கவிஞர் புவியரசு அவர்கள்
1. உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன்புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாக 1930 ஆம் ஆண்டில் பிறந்தவர் கவிஞர் புவியரசு.
இவரது இயற்பெயர் எஸ். ஜெகநாதன்.ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும்.
2. இடைநிலை பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் கற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன.
3. வானம்பாடி கவிஞர்களில் மூத்தவர் , பேரூராதீனம் தமிழ்க் கல்லூரியின் முதல் மாணவர் கவிஞர் புவியரசு.
4. இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருதை இரண்டு முறை பெற்ற மூத்தப் படைப்பாளி.
5. கேரள மாநிலத்தின் சாகித்திய புரஸ்கார் விருது பெற்றவர்.
6. கலைஞர் கருணாநிதி அவர்களால் பொற்கிழி விருது பெற்றவர்.
7. ‘வானம்பாடி’ இதழின் தாய்ப்பறவை. ‘தேடாதே தொலைந்துபோவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று அக்காலகட்டத்தின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்குமாறு கவிதை எழுதியவர்.
8. அமைப்புகளில் முடங்கிக் கிடந்த கவிதைகளை வீதிவரை கொண்டு வந்து வீட்டில் இருந்தவர்களை வெளியே வர வைத்தது வானம்பாடி அமைப்பின் மிகப்பெரிய சாதனை.. வானம்பாடியின் முகவரியும் கூட கவிஞர் புவியரசு தான்.
9. சலனமில்லாத மனதை உடையவர் தான் சத்குரு. என் தந்தை சலனமில்லாத மனம் உடையவர். அதனால்தான் என் இல்லத்திற்கு சத்குரு இல்லம் என்று பெயர் வைத்துள்ளேன்.
10. என்னுடைய தத்துவத் தேடுதலுக்கு மேடை அமைத்துக் கொடுத்த இடம் பேரூராதீனம் தமிழ்க் கல்லூரியே என்று பலமுறை கூறி வருபவர். அவ்வகையிலேயே என்னுடைய மிர்தாதின் புத்தகம், அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் என்ற நூலும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறுபவர்.
11. பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரியில் மாணிக்க வாசகரையும் கற்கவும், மபொசியையும் , மார்க்ஸையும் கற்கவும் பேரூராதீனம் 24 ஆம் சன்னிதானம் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறுவார்.
12. தலைவனை நம்பாதே தத்துவத்தை நம்பு என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருப்பவர் கவிஞர் புவியரசு.
13. பலராலும் இன்றுவரை பாராட்டப்படும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக மிர்தாதின் புத்தகம் கரமசோவ் சகோதரர்கள் நூலும் திகழ்கின்றது.
14. இந்தியாவின் தலைசிறந்த 10 மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் கவிஞர் புவியரசுக்கு இடம் உண்டு.
15. கரம்சோவ் சகோதரர்கள் நூலை மொழிபெயர்த்த இவர்தான் கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் ஓஷோ பாகம் 1 என்ற நூலையும் மொழிபெயர்த்தவர். இரண்டு தத்துவங்களும் வேறு வேறு மார்க்கத்தை கொண்டவை. ஆனால் இரண்டு மார்க்கத்திலும் தீவிர ரசிகர்களை உடையவர் கவிஞர் புவியரசு அவர்கள்.
16. ஓஷோ நூல்களின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக
அன்பின் அதிர்வுகள், இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள், உன் அற்புத ரோஜா மலரட்டும்,
புல் தானாகவே வளர்கிறது என்று இவரது மொழிபெயர்ப்பு நீண்டு கொண்டே செல்கிறது..
17 . நாம் உணராத வேற்று மொழி இலக்கியங்களான கலீல் கிப்ரானும், உமர் கய்யாமும், தாகூரும்,ஷேக்ஸ்பியரும் புவியரசு வழியாகவே தமிழகம் வந்தடைந்தார்கள்.
18. கவிஞர் , நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என அத்துணை துறைகளிலும் தனது பிரமாண்டமான கப்பலை செலுத்தி வருபவர்..
மறக்க இயலாத கதைகளாக
ஒப்பம், அடக்கடவுளே, தோன்றாத் துணை, அஜீரணம், மகன் தந்தைக்காற்றும் உதவி, தாளிப்பு, குழப்பம் என்னும் பட்டியல் நீள் வரிசை கொண்டது...
19.பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல்’ என்ற முழக்கத்துடன் வானம்பாடி கவி மடல்கள் வலம் வந்தன.
20. புரூக் பாண்ட் தேயிலை நிறுவனத்தின் லட்சினை ஓவியமான ‘ஒரு மொட்டும் இரு இலைகளும்’ ஓவியத்தை வரைந்தவர் புவியரசு வின் அப்பாதான். புராணிக ஓவிய மரபு தெரிந்தவர் அப்பா. ஓவியம் வழியாக ஒருகட்டத்தில் தத்துவத்துக்குப் போய்விட்டார். அவரின் பெயர் சுப்பையா.
21. நடிகர் கமல்ஹாசன் மதிக்கும் ஆசிரியர்களில் கவிஞர் புவியரசு முக்கியமானவர்.
22. மருதநாயகம் கதை வடிவமைப்பு கமல்ஹாசன் , கவிஞர் புவியரசு, எழுத்தாளர் சுஜாதா ஆகிய மூவரும் உருவாக்கியதே ஆகும்.
23. கவிஞர் புவியரசு அவர்களின் படைப்பில் முக்கியமானதாகக் கொண்டாடப்படும் 'மிர்தாத்தின் புத்தகம்' நூலை ரமணாசிரமத்திலிருந்து அனுப்பி மொழி பெயர்க்கச் சொன்னார்கள் என்றும், இதை மொழிபெயர்த்து விட்டு செத்து போ என்று அவராகவே நினைத்து எழுதியுள்ளார்.
24. ஞானிகள் நமக்குப் பாதைகளைச் சுட்டிக்காட்டும் கைகாட்டி மரங்களாக நின்றுகொண்டிருப்பார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவார்.
25. கவிஞர் புவியரசு அவர்கள் ,பயணவழி அனுபவங்களே பாடங்கள். அதுவே வாழ்க்கை . அனுபவங்களை உணருங்கள் என்று வலியுறுத்துவார்.
26. கவிஞர் புவியரசு அவர்களின் மனிதன் என்ற நாடகம் 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பானது இன்று வரை மிகச் சிறந்த சாதனையாக உள்ளது.
27. நடிகர் பார்த்திபனுடன் ஹவுஸ்புல் படத்தில் இணை இயக்குநராகவும் கவிஞர் புவியரசு பணியாற்றியுள்ளார்.
28. சாகித்ய அகாடமி விருதுகள் கவிஞர் புவியரசு அவர்களுக்கு, வங்காளக் கவிஞன் காஜி நஜ்ருல் இஸ்லாமின் “The Revolutionary”-ன் மொழிபெயர்ப்பான புரட்சிக்காரனுக்காகவும், கையொப்பத்திற்காகவும் வழங்கப்பட்டன.
29. ஒரு இரயில் பயணத்தில் "வானத்திற்கும் வாசல் திறக்கும்" என்ற மரபின் மைந்தன் முத்தையா மூலமே ஓஷோ பற்றிய அறிமுகம் கவிஞர் புவியரசு அவர்களுக்குக் கிடைத்தது.
30. இன்றைய ஆசிரியர்களுக்கே ஓஷோவைத் தெரியவில்லை. அவர்கள் எப்படி அடுத்த தலைமுறைக்கு அவரைக் கொண்டு செல்ல முடியும்? என்னும் ஆதங்கத்தை அடிக்கடி வெளியிடுவார்.
31. தமிழரசு இயக்கத்தில் பங்குகொண்டு தமிழ் ஆட்சி மொழி- பயிற்சி மொழி -மற்றும் தமிழகஎல்லைப்போராட்டங்களிலும் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றவர்.
32. கவிஞர் புவியரசு அவர்களின் ஞானக்கிளி என்ற 13 வாரத்தொடர் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று .
33. மூன்றாம் பிறை நாடகக்காவியம் பல
பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.
34. மிர்தாதின் புத்தகம் என்ற நூலுக்கு நல்லி திசை எட்டும் பரிசைப் பெற்றுள்ளார்.
35. திரைப்படத் துறையில் பங்கு கொண்டிருந்த கவிஞர் புவியரசு கேரள திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
36. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
37. மார்க்சியவாதியாய் இருந்த எனக்கு மாணிக்கவாசகரை அறிமுகப்படுத்தி என்னுடைய தத்துவத் தேடலுக்கு வழி வகுத்தவர் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களே என்று கவிஞர் புவியரசு அடிக்கடி மேடையில் கூறுவார்.
38. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் முதல் மாணவர்களில் கவிஞர் புவியரசு அவர்களும் , திரு.மணவாளன் அவர்களும் முக்கியமானவர்கள்.
39. உலகச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற போது கலைஞர் கருணாநிதி அவர்கள் விரும்பி அழைத்தும் , கொண்ட கொள்கை காரணமாக மறுத்தார். கலைஞர் கருணாநிதி அவர்கள், கவிஞர் கனிமொழி மூலம் பலமுறை வலியுறுத்தியும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் கவிஞர் புவியரசு.
40. கவிஞர் புவியரசு அவர்கள் , தமது தத்துவத்தின் தலைவராக திரு.மபொசி அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த போது , தமது தலைவனே கொள்கை மாறியதற்கு(திராவிட ஆதரவு) மிகவும் வருந்தி அதனை ஒரு பொது மேடையிலும் குறிப்பிட்டுள்ளார்.
41. மார்க்சிய திறனாய்வாளர் திரு. ஞானி அவர்களும் கவிஞர் புவியரசு அவர்களும் நெருங்கிய நண்பர்கள்.
42. கவிஞர் புவியரசு அவர்களின் இளமைக் காலத்தில் பாதி நாட்கள் சிறை , மீதி நாட்கள் பேரூராதீனம் தமிழ்க் கல்வி என்றே கழிந்தது.
43. கவிஞர் புவியரசு அவர்கள் நாடகத் துறையிலும் சிறந்து விளங்கி வருபவர். இவர் இயற்றிய பல நாடகங்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளது.
44. வானம்பாடி கவிஞர்கள் , "மானுடம் பாடும் வானம்பாடி" என்னும் நோக்கில் கவிதைகள் எழுதி தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.
45. வானம்பாடி என்பது இதழ் அல்ல , இயக்கம் என்று கவிஞர் புவியரசு அடிக்கடி குறிப்பிடுவார்.
46. உலகின் மிகச்சிறந்த நல்ல நூல்களை எந்த மாநிலத்தில் அழகாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் எனில் மலையாள இலக்கியம் என்று மறுக்காமல் கூறி வருபவர் கவிஞர் புவியரசு.
47. கவிஞர் புவியரசு அவர்கள் ஆங்கில மொழியில் மிகச் சிறந்த புலமையோடு திகழ்கிறார். ஆங்கிலத்தை பள்ளி, கல்லூரியில் கற்காமல் Reader's digest எனும் இதழ் வாயிலாகவே கற்றுத் தேர்ந்தவர்.
48. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தை அறிஞர் அண்ணாவுடன் அமர்ந்து பார்த்த நிகழ்வு , தன் வாழ்நாளில் மறக்க இயலாத ஒன்று என்று எப்போதும் குறிப்பிட்டு மகிழ்வார்.
49. இலக்கிய வாழ்வு வாழ்ந்ததில் நிறைவு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. சின்ன மனத்தாங்கல்களும் இருக்கின்றன... அதில் முக்கியமானது, புறக்கணிக்கப்படுதல்.
எனக்கு மட்டுமல்ல. என்னைப் போன்ற பலருக்கும் அது இருக்கிறது என்பது கவிஞர் புவியரசு அவர்களின் முக்கிய வினாவாக இன்றும் தொடர்கிறது.
50. 91 வயதிலும் தமிழ் இலக்கிய வானிலும் மொழி பெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கும் கொங்கு நாட்டின் மணி மகுடம் கவிஞர் புவியரசு.
இன்னும் பல நூல்கள் கவிஞர் புவியரசு அவர்கள் மூலம் இந்த உலகம் பிரசவிக்கும்..
அன்புடன் சங்கர்.