Sunday, 29 September 2024

காந்திஜியின் இறுதி நாட்களும் இறுதி நிமிடங்களும்- அறிய வேண்டிய வரலாறு

             

                                                  

                                                             

     சுசிலா நய்யார், காந்திஜியின் உடனிருந்து கவனித்துக் கொண்ட மருத்துவர். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா 55 கோடி கொடுக்கப்பட்ட பிறகும் காந்திஜி தமது உண்ணாவிரதத்தைக் கைவிடாமல் தொடர்ந்த போது சுசிலா நய்யார் மிகுந்த அச்சம் கொள்ள ஆரம்பித்தார். காந்திஜிக்குத் தெரியாமல் அவர் பருகும் நீரில் ஆரஞ்சு பழச் சாறுகளைக் கலந்து கொடுத்தார். இதனைக் கண்டுபிடித்த காந்திஜி இப்படிச் செய்தால் அடுத்த 21 நாட்களுக்கு மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூற சுசிலா நய்யார் உடைந்து போனார். காந்தியின் உயிரைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைதிக்குழுவிடம் அவரின் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரைந்து சென்றார்.  ஜவஹர்லால் நேரு , படேல் ஆகியோரிடம் கூறி , அவரின் உடல் நிலை மிக மோசமடைகிறது என்று கூறினார். மவுண்ட் பேட்டன் தனது மனைவி எட்வினா உடன்  இரண்டு முறை காந்திஜியை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கூறினார். காந்திஜியைப் பார்த்து எட்வினா உடைந்து அழுதார். 


        1948 ஜனவரி 18 அன்று நேரு , படேல் , மவுண்ட் பேட்டன், மெளலானா ஆசாத் ஆகியோர் உடனிருந்து வலியுறுத்த உண்ணாவிரதத்தைக்  கைவிட முடிவெடுத்தார். அனைத்துச் சமூகத்தினரிடமும் உறுதிமொழி பெற்ற பிறகு , மெளலானா ஆசாத் அவர்களிடம் தனியே சில நிமிடங்கள் பேசினார். இந்நிலையில் சுசிலா நய்யார் ஆரஞ்சு பழச் சாறுகளைத் தயார் செய்து வைத்திருந்தார். மெளலானா ஆசாத், நேரு இருவரின் கைகளில்    வாங்கிப் பருகி உண்ணாவிரதத்தை ஜனவரி 18 அன்று நிறைவு செய்தார். இந்தியா பெருமூச்சு விட்டது. குறிப்பாக நேருவும் , படேலும் நிம்மதி அடைந்தனர். 

          காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தை உலகத்தின் புகழ் பெற்ற செய்தி நிறுவனங்கள் கொண்டாடின. ‘78 வயது மனிதரின் ஆற்றலும் அதிசயமும் உலகத்தை அசைத்திருக்கிறது’ என்று நியூஸ் க்ரோனிக்கல் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. 

        காந்திஜியை எப்போதும் வியக்காத தி டைம்ஸ் இதழ் , ‘ காந்தியின் தைரியமிக்க கோட்பாடுகள் இவ்வளவு உறுதியுடன் இதற்கு முன்பு வெளிப்பட்டதில்லை’ என்று எழுதின. 

      

     

புகழ்பெற்ற மான்செஸ்டர் கார்டியன் நாளிதழ் , ‘ காந்தி துறவிகளுக்கிடையே ஒரு அரசியல்வாதியாக இருக்கிறாரோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கிடையில் அவர் ஒரு துறவி’ என்று வருணித்து எழுதியது. இந்தச் செய்திகள் பிர்லா மாளிகைக்குத் தந்தியாக வந்து கொண்டிருந்தன. சுசிலா நய்யார் மற்றும் உதவியாளர்கள் அதனைப் படித்துக் காட்டினர்.  இதனைக் கேட்டுக்கொண்ட காந்திஜி எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் அமைதியாக மற்ற  பணிகளில் ஈடுபட்டார். 

      

           உண்ணாவிரதம் நிறைவுக்குப் பிறகு காந்திஜி கவலை அடைந்த மற்றொரு விசயம். நேரு , படேல் இடையிலான அதிகார ரீதியான போட்டி. அனைத்து அதிகாரங்களையும் படேல் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் உண்ணாவிரத நிறைவுக்குப் பிறகு காந்திஜியைச் சந்திக்க படேல் தவிர்த்து வந்தார். 

     அரசியல் மத சித்தாந்தம் காரணமாக காந்திஜியைக் கொல்ல ஒரு சிறு கூட்டம் தயாராகி வந்தது. 1948  ஜனவரி ல் நேரு உரையாற்றிய பொதுக் கூட்டத்தில் அதற்கான சமிக்கைகள் வெளிப்பட்ட போதும் அன்றைய காவல்துறை அதனைக் கவனிக்கத் தவறியது. நேரு உரையில் , காந்திஜியை நாம் இழந்து விடக்கூடாது என்று உணர்ச்சி பொங்க உரையாற்றிய போது , காந்தி இறக்கட்டுமே என்று சத்தமாக மதன்லால் கத்தினார். உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறை , சில மணிநேரங்களில் விசாரணை எதுவுமின்றி விடுதலை செய்தது.  மதன்லால்,  கார்க்காரே என்னும் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காந்திஜியின் பிர்லா மாளிகைக்குள் பல்வேறு நேரங்களில் வாய்ப்புகளை உருவாக்கி இடங்களைத் தேர்வு செய்தனர். 

          1948 ஜனவரி 20 ல் நாற்காலியில் அமர வைத்து தூக்கி வரப்பட்ட காந்தி தனது பிரார்த்தனை உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது வார்த்தைகள் முழுமை இல்லாமல் இருந்தமையால் சுசிலா நய்யார் அதனை விளக்கி மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். 

        அந்த நேரத்தில் மதன்லால் தோட்டத்தில் ஒரு பக்கத்தில் சிறு அளவிலான குண்டுகளை வெடிக்கச் செய்தான். மக்களிடையே பீதி ஏற்பட்டது. 

         அந்த நேரத்திலும், ‘பிரார்த்தனையின் போது வரும் மரணமே சிறந்தது’ என்று மகாத்மா காந்திஜி கூறிய போது சுசிலா நய்யார் , உடனிருந்த பலரும் அழுது புலம்பினர். அந்த நேரத்தில் பின்புறக் கட்டிடத்தில் இருந்து காந்தியை நோக்கி சுடும் முன்திட்டத்தில் கோட்சே ஈடுபடத்தொடங்கினான். ஆனால் கோட்சேவால் முடியவில்லை. இதற்குள் மதன்லாலை அடையாளம் கண்ட ஒரு பெண் இவன்தான் வெடிகுண்டு வைத்தவன் என்று கத்த , போலிசார் மதன்லாலைப் பிடித்துச் சென்றனர். இந்த நிகழ்வுகளுக்கு இடையில் கூட்டத்தை காந்திஜி அமைதிபடுத்தினார். அந்த நேரத்தில் காந்தி, நான் இப்போது பாகிஸ்தான் செல்ல ஆயத்தமாக உள்ளேன். அரசும் எமது மருத்துவரும் அனுமதி அளித்துவிட்டால் உடனடியாக கிளம்ப உள்ளேன் என்று கூற அதனை , மதன்லால் கூட்டாளிகளான கார்கரே, ஆப்தே கோபமுடன் மனதால் குறிப்பெடுத்தனர்.  காந்திஜியை உடனடியாக நாற்காலியில் அமர வைத்து  உள்ளே அழைத்துச் சென்றனர். 

              

               காந்தியின் உடல்நிலை, குண்டுவெடிப்பு குறித்து இந்தியா முழுவதிலிருந்தும் தந்தியும், தொலைபேசியும் குவிந்தன. செய்தி அறிந்து எட்வினா மவுண்ட் பேட்டன் உடனடியாக கிளம்பி வந்தார். நேருவும் , படேலும் அடுத்தடுத்து கிளம்பி வந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஜின்னா தொலைபேசியில் விசாரித்தார். 

        டெல்லி காவல்துறைத் தலைவர் டபில்யூ மெஹ்ரா இதனை விசாரிக்கும் பொறுப்பை ஏற்று தீவிரமாக விசாரிக்கிறார். மதன்லால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்க , காவல்துறையில் வழக்கமான விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணையில் காந்தியைக் கொல்லும் குழுவில் நான் ஒருவன் என்பதை ஒப்புக் கொள்ள, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதை எதிர்க்கவே இவ்வாறு செய்தோம் என்று ஒப்புக் கொள்கிறான். 

         டபில்யூ மெஹ்ரா காந்தியை நேரில் சந்தித்து , நிலைமையின் தீவிரத்தைக் கூற வந்த போது வாழ்த்துகள் மிஸ்டர் காந்திஜி என்று கூற , எதற்கு வாழ்த்து என்று கேட்டார் காந்தி. டில்லியின் நிலைமையை உங்களின் உண்ணாவிரதம் எளிதாக்கியது. அதற்கும், நீங்கள் தப்பித்தமைக்கும் காவல்துறை சார்பில் வாழ்த்துகள் என்று டபில்யூ மெஹ்ரா கூற  காந்தி எளிய புன்னகையைத்  தந்தார். பிர்லா  மாளிகையில் பாதுகாப்பை அதிகரிக்கிறோம் என்று கூற, எல்லோரையும் சோதனை செய்வோம் என்று கூற காந்தி கோபமுடன் மறுக்கிறார். 

          டபில்யூ மெஹ்ரா சாதாரண மனிதராக , காந்திஜியை மாற்ற முடியாது என்று தெரிந்தவராக இரகசியமாக காவலர்களின் எண்ணிக்கையை 5 லிருந்து 36 ஆக அதிகரிக்கிறார். அனைவரும் மாறுவேடத்தில் பிர்லா மாளிகையைக் காத்தனர். 

          1948 ல்  ஜனவரி 26 ல்  காங்கிரசு இயக்கத்தின் கூட்டத்தில்    உரையாற்றுகிறார். காங்கிரசு இயக்கம் மக்கள் பணிகளில் கூடுதல் ஈடுபாடு  காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 1948 ல்  ஜனவரி 27 ல் டெல்லியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குவ்வத் உல் இஸ்லாம் மசூதி விழாவில் கலந்து கொள்கிறார். காந்தியின் உண்ணாவிரத ஏழு கோரிக்கைகளில் இந்த மசூதி திருவிழா தடையற நடக்க வேண்டும் என்பது ஒன்றாகும். இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றான இந்த மசூதியில் இந்திய சுல்தான் “குத் உத் தின்” நினைவு நாளில் மாபெரும் திருவிழா நடைபெறும். மசூதியில் காந்திக்கு சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. சீக்கியர்கள் முஸ்லீம்களை ஆரத்தழுவி வரவேற்றனர். இது போல எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று காந்தி அந்த நிகழ்வில் வாழ்த்தினார். 

         காந்தியின் அடுத்தடுத்த நாட்கள்  மெதுவாக, இயல்பாக , சில நேரங்களில் பரபரப்பாக , சில நேரங்களில் வருத்தமாக நகர்ந்தது.ஜனவரி 29 ல் டெல்லியின் எல்லைப்புறத்தில் இருந்து சீக்கிய மற்றும் முஸ்லீம் குழுவினர் காந்தியைச் சந்தித்தனர். அப்போது குழுவில் இருந்த ஒருவர் கூறிய ஒரு வார்த்தை காந்தியை நிலைகுலையச் செய்தது. காந்தியாரே, போதும் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களால் நாங்கள் அதிகம் இழந்து விட்டோம். நீங்கள் இமயமலை சென்று விடுங்கள் என்று கூற , காந்தி அமைதி இழந்தார். காந்தியின் கடைசி உரை அந்த நேரத்தில் வெளிப்பட்டது. 


             மெளனமாக இருந்த அந்த நாளில் நேருவும் , படேலும் காந்தியைச் சந்தித்தார்கள். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காவல்துறையை அனுமதிக்க வேண்டும் என்று கேட்க, கூட்டத்தில் ஒரு காவல் உடையைப் பார்த்தாலும் நான் 21 நாட்கள் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று உறுதிபட தெரிவித்தார் காந்தி. இருவரும் திரும்பிச் செல்லும் போது  டபில்யூ மெஹ்ரா விடம் கவனமாக  மாறுவேடத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள் என்று கூறிச் சென்றனர். நேரு , படேல் இருவருக்கும் இடையே எந்தவிதமான மனஸ்தாபமும் இருக்கக் கூடாது என்று இருவரிடமும் காந்தி  வலியுறுத்தினார். 

              1948 ஜனவரி 30 எப்போதும் போல விடிந்தது. காந்தி தன்னுடைய நாளை பிரார்த்தனையுடன் தொடங்கினார். காலை  6 மணிக்கு ஆர்.கே . நேரு ( இந்திய வெளிவிவகாரத் துறை செயலர்  - ) என்பவர் தனது அமெரிக்கப் பயணம் குறித்து தெரிவிக்க காந்தியைச் சந்தித்து ஆசி பெற்றார். ஏழை தேசத்தின் பிரதிநிதியாக நீங்கள் எப்போதும் எளிமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். 

         மதியம் 2 மணிக்கு லைஃப் இதழுக்கு நேர்காணல் வழங்கினார். பிர்லா மாளிகையில் அதன் காவலாளிகளை விட மேலும் பலரைக் காவலில் இருக்க படேல் உத்தரவிட்டார். அன்று மாலை படேலை நேரில் வரச் சொல்லி இருந்தார் காந்திஜி.மாலை 4 மணி அளவில் காந்தியை படேல் சந்திந்தார்.  படேல் , நேரு கருத்து வேறுபாடுகளால் படேலை ராஜினாமா செய்யவும் காந்தி வலியுறுத்தினார். ஆனால் அது இயலாத காரியம் என்று படேல் மறுத்து விட்டார்.  மாலை 5 மணி பிரார்த்தனை நேரம். பல செய்திகள் குறித்து படேலும் காந்தியும் விவாதித்தனர். பிரார்த்தனை நேரத்தைக் கடந்தும் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சின் தீவிரம் கருதி இருவரையும் யாரும் தொந்தரவு செய்யவில்லை.  இருவரும் பேசி முடித்த பின்னர் காந்தி வேகவேகமாக பிரார்த்தனைக்குத் தயாரானார். படேல் இறுகிய முகத்துடன் இருந்தார். சிறிய தூர இடைவெளியில் இருந்த மைதானத்திற்கு நடந்து செல்ல ஆயத்தமானார். எப்போதும் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் போது முன் நடந்து செல்லும் சுசிலா நய்யார் காந்தியால் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டார்.   டபில்யூ மெஹ்ரா உடல் நலக் குறைவால் வரவில்லை. அடுத்த நாள் பொது வேலை நிறுத்தம் காரணமாக அவருக்குப் பாதுகாவலுக்கு நியமிக்கபட்ட அதிகாரியும் முக்கிய ஆலோசனைக்காக சென்றிருந்தார். 

          பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டதை அறிந்து தன்னுடன் இருந்தவர்களைக் கடிந்து கொண்டு வேகமாகச் செல்கிறார். பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கும் போது நாதுராம் கோட்சே கூட்டத்தில் வெளிப்பட்டு காந்தியை நேருக்கு நேராக எதிர் நின்று “நமஸ்தே காந்திஜி “ என்று கூறி காந்தியைச் சுடத் தொடங்கினார். அந்த இடம் பரபரப்படைந்தது. காந்தியை மாளிகை உள்ளே தூக்கிச் சென்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் காந்தியின் மரணம் அறிவிக்கப்பட இந்தியா மட்டுமின்றி உலகமும் கண்ணீரால் நனைந்தது. இந்த நிலைமையின் தீவிரத்தை மவுண்ட் பேட்டன் கூறிய சொற்களின் படி அகில இந்திய வானொலி நிலையம் இந்தியா முழுமைக்கும் அறிவித்தது. காந்தியின் இறுதி நாட்களும், இறுதி நிமிடங்களும் நாம் அறிய வேண்டிய வரலாறு.                   

          


Saturday, 7 September 2024

தலாய்லாமா – இந்தியா -சீனா – அறிய வேண்டிய வரலாறு



மத்திய ஆசியாவின் மலைத்தொடர் பகுதிகளில் அமைந்த நிலப்பகுதி திபெத். திபெத் நாடாக இல்லாமல் பல பகுதிகளாக பிரிந்து பரந்த பகுதிகளாக இருந்த நிலையில் ஏழாம் நூற்றாண்டில் சாங்ட்சன் என்னும் அரசர் திபெத் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த திபெத் நாட்டை உருவாக்கியவராகக் கருதப்படுகிறார். ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் புத்த மதம் பரவிய போது திபெத் நாட்டில் புத்த மதத்தை அறிமுகப்படுத்தியவராக சாங்ட்சன் கருதப்படுகிறார்.



16 ஆம் நூற்றாண்டில் திபெத் பிரிவினையால் பிளவுபட்டிருந்தது. இந்த பிரிவினையைப் பயன்படுத்தி சக்கர் என்னும் பகுதியை ஆட்சி செய்த லிக்டென்கான் என்பவர் திபெத் மீது படையெடுத்து வர , சரியான அரசர் இல்லாமல் நாடு தத்தளித்தது. அச்சமயத்தில் திபெத் மக்கள் 5 ஆம் தலாய்லாமாவை அணுகி நாட்டைக் காக்க வேண்டினர். 5 ஆம் தலாய்லாமா மங்கோலிய தலைவர் குஷ்ரிகானிடம் நாட்டை மீட்டுத் தர வேண்டினார். குஷ்ரிகானும் லிக்டென்கானை வீழ்த்தி நாட்டை மீட்டு 5ஆம் தலாய்லாமா வசம் ஒப்படைத்தார். அது முதல் 1959 வரை திபெத் தலாய்லாமா தலைவர்களாலேயே ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

        பதினான்காம் நூற்றாண்டில் இட்ஜோங்கபா என்பவர் தனித்த புத்த மதப் பிரிவைத் தோற்றுவித்தார். இவர்கள் கெலுக் அதாவது மஞ்சள் தொப்பி அணிந்த சமயத்துறவிகள் என்று அழைக்கப்பட்டனர். சிக்கிம் நாடு சிவப்பு நிறத் தொப்பி அணிந்த சமயத்துறவிகள் வாழ்ந்த பகுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

       1578 ஆம் ஆண்டு மங்கோலிய அரசரே தலாய்லாமா என்னும் பட்டத்தை வழங்கயதாகக் குறிப்புகள் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 3வது தலாய்லாமா காலத்திலேயே இப்பட்டம் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தக்காலகட்டத்திலேயே உலகின் பல இடங்களிலும் குருகுல மடங்கள் தனித்த ஆட்சி செலுத்தத் தொடங்கியிருந்தன. குறிப்பாக தமிழகத்தில் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் திருவாவடுதுறை ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டதாகவும் குறிப்புகள் கிடைக்கின்றது.

         17 ஆம் நூற்றாண்டில் திபெத் தலாய்லாமா தலைவர்கள் வசம் நாடு வந்தபோது தமது மதச்சடங்குகளுக்கு எவ்வித சிக்கலும் அரச, நிர்வாகக் காரணங்களால் வரக்கூடாது என்பதற்காக ‘பஞ்சன்லாமா’ என்னும் பதவி தோற்றுவிக்கப்பட்டு தலாய்லாமா ஆசியுடன் திபெத் பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்கினார். திபெத்திய வழக்கப்படி ‘பஞ்சன்லாமா’ ஒருவர் மறைவுக்குப் பின்னர் அவர்களை தலாய்லாமா தலைவர்களே தேர்ந்தெடுப்பது முறையாக இருந்து வருகின்றது. தலாய்லாமா மறைவுக்குப் பின்னர் அடுத்த தலாய்லாமாவைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘பஞ்சன்லாமா’ வையே சார்ந்ததாக இருந்து வருகின்றது.

      18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா ஆங்கிலேயர் வசம் இருந்தபோதிலும் திபெத் கலாச்சாரம் எவ்விதப் பாதிப்பும் இன்றி சீராகவே இருந்து வந்தது. 17 நூற்றாண்டில் 5 ஆம் தலாய்லாமா தொடங்கி 13 ஆம் தலாய்லாமா வரை எவ்விதச் சிக்கலும் இன்றி திபெத் இயங்கி வந்தது. இந்தியாவிற்கு 1947 ல் சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் 1950 வரை இங்கிலாந்து இராணியின் அதிகாரியாக திபெத் பகுதியில் இங்கிலாந்து ஆட்சி நிர்வாகமே நடைபெற்றதால் சீனா எவ்வித சிக்கல்களையும் அந்தக் காலங்களில் ஏற்படுத்தவில்லை.

         1935 ஆம் ஆண்டு தற்போதயை 14 ஆம் தலாய்லாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுவயது முதலே சிறந்த திறன்களைப் பெற்று சிறந்த ஆன்மீகத் தலைவராக தமது 20 ஆம் வயதில் திகழத்தொடங்கினார். 1950 களில் சீனாவின் தனிப்பெரும் தலைவராக மா சே துங் தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவில் அவரின் தலைமையில் ஆட்சி மலர்ந்தது. திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக தற்போதைய தலாய்லாமா கொண்டாடப்பட, அப்போதைய சீனா அரசு (இப்போதும்) இவரை மரபு வழி தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. 1958 ஆம் ஆண்டு சீனா திபெத் மீது பெரும் ஆக்ரமிப்பை நடத்தி போர் நடத்தியது. திபெத்லிருந்து பெரும்பாலான மக்கள் இந்திய நாட்டில் தஞ்சமடைய , இந்திய அரசு மனமுவந்து திபெத்தியர்களை வரவேற்று வாழ்விடங்களை வழங்கியது. 1959 ஆம் ஆண்டு 14 வது தலாய்லாமாவும் சாதாரண படைவீரன் போல மாறுவேடத்தில் இரகசிய வழியில் ஆற்றைக் கடந்து 33 நாட்களுக்குப் பிறகு இந்தியாவிடம் தஞ்சம் புகுந்தார். தலாய்லாமா கிளம்பிய அடுத்த நாளே அவரைத் தேடும் பணியை சீனா தீவிரப்படுத்தியது. கிட்டத்தட்ட 88 ஆயிரம் திபெத்தியர்கள் சீன இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இருப்பினும் சீனாவால் தலாய்லாமாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

       இந்நிலையில் தலாய்லாமாவிற்கு இந்தியா ஆதரவு அளித்து இடம் அளித்தது வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்தியாவிடம் சீனா, தலாய்லாமாவை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூற அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறுத்து திபெத்தியர்களுக்கும் தலாய்லாமாவிற்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று கூறிவிடுகிறார். இதனால் கோபமடைந்த சீனா , இந்தியா மீது 1962 ல் படையெடுத்தது. இந்தியா சில பகுதிகளை இந்தப் போரில் இழந்தது. உலக நாடுகளின் கண்டிப்பால் சீனா இந்தப் போரில் பின்வாங்கினாலும் இந்தியா பெரும் இழப்புகளைச் சந்தித்தது.

      தற்போதைய 14வது தலாய்லாமா 1995 ஆம் ஆண்டு ‘பஞ்சன்லாமா’ வைத் தமது தலாய்லாமா அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்தார். ஆனால் சிலநாட்களில் அந்த ‘பஞ்சன்லாமா’ எங்கிருக்கிறார் என்பதை அறிய முடியாமல் போனது. இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு சீன அரசு ஒரு ‘பஞ்சன்லாமா’ வைத் தேர்ந்தெடுக்க தற்போது சீன அரசு தேர்ந்தெடுத்த ‘பஞ்சன்லாமா’ தான் ஒரே வாரிசாக இருக்கிறார். தற்போதைய தலாய்லாமா மறைவுக்குப் பிறகு அடுத்த தலாய்லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் நிலவும் என்று திபெத்தியர்கள் கருதுகின்றனர்.

     தற்போதைய 14 ஆம் தலாய்லாமா காலத்திற்குப் பிறகு அடுத்த தலாய்லாமா தலைவரை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் பங்கு மிகுதியாக இருந்தாலும் பெரும்பாலான திபெத்தியர்கள் அதனை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உண்மை. அப்போதைய நிலையில் இந்தியாவின் உதவியை திபெத்தியர்கள் நாட வாய்ப்பு உண்டு. தலாய்லாமா , திபெத் காரணமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடுமையான மோதல் கடந்த அறுபது ஆண்டுகளாகவே நீடிக்கிறது என்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நாடு கடந்த அரசாங்கம் அமைக்க உத்தரவிட்டது. அந்த அரசு இந்தியாவின் தர்மசாலாவில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.