ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்குச் சோழ தேசம் காண வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கைப்பிடித்து அழைத்துப் போகிறார் பாலகுமாரன். ஒரு அரசன் எப்படி இருப்பான் ,எப்படி பேசுவான், எப்படி நடப்பான், எப்படி உத்தரவு போடுவான் என அத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்குப் பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
இராசராசன் இல்லை என்றால் தமிழுக்கு 'தேவாரம்' இல்லை, 'திருவாசகம் ' இல்லை. பன்னிரு திருமுறைகளில் பாதி இல்லை. சிதம்பரத்தில் தமிழ் - தேவாரம் திருவாசகத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி செல் அரித்த தமிழை அந்த மகான் மீட்டுக் கொடுத்தது தான் அத்தனையும்.
இது வெறும் வாசிப்பு இல்லை அந்த சிவபதகேசரியோடு வாழும் வாழ்க்கை. அவனோடு வாழ்ந்து அவனோடு வாழ்வீர்கள்.
என் அருகில் இருந்தவர் இறந்தது போலவும் அப்போது தான் எனக்கு அது தெரிந்தது போலவும் அழுதேன்.கடைசி அத்யாயம் வாசித்து 20 நிமிடம் தனித்தேன். நான் முழுமையாக ஒரு சோழ தேசத்து மறவனாக மாறி இருந்தேன் .என் அரசன் இறந்தது போல் அழுதேன்.என் அரசே இராசராச, எம் பெருமானே, ஈசனே, நீ மனிதனா இல்லை ஈசன். கடவுள். நீ எங்கே? இப்போது எங்கே இருக்கிறாய்? நான் இனி உன்னை எப்படிப் பார்ப்பேன்? இது தான் நான் புத்தகத்தை முடித்து விட்டுக் கேட்ட கேள்வி.
நான் நான் என்று அகந்தையில் திரியும் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு பிரமாண்ட கோவிலைக் கட்டிவிட்டு இதை நான் கட்டவில்லை. எம் மக்கள் கட்டியது என்றும்,
"நாம் கொடுத்தனவும்
நம் அக்கன் கொடுத்தனவும்
நம் பெண்டுகள் கொடுத்தனவும்
கொடுப்பார் கொடுத்தனவும் "
என கல்வெட்டில் எழுதச் சொன்னானே இவன் அரசனா, இல்லை அவன் ஈசனின் குழந்தை.
கோவிலுக்கு நிவந்தம் கொடுத்த ஒருவர் பெயரும் விடாமல் கோவில் சுற்றி கல்வெட்டாக பதியப்பட்டு உள்ளது.
இதில் வரும் கதை 95% உண்மை சிறிது கற்பனை. இதில் வரும் பெயர்கள் 98% உண்மை.
நான் என் பதினோராம் வயதில் பெரிய கோவில் பார்த்து இருக்கிறேன். ஆனால் அது வெறும் வேடிக்கை வெறும் கல் என்று விவரம் அறியாத வயதில் பார்த்தது.
ஆனால் உடையார் படித்து அதன் பிறகு
நான் தஞ்சை போனேன்.
அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று கொண்டு
" திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி.....
என்று அவன்
மெய்க்கீர்த்தியை உரக்கச் சொன்னேன். அந்த சிவபதசேகரன் பெயர் பதித்த கல்லை தொட்டுத் தடவி அவன் நின்ற இடம் தொட்டு கண்ணில் ஒற்றினேன்.
இங்கு தானே இராசராசன் நின்று இருப்பான், இங்கு நின்று தானே இந்தக் கல்லைத் தடவி இருப்பான்.இங்கு அமர்ந்து தானே நிவத்தங்கள் கொடுத்து இருப்பான்., இங்கு நின்று தானே ஈசனை வணங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக தொட்டுத் தடவி மெய் சிலித்து போனேன்.
அவன் பாதம் தொட்ட இடம் தொட்டு வணங்க வேண்டும் போல இருந்தது.
அவர்கள் வாழ்ந்த கோட்டை இன்று இல்லை.அவர்களின் மாட மாளிகைகள் இல்லை. எல்லாம் பின்னால் நடந்த படையெடுப்பில் அழிக்க பட்டது.
ஆனால் அந்த கோவில் அத்தனையும் கடந்து அவர் நினைத்தது போல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது..
"சந்திரர் சூரியர் இருக்கும் வரை இந்த கோவில் நிலைத்து நிற்கும் "
வாழ்க சோழ தேசம்
வளர்க தமிழ்
வாழ்க இராசராசன்
** உங்கள் வாழ் நாளில் கட்டாயம் 'உடையார்' படியுங்கள் ***
உடையார் படித்து விட்டு தஞ்சை போங்கள், அந்தப் பிரமாண்ட கோவில் முன் நின்று, கண்ணில் நீர் வழிய கத்துவீர்கள், வாழ்க இராசராசன் என்று வாழ்த்துவீர்கள்.வணங்குவீர்கள்..
இப்படி ஒரு படைப்பைத் தந்த எழுத்தாளர் 'எழுத்துச் சித்தர் திரு பாலகுமாரன்' அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...