்கியுள்ளார்.
உடல், உள்ளம், உயிர்
     உலக மனிதர் அனைவருக்கும் வாழ்க்கை மூன்று வகைப்படும். ஒன்று உடல் வாழ்க்கை, இரண்டு உள வாழ்க்கை, மூன்று உயிர் வாழ்க்கை. எல்லா உயிரினங்களுக்கும் உயிர் உண்டு, உடலும் உண்டு, உளமும் உண்டு. அதனைச் செயல்படுத்துகிற திறன் மனிதத்திற்கே உரியது, உயிர்தான் அடிப்படை. அந்த உயிர் உறைவதற்கு ஒரு உடல் தேவை. எல்லா உயிர்களுக்கும் உடல் உண்டு. உயிர்கள் ஆறு வகைப்படும். இதனைத் தொல்காப்பியர் மிக அழகாக ஒரு நூற்பாவில் தருகின்றார்.
  ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
  இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
  மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
  நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
  ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
  ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
  நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
                                 (தொல்காப்பியர். தொல்.1526)
      மரம், செடி, கொடிகள் போன்றவை ஓர் அறிவின. நத்தை, சிப்பி, சங்கு, சில கடல்வாழ் உயிரினங்கள் இரண்டு அறிவை உடையன. எறும்பு, கறையான் போன்றவை மூன்று அறிவு உடையன. வண்டு, தும்பி போன்றவை நான்கு அறிவுடையன.விலங்கினங்கள் அனைத்தும் ஐந்தறிவு உடையன. மனத்தால் அறிகின்ற அறிவுடையோர் ஆறு அறிவு உடையோர். மனத்திற்கு அறிதல் என்பது தொழிலாகின்றது. நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆயது உலகம். அதே போன்று ஐம்பூதங்களால் ஆனது உடம்பு. இதனைத் தொல்காப்பியரும் , வள்ளுவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
      ஐம்பூதங்களால் ஆகிய ஐம்பொறிகளை மனம் அடக்கி ஆளுதல் வேண்டும். மனத்தைமீறி ஐம்பூதங்கள் செல்லும் போது வாழ்க்கையில் அமைதி குலைகிறது. சில பெரியவர்கள் பிறருக்குத் தெரியாது என நினைத்துத் தவறுகள் செய்கின்றனர். ஆனால் நம் உடலிலே இருக்கின்ற ஐம்பூதங்களும் வஞ்சமனமுடைய அந்த மனிதனைப் பார்த்துச் சிரிக்கின்றன என்று பேசுகிறார் வள்ளுவர்.
     வஞ்சமனமுடைய படிற்று ஒழுக்கும் பூதங்கள்
     ஐந்தும் அகத்தே நகும்.
                                  (திருவள்ளுவர்.திருக்குறள்.281)
தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள் இதே கருத்தினை வலியுறுத்தி,
    தேவையற்ற பொருட்கள்தமைத் தேவையாக்கித்
       தேவை பெருகித் துன்பம் மலியக் கண்டோம்.
    தேவைக்கு மேலதிகமாகத் துய்த்த
       தீங்கு பஞ்ச பாதங்கள், ஏழ்மை, நோய்கள்
     தேவையற்ற பொருட்கள் எவை யெனக்கண்டிப்போ
        திரும்பத் தோன்றாதொழித்துப் பலர்
    தேவையுள்ள பொருள் முடக்கம் தெளிவில்லாதோர்
         செய்கைக்கும் முடிவு கட்ட வேண்டுமென்று..
                                          (த.வே.ம.மனம்.பா.27)
பாடுகிறார்.
     தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும், நாம் செய்கிற செயல் பரிபூரணமாக இருந்தால், அது நமக்கும் மற்றவர்களுக்கும் எத்தகைய துன்பத்தையும் கொடுக்காது என்கிறார்.
   எதையும் செய்வதற்கு முன்னால் அது நம் மனத்தை எப்படிப் பாதிக்கும் என்று சிந்தித்துச் செயல் பட வேண்டும். அந்தச் செயல் நமக்குக் கவலையைக் கொடுக்குமா என்றும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏமாற்றம் தரக்கூடிய கீழ்த்தரமான வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்தால் நம் மன அமைதி குலையாது என்றும், நம் யாராலும் அசைக்க இயலாது என்றும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார். எண்ணங்கள்தான் மன அமைதியைக் கெடுக்கின்றன. கண், காது முதலிய புலன்களால் நாம் உணர்பவைகளே எண்ணங்களாக மாறி நம் மன அமைதியைக் கெடுக்கின்றன. நம் மனம் இளம் ஆல மரம் போல பாதுகாக்கப்பட்டால் எதிர்காலத்தில் உலகிற்கு பயன்படும், நிழல் தரும், பழங்கள் தரும் தருக்களாக நம் மனம் மற்றவர்களுக்குப் பயன்படும் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
                                          (த.ச.சு.உ.நீ.அ.கொ.எப்படி.பக்.61)
திருநாவுக்கரசர்
      பக்தி இலக்கியத்தில் இறைவனை எண்ணுகின்ற உணர்வு மிகுதியாக இருப்பது இயல்பு. வாழ்க்கை என்பது மிகப்பெரிய கடல். அதில் மனிதம் பயணம் செய்கிறது. மனம் தோணியாகிறது. தோணியைச் செலுத்தக் கோலைப் பயன்படுத்துகிறோம். அது அறிவாகும். ஐம்பொறிகளால் ஏற்படும் இன்பத்திற்கு இடையூறு வரும்போது கோபம் ஏற்படுகிறது. ஐம்புலன்களால் ஆணவம் ஏற்படுகிறது. அவ்வாறு ஆணவம் ஏற்படும் போது இறைவனை நினைத்து அவ்வாணவத்தை நீக்குகின்ற உணர்வைத் தரவேண்டும் எனக் கேட்கிறார் திருநாவுக்கரசர்.
    மனம் எனும் தோணிபற்றி மதி எனும் கோலை ஊன்றிச்
    சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும்போது
    மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது
    உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடையகோவே.
                                             (திருநாவுக்கரசர்-தேவாரம்-4613)

இராமலிங்க அடிகளார்
         இராமலிங்க அடிகளார் முழுநிலை பெற்ற, உலகத்தில் சமாதி இல்லாத
சித்தர். மனிதனின் உடலும் உணர்வும் சம நிலையில் இருக்க வேண்டுமென
கந்தகோட்ட கந்தனிடம் வேண்டுகிறார்.
         மனமான ஒரு சிறுவன் மதியா குருவையும்
               மதித்திடான் நின் அடிச்சீர்
         மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
              மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
         சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
              சிறுகுகையி னூடுபுகுவான்
         என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
             கேழையேன் என்செய்குவன்…
                                                                                (இராமலிங்க அடிகளார்.அருட்பா.22)
என்று மனத்தை அடக்கி ஆள்வதற்கு துணை புரிய வேண்டும் என
வேண்டுகிறார்.

வாழ்க்கை வள உயர்வு
                  தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், வாழ்க்கை வள உயர்வுப்படிகள் ஐந்து என்ற நூலில் மன வளம் பற்றித் தெளிவாக அறிவியல் நோக்கிலும், தத்துவ நோக்கிலும் தம் கருத்துக்களைத் தருகிறார். தன் மன்றத்திற்கும் மனவளக்கலை மன்றம் என்றே பெயர் தந்துள்ளதிலேயே அவர் மனத்திற்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் தெரிகிறது.
     பேரறிவு என்னும் எல்லாம் உணரும் ஆற்றல்தான் அதன் முழுமையின் அலை இயக்கமாகி மனித மனமாகத் திகழ்கின்றது. இருப்பு, இயக்கம் என்னும் இரண்டு தத்துவங்களாக இயற்கை விளங்குகிறது.உடலுக்கும் மனதுக்கும் இயக்க ஆற்றலாக இருப்பது சீவ காந்தம் ஆகும். சீவ காந்தம் என்பதோ இறை நிலை அதன் நுண்ணியக்க மூலமாகவேதான் மூலம் தோன்றிய அலையும் சேர்ந்த ஒரு கூட்டு ஆற்றலே, பேராற்றலாக கருமையம் எனும் மூலாதாரத்தில் மையம் கொண்டு மனமாக இயங்குகிறது என்று தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள் குறிப்பிடுகிறார்.
                                   (த.வே.ம. வாழ்க்கை.வ.உ.படி.பக்=30)


   உடலியக்கமும், உணர்வியக்கமும் ஒரு நிலையில் இயங்க,
   மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டா
   மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டா
   மனமது செம்மையானால் வாசியை நிறுத்தவேண்டா
   மனமது செம்மையானால் மந்தாரம் செம்மையாமே
                                      (அகத்தியர், ஞானம்-1)
என்ற பாடல் வழி அகத்தியர் குறிப்பிடுகிறார்.
           ‘’மனமே என்னை நீ வாழ்வித்திடுவாய்’’ என்பார் பாரதியார். எவர் ஒருவர் தம் மனத்தைச் செம்மையாக அமைத்துக் கொள்கின்றாரோ அவரது வாழ்வு வளமும் நலமும் நிறைந்து காணப்படும் என்று தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோர் தங்களது கருத்துகள் வாயிலாக பதிகின்றனர்..
    தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள், மக்கள் அனைவரும் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ வேண்டும் என்று விரும்பி, அதற்கான வழிமுறைகளில் தேடிய செயலின் விளைவே அவரது சிந்தனை மலர்களாகி நம் கரங்களில் திகழும் அவரது நூல்கள்..அந்நூல்களில் உள்ள வாழ்வியல் இறையியல் சிந்தனைகளின் வழி உடலியக்க, உணர்வியக்க மேலாண்மைக்கு எவ்வாறு உதவினார் என்பதாக “மனமது செம்மையடைதல்” பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
    தவத்திரு வேதாத்திரி மகரிசி அவர்கள், உலகில் உள்ள மானுட சமுதாயம் நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக “வாழ்க வளமுடன்” என்னும் தத்துவத்தையும் ஊர்தோறும் “மனவளக்கலை” மன்றங்களையும், உலக சமுதாய சேவா சங்கத்தையும் அமைத்து, உலக மக்களின் மனத்தைச் செம்மைப்படுத்தி, உலக அமைதிக்கும், உடலியக்க, உணர்வியக்க மேலாண்மைக்கு எவ்வாறு வழிகாட்டினார் என்பது பற்றி இவ்வியலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.




முடிவுகள்
      உலகியலில் நீண்ட மரபுடையது தமிழர் மரபு. அவ்வகையில் உடலியக்க, உணர்வியக்க மேலாண்மையில் தமிழர்கள் பின்பற்றிய முறை எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
     தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர்கள் அருளிய முறைகள் இவ்வியலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
     உடல் நலனில் உணவின் அவசியம் குறித்து இலக்கியங்கள் வாயிலாக எடுத்தாளப்பட்டுள்ளது.
     தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு வேதாத்திரி மகரிசி ஆகியோர் கூறிய உடலியக்க, உணர்வியக்க மேலாண்மை குறித்து இவ்வியலில் கூறப்பட்டுள்ளது.