நனைந்த வார்த்தைகள்
நானிருந்த பொழுதில் நகம் மட்டும் ஆயுதமாய் என்னிடம்
இருந்தது.
நாளொரு பொழுதில்
நான் என் விரல்களை இழக்கக் கூடும்.
நாளை எனக்கு
நிச்சயம் என்றுநான் நம்பவில்லை.
நான் நீண்ட
நேரம் யாருக்கு காத்திருக்கிறேன்.
நானாக நான்
இருக்கும் என்னை இச்சமூகம் கைவிட்டது.
நனைந்த வார்த்தைகளை
எல்லோரும் தருகின்றனர்.
நாங்கள் நனைந்த
போது எங்களுக்கு யாரும் குடை சுமக்கவில்லை.
நனைந்த வார்த்தைகளில்
பல நேரங்களில் நாங்கள் குளிராலும் பாதிக்கப்பட்டோம்.
நனைந்த வார்த்தைகளில்
நஞ்சும் உண்டு.
நனைந்த வார்த்தைகளில்
புனைவும் உண்டு.
எல்லோரும்
நனைந்த வார்த்தைகளைத் தருகிறார்கள்.
சிலர் எங்களின்
நனைந்த வார்த்தைகளைத் திருடுகிறார்கள்.
எங்களின்
நனையாத வாழ்க்கையைப் பறித்து விட்டு…
எங்களுடன்
நனைய மறுக்கும் மதம் சாதி இனம் என
எதுவும் எங்களுடன் நனையவில்லை.எல்லாவற்றையும் இழந்து காடும் வீடும் மானமும் இழந்து நனைகிறோம்.
அடையாளம்
இல்லாத எங்களுக்கு எந்த அடையாள அட்டையும் இல்லை.
பறவையைப்
போல் திரிகிறோம்.ஏதேனும் ஒருநாள் மடிவோம்.