Friday, 11 December 2015

இயற்கை அறிவு ,நீரும் நிலனும்,சூழல் தூய்மை

இயற்கை அறிவு

பழந்தமிழரிடையே காடு கொன்று நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. இருப்பினும், அவர்கள் அழித்த காடுகளுக்குப் பதிலாக குளம் தொட்டு வளம் பெருக்குவதை மேன்மையான அறமாகக் கருதி இயற்கைச் சமன்மையைப் பேணிப்பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் இன்றியமையாமை உணர்ந்து ‘நீரின்றியமையாது உலகு‘ (20) எனக் குறள் நீர்வளத்தின் மேன்மையைச் சொல்கிறது. ஐந்துபூதங்களின் அவசியத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் சொல்கிறது:
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
புறம் 2
இப்பாடல் ஐம்பூதங்களும் மானுடத்தின் தேவைக்குப் பயன்படவேண்டும் என்கிறது.

நீரும் நிலனும்

நிலம் என்பது உடம்பு. நீர் என்பது உயிர். ”உடம்பால் அழியின் உயிரால் அழிவர்” என்பது திருமூலர் கூற்று. நிலம் எனப்படும் உடம்பு அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், நீர்நிலைகளான உயிரைப்பேணவேண்டும் என்று பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். பழந்தமிழர் நீரின் சிறப்பை பலவகைகளில் எடுத்துரைக்கின்றனர். வள்ளுவர், அமிழ்தம் என்று மழைநீரைக் குறிப்பிடுகிறார்.
”நீரான் வீறு எய்தும் விளைநிலம்” என நீருள்ள நிலமே சிறப்புடையது, பெருமையுடையது என நான்மணிக்கடிகை கூறுகிறது. ‘தீமுரணிய நீரும்‘ என்ற புறநானூற்றுப் பாடல் நீர் நிலைகளைப் பெருக்கினால் புவி வெப்பமடைவதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.
நீரைத் தேக்கும் வழிகள் பற்றிய குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. நீரின் இயல்பானது ‘குழித்துழி நிற்பது‘ (நாலடியார்.31) என்பதால், அந்நீரை குழிகள் (குளம்) அமைத்துத்தேக்க வேண்டும். `நீரான் அறிப மடுவினை‘ (நான்.80) என்ற பாடல் குளம் அமைத்து தேக்கும் நீர் ஒரு ஆறு உள் அடங்கும் அளவிற்கு இருக்கவேண்டும். (நான்.54) என்றும் நீரைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறது. இதன் மூலம் பழந்தமிழர்,குளம் தொட்டு வளம் பெருக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனார் என்பது புலனாகுகிறது.
குளம் பற்றிய பிற சங்க இலக்கிய குறிப்புகள்:
  • ”நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே“ (புறம்.18.27)
  • மடு, குளம் (பெரும்.288,மதுரை.710,குறுஞ்சி.63,மலைபடு.47)
  • “அறையும்பொறையும் மணந்தலைய எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை தெண்ணீர்ச்சிறுகுளம்....”(புறம்.118)
(இப்பாடல் எட்டாம்நாள் தோன்றும் பிறை போன்ற வளைந்த தோற்றுமுடையகரையுடைய குளம்கட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது.)
  • ‘நீர்அறம் நன்று நிழல் நன்று‘(சிறுபஞசமூலம்.61)
  • ”குளம்தொட்டு காவு”(சோலை) - (பதிற்றுப்பத்து 64)
  • ‘காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிது‘
(குளம் அமைப்பதோடு சோலைகளை அமைப்பது அறச்செயல் என்கிறது இனியவை நாற்பது

நிலைகொள் சூழலியல்

நிலைகொள் வேளாண்மையின் அடிப்படைக் கூறான பிறருக்குத் தீங்கு வராவண்ணம் செயல்பட வேண்டுமென்பது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குறள் நிழலும் நீரும் முதலில் இனிமையாக இருந்து பிறகு துன்பம் தருவதாக மாறிவிடக்கூடாது என எச்சரிக்கிறது.[1] பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்குத் தீமை தருவதாக மாறினால் ஒரு காப்பு உண்மையான காப்பு ஆகாது என முதுமொழிக்காஞ்சி ‘மேல்வரவறியாதோன் தற்காத்தல் பொய்‘ (பொய்ப்பத்து.7) என்கிறது. ,காரணமின்றி எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்பதனை ‘சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு‘ என சான்றோர் எனப்படுவோர் காரணமின்றி ஒரு பாம்பைக்கூட கொல்ல மாட்டார்கள் என்கிறது பழமொழிநானூறு (313).
தாவர இனங்களையும் காக்க வேண்டும். விளையாட்டிற்காக் கூட சிறு செடியையும் தாழ்வாகக் கருதி தீங்கிழைக்கக்கூடாது. சிறு செடியே பிற்காலத்தில் வளர்ந்து யானை பிணிக்கும் மரமாகிப் பயன்படும் என்று நாலடியார் சொல்கிறது.[2]
ஒரு செயலால் எதிர்காலத்தில் வரும் இடையூறுகளை அறிந்து அதற்கேற்பவே அதன் பயன்களை மக்கள் பெறுமாறு செய்யவேண்டும். முன்பு நன்மை போலத் தோன்றவன பின்னர் பெருந்தீமை தந்துவிடும் என்பதை ”ஏற்றமுடைமை எதிர்கோளினறிய” (எதிர்காலத்தி்ல் வரப் போகும் நன்மை தீமை அறிதல் - முதுமொழிக்காஞ்சி.12) என்றும் ”ஒப்புரவறிதலிற் தகு வரவில்லை” ( விளைவு அறிந்து செய்வதே சிறந்த வரவு முதுமொழிக்காஞ்சி.5) என்றும், ‘நன்மையும் தீமையும் நாடி ‘(குறள்) என்றும் தமிழ் இலக்கியங்கள் முன்னெச்சரிக்கை உணர்வோடு எதனையும் செய்ய வேண்டும் என்கின்றன.
பகுத்தறியும் ஆற்றல் பெற்ற மனிதனே அனைத்து உயிர்களையும் காக்கும் வல்லமை படைத்தவன். ஏலாதி இத்தகுதி பற்றியே மனிதனை, ‘பல்லுயிர்கும் தாயன்ன என்னத்தகும்‘ (5)எனப் போற்றுவதோடு உயிரினங்களையும்,தாவரங்களையும் காரணமின்றித் துன்புறுத்தாதவன் ‘விண்ணுலகத்தேவன்‘ (2)என்றும் அப்படிப்பட்டவன், ‘பிற உயிர்களைத் தானும் கொல்ல மாட்டான், பிறர் கொல்வதற்கும் உடன்படமாட்டான்‘(8) என்றும் உயர்த்திப் பேசுகிறது.

மழைவளம்

மரங்கள் பாதுகாக்கப்பட்டால் மாரி பொய்க்காது என்று பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். ‘நெல்லும் உயிரே நீரும் உயிரே‘ என்ற கருத்துடைய பழந்தமிழர் உழவிற்காகவும் வேள்விக்காகவும் மட்டுமே மரங்கள் வெட்டப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததினால், வெகு சில வகை மரங்களை மட்டுமே அழித்துள்ளனர்.
சந்தனம், வகுளம், அகில், வேங்கை, விசை, சுரபுன்னை போன்ற மரங்கள் மட்டுமே பயிர்த்தொழில் செய்ய அழிக்கப்பட்டுள்ளன. சந்தன மரங்களைத் தினைப் புனக்காவலின் போது வெயிலில் நின்று பறவைகளை விரட்ட வேண்டிய சூழலில் வெப்பம் தவிர்க்க மேனியில் தடவிக் கொள்ளப் பயன்படுத்தி உள்ளனர்.[3] மேலும், பரண்களுக்கு கால்கள் அமைக்கவும், சந்தனக் கட்டைகளை நெருப்பிலிட்டு புகையை வான்வழி செலுத்தினால் மழை வரும் என்ற நம்பிக்கையின் பொருட்டும் வெட்டியுள்ளனர்.[4]
சந்தன மரங்களைக் கொண்டு யாகம் செய்தால் மழை வரும் என வேதங்களும் கூறுகின்றன. மேற குறிப்பிட்ட மரங்கள் மட்டுமே அழிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருந்துள்ளனர். இதைத் தவிர்த்து சயநலத்திற்காக பிற மரங்களை வெட்டி அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவர்களின் வீடுகளிலிருந்து பெண் எடுக்கவும் தயங்கியுள்ளனர். ‘சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அவ்விடத்தில் பயிர்த்தொழில் செய்பவர்கள் பிறர் படும் துன்பத்திற்கு வருந்த மாட்டார்கள். அவர்கள் வீட்டில் பிறக்கும் பெண்பிள்ளைகளும் பிறர்படும் துன்பத்திற்கு வருந்தமாட்டார்கள். அத்தகையோரின் பெண்ணை விரும்புவது குறித்து ஆராய்ந்து பார்‘ எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறும் வகையில் திணைமாலைநூற்றைம்பது பாடல் ஒன்று உள்ளது.[5]
மரங்களை வெட்டுவதை மட்டுமின்றி, மரங்களின் நுனியைக்கூட கிழிப்பதை அறமன்று எனக் கருதியுள்ளதை “எம்நாட்டில் அற நெறி தவறிநடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காணமுடியாது” என தோழியொருத்தி தலைவனிடம் தன் நாட்டின் சிறப்பினைக் கூறுகிறாள்.[6]
இதிலிருந்து பழந்தமிழர் மரக்கிளைகளின் நுனியைக் கிழிப்பதைக்கூட அறமற்ற செயலாகக் கருதியுள்ளனர் என்பதை அறியலாம். நற்றிணைப் பாடலொன்றும் ஞாழல் மரத்தின் நுனியைப் பறித்து சிதைத்த தலைவி பற்றி கூறுமிடத்து, ‘தலைவனின் பிரிவுத்துயரின் காரணத்தினால் மனம் பேதலித்து தன்னையறியாமல் அச்செயலைச் செய்துவிட்டாள்‘ எனக்கூறுவதாக உள்ளது (106). தலைவனின் பரிவைப்பற்றிக் கேட்டளவில் தனக்குள் ஏற்பட்ட மிகுதுயரை சொற்களில் வெளிப்படுத்தாமல், ஞாழல்மரத்தின் பூக்களை உதிர்த்து சினத்தை வெளிப்படுத்துகிறாள். சினத்தினால், அறிவு மயங்கிய நிலையில் அவ்வாறு செய்துவிட்டாள் என பூவைக்கூடத் தேவயின்றி பறிப்பது மடமை எனக் கூறுகிறது.[7]
தமிழர் மரங்களைத் தன் சக உயிர்களாகக் கருதிய திறத்தை பல பாடல்கள் காட்டுகின்றன. அவற்றில் ஒரு பாடலில் ”உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கோங்கமரத்தைப் பார்த்து நீயும் ஒரு தாய். குலைகளை ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழி காட்டு“ (திணைமாலை நூற்றைம்பது.65) என்கிறாள்.
தமிழர் நீர் வளம் பெற்றுச் சிறப்போடு வாழும் வாழ்வையே போற்றியுள்ளனர். ”கயம் திகழ் சோலை மலைநாடன் கேண்மை நயம் திகழும்” (ஐந்திணை ஐம்பது.5) என்ற பாடலில் வரும் ‘கயம் திகழ் சோலை நயம்‘ என்ற வரிகள் நீர் நிலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. மற்றொரு பாடல் இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது இருக்கமுடியாது என்கிறது (ஐந்திணைஐம்பது.8). ”நாடா கொன்றோ காடா கொன்றோ..... எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே” என்ற ஔவையாரின் பாடலும் இதே கருத்தை முன் வைக்கிறது. இவ்வாறு பழந்தமிழர் மரங்களை, நீர்நிலைகளைப் பேணிப்பாதுகாத்துள்ளது தெரிய வருகிறது.

மக்கள் தொகைப் பெருக்கம்

சுற்றுப்புறச் சூழலை அச்சுறுத்தும் மக்கள் தொகை பெருக்கத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதைக்கருத்தில் கொண்டே இன்னிலை ”ஒளிபாய் கண்ணே சீர்த்துற்று உகப்பாய் பெற்ற மகவு” (27) என்ற பாடலின் மூலம் முகத்திற்கு இரு கண்களைப் போல குடும்பத்திற்கு இரு மகவு போதும் என்கிறது.

சூழல் தூய்மை

வேனிற்காலங்களில் நீர்வளம் குறைந்து கிருமிகள் பெருகும். அக்காலத்தில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என நாலடியார் ‘குடநீர் அட்டு உண்ணும்‘ (382) வலியுறுத்துகிறது. வேனிற்காலத்தில் புது மண்பானையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் புது மண்பானையின் மண் மணம் நீங்க பாதிரிப்பூக்களைப் போட்டுவைக்கவேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது: ”ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத்தான் பயந்தாங்கு” (நாலடியார்39)
இதைத் தவிர சுற்றுப்புறத் தூய்மையை வலியுத்தும் வகையில் நீர்அருந்தும் துறையில் ஆடை துவைத்தல்கூடாது என்பதை, ”துறைஇருந்து ஆடைகழுவுதல் இன்னா” (இன்னா நாற்பது.23) என்றும் பொதுஇடத்தில் உமிழ்நீர் உமிழ்வது கூடாது என்பதை ஆசாரக்கோவை ”இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்” (27)என்றும், உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் வாய் கழுவுதல் அவசியம் (ஆசாரக்கோவை.27) என்றும் தொற்றுக்கள் கண்களைப் பாதிக்காமலிருக்க பிறர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்னபடுத்தக்கூடாது என்பதை ”கண்ணெச்சில் கண்ணூட்டார்”. (ஆசாரக்கோவை 41) என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
இயற்கை முறையில் பழுக்க வைப்பதின் சிறப்பு பற்றி நாலடியார், ”வேம்பின் இலையுள் கனியினும் வாழை தீஞ்சுவை யாதும் திரியாதாம்” (244)என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களை பழுக்க வைப்பது சிறந்த முறை என்கிறது.

பேரிடர் மேலாண்மை

பூகம்பத்தினால் ஏற்படும் கடல்சீற்றம், புயல் போன்றவற்றினால் ஏற்படும் கடல் சீற்றம் எனக் கடல் சீற்றங்கள் பலவகைப்பட்ட சீற்றங்களில் இருந்து ஓரளவு தம்மைக் காத்துக்கொள்ளமுடியும் என்பதை பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
இலக்கியத்தைக் காக்க இலக்கணகத்தைப் போற்றி வளர்த்தது போல் உலகைக் காக்க சூழல் காப்பில் கவனம் செலுத்தினர். ”கடலும் கானலும் போல புல்லிய சொல்லும் பொருளும்” (பரிபாடல்.15.11-12) என்ற பாடல் ‘கடலும் கடற்கரைச்சோலைகளும் சொல்லும் பொருளும் போன்றன‘ என்கிறது. பொருளில்லாத சொல் பயனற்று, மொழிவளத்தைப் பாதித்துவிடுவது போல கடற்கரைச்சோலைகளில்லாத கடலும் பயனற்று ஊர்களின் வளத்திற்கு பாதிப்பைத்தரும் என்கின்றன. பழந்தமிழர்கள், கடற்கரைச்சோலைகளின் சிறப்புணர்ந்த காரணத்தினால்தான் அச்சோலைகளிலுள்ள மரங்களில் தெய்வம் உறைவதாக் கருதி வணங்கி வழிபட்டுள்ளனர்
  • ”தொன்று உறை கடவுள்” (அகம்.3-4)”
  • மன்ற மராஅத்த பேசும் முதிர்கடவுள்” (குறுந்தொகை.87.1)
  • ”துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ” (கலித்தொகை.101.14-15)
  • “நல்அரை மராஅத்த கடவுள்” (மலைபடுகடாம்.395).
  • “தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கி மடற்குடம்பை” (நற்றிணை.303.3-5)
இப்பாடல்கள் பழந்தமிழர், மரங்களைக் கடவுளாக வழிபட்டுப் போற்றிப் பாதுகாத்தமையைக் கூறுகின்றன. கடற்கரைச் சோலைகளில் தாழை (கைதை, கண்டல்), நெய்தல், ஞாழல், புன்னை, பனை, அடப்பங்கொடிகள் போன்றவை ஒன்றோடொன்று இணைந்தே வளரக் கூடியன. இவை நெருங்கி வளர்வதால் அப்பகுதி கரிய சோலை போல் அடர்ந்திருக்கும். "வெண்கோட்டு அருள் சிறைத்தா அய் கரைய கருங் கோட்டுப் புன்னை" (67.4-6)என்ற பாடல் வெண்மையான மணல் குவிந்த கடற்கரை மேட்டில் கரிய அடிப்பகுதியையுடைய புன்னை மரங்கள் சிறை போல் எழும்பி இருக்கும் என்கிறது.
  • ”மணி ஏர் நெய்தல் மாமலர் நிறைய, பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், வீழ்தாழ் தாழைப் பூக்கமழ், கானல்”(நற்றிணை.78.2-4)
  • ”அடும்புஅமல் அடைகரை” (பதிற்றுப்பத்து.51).
  • ”தயங்குதிரை பொருத தாழை” (குறுந்தொகை.226.5)
  • “தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ படப்பை நின்ற முடத்தாட் புன்னை" (அகம்.180.12-13)
  • தெரிஇணர் ஞாழலும் தேம்கமழ் புன்னையும் புரி அவிழ் பூவின கைதையும்" (கலி.127.1-2)
போன்ற பாடல்கள் கடற்கரைச் சோலைகளில் புன்னை மரங்களோடு, அடப்பங்கொடிகளும் தாழை மரங்களும் எப்பொழுதும் பிண்ணிப்பிணைந்து இணைந்தே வளர்ந்திருக்கும் என்கிறது.
ஆழிப்ரேலைகள் தமிழகத்தை ஏழு முறைகள் தாக்கியுள்ளதாக மாத்தளை சோமு தன் ‘வியக்கவைக்கும் தமிழகம்‘ என்ற நூலில் சுட்டுகிறார். இவ்வாறு பெரும் பாதிப்பைப் பலமுறை சந்தித்துள்ள தமிழர் அதற்கான தீர்வும் இயற்கையே வழங்கியிருப்பதை அறிந்திருந்தனர். ஆழிப்பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பல அழியா நல்ஊர்களை பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஆழிப்பேரலையின் தாக்கத்திலிருந்து கடற்கரைகளையும் ஊர்களையும் காக்க பழந்தமிழர்கள் தாழை முதலான மரங்களின் தன்மையறிந்து அவற்றை வளர்த்துள்ளனர்.
‘கண்டவாயில் ‘என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச்சிறப்பிக்கப்படுகிறது. இதன்சிறப்பே ஆழிப்பேரலையினால் பாதிக்கப்படாததுதான். இவ்வூர் உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களையுடையது.இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிறிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்தது போல் காணப்படும்.[8]
பனைமரங்களோடு இணைந்த ஞாழல், தாழை ,புன்னைமரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும். மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் என அழைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாக பேரலைகளைத் தாக்குப்பிடிக்க வல்லது. எனவேதான், தாழை சூழ்ந்தசோலைகளை நாட்டுவேலி, பெருநீர்வேலி, கண்டல்வேலி எனப் பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
இம்மரங்கள் சோலைகளில் எழும்பி நிற்கும் காட்சி மதில்கள் சூழ்ந்த அரண்மனைக் கோட்டையை ஒரு புலவருக்கு நினைவுபடுத்துகின்றது. ”அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல்” (கலி.135.3-5) என்ற பாடல் வரிகள் பேரலைகளை போர்க்களிறுகளோடு ஒப்பிட்டு அக்களிறுகளைத் தடுக்கும் அரண்மனைக் கோட்டைகளாகக் கடற்கரைச்சோலைகளைக் காட்டுகிறது. ஆவேசத்துடன் பெருகிவரும் பேரலை இத்தகைய மரங்கள் சூழ்ந்தசோலைகளில் மோதியவிடத்து சிறுநுரை என மாறி இல்லாமல் போய்விடும் என்பதை ”பெருநீர்க்கல் பொரு சிறுநுரை மெல்ல மெல்ல இல்லாகுமே” (குறுந்.290.4-6) என்ற வரிகள் காட்டுகின்றன. இவ்வாறு,பேரலை சிறுநுரையாக மாறுவதற்கு தாழையின் மடங்கிய தன்மையே காரணம் எனப் பல பாடல்கள் சான்று தருகின்றன. "வணங்கிய தாழை” (அகம்.128.1-2) என்ற பாடல் வரிகள் காக்கும் கடல் அருள் மறந்து அழிக்கமுற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலேயே இயலும் என்று கூறுகிறது. ”திரைமுதிர் அரைய தடந்தாட் தாழை” (அகம்.131.3-5) என மற்றொரு பாடலும் தாழையின் வளைந்த தன்மையின் சிறப்பை உறுதி செய்கிறது. கடலின் அண்மையில் மட்டுமின்றி ஆற்றங்கரை ஓரங்களிலும் இச்சோலைகளை வளர்த்துள்ளனர்.
பரிபாடல் கூறும் வையை ஆற்று வருணனையில் வையைக் கடலோடு ஒப்பிடப்படுகிறது. வையை ஆறானது பெருகி, ஊருக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் ஆற்றங்கரைகளில் ஞாழல், புன்னை, தாழை முதலான மரங்களை வளர்த்துள்ளனர். இவை வளர்ந்து பெரிய சிறையின் சுவர் போல எழும்பிநிற்கும் (பரிபாடல்.77).
இம்மரங்களில், ஞாழல்மரம் வலுவானதல்ல. வெள்ளநீரின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க ஞாழல்மரங்களினால் இயலாது. ஆனால், புன்னை, தாழை இவையிரண்டும் உறுதியானவை, வலுவானவை. பேரலைகளைத் தாக்குப்பிடிக்கக்கூடியவை. கடற்கரைச்சார்ந்த பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் இத்தகைய மரங்களே வளர்க்கப்படவேண்டும் (பரிபாடல்.12-6) என்று மரங்களின் தன்மையை பரிபாடல் எடுத்துரைத்து அவற்றை மிகுதியாக வளர்க்கவேண்டும் என்கிறது. தாழையின் சிறப்பை சிலப்பதிகாரம் ”தாழைச்சிறைசெய்வேலி” (166) என்கிறது.
”புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்” (நற்றிணை.23.9-10) -வளைந்த தாழையைக் ‘கண்டல்‘ என நற்றிணைப் பாடல் கூறுகிறது. தாழை மரங்களுடன் புன்னை, ஞாழல் மரங்களும் இணைந்து வளர்ந்து நெய்தல் சார்ந்த ஊர்களை காத்து நிற்பதால் இவற்றை கண்டல் வேலிகள் என பழந்தமிழர் குறித்துள்ளனர். “தெண்திரை மணிப்புறம் தைவரும் கண்டல்வேலி நும்துறை” (நற்.54.9-11) - இவ்வாறு கடற்கரைச்சோலைகளைக் கண்டல்வேலிகள் என்று குறிப்பிடுவதுபோல ஆழிப்ரேலையை, ”உயர்திரை நெடுநீர்”, ”பெருநீர்”, ”வரம்பு இல் வெள்ளம்” ‘என்ற தொடர்களால் தமிழர் குறித்துள்ளனர். பதிற்றுப்பத்து ஆழிப்பேரலையை ”வரம்பு இல் வெள்ளம்” (33) என்கிறது. நற்றிணைப் பாடல் ஆழிப்பேரலையை “உயர்திரை நெடுநீர்”[9] என்ற தொடரால் குறிக்கிறது.
இப்பேரலைகளை தாக்குப்பிடிப்பனவாதலால், கண்டல்வேலிகள் "பெருநீர் வேலி" என்றழைக்கப்பட்ட செய்தியைக் குறுந்தொகை (345.5-7) கூறுகிறது. இப்பெரு வெள்ளமாகிய ஆழிப்பேரலையைத் தாக்குப்பிடிப்பன கண்டல் வேலிகளே என்பதை நற்றிணைப் (74) பாடலும் தெளிவாகக் கூறுகிறது. பொதுவாக மரங்கள் மணல் அரிப்பைத் தடுக்கவல்லன. தாழையோ தன் வளையும் தன்மையால் பேரலை, பெருங்காற்றையும் தாக்கு பிடிப்பதால் அப்பகுதியில் மணல்அரிப்பு ஏற்படாததோடு அப்பகுதி உயர்ந்து மலை போல் காணப்படும்.
  • “குன்று போல் எக்கர்” (கலி.127)
  • “ஓங்கல் வெண்மணல்”(குறுந்.311)
முதலான பாடல் வரிகள் மணலைக் கடலலைகள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ப்பதினால் மணல்மேடு தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே சென்று, அதில் உள்ள பனைமரங்களை மிகச் சிறியன என ஆக்கும் “அடும்பு இவர் மணற்கோடு ஊர.நெடும்பனை குறியஆகும்” (அகம்.248.4-6) என்கின்றன. “ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை” (குறுந்தொகை.311-5) உயர்ந்து கொண்டேவரும் வெண்மணலினால் உயரம் குறைந்து கொண்டே வரும் புன்னை எனக் குறுந்தொககையும் கூறுகிறது.
கடலின் அண்மையில் சோலைகளை பாதுகாத்தது போல சோலையடுத்த பகுதிகளில் நாவல் முதலான மரங்களை வளர்த்துள்ளனர். “பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி” (நற்றிணை.35.1-2) - கடற்கரைச்சார்ந்த பகுதியில் ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளனர். எனவே தான் கண்டல்வேலிகளை உடைய ஊரில் வாழ்வோர் தம் ஊரை அழியாநல்ஊர், எனப் பெருமையோடு கூறிக் கொண்டுள்ளனர்.
அழியாத புகழை உடையது கண்டல் வேலிகளை உடைய ஊரே என்கிறது அகநானூறு.[10] கண்டல்வேலிகளை உடைய ஊர்களே நல்ல ஊர்கள் என்கின்றன பல சங்கப் பாடல்கள்[11]

ஆழிப்பேரலையும் பெண்மை நலனும்

ஒரு தமிழ்ப்பெண் கரையை உடைக்கப் பெருகிவரும் காம வெள்ளத்தின் ஆற்றலை தாங்காத நிலையில் அதை உரைக்கவும் இயலாத நிலையில் தன் தோழியிடம், ”முட்டுவென் கொல் தாக்குவென் கொல் என் காம நோயை அறியாது துஞ்சும் ஊரை” என ஔவையின் தலைவி ஊரைச் சாடுகிறாள். இந்நற்றிணைப் பாடல் காமத்தை ஆழிப்பேரலையோடு ஒப்பிட்டுப் பாடுகிறது. காமத்தினை வெளிப்படுத்த இயலாத நிலையில் ஒரு பெண் தான்படும் பாட்டை “என் காமமோ ஆழிப்பேரலை போன்றது. அப்பேரலையைத் தடுத்து அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச்சோலைக்கு உள்ளது போல என் காமத்தையும் அமைதியடையச் செய்யும் ஆற்றல் என் தலைவனுக்கு மட்டுமே உள்ளது” என்று விளக்குவதாக நற்றிணைப் பாடல் சொல்கிறது.[12]
இதிலிருந்து ஆழிப்பேரலைகளைத் தாக்குப்பிடித்து அவற்றை அமைதியடையச் செய்யும் ஆற்றல் கடற்கரைச் சோலைக்கு உண்டு என்ற செய்தியைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது புலனாகுகிறது. இச்சோலைகள் தற்காலத்தில் அலையாத்திக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. தாழைக்கு குமரி என்ற பெயருமுண்டு. இத்தாழை மரக் கண்டல் சோலைகள் சூழ்ந்திருந்ததால் தான் தென்னிந்தியப்பகுதிக்கு குமரி என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மரங்கள் கடற்கரைச்சார்ந்த புகுதிகளில் உள்ள புலால் நாற்றத்தைப் போக்கவும் வல்லன. ஞாழல், புன்னை மரங்களிலிருந்து மலரும் புதிய மலர்களின் நுண்ணிய மகரந்தப்பொடி கடற்கரை எங்கும் வீசிக்கொண்டிருக்கும். இதனால் புலால் நாற்றம் நீங்கி புதுமலர்களின் மணம் காற்றில் நிறைந்து அப்பகுதி கமழ்ந்து கொண்டிருக்கும் என்கிறது கலிப்பாடல்.[13] இதை நற்றிணையும், அகநானூறும் சிறப்பித்துப் பேசுகின்றன. கடற்கரைச்சோலைகள் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அந்நாட்டைப் புலால் நாற்றத்திலிருந்தும் காக்கவல்லன என்கின்றன.[14]
இக்கடற்கரைச்சோலைகளில் உள்ள மரங்களின் நிழல்களில் நெய்தல் நில மகளிர் தங்கி இளைப்பாறுவதும், மீன்களை உலர்த்துவதும் உண்டு. இனிய நிழலை விரும்பி வரும் பெண்கள் வேலைமுடிந்த பின்னர் இங்குதான் ஓய்வெடுப்பர் என்கிறது ஒரு பாடல்.[15]
கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும். கடல்நீர் சூரியனின் வெப்பத்தினால் ஆவியாகி அவ்விடத்தில் வெற்றிடம் ஏற்படும். அவ்வெற்றிடத்தை நிரப்ப கடற்கரையிலிருந்து காற்று கடலை நோக்கிச் செல்லும் இதனால் கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும்.வியர்வை பெருகி நீர்த்தாகம் ஏற்பட்டு உடலில் வறட்சி தோன்றும். ஆனால், கடற்கரைச்சார்ந்த பகுதிகளில் வளர்க்கப்படும் சோலைகள் இக்குறையைப் போக்குகின்றன. இதன் அருமை உணர்ந்தே அகநானூறு "புன்னை பூத்த இன்நிழல்" (91.2) என்றும் "வெண்மணல் ஒருசிறை புதுவது புணர்ந்த பொழிலே"(96.1-3) என்றும் பாராட்டுகிறது. நிழலோடு நாவிற்குச் சுவையான பழங்களையும் இச்சோலைகள் தர வல்லன. நாவின் வறட்சியைப் போக்க இனிய பழங்களும் இச்சோலைகளின் மூலம் கிடைக்கும்[16]

No comments: