Tuesday, 28 May 2024
மார்க்கோபோலோ- அறிய வேண்டிய வரலாறு
Tuesday, 14 May 2024
இந்திய சுதந்திரப் போரில் தூந்தாஜி வாக் எனும் தோண்டியா வாக் - அறிய வேண்டிய வரலாறு
வரலாறு சில மனிதர்களின் தியாகத்தை மறந்தும் மறைத்தும் விடும். வரலாற்று ஆசிரியர்களும் சில நேரங்களில் மறைத்து விடுவதும் உண்டு. அப்படி வரலாறால் , வரலாற்று ஆய்வாளர்களால் மறைக்கப்பட்ட தூந்தாஜி வாக் என்பவர் இந்திய சுதந்திரப் போரில் ஆற்றிய பங்கு குறித்து நாம் அறிவது அவசியம்.
ஆங்கிலேயர்களை தென்னிந்திய அரசர்களே கதிகலங்க வைத்தனர் என்பதற்கு ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகளே சாட்சியாகவும் சரித்திரமாகவும் இருக்கின்றன. அவ்வகையில் தென்னிந்திய பகுதிகளில் ஐதர் அலி , அவரது மகன் திப்பு சுல்தான், ராணி வேலு நாச்சியார் , கட்டபொம்மன், தீரன்சின்னமலை என பல தென்னிந்திய அரசர்கள் ஆங்கிலேயர்களை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அந்த வகையில் தூந்தாஜி வாக் என்னும் வீரன் அரசனாகி ஆங்கிலேயர்களை மிரள வைத்தார் என்பதும் நமது வரலாற்றுப் பக்கங்களில் விடுபட்ட பெயராகவும் இருப்பது காலத்தின் பிழை.
திப்பு சுல்தானின் ஒரு படைப்பிரிவுக்கு தளபதியாக, திப்பு சுல்தானின் நம்பிக்கைக்கு உரிய மாவீரனாகத் திகழ்ந்தவர் தூந்தாஜி வாக். திப்பு சுல்தானின் தந்தையார் காலத்தில் அவரது படைப்பிரிவில் படை வீரனாக பணியைத் துவங்கி திப்பு சுல்தான் காலத்தில் தளபதியாக உயர்ந்தவர் தூந்தாஜி வாக்.
இந்திய அரசர்களில் ஆங்கிலேயர்களை அவர்களுக்கு நிகரான ஆயுதங்கள் வைத்து தாக்கியவர்கள் ஐதர் அலியும், திப்பு சுல்தானும் மட்டுமே. அந்த வகையில் சிறந்த படையணிகளை வைத்திருந்த மைசூர் மாகாண அரசர் ஐதர் அலி காலத்தில் ‘ஆங்கிலோ மைசூர் போர்’ முதலிரண்டும் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைய ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ‘மூன்றாம்ஆங்கிலோ மைசூர் போர்’ குறித்து வெளிப்படையாக அறிவித்து ஆங்கிலேயருக்கு எதிராக போரைத் தொடங்கினார். அந்தப் போரில் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக தூந்தாஜி வாக் பணியாற்றினார்.
‘மூன்றாம்ஆங்கிலோ மைசூர் போர்’ கோயம்புத்தூர், பாலக்காடு, சத்தியங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் ஆங்கிலேயர்களை விரட்டியட்த்து வெற்றி கண்டனர். அதன்பிறகு திப்பு சுல்தானுடன் மன வேறுபாடு காரணமாக தனி படையணி ஒன்றை உருவாக்கி மராட்டிய எல்லைப் பகுதிகளைத் தாக்கினார். எதிர்ப்புகள் காரணமாக மீண்டும் திப்பு சுல்தானிடம் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினார்.
நான்காவது ஆங்கிலோ மைசூர் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை சிறைப்பிடிக்க அதன் பிறகு மைசூர் படைகள் பிரிந்து போயின. திப்பு சுல்தானை வென்று விட்டோம் என்று வெற்றிக் களிப்பில் இருந்த நேரத்தில் திப்பு சுல்தானின் பல ஆயிரக்கணக்கான படை வீரர்களை தூந்தாஜி வாக் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயர்களுக்கு சிப்ப சொப்பனமாகத் திகழ்ந்தார்.
திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் மைசூர் பகுதியை மீட்ட நேரத்தில் பெரும் படையுடன் மைசூரின் வடக்குப் பகுதியில் ஆங்கிலேயர்களைத் தாக்கி வெற்றி கொண்டார் தூந்தாஜி வாக். சத்ரபதி மன்னர்களுக்கு அடுத்து பேஷ்வா என்னும் பதவியுடன் பொறுப்பில் இருந்து மராட்டிய பகுதிகளை ஆட்சி நடத்த மராட்டிய அரசர்களால் நியமிக்கப்பட்ட தலைமைப் பொறுப்பாளர்கள் பேஷ்வாக்கள். இவர்களை தூந்தாஜி வாக் எதிர்த்து மைசூரின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றி ‘இரு உலகங்களின் இராஜா’ என்று தூந்தாஜி வாக் பட்டம் சூட்டிக்கொண்டார்.
(பேஷ்வா)
ஆங்கிலேயரும் பேஷ்வா படையும் இணைந்து தூந்தாஜி வாக்கை எதிர்க்க முடிவு செய்தன. மராட்டிய பேஷ்வாவும் , மாறுவேடத்தில் சில வீரர்களை மைசூரின் வடக்குப் பகுதிக்கு அனுப்பினார்கள். மாறுவேடத்தில் சென்றவர்களை தூந்தாஜி வாக் சிறைபிடிக்க , ஆங்கிலேயர்கள் அவர் மீது படையெடுக்க திட்டமிட்டனர்.
தூந்தாஜி வாக் தலைமையிலான படையில் 90 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் 75 ஆயிரம் காலாட்படை வீரர்களும் இருந்தனர். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு பெரும்பாலான படை வீரர்கள் தூந்தாஜி வாக் தலைமையில் ஒன்றிணைய ஆங்கிலேயர்கள் பெரும் சிக்கலாக தூந்தாஜி வாக் மாறினார். பெரும்பாலான மைசூர் பகுதிகளை தூந்தாஜி வாக் கைப்பற்றிக் கொண்டே வந்தார். அவரின் பலத்தைக் கண்டு திகைத்த ஆங்கிலேயர்கள் பலமான கூட்டணி அமைத்து தூந்தாஜி வாக் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.
1800 ஆம் ஆண்டு மைசூர் கவர்னராக ஜெனரல் வெல்லஸ்லி நியமிக்கப்பட்டார். ஜெனரல் வெல்லஸ்லி மைசூரைச் சுற்றியிருந்த பல அரசுகளுக்குக் கடிதம் எழுதி , தூந்தாஜி வாக் வளர்ச்சியைத் தடுக்க நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி 1800 மே 26 ல் கடிதம் எழுதினார். . ஜெனரல் வெல்லஸ்லி தலைமையில் மைசூர் உடையார் வம்சம், ஹதராபாத் நிஜாம் அரசர்கள் ஒன்றிணைந்து 1800 ஆம் வருடம் ஜூன் மாதம் 16 ஆம் நாள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஆங்கியேயரின் படைகள், உடையார் வம்ச படைகள், ஹதராபாத் நிஜாம் படைகள் என பல படைகள் மோதியும் அவர்களை தூந்தாஜி வாக் தைரியமுடன் எதிர்கொண்டார்.
ஜூன் மாதம் 16 ஆம் நாள் தொடங்கிய போர் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தது. போரில் முதலில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தூந்தாஜி வாக் கைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கும் நிஜாம் அரசர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். ஆங்கிலோ மைசூர் போர்கள் கூட குறிப்பிட்ட நாட்களில் முடிவடைய , தூந்தாஜி வாக் உடனான போர் நீண்டு கொண்டே சென்றது. செப்டம்பர் 10 ஆம் நாள் இன்றைய இராய்ச்சூர் மாவட்டத்தில் தூந்தாஜி வாக் ஆங்கிலேய படையால் கொல்லப்பட்டார். ஆங்கிலேயர்களுக்கு பெரும் சொப்பனமாகத் திகழ்ந்த தூந்தாஜி வாக் கிட்டத்தட்ட 90 நாட்கள் படைகளை நடத்தி ஆங்கிலேயர்களையும் பிற அரசர்களையும் திணறடித்தார். போரின் இறுதியில் அவரது சொற்ப வீரர்கள் கைது செய்யப்பட்ட போது , ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லி , தூந்தாஜி வாக் மகனுக்குப் பாதுகாப்பை வழங்க முன்வந்தார். மைசூர் உடையார் வம்சத்தினரும் ஹதராபாத் நிஜாமும் தூந்தாஜி வாக்கின் 4 வயது மகன் சலாபத் கானை கொல்ல முடிவெடுத்த போது ஜெனரல் வெல்லஸ்லி அதனைத் தடுத்து சலாபத் கானை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
( ஜெனரல் வெல்லஸ்லி)
வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட தோண்டியா வாக் என்று அழைக்கப்பட்ட தூந்தாஜி வாக் நிச்சயம் அறிய வேண்டிய சுதந்திர வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்.