Sunday, 30 June 2024

NON ALIGNED MOVEMENT - இந்தியாவின் அணி சேரா இயக்கமும் கோவாவின் இராணுவ நடவடிக்கையும் - அறிய வேண்டிய வரலாறு

 

              

           1947 ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா தனக்கான கட்டமைப்புகளை உருவாக்கி உலகளவில் தனித்த நாடாக உருவெடுத்து வந்தது.  வல்லரசு நாடுகள் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது , அகிம்சை மூலம் உலகை ஆள வேண்டும் என்னும் பொதுமைக் கருத்துடன் 1955 ல் பாண்டுங் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட கொள்கை உடன்பாடு மூலம் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு , யுகோசுலா அதிபர் பிரோசு டிட்டோ, எகிப்து அதிபர் அப்துல் நாசிர் ஆகியோரால் 1961 ஆம் ஆண்டு அணி சேரா அமைப்பு தொடங்கப்பட்டது. 

       பனிப்போரில் ஈடுபடும் வளர்ந்த நாடுகளுடன் இணையாமல் , இராணுவ  பொருளாதார நடவடிக்கையினை ஆதரிக்காமல் வளரும் நாடுகள் செல்ல வேண்டும் என்னும் நோக்கில் தொடங்கப்பட்ட அணிசேரா நாடுகள் தனித்த கொள்கைகளை உருவாக்கின.

அணிசேரா நாடுகளின் கொள்கைகள்.

  •  எல்லா நாடுகளின் இறையாண்மைக்கும் மதிப்பளித்தல்

  • எல்லா நாடுகளையும் சமமானதாகக் கருதுதல்.

  • அயல்  நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை.

  • உறுப்பு நாடுகள் ஒன்றையொன்று ஆக்கிரமிப்புச் செய்யாமை.

  • உலகப்  பிரச்சினைகள் அனைத்தையும் சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ளுதல்.

 என்று கொள்களைகளை வகுத்து இந்த நாடுகள் செயல்பட ஆரம்பித்தன.  

     உலக அளவில் நேரு மற்றும் எகிப்து அதிபரின் இந்த இயக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அகிம்சை மட்டுமே ஆயுதம் என்பதில் உறுதியாக இருந்த அணி சேரா இயக்கத்தின் முக்கிய தலைவரான நேரு ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட வரலாறு உலக அளவில் விமர்சனத்தை உருவாக்கினாலும் எதிர்ப்புகளை உருவாக்கவில்லை. 

       இந்தியாவின் முதன் முதலில் காலனியாதிக்கத்தை நிறுவியவர்கள் போர்த்துக்கீசியர்கள். 1947 ல் பிரிட்டன் அதனைத் தொடர்ந்து பிரெஞ்சு போன்ற நாடுகள் இந்தியாவை விட்டு வெளியேறின. ஆனால் போர்த்துகீசியர்கள் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி இந்தியாவை விட்டு வெளியேற மறுத்தனர். 

       NON ALIGNED MOVEMENT இயக்கத்தில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக இருந்தமையாலும்  நேருவின் தொடர் பேச்சுவாரத்தைகளின் காரணமாகவும் போர்த்துகீசியர்களின் ஆதிக்கப் பகுதிகளில் நடவடிக்கை எடுக்க இயலாமல் நேரு தவித்தார். 

      போர்த்துகீசிய நாடும் , நாங்கள் இந்தப் பகுதியை ஆக்ரமித்த போது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. ஆகவே இந்தப் பகுதிகள் எங்களுக்குச் சொந்தமானவை என்பதில் உறுதியாக இருந்தன. போர்த்துகீசியர்களின் இந்த செயலுக்கு அன்றைய அமெரிக்க உறுதுணையாக இருந்தது. 


 1961 NON ALIGNED MOVEMENT என்ற இயக்கம் தொடங்கி அகிம்சையை வலியுறுத்திய போது  அணி சாரா நாடுகள் அமைப்பின் தலைவராக  இருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, “ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், ஆயுதக் குறைப்பை மேற்கொள்ளுங்கள், உலகில் சமாதானம் தழைக்க ஒத்துழையுங்கள்” என்று அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பல முறை வேண்டுகோள் விடுத்தார். அதேசமயம், கோவாவை போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை.  சர்வதேச விவகாரங்களில் காந்திய அணுகுமுறையைக் கடைப்பிடித்த நேருவுக்கு, கோவா தொடர்பாக முடிவெடுப்பதில் ஆரம்பத்தில் தர்மசங்கடம் ஏற்பட்டது. 

        போர்ச்சுகல் அரசின் பிடிவாதப் போக்கால் எரிச்சலடைந்த  இந்தியர்கள் கோவாவின் விடுதலைக்காகத் தத்தமது பகுதியிலேயே அமைதிப்  போராட்டங்களை நடத்தினர். 1955-ல் கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியாளர்கள் கோவாவுக்குள் நுழைந்தபோது, போர்த்துகீசிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு 20 இந்தியர்களைப் பலி வாங்கியது. இதை அடுத்து கோவா பகுதி மீது பொருளாதாரத் தடையினைப்  பிரதமர் நேரு அறிவித்தார்.

 மக்களுடைய எழுச்சியும் உலக நாடுகளின் நேரு நெருக்குதலும் போர்த்துகீசியர்களை வெளியேற்றிவிடும் என்று  நம்பினார். சர்வதேச நெறிமுறைகளுக்கும் பொறுமைக்கும் இடம் கொடுத்தும் பலன் ஏதும் கிட்டவில்லை என்பதை உணர்ந்த நேரு, அதன் பிறகே ராணுவ நடவடிக்கை மூலம் கோவாவை விடுவிக்க முடிவுசெய்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, பிரிட்டிஷ் பிரதமர் ஹரால்ட் மெக்மில்லன், ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஊதாண்ட் ஆகியோர் அந்த முடிவைத் தள்ளிவைக்குமாறு நேருவை வற்புறுத்தினர். ஆனால், நேரு தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்திய ராணுவத்தை கோவாவுக்கு அனுப்பிவைத்தார். டிசம்பர் 18-ல் போர்த்துகீசியப் படைகள் சரணடைந்தன. நிபந்தனையின்றி சரண் அடைவதாக அப்போது கோவாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வசலோ இ சில்வா கைப்பட எழுதிக்கொடுத்தார்.


உலக அளவில் அணி சேரா அமைப்புகள் வாயிலாக அகிம்சை பேசிய  நேரு இனி அந்தத் தலைப்பைப் பேச இயலாது என்று இந்தியாவின் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் இந்தியாவில் கோவாவில் நேரு அவர்களின் மதிப்பு உயர்ந்தே காணப்பட்டது. 

     இந்தியப் பகுதிகளில் முதலாவதாக வந்து காலனியாதிக்கத்தை உருவாக்கிய போர்த்துகீசியர்கள் 1961 ல் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 1961 முதல் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இருந்துவந்த கோவா, 1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. 

அறிஞர் அண்ணாவும் மோகன் ராண்டேவும்

          மோகன் ரானடே, ஒரு காலத்தில் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து கோவாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்  . கோவா விடுதலைக்குப் போராடிய அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துவைத்திருந்தது போர்ச்சுக்கீசிய அரசு. போர்க்குற்றவாளி ஆக்கப்பட்ட அவர் ஆயுள் தண்டனையில் இருந்தார்.

 1961-ல் கோவா விடுதலையடைந்து, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்துவிட்டது என்றாலும்கூட, தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள காக்சியா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார் ரானடே.  அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பின் 1968-ல் அயல் நாட்டுப்  பயணம் மேற்கொண்டார்.  அந்தப் பயணத்தில் போப் ஆண்டவரையும் சந்தித்தார் . அப்போது போப்பிடம் அவர் முன்வைத்த வேண்டுகோள், “எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க, போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் பேச வேண்டும்” என்றார்.  

       அறிஞர் அண்ணாவின் கோரிக்கையினை ஏற்று கத்தோலிக்க நாடான போர்த்துகீசிய அரசிடம் போப் ஆண்டவர் கோரிக்கை வைக்க , அந்த அரசு மறுக்க முடியாமல் கோவாவின் விடுதலை வீரர் மோகன் ராணடேவை விடுதலை செய்தது. காக்சியா சிறையில் இருந்து வெளியே வந்த மோகன் ராணடே இந்தியா வந்து முதலில் சந்திக்க விரும்பிய நபர் அறிஞர் அண்ணா. ஆனால் உடல்நிலை காரணமாக அறிஞர் அண்ணா மறைந்துவிட்ட செய்தி அறிந்து சென்னை வந்து அவரின் சமாதியில் கலங்கி நின்றார். சொந்த மாநில மக்களே மறந்து போன  மோகன் ராணடேவை மீட்டுக் கொண்டு வந்ததில் அறிஞர் அண்ணாவின் பங்கு அளப்பரியது.  26 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மோகன் இராணடே 1955 முதல் 1969 வரை போர்ச்சுகல் சிறையில்     இருந்தார். 

           அறியப்படாத வரலாறுகளும் அறிய வேண்டிய மனிதர்களாலும் உருவானதே வரலாறு.