Tuesday, 22 July 2014

POORNIMA KAVITHAIGAL, MALAI SAARAL MANSU


மழைச் சாரல் மனசு என்னும் தலைப்பில் கவிதை நூலினை வெளியிடும் திருமதி.பூர்ணிமா மேடம் அவர்களின் கவிதை நூல் பற்றி பகிர்ந்து கொள்வதற்காக எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பிற்கு நன்றி.
   சிந்தனையாளர்களுக்கு காகிதம் தான் ஆய்தம்.உலக வல்லரசுகள் தங்களிடம் தான் மிக வலிமையான ஆய்தங்கள் உள்ளது என்று பெருமைபட்டுகொள்கின்றன.ஆனால் உலகின் மிக வலிமையான ஆய்தம் எழுதுகோள்.அதை ஏந்தியிருக்கும் திருமதி.பூர்ணிமா மேடம் அவர்களின் ஆய்தக்குவியல் இந்த மழைச் சாரல் மனசு.
     உன்னுள் கருக்கொள்ளும் உன்னைப் பிரசவிக்க
     உன்னால் மட்டுமே இயலும்.
என்னும் வரிகளில் இந்தக் கவிதாயினி இன்னொரு யுகப் புரட்சிக்கு வித்திடுகிறார்.தொட்டுத் தொடரும் கவிதை பாரம்பரிய மரபில் நட்புக்கு கலங்கரை விளக்கம் என இவர் மகுடம் சூடியிருப்பது கண்டு சகாரா பாலைவனத்தின் ஒற்றை மரம் பூ பூக்கிறது.
    ‘அன்பின் அரும்புகள் மலர்வதற்குள் மரணப்படுவதாயின் செடியின் முட்கள் சினம் கொள்ள வேண்டும்’ எனும் சீற்றமிகு கவிதையின் சீர்திருத்தச் சிந்தனையாளர் திருமிகு கவிதாசன் ஐயா அவர்களின் கவிதையினைப் போல பல வெப்ப வினாக்களை இந்த நூலில் தூவியிருக்கிறார்.
மகாசக்தியின் மைந்தர்களுக்கு மனிதநேயத்தையும்,வெற்றியின் வாசற்படிகளையும் அடையாளம் காட்டும் இவரின் கவிதையில்,
   ‘சுதந்திரமின்மை என்பது விதண்டாவாதம்’
எனும் நெருப்பு வரிகளை படைத்து அதன் மீது,அதை படிக்கும் இளைஞர்களுக்கு கொஞ்சம் பெட்ரோலையும் ஊற்றுகிறார்.எம் இளைஞர்கள் நெருப்புக் குச்சிகள்.உரசுவதற்கு தீப்பெட்டிகள்தான் கிடைப்பதில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் இவ்வரிகளுக்கு நிச்சயம் வரிவசூல் செய்ய வேண்டும்.ஆம் நீங்கள் புத்தகம் வாங்கினால் அதில் வரிகளும் அடங்கும்.
  ‘வானம் வெளிச்சத்தை விடுதலை செய்தது’ என்னும் வரி மூலம் உலக நன்மையை நம் கவிதாசன் ஐயா வேண்டுகிறார்.திருமதி.பூர்ணிமா மேடம் அவர்களோ விடியலுக்கு வெகுதூரம் இல்லை.அதோ சிவக்கிறது கீழ்வானம்.காத்திருப்போம்.என விடுதலை பெறாத நாடுகளில் செய்தி அறிவிக்கிறார்.அவரது அறிக்கை மூலம் விடுதலை பெற்று நம் கவிதாசன் ஐயா அவர்களின் வரிகளை நிஜமாக்கும் நித்திய சூரியன் நிஜமாய்த்தான் இன்று உதித்தது என்பதை நிஜமாக்குவோம் என்று வழிமொழிவது வசந்தத்தை அழகாக்குகிறது.
    ஏய் அமெரிக்க ஏகாதிபத்தியமே
    என்று வெள்ளை மாளிகையை நோக்கி
    கல்லாறில் இருந்து கல்லெறியும் இவரது கவிதைகளில்,அமெரிக்க நாட்டின் அச்சில் ஏறாத பிழைகளை இவர் அச்சுக் கோர்த்துத் தந்துள்ளார்.போரிலும் கொல்லமுடியவில்லை,அகச் செயலிலும் கொலை செய்ய முடியவில்லை.50 முறை முயன்றும் ஃபிடல் காஸ்ட்ரோ அஞ்சாமல் தானே இருக்கிறார்,அப்புறம் எப்படி அமெரிக்காவே நீ வீரனாவாய்?என்று இவர் கேட்கும் கவிதைக் கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.
   இழந்தது இடைவேளை மட்டுமே எனும் இவரின் மற்றுமொரு கவிதை விலங்கிட்டப் பெண்களை விடுதலை செய்ய உதவும்.
     மனிதத்தை மாய்க்கும் எந்தப் பண்பாட்டுப் புனிதமும் தேவையில்லை
என கர்ஜித்து விட்டு,கவலையோடு கிழக்கே போகும் இரயிலுக்கு காத்திருக்கும் பெண்களிடம் சென்று,நீ இழந்தது இடைவேளை மட்டுமே என ஆறுதல் சொல்லும் போது வாழ்வின் அர்த்தம் அகராதியில் கிடைக்கிறது.
புலம்பல்கள் என்ற இவரது கவிதை வரிகளின் மூலம் புரட்சி போரின் இடையில் பூபாள இராகம் வாசிக்கிறார்.அய்யோ சத்தியமாய் நாங்கள் சரித்திரத்தை மறந்து விட்டோம் என்பதை கடப்பாரைக் கொண்டு இடித்து எங்களை விழி திறக்க வைத்து வழி சொல்கிறார்.கடையேழு வள்ளல்களின் கல்லறைகளை இவர் கோபத்தில் உடைக்கச் சொல்கிறார்.
  அடச் சீ கரும்பை கடித்துத் திண்ணும் ஆற்றல் எறும்புக்கே
   இருக்கும் போது உனக்கென்ன குறைச்சல்? என்ற கோபத்தில்
இவர் உடைந்த சமுதாயத்தை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்.இவரது கவிதைகளில் ஒரமான கடல் அலையைப் போன்ற சுறுசுறுப்பும்,ஆழமான கடலைப் போல ஆழந்த சிந்தனையும் ஒருங்கே கிடைக்கின்றன.
  தேசிய கீதம் இயற்றிய சாந்தி நிகேதன் தாகூரை இந்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் பூர்ணிமா அவர்கள் காவிரி ஆற்றின் கரைக்கு அவலங்களை காண கோபத்தோடு அழைக்கிறார்.திராவிட,உத்கல,வங்கா என்ற ஒற்றுமை உம்மால் எந்த ரீதியில் பாடப்பட்டது எனக் கேள்வி எழுப்புகிறார்.
        குடகு மலையின் நீருற்று இந்தியருக்கா?
         அல்லது ஓரினத்துக்கா?
        நீதி வழங்கட்டும் அந்த தேசியகவி,
என்று கவிதை தீட்டி,மாற்றாரை நாம் நேசிக்கும் பண்பையும்,நம்மை மாற்றார் வஞ்சிக்கும் நிலையையும் தம் எழுத்தில் உணர்த்துகிறார்.
கருவறை ஓலங்கள் என்ற கவிதையில் திருமிகு கவிதாசன் ஐயா அவர்கள் தன்னம்பிக்கையினை,
    அறுவடைக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு
   ஆகாயத்திடம் மழைக்கும் அரசாங்கத்திடம் விலைக்கும்
   விண்ணப்பித்தவாறு,பயிர்க்கடன் பத்திரத்தில் கையெழுத்திடும் இந்திய உழவனிடம் கற்றுக் கொள்வோம் தன்னம்பிக்கையை,என்று வர்ணம் தீட்டினார்.அதுபோல திருமதி பூர்ணிமா அவர்கள் ஈழத்தமிழர் பற்றிய கவிதையில் பல உண்மைகளை கண் முன்னே காட்டுகிறார்.
    உன் நெஞ்சகத்தின் விளிம்பில் கொஞ்சேமேனும்
   ஈரம் மிஞ்சியிருந்தால் ஒன்று கேட்கிறேன் யாசித்து.
என் மார்பகங்களை மட்டும் விட்டுவிடப்பா என் மகன் பசியோடு காத்திருக்கிறான்,என ஈழத்தமிழ்த் தாய் கெஞ்சுவதாய் அமைந்த இக்கவிதை இதயம் நொறுங்கும் ரணம்.
   இலங்கை மண்ணில் போதி மரங்களே இல்லையா?என இவர் கேட்கும் கவிதை வலி கடல் தாண்டி கேட்கும்.
 திருமதி சுஜாதா அம்மையார் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
   இந்நூலில் இடம்பெற்றுள்ள முலைச்சிப் பறம்பு கவிதையினை நீங்கள் கல்லூரி பாடப்புத்தகத்திற்கு பரிந்துரை செய்தல் வேண்டும்.எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான கவிதை இது.
  திருமதி பூர்ணிமா அவர்களின் கவிதையில் தமிழின் உயிரெழுத்துப் போல அமைதி,ஆதங்கம்,இசை,ஈழம்,உரிமை,ஊனம்,எளிமை,ஏக்கம்,ஐயப்பாடு,ஒறுத்தல்,ஓசை எனப் பதினோரு தன்மைகள் அடங்கி ஒளவை வழியில் ஒரு பெண்கவி எனப் பல பரிணாமங்கள் இந்த மழைச் சாரல் மனசில் இடம்பெற்றுள்ளன,அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பத்திரம் இது.
   இந்நூலின் இறுதிக் கவிதையாக,
 ‘வாழ்க்கைக்கு என்று அர்த்தங்கள் இல்லை.ஆயினும் அது அர்த்தங்கள் உண்டாக்க அளிக்கப்பட்ட அற்புத வாய்ப்பு’
எனும் வரிகளைப் போல இந்நூல் படிப்போர்க்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
திருமதி பூர்ணிமா மேடம் அவர்கள் மேலும் பல நூல்களைப் படைக்க வாழ்த்தும்,வணக்கமும். நன்றி.