Monday, 15 June 2015

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை.திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

 கலாப்ரியா கட்டுரை

பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை முன் வைத்து சில தூறல்கள்-கலாப்ரியா
அவனே
**
அந்தச் சிறுகதைக்குள்ளிருந்து
அவன் உடலை மீட்டு வர
மிகச் சிரமப்பட்டதாக
அவன் நண்பர்கள் சொன்னார்கள்
அங்கோர்வாட் கோயில் மண்டபச்
சிதிலங்களூடே பாம்பெனப்
பிதுங்கி நிற்கும்
மர வேர்கள் போல
அவன் அந்தக் கதையில்
அடிக் கோடிட்டிருந்த
வரிகள் பற்களைத்
துளைத்துக் கொண்டும்
கண்குழி
மூக்குப் பொந்து என்று
கபாலம் முழுக்க
இறுக்கிக் கொண்டிருந்ததாயும்
அதை எடுக்கவே
அதிகச் சிரமமென்றும்
அவன் உறவினர்களிடம்
சொன்னார்கள்
பிய்த்தெடுத்த வேர்கள்
தாது விருத்திக்குப்
பயன் படுமென்று
தாங்களே வைத்துக் கொண்டதாகவும்
சொன்னார்கள்
….. …… ……
இறப்பைத் தாங்கி வந்த
கருமாதிக் கடிதத்தை
வழக்கம் போல
கிழிக்க மறந்ததற்காக
மனைவியிடம்
கடிந்து கொண்டான்
எதிர்நாள் ஒன்றில்
அவனே
(யூமா வாசுகிக்கு)
இது 2000 வாக்கில் யூமா வாசுகியின் சிறு கதைத் தொகுப்பொன்றைப் படித்து விட்டு எழுதிய கவிதை. சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்கும் அனுபவம் ஒரு விதமான, நீச்சல் தெரிந்தவனே ஆற்றுத் தண்ணீரில் தெவங்கும் அனுபவம் போன்றது. இழுப்பும் எதிர் நீச்சலுமாய் திக்கு முக்காடிக் கொண்டிருக்கையில்,ஒரு சுழிப்பில் கதையே கொஞ்சங் கொஞ்சமாக கரைக்குத் தள்ளி விடும். ஆனால் அடுத்த கதைக்குள் மெல்லப் படியிறங்கும் ஆவல், ஒரு நல்ல கதாசிரியனைப் பொறுத்து தவிர்க்க முடியாது.
இப்படி ஒரு சூழலுக்குள்/ மாயச் சுழலுக்குள் அடிக்கடி நாம் வேண்டுமென்றே நம்மை வெவ்வேறு ஆளுமைகளின் சிறு கதைகளைப் படிக்கையில் அமிழ்த்திக் கொள்கிறோமென்று படுகிறது..எஸ்.ராமகிருஷ்ணன் நம் காலத்தின் முக்கியமான ஆளுமை. அவர் யாருடனும் இயல்பாக எவ்வளவு நேரமும் உரையாடக் கூடியவர், கதையாடக் கூடியவர். இதைத் தன்னுடைய பலமாகவே அவர் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார், அல்லது வெகு இயல்பாக அவரில் அது வளர்ந்திருக்கிறது. அவர் எப்போதுமே ஒரு கதை சொல்லி.ஆனால் கதை சொல்வது என்பது வேறு அதையே ஒரு சிறு கதையாக எழுதுவது என்பது வேறு. ஒரு நிகழ்வை, நடந்த கதையை அப்படியே சொல்லி விடலாம். அதை நல்ல சிறுகதையாக்க ஒரு அபூர்வக் கற்பனை வேண்டியிருக்கிறது. என்னுடைய உருள்பெருந்தேர் கட்டுரைகள் நினைவும் புனைவும் சேர்ந்தவைதான்.அதிலேயே ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன என்று நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் ஒன்று கூட சிறுகதையாகவில்லை. ஏதோ ஒரு போதாமை இருக்கிறது. கதை சொல்வது என்பது கயிற்றில் நடப்பவனை விவரிப்பது, சிறுகதை எழுதுவது என்பது கயிற்றில் நடப்பது, என்று எங்கோ படித்ததை இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அழகாக இதைச் சார்ந்து ஒரு குறிப்பு சொல்லியிருக்கிறார்.’ இதிலுள்ள கதைகள் இரு வகைப்பட்டவை. ஒன்று கடந்த கால மௌனத்தைச் சிதறடித்து அதன் மீதான புனைவை உருவாக்குவது’ மற்றொன்று நகர வாழ்வில் எளிய சம்பவங்கள் கூட எவ்வளவு விசித்திரங்களையும் மனப்போக்கையும் உருவாக்குகின்றன. நம்மைச் சுற்றி எவ்வளவு திரைகள், கூண்டுகள் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன என்பதில் கவனம் கொள்கின்றன’, என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலுள்ள 27கதைகளை இந்த இரு வகைமையில் அடக்கி விடலாம்தான்.ஆனால் ஒரு படைப்பாளியின் பார்வைக்கு வாசகன் தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்க வேண்டியதில்லை. இவ்விரண்டு வகைமை தாண்டியும் எவ்வளவோ சொல்பவைதான் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். உதாரணத்திற்கு தலைப்புக் கதையான ‘பதினெட்டாம் நூற்றண்டின் மழை’ – அதன் உள்ளாக ஒரு சரித்திரம் ஓடுகிறது.போர்ஹேயின் மணல் புத்தகம் போல மலைவாசிகளின் மொழி வலேசா என்கிற மதப்பிரச்சாரகனுக்கு நினைவில் நிற்காமல் மறந்து மறந்து போய் விடுகிறது. அவன் அங்கு வந்த நோக்கம் எல்லாமே ஆதி வாசிகளின் அபூர்வங்களினால் சிதறடிக்கப் பட்டு விடுகிறது.
இன்றும் ஆதி வாசிகளின் அபூர்வ பழக்க வழக்கங்கள்,மருத்துவம், மாந்த்ரீகம் ஆச்சரியம் தரும் வகையில் நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையில் பர்மிய தேச ஆதிவாசிப்பெண்ணின் உடல் மிருதுத் தன்மை பற்றிக் கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இதேபோல படகர் இனப் பெண்களின் உடல் மென்மையாக உள்ளதாகவும் அதை அவர்களே சொல்லிச் சட்டை மறைக்காத பெண்ணின் மேல் கையில் தொட்டுப் பார்க்கச் சொன்னதாகவும் ஒரு முறை கி.ரா. சொல்லிக் கொண்டிருந்தார். பிலிப்பைன்ஸ் பெண்கள் உடலும் அப்படி மிருதுவாய் இருக்கும் என்று சிங்கப்பூரில் சந்தித்த,சினேகிதியாகிவிட்ட ஒரு ஃபிலிப்பைன்ஸ் கவிதாயினி என்னிடம் சொன்னார். ஆனால் தொட்டுப் பார்க்கச் சொல்லவில்லை.
இதே போல ‘ஹசர் தினார்’என்கிற மாலிக் கபூர் பற்றிய கதை புதிய கோணத்தில் புனையப்பட்டுள்ள கதை. மாலிக்கபூரை அரவாணி என்றே சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதில் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது.விவிலியத்தில் வருகிற ’சிட்டி ஆஃப் சோதோம்’ போல் ஒரு பால் புணர்ச்சியாளர் நகரமாக டில்லியைப் புனைவமைக்கிறார்.இதற்கான ஆதாரங்களை அவர் சலிப்பற்ற பயணங்கள் வாயிலாகக் கூடத் திரட்டியிருக்கலாம்.ஒரு பிரம்மாண்டமான நாடோடிக் கதையின் தன்மையில் சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் படித்து முடிக்கும்போது 377 வது சட்டப்பிரிவை உடனடியாக நீக்கச் சொல்லி அதன் எதிப்பாளர்கள் கூடப் போராடலாம் என்று தோன்றுகிறது. அவ்வளவு அழகியலோடு கையாளப் பட்டிருக்கிறது.
”துண்டு துண்டான நினைவுத் துகள்களாய் கரையும் இவ்வாழ்க்கையை எப்படியோ வாழ்ந்து காட்டுங்கள், எந்தப் பகுத்தறிவினாலும் வாழ்வின் அர்த்தத்தை தேடி அலைய வேண்டாம் நீங்கள் முதலில் எப்படியேனும் வாழ்ந்து விடுங்கள்.” என்று காம்யூ சொல்வது போல, எஸ்.ராமகிருஷ்ணன் கதை மாந்தர்கள் வாழ்க்கையை இப்படி வாழ்பவர்கள்தான். அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்க்கையின் பால் பெரிதும் நேர்மறையான நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அப்படி ஒருவரால்த்தான் ஈடுபாடுமிக்க வாசிப்பும், வியப்புமிக்க பயணங்களும் மேற்கொள்ள முடியும். எஸ்.ராமகிருஷ்ணன்ஒரு மகத்தான வாசகன், சலிக்காத பயணி.
அவரே சொல்வது போல இன்றைய சிறுகதையின் முக்கிய சவால் அதைச் சொல்லும் முறை. எனவே இக்கதைகள் பல்வேறு சொல்லும் முறைகளை கதையாடல்களைக் கொண்டிருக்கின்றன. சில கதைகளின் மாய யதார்த்தம் கூட, யதார்த்த நிகழ் முறைகளிலிருந்து, வாழ்வின் இயல்பான தர்க்கங்களிலிருந்து அதிகமும் விலகுவதில்லை என்பதுவே எஸ்.ராமகிருஷ்ணன்கதைகளின் சிறப்பு.’வீட்டிற்கு அப்பால் எதுவுமில்லை’’‘ என்கிற கதையில் கண்ணுக்கு தோல் கட்டிய குதிரை போல தணிகை என்பவர் தன்னுடைய விஷயங்களை மட்டுமே பார்ப்பவராக ஒரு தணிக்கைப் பார்வையை ஏற்படுத்திக் கொள்கிறார்.( எனக்கென்னவோ தணிகை என்ற பெயருக்குப்பதிலாக ’தணிக்கை’ என்று அவருக்குப் பேர் சூட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.) அப்புறம் அவருக்கு தேவையானது மட்டுமே பார்வையில் படும் ஒரு வகை மனப்பிறழ்வு வந்து விடுகிறது. இதில் எஸ்.ராமகிருஷ்ணன் கதையை வெகு இயல்பான தர்க்க நடையில் எழுதிச் செல்லுகிறார்.எல்லாமே வாழ்வியல், குறிப்பாக தமிழ் வாழ்வியல் சார்ந்த தர்க்கங்கள். காஃப்காவின் ’உருமாற்றம்’கதாநாயகன், க்ரகர் சம்சா போல தணிகை ஒரு முற்றான கரப்பான் பூச்சியாக மாறுவதில்லை. இங்குதான் எஸ்.ராமகிருஷ்ணனின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தன் வாசிப்பின் பாதிப்புகள், தன் படைப்புகளை அணுக விடுவதேயில்லை.
வெயில், எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளிலும் சரி நெடுங்குருதி போல நாவல்களிலும் சரி தவறாது வித விதமான பாவனைகளில் தன் வெக்கையின் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருக்கும். ஒன்றில் தாரை தாரையாக வழிந்து கொண்டிருக்கும் இன்னொன்றில் வெல்லப்பாகு போல பிசினாய் அப்பிக் கொள்ளும். இதன் ஊடாகத்தான் அவரது கதையும் பாத்திரங்களும் வாழ்கிறார்கள். ’நற்குடும்பம்’ கதையில் வருகிற அம்மா அவள் மேல் எவ்வளவு ’’வெயில்’ விழுந்தாலும் தாங்கிக் கொள்கிறாள். காஸ ப்ளாங்கா கதையில் வருகிற சிறுவனைப் போல அவள் அப்பா வரும் வரை பயணியர் அறையிலேயே அசையாது அமர்ந்திருப்பாள். கைசூம்பிய பிச்சைக்காரி கூட அவளிடம் தன் கைக்குழந்தையை ஒப்படைத்து விட்டு பஸ்ஸில் ஏறிப் பிச்சை கேட்பாள். இங்கேதான் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது போல, சிறுகதைகள் நமது வாழ்வனுபவம் உருவாக்காத நினைவுகளை நம்முள் உருவாக்குகின்றன. இந்தக் கதாபாத்திரங்கள் நம்மைக் காலகாலமாகத் தொடர்கிறார்கள்.ஒரு கணம் நாம் அந்தப் பிச்சைக்காரியின் பிள்ளைச் சுமையை தாங்கிக் கொள்கிறவர்களாக, அதைப் பார்த்துக் கொள்கிறவர்களாக மாறி விடுகிறோம். மேன்ஷனில் நண்பர்களின் அறையில் ஒண்டிக் கொள்ளும் சாம்பல் கிண்ணமாக உபயோகப் படுத்தப்படும் ஒருவனாக நாமே உருக்கொள்கிறோம். நம்மில் பலர், இவ்வளவு துயரும் சேடிஸமும் அனுபவித்தது இல்லையென்றாலும் பணக்கார நண்பர்களிடம் கிட்டத்தட்ட இதே போல அனுபவித்திருப்பது நினைவுக்கு வரலாம். நான் ஓரளவு அனுபவப்பட்டிருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளில் வரும், பிச்சைக்காரி கேட்டுக்கொள்வது போன்ற கண நேர அவதானிப்புகள் இப்படித்தான் நம்மைக் கட்டிப் போட்டு, எங்கெங்கோ கூட்டிப் போய் விடுகின்றன.
சென்னை நகர் தன் துயரும் மாயையும் நிறைந்த போர்வைக்குள் ராமகிருஷ்ணனை ஏற்றுக் கொண்ட கால கட்டங்களை அவர் மீண்டும் வாழ்ந்து பார்க்கிறார், பேராலயம், ‘ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவிற்கும் சம்மந்தமில்லை’ போன்ற கதைகளில்.பேராலயம் படிக்கிற போது எலியட்டின் “Journey of the Magi’’ கவிதை படிப்பது போலப்ம் பேரார்வமாய் இருந்தது. காசுக் கடைகளில் தங்கத்தை துடைப்பதற்காக நாய்த் தோல் வைத்திருப்பார்கள்.அதை பெரும்பாலும் நாய்த்தோல் என்று சொல்லுவதில்லை.அது துடைத்துத் துடைத்து நைந்து அழுக்காக இருக்கும். அந்த நாய்த்தோலைப் போன்ற நினைவுகளிலிருந்து தன்னை அரவணைத்துக் கொண்ட சென்னையைப் பலகதைகளில் ராமகிருஷ்ணன் துடைத்து மெருகுடன் மீட்டெடுக்கிறார்.அவை எல்லாமே புனைவின் உச்சம் கொண்டவை.
மஞ்சள் கொக்கு என்ற கதை. ’நெருப்புச் சுடர்’ ஒன்று எரிவதில் எத்தனை விதம் இருக்கிறது என்ற ஆச்சரியத்தை உள்ளடக்கியது. வாழ்க்கை தண்டிக்கப்பட்ட ஒருவனை இந்தச் சுடரும் அதில் அவன் காண்கிற மஞ்சள் கொக்கும் எப்படியான மலர்ந்த விடுதலையை அவனுக்கு வழங்குகிறது, என்று கச்சிதமான புனைவுடன் சொல்லியிருக்கிறார். இந்த புனைவுக்கூர்மை எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் தனித்துவம். தன் புனைவை அவர் வாழ்வின் கணங்களிலிருந்தே எடுத்துக் கொள்கிறார். ஆன்மீக, தத்துவார்த்த தளங்களை அவசியமில்லாத பொழுது நாடுவதேயில்லை. புத்தன் இறங்காத குளம் போன்ற கதைகளில் சித்தார்த்தனை புத்தனை நோக்கிச் செலுத்திய வாழ்வு அடுக்குகளைச் சொல்லும்போது தேவையான அளவு சொல்கிறார்.அது இத்தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று. பௌத்த ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணப்படும் தாமரை எந்தக் கலைஞனையும் கவர்ந்து நீரின் குளுமையை அவன் கற்பனையில் வழிய விடக்கூடியவை,
புத்தன்
தடாக நடுவின்
தாமரையைப் பார்க்கிறான்
ஏதோ நினைவுடன்
பாய்ந்து நீந்திப்
பறித்து வந்து நீட்டுகிறான்
ஆடு மேய்க்கும் சிறுவன்
புதிய முறுவலுடன்
அவனிடம் அன்று
கடன் வாங்கியதுதான்
புத்தனிடம் இன்று
நாம் காணும்
இன் முறுவல்
என்று நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். இதை எழுதுகையில் புத்த கயாவில் இருக்கும் அழகான தடாகத்தை நான் பார்த்திருக்கவில்லை. இந்தக் கதையையும் நான் படித்திருக்கவில்லை. ஆனால் குளமும் தாமரையும் எப்படியோ எல்லாக் கலைஞனின் புனைவுக்குள்ளும் நிறைந்திருக்கும் போல. நான் பார்த்தது கயாவின் குளம். எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது கபிலவஸ்துவின் குளம். அதில் புத்தன் இறங்கவில்லை.ஆனால் கற்பனையில் எல்லாக் கலைஞனும் இறங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. எண்ணிறந்த புனைவை அது எல்லோரிலும் மலர்த்தியிருக்கும் போலிருக்கிறது.
இந்தக் கதையில் அற்புதமான வரிகள் அழகான ஜென் கவிதைகளாக வந்து விழுகின்றன. “தவளையைப் போல பாதி மூடிய கண்களால் உலகைக் கண்டு கொண்டிருப்பது போல….” என்று ஒரு வரி. “சித்தார்த்தன் தன் குழந்தையை நெருங்கிச் சென்று பார்க்கும்போது அது தன் நிழல் குளத்தில் தெரிவதைக் காண்பதைப் போலத்தான்…” என்று ஒரு வரி. சித்தார்த்தனை வாழ்வு எப்படி புத்தனை நோக்கிச் செலுத்துகிறது என்று இவ்வளவு பூரிதமான மொழியில் யாராலும் சொல்ல முடியுமா தெரியவில்லை.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளைப் பொறுத்து அறிமுகமாகச் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் அவை தாங்களே யாரையும் விட மிக மிகப் பாந்தமாய் வாசகனோடு அறிமுகமாகி விடும். கதைகளை விளக்குவது என்பது அபத்தமானது. ஒரு வாசகன் தானே விளங்கிக் கொள்ள அவற்றில் ஏராளமானவை உள்ளன. அதே போல் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் குறித்து விமர்சனமாகச் சொல்லவும் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. கதைகளை எழுதும் அவசரத்தில், அல்லது தனக்குத்தானே முதல் வாசகனாகச் சொல்லிக் கொள்ளும் அவசரத்தில் ஒன்றிரண்டு தவறான வாக்கிய அமைப்புகள் வாசிப்பைச் சங்கடப்படுத்துகின்றன என்று சின்னஞ்சிறு பண்டிதத்தனமான குறைபாட்டை வேண்டுமானால் சொல்லலாம்.மற்றப்படி அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருப்பது போல “ சிறுகதை மேற்கிலிருந்து வந்த வடிவம் என்றாலும் இங்கே தமிழில் நாம் அதைத் தனித்துவத்துடன் வளர்த்தெடுத்திருக்கிறோம்…” ஆமாம் எஸ்.ராமகிருஷ்ணன் உங்களுக்கு அதில் பெரும்பங்கு இருக்கிறது. உங்களது இந்தக் கால் நூற்றாண்டுச் சாதனைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.
நன்றி : கவிஞர் கலாப்ரியா
   நன்றி.திரு.எஸ்.ராமகிருஷ்ணன் வலைப் பக்கத்தில் இருந்து............
                                                                                       அன்புடன் பொ.சங்கர்.....

No comments: