ஆசிரியராற்றுப்படை
வைகாசி மாத புலர் காலைப் பொழுதில் ஆதீனத்
தென்னந்தோப்பு பம்பு செட்டில் குளியல் முடித்து சாந்தலிங்கனார் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பயிலத் தொடங்கினோம்.
நால்வரையும் அறியாது நாலாயிர திவ்ய பிரபந்தமும் தெரியாது நாங்கள் வீற்றிருக்க நாவுக்கரசராய் நீர் நுழைய
நிமிர்ந்து அமர்ந்தோம்.
வறுமை எங்கள் வயிற்றைப் பதம் பார்க்க
பாணர்களாய் நாங்கள்
கல்விக்கு ஊற்றெடுக்க தமிழை வாரி வாரி வழங்கிய வாகீசரே!
கல் தூணைப் பூட்டி கடலில் பாய்ச்சியது போல ,
கற்களையும் சிற்பமாக்கிய சிவநேசரே!
பருவம் தீண்டிய போது
பக்குவமாய் ஆற்றுப்படுத்திப் பதிகப் பலனை பரிசளித்த அப்பரே!
பரிபாடலை நொய்யல் ஆற்றின் நதியில் அமர வைத்து உணர வைத்த ஆற்றின்ப வெள்ளமே!
திருநாவுக்கரசரே!
உமக்குக் குரு காணிக்கை அளிக்காமல் உமது நடையை கொள்ளையடித்துக் கொண்ட சீர் மரபில் நான் மட்டும்
நேர் நேர் தேமா!
வினைத் தொகையை முக்காலமும் உணர்த்தி வரும் பண்புப் பெயரே!
வேற்றுமை எட்டு வகை மட்டுமல்ல (உலகில்) என்பதைக் கற்றுக்கொடுத்த தை மழையே!
உங்கள் வாழ்வில் மட்டும் இயல்புப் புணர்ச்சியாய் இருங்கள் என்றும் , உலக வாழ்க்கையில் விகாரப் புணர்ச்சியாய் தோன்றி, திரிந்து அடுத்தவரை கெடுக்காமல் வாழ வழி செய்த திருநாவுப்படையில் என்னையும் ஓர் அணியாய் அழகு படுத்திய ஆவணமே!
அலகு மட்டுமல்ல
அழகையும் கற்றுணர்ந்தால் அம்மை அப்பனுக்கு சீர் பிரிக்க வேண்டியது இல்லை என்பதை "நாள் மலர் காசு பிறப்பால்" உணர வைத்த உவமைத் தொகையே!
ஆசிரியராய் ஞானத் தகப்பனாய் எங்களை (பாணர்களை) ஆற்றுப் படுத்தி வரும் பேரூராதீனத் தமிழ்க் கல்லூரியின் திருநாவுக்கரசே !
உம்மை வணங்குகிறோம்.
பொ.சங்கர்