Saturday, 25 January 2025

மகாத்மா காந்தியடிகள் அறிவித்த சுதந்திர தினம் ஜனவரி 26

 



   இந்தியா சுதந்திரம் அடைந்து அதன்பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே குடியரசாக இந்தியா மலர்ந்தது என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் ஜனவரி 26 என்ற நாளை ஏன் நேரு நேர்ந்தெடுத்தார் என்பதும் இந்த நாளுக்கும் மகாத்மா காந்தியடிகளுக்கும் என்ன தொடர்பு என்பதும் நாம் அறிய வேண்டிய வரலாறு. 

    இந்தியாவிற்கு சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றாலும் நம் நாட்டிற்கு என்று தனியாக சட்டங்களும் விதிகளும் இறையாண்மையும் இல்லாமல் பிரிட்டிஷ் இந்தியாவின்  சட்டங்களையே நாம் கடைப்பிடித்தோம்.  நம் நாட்டிற்கு என்று தனித்து சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் இதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகளால் ஜனவரி 26 இந்தியாவின் சுதந்திர நாளாக மகாத்மா காந்தியடிகளால் அறிவிக்கப்பட்டது. ஆம் 1929 டிசம்பரில், பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தியடிகள் 1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்த நாளை இந்தியாவின்  விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார். 

அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1946 டிசம்பர் மாதம் 12 ஆம் நாள்  இந்தியாவின்  நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு வரைவை சமர்ப்பித்தது. 

 

இந்திய அரசியலமைப்பு வரைவு , 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களில்  எழுதி முடிக்கப்பட்டது. உலகின் 60 நாடுகளின் அரசியல் அமைப்புகளைக் கொண்டு இந்தியாவின் அரசியலைப்பு வரைவு உருவாக்கப்பட்டது. ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாடவும் இந்தியாவின் சுதந்திர நாளாக மகாத்மா அறிவித்த நாளான ஜனவரி 26 ல் குடியரசாகக் கொண்டாடப்பட வேண்டும் எனவும்  நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.




ஜனவரி 26, 1950 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் நமது நாட்டின்  முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.  புதுதில்லியில் உள்ள இர்வின் ஆம்பிதியேட்டரில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் அவர் தேசியக் கொடியை ஏற்றினார். 

1950 முதல் மகாத்மா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனவரி 26 ல்  குடியரசு தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது.