Tuesday, 21 July 2015

பழந்தமிழ் இசை -நான்காம் பாகம் – தமிழ் இசையின் பண்கள்

பழந்தமிழ் இசை -நான்காம் பாகம் – தமிழ் இசையின் பண்கள்

குறிஞ்சி – அரிகாம்போதி (28வது மேள இராகம் ஆகும்)
பண்டை நாளில் தமிழ்ப்பண்கள் பலவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளை ஒட்டியும் பருவங்களை ஒட்டியுமே உருவாக்கப் பெற்றன.

பண்டைய தனித்தமிழ்ப் பெயர்களும் அவற்றின் இன்றைய பெயர்களும்
1. செம்பாலை – அரிகாம்போதி
2. படுமலைப்பாலை – நடபைரவி
3. கோடிப்பாலை – கரகரப்பிரியா
4. விளரிப்பாலை – தோடி
5. செவ்வழிப்பாலை = இருமத்திமத் தோடி
6. முல்லைத் தீம்பாணி (சாதாரி) – மோகனம்
7. செந்துருத்தி – மத்தியமாவதி
8. இந்தளம் – இந்தோளம்
9. கொன்றையந் தீங்குழல்(கொல்லி) – சுத்த சாவேரி
10. ஆம்பலந்தீங் குழல் – சுத்த தன் யாசி
11. அரும்பாலை – சங்கராபரணம்
12. மேற்செம்பாலை – கல்யாணி

பழந்தமிழிசையில் ஏழு பெரும் பண்களாவன
அரிகாம்போதி
நடன பைரவி
இருமத்திமத்தோடி
சங்கராபரணம்
கரகரப்பிரியா
தோடி
கல்யாணி
ஆகிய ஏழு பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இவை பயின்று வருகின்றன. பண்களுக்கு ஆதியில் “யாழ்” என்றும் பின்னர் “பாலை” என்றும் இன்று “மேளகர்த்தா இராகம்” என்றும் பெயரும் வழங்கி வருகின்றது.

தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,
1. செம்பாலை (அரிகாம்போதி)
2. படுமலைப்பாலை (நடபைரவி)
3. செவ்வழிப்பாலை (இருமத்தி மத்தோடி)
4. அரும்பாலை (சங்கராபரணம்)
5. கோடிப்பாலை (கரகரப்பிரியா)
6. விளரிப்பாலை (தோடி)
7. மேற்செம்பாலை (கல்யாணி)
எனச் சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன.

குறிஞ்சி அரிகாம்போதி
சரிகமபதநிச / சநிதபமகரிச 28ஆவது மேள இராகம்

ஐந்து சுரப்பண்கள் மிக எளிமையானவை; இனிமையானவை. சில சான்றுகள்:
முல்லைப்பாணி (மோகனம்),
குறிஞ்சிப்பாணி (மத்யமாவதி),
நெய்தல்பாணி (இந்தளம்),
பாலைப்பாணி (சுத்தசாவேரி),
மருதப்பணி (சுத்த தன்யாசீ),
வைகறைப்பாணி (சிவரஞ்சனி),

இன்றைய மோகன இராகம் தமிழிசையின் தலைமைப் பாலையான “அரிகம்போதியின் கிளைப்பண் “மோகனம்” ஆகும். திருவாசகம் வழமையாக இப்பண்ணியலேயே பாடப்பட்டு வருகின்றது. திருவாசகம் நாட்டார் மரபா, திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ணேம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல் என்ற வடிவங்களைக் கொண்டது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

குரல்பாணி என்றும், புல்லாங்குழலிசையில் இனிமை பெறுவதால் குழல்பாணி என்றும், முல்லை நிலத்தெய்வத்தால் ‘மாயோன் பாணி’ என்றும், மலர்ப்பெயரால் ‘முல்லைநில மக்கள் பெயரால் ‘ஆயன்குழல்’ என்றும், மலர்ப்பெயரால் ‘முல்லைக்குழல்’ என்றும், பக்திக்காலத்தில் ‘சாதாரி’ என்றும் இக்காலம் ‘மோகனம்’ என்றும் பெயர்பெறும் இத்தொன்மைப்பண் ஒரு நாட்டார் பண்ணாகும்.

அரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போதி கருநாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.

அரிகாம்போதியின் சேய் இராகங்கள் இவை.
பகுதாரி, ஈசமனோகரி, கமாஸ், துவிஜாவந்தி, நாராயணகௌளை சகானா, சாயாதரங்கிணி. காம்போதி, காப்பிநாராயணி, நவரசகன்னட செஞ்சுருட்டி, கேதாரகௌளை, எதுகுலகாம்போதி, நாட்டக்குறிஞ்சி ரவிச்சந்திரிகா, சரஸ்வதிமனோகரி, சுத்ததரங்கிணி, சாமா, சுருட்டி, நாகஸ்வராவளி, குந்தளவராளி, மோகனம், உமாபரணம், ஹிந்துகன்னட, கோகிலத்வனி, கானவாரிதி, மாளவி, கதாதரங்கிணி பலஹம்ச, சாயாநாட்டை, சுபூஷணி, விவர்த்தனி, பிரதாபவராளி ஹிந்துநாராயணி, உழைமாருதம், அம்போஜினி, ஹிந்தோளகாமினி சாவித்திரி (இராகம்), வீணாவாதினி, ராகவினோதினி தைவதச்சந்திரிகா, ஆன்தாளி, அரிகாம்போதி என்பது செம்பாலை என்ற முதல் தமிழ்பண்ணைக் குறிப்பதாகும்.

மோகன ராகம்
28 வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யராகம். தமிழ் திரை உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் மோகன ராகம் முதன்மையானதாகும். உலகெங்கிலும் உள்ள இசை வகைகளில் இந்த ராகத்தின் சாயல்களை நாம் காணமுடியும். இந்த உன்னத ராகத்தின் மெட்டுக்களை உலகம் முழுதும் வாழும் மக்கள் பாடி வருவதும் ஆச்சரியமே!

தமிழர்கள் தம் இசையில் இராகம் என்ற ஒரு வடிவத்தை பன்னெடுங் காலத்திற்கு முன்பே கண்டறிந்திருக்கிறார்கள். மோகனம் தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று.

பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த இராகம் பற்றிய பழம்பெரும் ககுர்ப்புக்களைத் தருவது சிலப்பதிகாரமே. இசை அறிஞர் எஸ்.ராமநாதன் மோகன ராகம் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவரின் ஆய்வுகள் முல்லைத் தீம்பாணி தான் இன்றைய மோகனம் எனநிறுவியுள்ளன. சாதாரி என்றும் முல்லைத்தீம்பாணி என்றும் நம் முன்னோர் கூறியது இன்றைய மோகனப் பண்ணே. தொன்று தொட்டு மாணிக்கவாசகரின் திருவாசகம் மோகனராகத்திலேயே பாடப்படுகிறது.

விருத்தபாடல்கள் பாடுவதற்கும் பொருத்தமான ராகம் எனக் கருதப்படுகின்றது. இது ஒரு மூர்ச்சனா ராகமாகும். மூர்ச்ச்சனா ராகம் என்றால் கிரகபேதத்தால் புதிய ராகங்களை உருவாக்கக் கூடிய ராகம் என்று பொருள் படும். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கான பண் “முல்லைப்பண்” [மோகனம் ] என வகைப்படுத்தப்பட்டாலும் முல்லை நில பண்ணாகவும் கருதப்பட்டது.

இராகங்களில் ஆண், பெண் என்ற வகைப்படுத்தலில் மோகனம் பெண் ராகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இந்த ராகத்தை ” பூப் ” , என்றும் பூபாளி என்றும் அழைக்கின்றனர். மோகனம், ஹிந்தோளம், சிவரஞ்சனி, சுத்தசாவேரி போன்ற இராகங்கள் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்களாகும். பொதுவாக ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் இனிமைமிக்க இராகங்கள் ஆகும். இந்த ராகத்தை எல்லா இசையமைப்பாளர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப தனித் தன்மையுடன் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன், இசை ஞானி இளையராஜா போன்ற இசை மேதைகள் அதிகமான பாடல்களை இந்த ராகத்தில் தந்திருகின்றார்கள். எல்லாக் காலத்திலும் பாடக் கூடிய ராகமாக மோகனம் திகழ்கின்றது. கேட்பவர்களை உருக வைக்கும் இந்த ராகம் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்றற்றது. மென்மையின் மேன்மையை உணர்த்தும் அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம். மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் இந்த இராகம் தமிழரின் பரம்பரைச் சொத்தாகும்.

தமிழ் சினிமாவில் வைகறைப்பாடலாக, காதல் பாடலாக, எழுச்சிப்பாடலாக, சோகப்பாடலாக, நகைச்சுவைப் பாடல்கள் என நவரசங்களையும் வெளிப்படுத்தும் ஏராளமான பாடல்கள் வந்திருக்கின்றன. நிலவின் அலையில் இரவின் அமைதியில் தென்றல் சுகம் தரும் பாடலாகும்.

“ஆகா இன்ப நிலாவினிலே”
படம் : மாயா பஜார் 1956
பாடியவர்கள் : கண்டசாலா பி.லீலா
இசை : கண்டசாலா

“அமுதைப் பொழியும் நிலவே”
தங்கமலை ரகசியம்
பி.சுசீலா
இசை : லிங்கப்பா

இசைத்தமிழ் வரலாறு -இசையமுதம் – தொடர் – 66

சுத்ததன்யாசி

தமிழ் செவ்வியல் இசையில் ஐந்து சுரங்களைக் கொண்ட இராகங்களில் இதுவும் ஒன்று. தமிழ் இசையின் தொன்மையைப் பறைசாற்றும் இனிமைமிக்க இராகங்களில் இதுவும் முதன்மையானதாகும். அரிகாம்போதி ராகத்தின் சேய் இராகங்களில் ஒன்று. மருத நிலத்திற்குரிய இராகமாயினும் காடுசார்ந்த பிரதேசத்திற்கும் உரிய இராகம் எனக் கருதப்பட்டும் வந்துள்ளது.

உயர்ந்த பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் இந்த இராகங்கள் தமிழ் இசையை நேசித்த குலமரபு கொண்ட மக்களின் கூட்டு முயற்சியில் வளர்ந்தனவாகும். இந்த ராகத்தின் ஆரோகணம் : ஸ க2 ம1 ப நி2 ஸ்  – அவரோகணம் : ஸ் நி2 ப ம1 க2 ஸ

அதி மனோகரமான இராகங்களில் ஒன்றாக விளங்குவதால் , மக்களை மயக்கும் தன்மை மிகுந்ததால், மொழி எல்லைகளைக் கடந்து இந்திய திரை இசையை வளப்படுத்திய இராகமாகும். மனதை மயக்கும் பல பாடல்கள் நமது தமிழ் சினிமாவிலும் வெளிவந்து நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. இராகத்தின் இனிமை காலங்களைக் கடந்தும் நிற்கிறது.

“கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே”
படம்: கர்ணன் 1964- பாடியவர்: பி.சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

“நீயே எனக்கு என்றும் நிகரானவன்”
படம் : பலேபாண்டியா 1962
பாடியவர்கள்: சௌந்தரராஜன் + சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

“தொட்டால் பூ மலரும்”
படம் : படகோட்டி 1964
பாடியவர்கள்:சௌந்தரராஜன் + சுசீலா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இசைஞானி இளையராஜா.
“மாஞ்சோலைக்கிளி தானோ”
படம்:கிழக்கே போகும் ரயில் 1978
பாடியவர் : ஜெயச்சந்திரன்
இசை : இளையராஜா

“விழியில் விழுந்து”
படம் : அலைகள் ஓய்வதில்லை 1980
பாடியவர்கள்  : இளையராஜா + ஜென்சி
இசை : இளையராஜா

“நஞ்சை உண்டு புஞ்சை உண்டு”
படம் : உன்னால் முடியும் தம்பி 1990
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

இசைத்தமிழ் வரலாறு -இசையமுதம் – தொடர் – 67

“சாருகேசி”
இது 26ஆவது “மேளகர்த்தா” இராகமாகும். “சாருகேசி” என்றால் அழகிய கூந்தலைஉடையவர் என்று பொருள். இது ஒரு ஆண்பால் ராகம் மட்டுமன்றி ஒரு சம்பூரண இராகமும் ஆகும்.
இதன் சுரங்கள் ஆரோகணம் – ஸ ரி க ம ப த நி ஸ – அவரோகணம் – ஸ் நி த ப ம க ரி ஸ

சட்சமம்,
சதுஸ்ருதி ரிஷபம்,
அந்தரகாந்தாரம்,
சுத்த மத்யமம்,
பஞ்சமம்,
சுத்ததைவதம்,
கைஷிகி நிஷாதம்.

சாருகேசியின் ஜன்ய இராகங்கள்
கன்னடபஞ்சமம்
கலஹம்ச
தரங்கிணி
ராகசூடாமணி
மதூளிகா
கலகண்டதொனி
சாருகுந்தளா
கோமளாங்கி
மிருட்டாணி
பகவதி

“சாருகேசி” இராகத்தில் அமைந்த திரைப்படப்பாடல்கள்
பெரும்பாலும் எல்லா கர்நாடக சங்கீத இராகங்களிலும் கடவுளரைப் பற்றிய பலவித உணர்ச்சிகளே மிஞ்சியிருக்கும்.  நாட்டியத்தில் இடம்பெறும், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைப் பெரும்பாலும் இந்த சாருகேசி இராகத்தில் பாட்டு, மெட்டாக அமைத்திருப்பார்கள்.

முன்னரெல்லாம் கர்நாடக இசையில் ஒரு இராகத்தை அறிய வேண்டுமானால் அந்த இராகத்தின் முன்மாதிரியான பாடல் ஒன்றைப் பயிலவேண்டும். அது பெரும்பாலும் மிகப் பெரிய சங்கீத மேதையின் கீர்த்தனையாகத் தானிருக்கும்.  முதன்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு இராகத்தின் முன்மாதிரியாக அமைந்து வரலாறு படைத்தது.  அந்தப்பாடலைக் கேட்டுவிட்டுசங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார்.

கர்நாடக சங்கீத இராகங்களை எளிமையாகவும் அதே நேரம் அழகாகவும் மெட்டுக்களாக்கிய ஒரு புது பாணி உருவாகிப் பின் கே.வி மகாதேவன், இளையராஜா என்று தொடர்ந்து வந்தது. இதோ அந்த வரலாறு படைத்த திரைப்படமும் பாடலும்.

மன்மத லீலையை வென்றார் உண்டோ??
காலத்தால் அழிக்க முடியாத திரைப்படங்களுள், என்றும் முதலிடத்தில் இருப்பது 1944-ம் ஆண்டு வெளிவந்த “ஹரிதாஸ்” என்னும் திரைப்படமாகும். 16/10/1944 வெளியான இத்திரைப்படம் சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும் மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி ஒரு உலக சாதனையைப் படைத்தது. ஜி.ராமநாதன் இந்தப் பாடலை ‘சாருகேசி’ ராகத்தில் இசைத்திருக்கிறார். இந்தப் பாடல் புகழ் பெற்ற பின்புதான் ‘சாருகேசி’ ராகமும் புகழ்பெற்றது எனலாம்.

பாடல் – “மன்மத லீலையை வென்றார் உண்டோ”
படம் – ஹரிதாஸ்(1944)
பாடியவர் – M.K.தியாகராஜ பாகவதர்
இசை – S.G.ராமநாதன்
இயற்றியவர் – பாபநாசம் சிவன்

பாடல் – “வசந்த முல்லை போலே வந்த அசைந்துஆடும்”
படம் – சாரங்கதாரா’(1958)
பாடியவர் – T.M.சவுந்திர ராஜன்
இசை – S.G.ராமநாதன்
இயற்றியவர் – மருதகாசி

பாடல் : “தூங்காத கண் என்று ஒன்று”
படம் : குங்குமம் 1962
பாடியவர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா
இசை : கே.வீ.மகாதேவன்

பாடல் : பேசுவது கிளியா இல்லை
படம் : பணத்தோட்டம் 1963
பாடியவர்கள்: சௌந்தரராஜன் + பி.சுசீலா
இசை: விசுவநாதன் ராமமூர்த்தி

பாடல் : ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
படம் :எங்க பாப்பா 1966
பாடியவர் : டி. எம்.சௌந்தரராஜன் + எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாடல் : அழகிய தமிழ் மகள் இவள்
படம் ரிக்ஷாக்காரன் 1972
பாடியவர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா
இசை : விஸ்வநாதன்

இசைஞானி இளையராஜா தந்த சாருகேசி இராகப் பாடல்களை வரிசைப் படுத்துவோம்.

பாடல் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வைச்சகிளி
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979
பாடியவர் : எஸ் .பி பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

பாடல் : சின்னஞ் சிறு கிளியே சித்திர பூ விழியே
படம் : முந்தானை முடிச்சு 1983
பாடியவர் : எஸ் .பி பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி
இசை : இளையராஜா

பாடல் : மணமாலையும் மஞ்சளும் சூடி
படம் : வாத்தியார் வீட்டுப் பிள்ளை 1990
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

பாடல் : அரும்பாகி மொட்டாகி
படம் : எங்க ஊரு காவல்காரன்
பாடியவர்கள் : தீபன் சக்கரவர்த்தி + சுசீலா
இசை: இளையராஜா

பாடல் : அம்மா நீ சுமந்த பிள்ளை
படம் : அன்னை ஓர் ஆலயம் 1979
பாடியவர் : சௌந்தரராஜன்
இசை: இளையராஜா

பாடல் : சின்ன பொண்ணு சேலை
படம் :அறுவடை நாள் 1987
பாடியவர் : இளையராஜா
இசை: இளையராஜா

இசைத்தமிழ் வரலாறு -இசையமுதம் – தொடர் – 68

“புன்னாக வராளி”
இது எட்டாவது மேளகர்த்தா இராகமாகிய ஹனுமத் தோடியின் சேய் இராகமாகும். இளங்காலை நேரத்தில் பாடத் தகுந்த இது ஒரு பெண்பால் ராகமாகும். கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். பாம்புகளை வசப்படுத்துவதற்கு மகுடியில் இந்த இராகமே இசைக்கப்படுகின்றது. இந்த இராகத்திலிருந்து நொண்டிச் சிந்து என்ற கிராமிய மெட்டும், ஓடம் என்ற மெட்டும் தோன்றியுள்ளன.

இந்த இராகத்தின் சுரங்களாவன
ஷட்ஜமம்,
சுத்த ரிஷபம்,
சுத்த காந்தாரம்,
சதுஸ்ருதி ரிஷபம்,
சாதாரண காந்தாரம்,
சுத்தமத்யமம்,
பிரதி மத்யமம்,
பஞ்சமம்,
சுத்த தைவதம்,
கைஷிகி நிஷாதம்.

ஆரோகணம் – ஸ ரி க ம ப த நி
அவரோகணம் – நி த ப ம க ரி ஸ

பாரதியின் தேசிய கீதங்கள் – பாரத தேசம்

இராகம் – புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

கண்ணம்மா – எனது குலதெய்வம் – பாரதியார்
இராகம் – புன்னாகவராளி
பல்லவி

நின்னைச் சரணடைந்தேன்! – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று … (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . … (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் … (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட … .(நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! … (நின்னை)

திரையிசைப் பாடல்கள்
பாடல் – ஒரு மடமாது ஒருவனுமாகி…
படம் – பட்டினத்தார்(1964)
பாடியவர் – T.M.சவுந்திரராஜன்
இசையமைப்பாளர் – G. ராமநாதன்
இயற்றியவர் – பட்டினத்தார் பாடல்

பாடல் – நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே…
படம் – திருவருட் செல்வர் (1967)
பாடியவர் – T.M.சவுந்திரராஜன்
இசையமைப்பாளர் – K.V. மகாதேவன்
இயற்றியவர் – கண்ணதாசன்

1 comment:

ஜெயராம்.ஜி said...

ராகங்கள் பற்றி எனக்கு ஒரு கடுகளவேனும் தெரியாது.

உங்கள் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன்.

நன்றி