






2018 டிசம்பர் மாத இறுதியில் நீண்ட நாள் தள்ளிப்போன மதுரைப் பயணத்தை திடிரென திட்டமிட்டு காரில் பயணம்..காலை வழியில் உணவுகளைத் தயார் செய்து நான் என் மனைவி மற்றும் மகன் கபிலனுடன் சுற்று வழிச் சாலையில் பயணப்பட்டோம்.
மேட்டுப்பாளையம் - அவினாசி - செங்கப்பள்ளி -ஊத்துக்குளி காங்கேயம் வந்து சாலையோர கோவிலில் ( டீக்கடையைக் கோவில் என்று தான் அழைப்போம். ) தேனீர் அருந்தினோம். மீண்டும் பயணப்பட்டு கரூர் வந்தடைந்தோம்..
கரூர் வந்து காஷ்மீர்-கன்னியாகுமரி சாலையைக் கண்டடைந்து அதில் பயணம்.. 45 நிமிடப் பயணத்திற்குப் பின் தாடிக்கொம்பு கோயிலுக்குச் சென்றோம்.. சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்ந்தது. நின்று ரசிக்க மனம் லயித்தது. அந்தக் காலத்தில் சிற்பிகள் கோயில் கட்ட ஒப்பந்தம் செய்யும் போது பேரூர் - தாடிக்கொம்பு போன்ற ஏழு கோயில்கள் மாதிரி கட்ட இயலாது என்றே குறிப்பிடுவராம்.. அவ்வளவு அழகு.. மீண்டும் முதன்மைச் சாலையில் பிரிந்து அலங்காநல்லூர் வழியாக பயணம் செய்து அழகர் கோயிலை அடைந்தோம். தொ.பரமசிவனார் எழுதிய அழகர் கோயில் நினைவில் வந்தது. நல்ல நூல். பின்பு மலையேறி பழமுதிர்சோலை அறுபடைத்தள வழிபாடு.. பின்பு மதுரை வந்து பிர்லா விடுதியில் தங்கினோம்.. குறைவான மனதுக்கு நிறைவான தங்கும் இடம். மதுரை ஆலயப் பிரவேசம் மனமெங்கும் மகிழ்ச்சி.. ஆயிரங்கால் மண்டபம், அர்த்த சாம பூசை ,தெப்பக்குளம், மீனாட்சி சன்னிதி, சொக்கன் சன்னிதி வழிபாடு முடிந்து ஆலயத்தில் அமர்ந்து காலாற ஓய்வு.. மீண்டும் இந்தப் பயணம் என்று வாய்க்குமோ? என்று நினைவில் அறை வந்து ஓய்ந்து,
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால் என்ற சுந்தர ராமசாமியின் கவியை நினைந்து மறுநாள் நேதாஜி சிலை அருகே உள்ள கோவிலில் தேனீர் அருந்தி பயணம் . வழி நெடுக வானம்.. சாலை முழுக்க செவ்வரளிப் பூக்கள்.. மனமெங்கும் மகிழ்ச்சி..மனைவி மகனுடன் மண்வாசனைத் தொடர மழைத் தூறல் ஆரம்பிக்க மேட்டுப்பாயைம் நோக்கி பயணம் தொடங்கியது..
அன்புடன்
. பொ. சங்கரன்
ஒரு புத்தகம், அது எதிர்பாராமல் எனக்குக் கிடைக்கிறது. அந்தப் புத்தகம் உலகிலுள்ள புத்கங்களிலேயே மேன்மையானது எனப்படுகிறது. அன்புச் சகோதரர்கள் இரோஷன் , கனிஷ் கர் இருவரும் எனது திருமணத்திற்கான பரிசாக அந்தப் புத்தகத்தை அளித்திருந்தார்கள்.
அதன் மூலம் மிகெல் நைமியால் எழுதப்பட்டது. தமிழில் புவியரசு மொழிபெயர்த்திருக்கிறார்.
அந்தப் புத்தகத்தின் பெயர் 'மிர்தாதின் புத்தகம்' - The Book of Mirdad
புத்தகமென்பது அதில் இருக்கும் விடயப்பரப்பைத் தாண்டி அது கொடுக்கும் அனுபவத்தில்தான் முக்கியத்துவம் பெறுகிறது என நினைப்பவன் நான். இந்தப் புத்தகம் அதன் வாசிப்பு அனுபவத்தின் பின்னர் என்னை நெடு நேரம் உறைய வைத்துவிடுகிறது. கிடைக்கும் நேரத்தில் ஒரு அத்தியாயத்தைத்தானும் முழுமையாகப் படித்துவிடுவேன். அந்த அனுபவத்தின் பின்னர் நான் சந்திக்கிற ஒவ்வொரு கணங்களும் எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கிறது. அது எந்தக் காரணமும் அற்ற ஆனந்தம்.
மதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை ஒரு முறை உடைத்துப் பார்த்துவிடுங்கள். இங்கு மிர்தாத்தின் தெறிக்கும் வசனங்கள் உங்களைப் பலமுறை உடைத்துவிடும் என்பது திண்ணம்.
புவியரசு அந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்துப் தனது முன்னுரையில் வாசக அனுபவங்களையும் மொழிபெயர்ப்பு அனுபவங்களையும் கூறுகிறார், அதனை வாசிக்கும்போதே ஆர்வ மிகுதியால் கண்கள் வார்த்தைகள் மேல் தாவத் தொடங்கியது.
ஞானத்தின்பால் நாட்டமுடையவர்களிற்கு இந்தப் புத்தகம் பெரும் கொடையாக இருக்கும். இதை ஒரு நாவல் என்று கூறலாம். அல்லது ஒரு தத்துவப் புத்தகம் என்றும் சொல்லலாம். இதை ஓர் நாவலாகப் பார்ப்பதோ அல்லது தத்துவப் புத்தகமாகப் பார்ப்பதோ அவரவரின் பக்குவநிலையைப் பொறுத்தது.
புத்தகம் பற்றி ஓஷோ கூறியிருப்பது:
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களையும்விட, மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்' மட்டுமே.
படிக்கும்போது, உங்கள் மனம் தியானநிலையில் இல்லையென்றால், அது ஒரு நாவல் படிப்பதுபோல ஆகிவிடும்.
'வெற்றி பெறும் ஏக்கம் கொண்டவர்களுக்கு இது, ஒரு கலங்கரை விளக்கமும், ஒரு கடற்கரையும் ஆகும்.மற்ற அனைவருக்கும் இது ஓர் எச்சரிக்கை'
இவ்வாறு மிகெல் நைமி ஒரு எச்சரிக்கையுடன் பயணத்திற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார். உண்மையில் அது ஒரு பயணத்துடன்தான் தொடங்குகிறது.
ஆதி வெள்ளப்பெருக்கின் பின்னால் உயிர்தப்பியவர்களுடன் மிதந்துபோன பேழை கரை ஒதுங்கிய இடமான பலிபீடச் சிகரத்தை நோக்கிய ஒருவனின் பயணமே அது. அந்த ஒருவன் நாமாக இருக்கிறோம். அவன் தனது பயணத்தை வழமைக்கு மாறாய் மலையின் ஆபத்தான செங்குத்துப் பாதையில் அமைத்துக்கொள்கிறான். பலிபீடச் சிகரத்தை அடையும் வரை வழியில் அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் சிலிர்ப்படைய வைக்கின்றன. அங்கு சந்திக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்களும் அவர்களின் வார்த்தைகளும்
அற்புதமானவை.
மிகெல் நைமி கலீல் ஜிப்ரானின் உயிர்த்தோழன். ஜிப்ரான் மொத்தமாக 99புத்கதங்கள் எழுதியிருக்கிறார். அவருடன் கூடவே வாழ்ந்த மிகெல் நைமி ஒரே ஒரு புத்தகத்தை எழுதி இந்த உலகத்திடம் கொடுத்துவிடுகிறார். அந்த ஒரு புத்தகமே எல்லாவற்றிற்கும் விடையாக அமைகிறது.
புத்தகத்தின் நாயகனான மிர்தாத் தூவும் வார்த்தைகள் எல்லாம் அற்புதம். ஆன்மீக நாட்டமுடையவர்களிற்கு அதன் பொருள் தெளிவாய் விளங்கக்கூடும்.
புத்தகத்தின் முதற்பகுதி பலிபீடச் சிகரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒருவனின் அனுபவங்களைச் சொல்கிறது, அந்தச் சிகரத்தில் ஒரு மடாலயம் இருக்கிறது. அங்கே ஒன்பது துறவிகள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு ஒன்பது துறவிகள் மாத்திரமே இருக்க வேண்டும். ஒருவர் இறந்துவிட்டால் இறைவன் தகுந்த ஆளை அனுப்பி வைப்பான் என்பது நம்பிக்கை.
அப்படி ஒருவர் இறந்தபோது, மிர்தாத் அங்கே வந்து சேர்கிறார். அவரை அங்கே இருக்கும் மூத்த துறவி சமாதம் வேலைக்காரனாக மட்டும் அனுமதிக்கிறார். ஏழு ஆண்டுகளாக மிர்தாத் மௌனக் கோலம் பூண்டுகொள்கிறார். ஏழு ஆண்டுகளின் பின்னால் அவரைத் துறவியாக மூத்த துறவி ஏற்றுக்கொள்கிறார். மிர்தாத் மௌனம் கலைந்து பேசத் தொடங்குகிறார். அவரது பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் அங்குள்ள இளம் துறவியான நரோண்டா பதிவு செய்கிறார்.
அந்தப் பதிவேடுதான், 'மிர்தாதின் புத்தகம்'
"முன்வாசல் வழியாகவே உள்ளே செல்லுங்கள்..." என்ற அறிவுரைக்கேற்ப முதலிலிருந்தே வாசிக்கவேண்டும். இல்லாவிடின் புத்கத்தின் முழுப்பயனையும் இழக்க நேரிடும்.
ஒரு ஞானப்புதையலான இந்தப் புத்தகத்திலிருந்து பளிச்சிடும் முத்துக்கள்.
'சிறந்த பேச்சு, ஒரு நேர்மையான பொய்
மோசமான மௌனம், ஒரு நிர்வாண உண்மை'
'வாழ்வதற்காகச் செத்துப்போ!
சாவதற்காக வாழ்ந்திரு!'
' அன்புக்கு பரிசுகள் தேவை இல்லை. அன்பே அன்பின் பரிசு '
'நான் என்பது ஒரு நீரூற்று. அந்த மூலத்திலிருந்துதான், எல்லாமும் பொங்கி வருகின்றன. மறுபடியும் அவை, அதற்குள் சென்றுதான் ஒடுங்குகின்றன. நீரூற்று எப்படியோ, அப்படித்தான் வெள்ளப்பெருக்கமும், பாய்ச்சலும்'
"உங்களது உள்ளுணர்வுக்கு ஏற்றபடியே உங்களது 'நான்' அமைந்திருக்கும். உங்கள் 'நான்' எப்படிப்பட்டதோ, உங்கள் உலகமும் அப்படிப்பட்டதே. உங்கள் 'நான்' தெளிவாகவும், உறுதியான பொருள் கொண்டதாகவும் இருந்தால், உங்கள் உலகமும், தெளிவாகவும், உறுதியான அர்த்தம் கொண்டதாகவும் இருக்கும்."
"இறைவன், 'நான்' என்று சொல்லும்போது, சொல்லப்படாதது எதுவுமே மிச்சம் மீதி இல்லை. "
"மனிதன், கடவுளின் பிள்ளையல்லாமல் வேறென்ன? அவன் கடவுளைவிட வேறாகத்தான் இருக்கமுடியுமா? ஒரு வித்துக்குள்ளே தேக்குமரம் ஒடுங்கியிருக்கவில்லையா? "
"கடவுளைப் போவே மனிதனும் ஒரு படைப்பாளி. 'நான்' என்பதே அவனது படைப்பு."
"உங்கள் கண்களில் தோன்றம் ஒளி, உங்களது ஒளி மட்டுமல்ல. கதிரொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைவரின் ஒளியும் அதுதான்."
"உங்கள் கனவுகள், உங்களுடையவை மட்டுமல்ல. உங்கள் கனவுகளில், பிரபஞ்சமே கனவு காண்கிறது."
"கடவுள் பல அல்ல, கடவுள் ஒன்றுதான், மனிதரின் நிழல்கள் பலவாக இருக்கும் வரை அது பலதான். நிழல் இல்லாதவன், ஒளியில் இருப்பவன், நிழல் அற்றவனே ஒன்றே கடவுள் என்பதை உணர்வான் கடவுளே ஒளிதான், ஒளியால் தான் ஒளியை உணரமுடியும்"
மிர்தாதின் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும் உலகம் வேறு. அந்தப் புத்தகத்திற்கான வாசிப்பு அனுபவமே ஒரு தியானத்திற்கு நிகரானது. அதன் முடிவும் முடிவற்ற
பல்லாயிரம் கேள்விகளுக்கான விடையாகவும் அமைகிறது.
ஒருவரும் தம் வாழ்வில் தவறவிடக்கூடாத புத்தகம். எனது புத்தக அலுமாரியில் இது ஓர் வைரமாய் ஜொலிக்கிறது.