Friday, 21 January 2022

வேலுநாச்சியார்

நான் தான் தமிழ் நாட்டின் வீரமங்கை வேலுநாச்சியார்.

பலரும் அறிந்த
ஜான்சிராணி என்னும் மாபெரும் வீரப் பெண்மணி தோன்றுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்பே பரங்கியரை எதிர்த்த  வீரத்தின் விளை நிலமாம் தமிழ் மண் பெற்றுத்தந்த வீரத் தமிழச்சித்தான் இந்த வேலுநாச்சியாராகிய நான்…
பெண்ணாக நான் பிறந்தாலும் ஆண் வாரிசாகவே வளர்க்கப்பட்டேன். கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, குதிரை‌ ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்துத் திறன்களையும் கற்றுத் தேர்ந்தேன்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது எனப் பல மொழிகளையும் கற்றேன்.

சிவகங்கைச் சீமைக்கு
சீராய் புகுந்த மகிமை நான்.
சிவகங்கை ராஜாவுக்கு
சீதனமாக...  சீர் எழிலாக
மன்னர் முத்துவடுக நாதருக்கு ராணியாக...
பின்னர் ஏணியாக-அவர் குலம் காக்கும்
கேணியாக
குணங் காக்கும் தோணியாக
அவரைச் சுற்றி தேனீயாக...
அவர் பயிற்சியிலும்
முயற்சியிலும் பங்கு
கொள்ளும் ராணியாகத் திகழ்ந்தேன்.

திப்பு சுல்தானின் 5000 படைவீரர்களின் உதவியோடு இழந்த சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தேன்.  ஏற்றமிகு ஆட்சி புரிந்தேன்.

ஆங்கிலேயர்கள் ஒருமுறை எங்கள் அரண்மனைக்கு வரி கேட்டு வந்த போது நான் அவர்களுக்குச் சொன்ன பதிலை இப்போது நம் இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின நாளில் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

எங்கள் மண்.
எங்கள் நாடு.
எங்கள் மக்கள்.
இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும் எங்கள் உழைப்பைச் சொல்லும்.
எங்கள் மக்களின் உழைப்பாலும் வியர்வையாலும் உதிரத்தாலும் உருவானது எங்கள் நாடு.
இங்கே ஓடுகின்ற நதிகளும்,
நிற்கின்ற மரங்களும்,
வீசுகின்ற காற்றும்,
அடிக்கின்ற வெயிலும் பெய்கின்ற மழையும்
எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்...

வீரம் எங்களுக்கு விளையாட்டு...
விவேகம் எங்கள் தாலாட்டு...
அன்புக்கு எங்கள் தலை குனியும்...
ஆணவம் கொண்டோர் தலை எங்கள் மண்ணில் உருளும்.
எங்கிருந்தோ வந்து எங்கள் பூமியில் பிழைக்க வந்த உங்களுக்கு, எங்களிடம் வரிகேட்க உரிமையும் இல்லை...
அதில் ஒழுக்கமும் இல்லை...
அதனால் எங்கள் மன்னர் சார்பிலும் எங்கள் மக்கள் சார்பிலும் சொல்கிறேன். வரி என்று எங்களிடம் கேட்டு வந்தது இதுவே இறுதியாக இருக்கட்டும்.

இனிமேலும் இது தொடர்ந்து வந்தால் வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது!
இது எச்சரிக்கை மட்டுமல்ல.
எங்கள் இறுதி அறிவிப்பும் இதுதான்..."
தமிழர் தாயகத்தை அன்னியரிடம் இருந்து மீட்கப் படை திரட்டி போராடிய முதல் பெண் வீராங்கனை  நானே!
இந்த மண்ணும் விண்ணும் உள்ள வரை வேலு நாச்சியாராகிய எனது வீரமும் தீரமும் வரலாற்றுப் பக்கங்களில் இருக்கும்.
எனது வரலாறு காலத்தால் அழிக்கப்படாத வீர வரலாறு…
வாழ்க பாரதம்
வாழ்க நம் தாய் நாடு!