அகில இந்திய வானொலி நிலைய நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும் தொல்காப்பிய தொடருக்கு நன்றி சொல்லி எமது இனிய உரையைத் தொடங்குகிறேன்.
வேகமாக நகரும் இந்த உலகில் ஒரு பூவின் மலர்ச்சியை, ஒரு காட்டின் அழகை, மழையின் உணர்வை ஓர் எழுத்தாளன் நூல்கள் வழி நம்மிடையே கடத்திக் கொண்டு வருகிறான். ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, பொருளாதார தேவைகளுடன் நின்று விடாமல் கற்றல் நிலையிலும் மேம்பட்டால்தான் சமூகம் வளரும். ஆக ஒரு வளர்ந்த சமூகத்தை உருவாக்குவதில் வாசிப்பு இன்றியமையாத பணியை ஆற்றுகின்றது. நெல்சன் மண்டேலா அவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, “எனக்கு ஒரு சலுகை மட்டும் கொடுங்கள். சிறைச்சாலையில் நான் வாசிக்க மட்டும் அனுமதிக்க வேண்டும்” என்றார். வாசிக்காத நாட்கள் சுவாசிக்காத நாள்களுக்குச் சமம் என்று புதுமொழி கூறுகிறது.
பண்பாட்டு மாற்றம், காலமாற்றம், தலைமுறை மாற்றம் என்று இவை மிக வேகமாக ஏற்படுகின்றன. சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்களையும் மாறிவரும் மனோபாவங்களையும் பாடப்புத்தகங்கள் காட்டுவதில்லை. பாடப் புத்தகங்கள் மாறுகையில் ஆசிரியர்களும் தம்மை மேம்படுத்திக்கொண்டால்தான் மாணவர்கள் பயன்பெற முடியும். இது இயல்பாக நடந்து விடுவது இல்லை. ஆகவே பாடப்புத்தகக் கல்வியிலிருந்து உருவாகும் சமகாலம் பற்றிய விழிப்புணர்வு, போதாமைகளுடன்தான் இருக்க முடியும்.
சமகாலத்துடன் உயிரோட்டமான உறவை ஏற்படுத்திக்கொள்ள சீரிய இதழ்களையும் இலக்கியத்தையும் ஆய்வுகளையும் படிப்பது இன்றியமையாதது. அவ்வகையில் அகில இந்திய வானொலி நிலையம் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது. சாகித்திய அகாடமியின் வரலாற்றை வாசிப்பவர்களோடு உறவாடும் நிகழ்வாக, நிழலாடும் நினைவுகளாக நம் அகில இந்திய வானொலி நடத்துகின்றது. வாருங்கள் சாகித்திய அகாடமி குறித்தும் எழுத்துலகம் குறித்தும் அறிந்து வருவோம். உங்கள் கைகளில் ஓர் எழுதுகோலும் உங்கள் நாட்குறிப்பையும் ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
வாசிப்பையும், வாசிப்பவர்களையும், வாசிக்க வைத்தவர்களையும் ஒன்று சேர்க்க; எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்னும் முதுமொழியைப் போற்றும் வகையில் நமது இந்திய அரசு எழுத்தையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் உயர்வான முறையில் சிறப்பிக்க வேண்டி 1954 ஆண்டு மார்ச் 12 ஆம் நாளில் சாகித்திய அகாடமி என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தது.
அவ்வகையில் இந்தியாவில் பல மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு விருது அளித்து ஊக்கப்படுத்துவது சாகித்திய அகாடமியின் முதன்மைப் பணியாகும். கடந்த அறுபது ஆண்டுகளாக சாகித்திய அகாடமி சிறந்த படைப்புகளுக்கு விருதும் இந்திய அளவிலான வாசக வெளிச்சத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. இந்தியாவின் 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை உள்ளிட்ட எழுத்தாக்கங்களுக்கு இந்தியாவின் பெருமைமிகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றது. சிறந்த எழுத்தாளருக்கு 1 இலட்ச ரூபாயும், மதிப்புமிகு பட்டயமும் வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப்படுகிறது.
சாகித்திய அகாடமி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டு, தேசிய அளவில் வாசிப்பு மேம்பாட்டையும் வழங்கி வருவது இந்நிறுவனத்தின் முதன்மைப் பணியாகவும் முக்கியப் பணியாகவும் இருக்கின்றது.
தரணி புகழ் தமிழ்மொழியும் சாகித்திய அகாடமியின் 24 மொழிகளில் முதன்மை மொழியாகத் திகழ்கின்றது. அவ்வகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட சாகித்திய அகாடமி நிறுவனத்தால், தமிழ் மொழி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நூல் எது என்பதை அறியும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆம். தமிழ்மொழியில் பெருமைமிகு சாகித்திய அகாடமியின் முதல் விருதைப் பெற்ற முதல் நூல், நம் மொழியின் பெயராலேயே அமைந்திருக்கும். தமிழ் என்று சொன்னாலே இன்பம் தருவிக்கும். அதுவே நூலின் பெயரும். ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழின்பம் என்னும் நூலே தமிழ் மொழிக்கு தமிழில் 1955இல் சாகித்திய அகாடமி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நூல்.
அறியப்படாத இலக்கியங்களை அறிய வைத்ததும், அறியப்படாத ஆளுமைகளைக் கொண்டாட வைத்ததும் சாகித்திய அகாடமியின் முதன்மைச் சாதனைகள். அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் தமிழக அளவில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் நூல்களாகவே இருந்து வருகின்றன.
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆளுமைகளின் படைப்புகளும், வட்டார மொழியில் உருவெடுத்த படைப்புகளும் கவிதைகளும் நாவல்களும் தமிழ்மொழிக்கு மணிமகுடமாக இருப்பதை தரணிக்குச் எடுத்துச் சொல்லும் பணியை சாகித்திய அகாடமி செவ்வனே செய்து வருகின்றது.
தமிழ் மொழியின் தவமாக, இளையோர் முதல் பெரியோர் வரை விரும்பி வாசிக்கப்படும் நூல் என்னவெனில் அது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நூலாசிரியரின் சுதந்திர இந்தியா பற்றிய படைப்பு அலையோசை. அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாகத் திகழும் அலையோசை நூல்தான் தமிழ் மொழியின் இரண்டாவது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்.
இராமாயணம் நூலை வாசிக்க வேண்டுமெனில் எந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற வினா அனைவருக்கும் எழும். அந்த வினாவின் விடையாக பல ஆண்டுகளாக பலராலும் வாசிக்கப்படும் நூலாக ராஜாஜி அவர்களின் சக்ரவர்த்தி திருமகன் நூல் சாகித்திய அகாடமியின் மூன்றாவது விருது பெற்ற தமிழ் நூல்.
இந்திய அளவில் இலக்கியத்திற்குச் சிறப்புத்தரும் வகையில் தொடங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருது போலவே, ஞானபீட விருதும் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நோக்கோடு தொடங்கப்பெற்றது. அவ்வகையில் தமிழில் ஞானபீட விருதும் சாகித்திய அகாடமி விருதும் பெற்ற இரு எழுத்தாளர்கள் திரு. அகிலன் மற்றும் திரு. ஜெயகாந்தன். அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் நூலுக்கு 1963ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டது. திரு. ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் நூலுக்கு 1972ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 2002ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சாகித்திய அகாடமி விருது தொடங்கப்பட்டு நாம் அறுபது வருடக் கொண்டாட்டத்தில் இருக்கின்றோம். இச்சமயம் தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண்மணி யார் என்பது பற்றியும், தமிழில் எத்தனை பெண்கள் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளனர் என்பது பற்றியும் நாம் அறிவது அவசியம்.
1973ஆம் ஆண்டு வேருக்கு நீர் என்னும் நூலுக்காக எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. தமிழில் சாகித்திய விருதாளர்களில் முதல் பெண் இவர்தான். இதுவரை இராஜம் கிருஷ்னண், லட்சுமி திரிபுரசுந்தரி, திலகவதி, அம்பை, ஜெயஶ்ரீ ஆகிய ஐந்து பெண்கள் மட்டுமே தமிழில் சாகித்திய விருதுப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்.
சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 2000ஆம் ஆண்டு அக்கினிச்சாட்சி எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காவும், ஒரு கிராமத்தை எழுத்து வழி அறிமுகம் செய்து எல்லோரையும் ஆத்துப்பொள்ளாச்சி என்னும் கிராமம் நோக்கி நகர வைத்த, ஒரு கிராமத்து நதி (2003) என்னும் கவிதை நூலுக்காகவும் இரண்டு முறை சாகித்திய விருது பெற்றார்.
சாகித்திய விருதாளர்களில் இரண்டு முறை விருது பெற்று மொழிக்கும் , எழுத்துக்கும் பெருமை சேர்த்த எழுத்தாளர்களையும் நாம் அறிய வேண்டும். கவிஞர் புவியரசு அவர்களுக்கு 2007ஆம் ஆண்டு புரட்சிக்காரன் என்னும் மொழிபெயர்ப்பு நூலுக்காகவும், கையொப்பம் எனும் கவிதை நூலுக்காகவும் (2009) இரண்டு முறை சாகித்திய விருது பெற்றுள்ளார். தமிழில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த இந்த எழுத்தாளர்களின் சாதனைகள் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டும் , கொண்டாடப்பட வேண்டும்.
சாகித்திய அகாடமியின் வரலாற்றில் நிர்வாகக் காரணங்களால் கடந்த அறுபது வருடங்களில் சில ஆண்டுகள் சாகித்திய விருது அளிக்கப்படவில்லை என்பது நாம் அறிய வேண்டும்.
வா.செ.குழந்தைசாமி. இந்தப் பெயர் அறியாத பொறியியல் படிக்கும் மாணவர்கள் , ஐஐடி படிக்கும் மாணவர்கள் இருக்க முடியாது. பொறியியல் மற்றும் நீர்வளத்துறையில் அவசியம் கற்க வேண்டிய பாடமாக குழந்தைசாமி மாதிரியம் என்னும் பாடத்தைக் கற்பர். நீர்வளத் துறையில் குழந்தைசாமி மாதிரியம் உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக இருப்பதை அறிந்து நாம் பெருமைபடுவதைப்போல, வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதிய வாளும் வள்ளுவ என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது 1988ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறித்தும் நாம் பெருமைப்படுவோம்.
ஒருவரின் நாட்குறிப்பு வரலாறு ஆகுமா? எனில் ஆம் என்பது பதிலாக ஆனந்தரங்கன் நாட்குறிப்பு விடையாக இருந்து வருகின்றது. அந்த நூலே புதுச்சேரியின் வரலாற்றையும், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை பற்றியும் நமக்குப் பல செய்திகளைத் தருகின்றது. அது போல பிரபஞ்சன் அவர்கள் புதுச்சேரியை களமாகக் கொண்டு படைத்த வானம் வசப்படும் என்னும் நூலுக்காக தேசிய அங்கீகார விருதான சாகித்திய அகாடமி விருது 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
திரையிசைக் கவிஞர்களாக இருந்தவர்களும் நல்ல படைப்புகளை வழங்கி சாகித்திய விருது பெற்றுள்ளனர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சேரமான் காதலி நூலுக்காக 1980ஆம் ஆண்டு சாகித்திய விருது வழங்கப்பட்டது. எழுத்துலகம் நோக்கி அமர வைத்து அற்புதமான காவியத்தைப் படைத்த கவிஞர் வைரமுத்து அவர்கள், கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
பெரும் வாசகர் பரப்பினையும், எழுதும் போதே வாசகர்களின் கவனிப்பையும் பெற்ற நாஞ்சில் நாடனின் எழுத்தில் கருவான சூடிய பூ சூடற்க எனும் நூல் 2010ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது. பலரின் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இந்த நூல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்வது எழுத்தாளர்களின் முதன்மைப்பணி என்பதை நிறைவேற்றி பெரும் வாசகச் சொந்தங்களை வைத்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சஞ்சாரம், நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியலை வலியோடு சொல்லக்கூடியது. நாதஸ்வரக்கலையை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்குப்பிறகு பரவலான அறிமுகத்தை ஏற்படுத்திய நூலாக இவரின் சஞ்சாரம் திகழ்கின்றது. இந்த நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
நாடு கடத்தப்பட்ட ஒரு அரசனின் வாழ்வியலை, தமிழ்ச்சூழலின் வாழ்வியலை அழகு நடையில் கடத்திச்சென்று வாசிப்பு இன்பம் நல்கிய இந்திய ஆட்சிப் பணியாளர் திரு. இராஜேந்திரன் அவர்களின் காலாபாணி நூலுக்கு 2022ஆம் ஆண்டு சாகித்திய விருது வழங்கப்பட்டது.
கிராமிய மணம் மாறாற ஊராகத் திகழும் ஈரோடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள சிறுகுடி மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் ஆகியவற்றை அழகியல் நடையில் ஆழமான நீரோட்டம் போல வழங்கிய நீர்வழிப்படூஉம் என்னும் புதினத்திற்காக 2023ஆம் ஆண்டு தேவிபாரதி அவர்களுக்கு சாகித்திய விருது வழங்கப்பட்டது.
உலகின் தலை சிறந்த மேதைகள், வெற்றியாளர்கள், நாம் வியந்து பார்க்கும் பல மனிதர்களுடன் நம்மால் நேரில் சென்று நட்பு கொள்ள இயலாது, ஆனால் அவர்களின் சிந்தனைகள், அனுபவங்கள் அவர்களின் வெற்றி தோல்வி என அனைத்து நேரங்களிலும் நாம் அவர்களுடன் பயணிக்க முடியும். அது புத்தகங்களின் வாயிலாக மட்டுமே மனதோடு மனமாக இருக்க இயலும்.
பண்பாட்டுத்தளத்தில் பெரும் பகுதியைத் திரைப்படங்கள் கையகப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானதன்று. ஊடகங்கள் திரைப்படத் துறைக்குத் தரும் கவனத்தில் நூற்றிலொரு பங்குதான் புத்தகப் பண்பாட்டுக்குத் தருகின்றன. பண்பாட்டில் பெரும் கவனம் கொண்டிருக்கக்கூடிய வளர்ச்சியடைந்த பிரெஞ்சுச் சூழலின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், மொத்த பண்பாட்டுப் பொருளாதாரத்தில் புத்தகத் தொழிலின் பங்கு திரைப்படங்களின் பங்கைவிட மிக அதிகமாக இருந்தது. தமிழகத்தின் மொத்த புத்தகப் பொருளாதாரம் ஒரு நட்சத்திர நடிகர் ஒரு திரைப்படத்துக்குப் பெறும் ஊதியத்துக்கு நிகராகுமா என்பது சந்தேகம். திரை, புத்தகம், நுண்கலை மூன்றுக்கும் உரிய கவனமளிக்கும் பண்பாடே மேன்மையடைய முடியும்.
நமது அகில இந்திய வானொலி நிலையம் வாசிப்பவர்களின் நலம் காக்கும் ஊடகமாக, வாசிப்பவரை வரவேற்கும் வாசலாக, எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஏணியாக, சமுதாய மாற்றத்தின் சாட்சியாக பல்லாண்டுகளாக பவனி வருகின்றது. அகில இந்திய வானொலி நிலையத்தின் பணி மேலும் சிறக்கவும், சாகித்திய அகாடமி நாளை மற்றுமொரு மாபெரும் வாசிப்பு நாளாகவும் முன்னெடுக்கவும் நாம் துணை நிற்போம்.