இந்தியாவில் முதல் இரயில் வட இந்தியாவில் மும்பை - தானே இடையே 1853 ல் இயக்கப்பட்டதாக நமது வரலாற்றுப் பக்கங்களில் , வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டு நாமும் படித்திருப்போம். ஆனால் இந்தியாவில் முதல் இரயில் சென்னையில் தான் இயக்கப்பட்டது என்பதும் அந்த இரயில் 1837 ல் இயக்கப்பட்டதும் நாம் அறியாத வரலாறு.
இந்தியாவில் இரயில் 1853ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக கற்பிக்கபட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் வடக்கு-தெற்காக பிற்காலத்திய வரலாற்றாய்வாளர்கள் இந்தியாவை பிரித்தமையே காரணம். ஆனால் உண்மையில் இந்தியாவின் தெற்குப் பகுதியில்தான் முதன்முதலில் இந்திய தொடர்வண்டிக் கழகம் இயக்கப்பட்டது. இந்தியாவில் இரயில்வண்டிகளின் அவசியம் மற்றும் சாலைகள் குறித்து 1832 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. அதனையடுத்து 1837 ஆம் ஆண்டு சென்னை நகர சாலை கட்டுமானப் பணிக்காக சர் ஆர்தர் என்பவரால் கிரானைட் கற்களைக் கொண்டு செல்ல தொடங்கப்பட்டது.
சர் வில்லியம் ஏவரி என்பவரின் உதவியால் நீராவி இயந்திரம் மூலம் செங்குன்றம் முதல் சிந்தாதரிப்பேட்டை வரை இயக்கப்பட்ட இரயில் சேவையே இந்தியாவின் முதல் இரயில் சேவை என்பதை பதிய வேண்டியதும் படிக்க வேண்டியதும் மிக அவசியம்.
ஆர்தர் காட்டன் என்பவர் இன்றைய செங்குன்றம் பகுதியை ரெட் ஹில் என்ற பெயரில் அழைக்க , ரெட் ஹில் இரயில்வேயை முதன்முதலாக உருவாக்கினார். இதுவே இந்தியாவின் முதல் இரயில் பாதை மற்றும் முதல் இரயிலும் ஆகும். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் இரயில்வே 1845 ல் உருவாக்கப்பட்டது.
1933 காலகட்டத்தில் கடும் வறட்சியும் பஞ்சமும் கோதாவரி மாவட்டங்களில் நிலவியது. அப்போதைய மாவட்ட அதிகாரி சர் ஹென்றி மவுண்ட் பிரித்தானிய அரசுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து பொறியாளர் ஆர்தர் காட்டன் கோதாவரி ஆற்றின் பகுதிகளைக் கள ஆய்வு செய்து மெட்ராஸ் ஆளுநருக்கு அனுப்பினார். பின்னர் 1846 டிசம்பர் 23 அன்று அணை கட்ட ஒப்புதல் கிடைத்தது. தாமதமின்றி, காட்டன் 1847 இல் அணை கட்டத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். பத்தாயிரம் தொழிலாளர்களும், ஐநூறு தச்சர்களும், ஐநூறு கொல்லர்களும் இவ்வணை கட்டுமானத்தில் ஈடுபட்டனர். இந்த அணை கட்டுமானத்திற்காக தற்காலிக இரயில் பாதைகள் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களைப் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட இரயில்வே பாதை இந்தியாவின் இரண்டாவது பாதையாகும்.
பிரிட்டீஸ் அரசாங்கம் கிழக்கிந்திய நிறுவனத்தை இரயில்வே அமைப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டது. அதன்படி பல தனியார் இரயில்வே அமைப்புகள் உருவாகின. 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர். ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேறு யாராவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு சென்றிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனச்சோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக்காட்டியவர் ஸ்டீவன்சன். இவர் இல்லாமல் இந்திய ரயில்வே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது . இது இந்தியாவின் மூன்றாவது இரயில் பாதை அமைப்பாகும். பிரித்தானிய அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது நீர்வழங்கல் கட்டுமானத்திற்கானக் கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
கிரேட் இந்தியன் இரயில்வே நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ல் பாம்பேயின் போரிபண்டர் நிலையத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானேவுக்குப் புறப்பட்டது. மூன்று நீராவி என்ஜின்கள் மூலம் இழுக்கப்பட்ட 14 வாகனங்களில் 400 பேர் பயணம் செய்தனர்.
சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் ஆகிய மூன்று நீராவி என்ஜின்கள் 14 பெட்டிகள் கொண்ட ரயிலை இழுத்தன. கிரேட் இந்தியன் தீபகற்ப இரயில்வே பயணிகள் பாதையை அமைத்து இயக்கியது. இந்த ரயிலை உருவாக்க 1,676 மிமீ (5 அடி 6 அங்குலம்) அகலப் பாதை பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1853 ஏப்ரல் 16 அன்று தொடங்கிய முதல் பயணிகள் இரயில் வரலாற்றிலும் மிக முக்கியமானதாக பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் இரயில்வே குறித்த பல பதிவுகள் இன்னும் பிரிட்டீஸ் அருங்காட்சியகத்தில் பேப்பர்களாக உள்ளது. இந்திய அரசு இரயில்வே அமைச்சகம் அதனை வெளிக்கொணர வேண்டும். வரலாற்றை அறிய வைக்க வேண்டும்.