Wednesday, 7 August 2024

இந்திய சுதந்திரப் போரில் காந்தியும் கதரும் - தேசிய கைத்தறி தினம் - அறிய வேண்டிய வரலாறு

       

இந்தியாவில் 1905 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 7  அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. கைத்தறி நெசவை ஊக்கப்படுத்த தேசிய கைத்தறி தினம்  ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்பட இந்த தினமும் இதன் வரலாறும் நாம் அறிய வேண்டிய வரலாறு.  

   வலியவர்களால் உருவாக்கப்படாமல் எளியவர்களால் உருவாக்கப்பட்ட வரலாறே திருப்புமுனையாகவும் திருப்பத்தை ஏற்படுத்திய மாற்றமாகவும் திகழ்கின்றது. அவ்வகையில் சுதந்திரப் போரில் ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தங்கள் போராட்டங்களை வடிவமைத்தனர். காந்தியடிகள் அவ்வாறு தேர்ந்தெடுத்த அடையாளம் ஆடை .

          அணிகின்ற  ஆடையையே  தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் நம் வரலாறு நெடுகிலும்  வாழ்ந்திருக்கிறார்கள்.   இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக , இந்திய பொருளாதாரத்தின் எழுச்சிகளுள்  ஒன்றாக  இருந்தது  “கதர் ஆடை இயக்கப் போராட்டம் ” . ஒத்துழையாமை இயக்கத்தின் நீட்சியாக ,  அன்னிய நாட்டின் உற்பத்தியில் வராத, கையால் நெய்து உடுத்திக் கொள்ளும் ஆடைகளே  கதர் ஆடை. கதராடை இந்தியாவின் எழுச்சியாகவும் அடையாளமாகவும் மாற்றியவர் காந்தியடிகள். காந்தியடிகள் தேர்ந்தெடுத்த கதராடை மிகப்பெரிய ஆயுதமாகவும் அடையாளமாகவும் மாறி மக்களைப் போராடத் தூண்டியது. பிற நாட்டுத் துணிகளை தீயிலிட்டு எரித்து கைகளால் நூற்பு செய்து சுதந்திரப் போரில் ஒவ்வொரு இந்தியரும் போராடினர். 

     இந்திய   நாட்டுக்குக்   கதராடையை  அறிமுகப்படுத்திய காந்திக்கு, கதர் என்கிற ஆடையை  முதலில் அறிமுகம் செய்தவர், இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய மெளலானா முகமது அலி மற்றும் சௌகத் அலி  ஆகிய அலி  சகோதரர்களின்´ அம்மாதான் என்பது நாம் அறிய வேண்டிய செய்திகளில் முதன்மையானது. 

        சுதந்திர போராட்ட வரலாற்றில் காந்திக்கு உறுதுணையாக இருந்த அலி சகோதரர்களின்  இல்லத்திற்கு காந்தியை அழைத்து வருமாறு  , அலி சகோதர்களின் தாயார்  ஆலாஜிபானு என்கிற பலீமா கேட்டுக்கொள்ள, அதனை ஏற்று மகாத்மா காந்தியடிகள் அலி சகோதரர்களின் இல்லத்திற்குச் செல்கிறார்.  ஆலாஜிபானு என்கிற பலீமா  தனது கை ராட்டையில் நெய்த ஒரு ஆடையை காந்திக்குப்  பரிசாக வழங்கினார். அந்த ஆடையைப்பற்றி அம்மையாரிடம் காந்தியடிகள் கேட்ட போது, பருத்தி நூலில் இருந்து கையால் நூற்பு செய்து  எடுத்த ஆடையானது உருது மொழியில்  “ஃகதர்”  என்றும் ஃகதர் என்றால் கவுரவம் என்று பொருள்படும் என்றும்  அதனால் காந்தியடிகளை கவுரவப்படுத்தும் பொருட்டு   இந்த ஆடையை வழங்குவதாகவும் தெரிவித்தார்  பலீமா. 

     கதர் என்றால் தனது கரங்களால் தானே நெய்து  உடுத்தும் ஆடை என்றும் அன்னிய கலப்பில்லாத ஆடை என்றும் நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்ற கோட்பாடு காந்தியால் இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.   சுதந்திர இந்தியாவின்  அடையாளமாக கதர்  மாறியதற்கும் ,  கதர் அணிவது கவுரவம் மட்டுமல்ல உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சி என்பதை எடுத்துச் சொல்லும் களமாக அமைந்தது  மதுரை . 

                       

செப்டம்பர் 22,1921 காந்தியடிகள் தமிழகத்தின் மதுரை வந்திருந்தபோது உடம்பில் அரையாடை மட்டுமே அணிந்திருந்த ஏழை எளியோரைக் கண்டு மனம் வருந்தி தானும் அரையாடைக்கு மாறினார்.  இந்திய  ஏழைகள் வாழ்வாதாரமின்றித் தவித்துக்கொண்டிருக்க தான் சொகுசான ஆடை அணிய மாட்டேன் என்று தனது தோற்றத்தை மாற்றினார்.  ஏழைகளின் வாழ்விலும் இந்திய சுதந்திரப் போரிலும்  ‘காந்தியின் கதராடை’ புரட்சிப் போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது.  உலக வரலாற்றில் ஆடை ஒரு ஆயுதமாக , சுதந்திரப் போரில் பெரும்பங்கு வகித்தது என்றால் அது கதராடை மட்டுமே. 


“கங்காபென் மஜூம்தார்“ என்ற பெண் , விஜய்பூர் சமஸ்தானத்தில், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் பரண் மேல் கிடந்த கைராட்டையைக் கண்டுபிடித்து காந்தியிடம் கொடுத்தார். மனம்மகிழ்ந்து பெற்றுக்கொண்டார் காந்தி.   சபர்மதி ஆசிரமத்தில் காந்தியினால்  கதர் உற்பத்திக்கு  புதிய எழுச்சி கிட்டியது. 

 எல்லோரும் போராளிகளாக , எல்லோரும் உற்பத்தியாளர்களாக மாறிட முடியும் என்ற எண்ணத்தில் ஆலைத் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக எளிமையான தொழில்நுட்பத்தைக் கொண்ட கைராட்டை, கைநெசவு என்ற கதர் உற்பத்தியை ஏழை மக்களிடமே கொடுத்துக் கதரை உற்பத்தி செய்யக் கேட்டுக்கொண்டார் காந்தி.

   எளிய மக்களால் தேசத் தலைவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கதர் ஆடை  தேவைக்குப் போதுமானதாக இருக்கவில்லை .  ஒத்துழையாமை இயக்கம் வேகமாகப் பரவப் பரவ, மக்கள் ஆர்வத்தோடும் தேசபக்தியோடும் கதர் உடுத்த ஆரம்பித்தார்கள். கதர், சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மாற ஆரம்பித்தது. மக்களின் கதர்த் தேவை பலமடங்கு அதிகரித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

    கதருக்குத்  தட்டுப்பாடு இருக்கக்கூடிய ஒரு நிலையில், தனக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் மக்கள் ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொண்டு தானே அதற்கான முன்மாதிரியாகவும் மாறினார்.  அவ்வகையில் தனது உடலில் இடுப்புப் பகுதியில் மட்டும் கதரை உடுத்துவது என்று காந்தி முடிவெடுத்தார்.  அவரது அந்த முடிவே மேலாடையின்றி இறுதிவரை அவரை இருக்கச் செய்தது.      

    

     ‘அண்ட்டு திஸ் லாஸ்ட்’ என்ற கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூலே மோகன்தாஸ் என்ற மனிதரை மகாத்மாவாக மாற்றியது. எளிய வாழ்வை வாழ வைத்தது. கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக பிரிட்டிஷாரால் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், “அந்நிய பொருட்களைப் புறக்கணிப்போம்” என்ற கொள்கையால் கதரும் சுதந்திர எழுச்சியும் வீறு கொண்டது. 

     இந்த “கதர் இயக்கப் போராட்டமானது”  இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் மாபெரும் சுதேசியப் பொருளாதாரத்தையும் அடையாளம் காட்டியது.